என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஈரோட்டில் முககவசம் அணியாமல் வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
ஈரோட்டில் அபராதம் விதிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் முககவசம் அணியாமல் வருபவர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
ஈரோடு:
ஈரோட்டில் அபராதம் விதிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் முககவசம் அணியாமல் வருபவர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதைபெரும்பாலானோர் கடைப்பிடிக்கவில்லை. முககவசம் அணியாமல் வெளியே வந்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினர், போலீசார் ஒன்றிணைந்து முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து வந்தனர்.
இந்நிலையில் கொரோனா 3-ம் அலை வேகம் எடுத்ததால் அரசு முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிட்டது. ஈரோடு மாவட்டத்தில் இதற்கான ரசீது புக் தாமதமாக வந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்து முககவசம் அணியாமல் வருபவர்கள், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மீண்டும் முககவசம் அணிந்து வந்தனர். தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இதனால் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக போலீசார், வருவாய் துறையினர் சென்றுவிட்டதால் மாவட்டத்தில் அபராதம் விதிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் முககவசம் அணியாமல் பொதுமக்கள் வெளியே வருவதை காணமுடிகிறது. குறிப்பாக பெண்கள் வீட்டிலிருந்து கடைத்தெருவில் உள்ள கடைக்கு செல்லும் போது முககவசம் அணிந்து செல்வதில்லை. அவர்களுடன் குழந்தைகளையும் முககவசம் அணியாமல் அழைத்து செல்கின்றனர்.
இதேப்போல் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் பெரும்பாலும் முககவசம் அணிந்து வருவதில்லை. பொதுஇடங்களிலும் சமூக இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது. இதுபோன்ற அலட்சிய போக்கால் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதைகருத்தில் கொண்டு மீண்டும் அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






