என் மலர்tooltip icon

    ஈரோடு

    பொது மக்கள் விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து தங்களுடைய வேதனைகள், மனக் குமுறல்களை தெரிவித்து வருகிறார்கள்.

    அந்தியூர்:

    நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு (கியாஸ்) உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

    இதனை கண்டித்து பல மாநிலங்களில் எதிர்க் கட்சிகள் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றன.

    மேலும் ஒரு சில இடங்களில் பொது மக்கள் விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து தங்களுடைய வேதனைகள், மனக் குமுறல்களை தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் அப்பகுதி பொதுமக்கள் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த போஸ்டர் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    அந்த போஸ்டரில் 2014-ம் ஆண்டு சிலிண்டர் விலை ரூ.410 ஆக இருந்தது என்றும் தற்போது 2022-ம் ஆண்டு 980 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றும் கடுமையான விலை ஏற்றத்தால் எங்களை விட்டு வெகு தூரம் சென்ற உன்னை நினைத்து ஏங்கும் இல்லத்தரசிகள் என்று வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

    டி.என்.பாளையம் அருகே இறந்த நபர் உயிருடன் வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும் பின்னர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே புஞ்சைதுறையம் பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி (55), கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி, கர்நாடகா மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்ற மூர்த்தி பின்னர் வீடு திரும்பவில்லை. மூர்த்தியின் மகன்கள் கார்த்தி மற்றும் பிரபுகுமார் ஆகியோர் பல்வேறு இடங்களில் தந்தை மூர்த்தியை தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் கடந்த 31-ந் தேதி சத்தியமங்கலம் பஸ் நிலைய பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக கார்த்திக்குக்கு வாட்ஸ் அப்பில் தகவல் கிடைத்தது.

    அதைத்தொடர்ந்து கார்த்திக் சத்தியமங்கலம் பஸ் நிலையம் சென்று பார்த்த போது, முகம் அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் இருந்தது. அந்த நபருடைய உருவம் அவரது தந்தையை போன்ற தோற்றத்துடன் இருந்ததால், இறந்து கிடந்தது தனது தந்தை தான் என கார்த்திக் முடிவு செய்தார்.

    உடனே உடலை எடுத்துக்கொண்டு புஞ்சை துறையம்பாளையம் கொண்டு சென்று அந்த உடலை முறைப்படி சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்தார். இந்நிலையில் மூர்த்தி திடீரென நேற்று இரவு உயிருடன் வீடு திரும்பினார்.

    அவரை பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும் பின்னர் மகிழ்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் உடனடியாக மூர்த்தி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதனால் புஞ்சை துறையம்பாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது, அடக்கம் செய்யப்பட்ட அந்த நபர் யார்? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இதனால் அடக்கம் செய்யப்பட்ட அந்த நபரின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதையும் படியுங்கள்... இந்தியாவில் கடந்த 716 நாட்களில் இல்லாத அளவில் குறைந்த கொரோனா பாதிப்பு

    சத்தியமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஈரோடு:

    சத்தியமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய
    4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சத்தியமங்கலம் சப்&இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

    .அப்போது சத்தியமங்கலம் பண்ணாரி மெயின் ரோடு பகுதியில்  சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தனர்.   அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

     விசாரணையில் அவர்கள் வாலண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (51), அய்யப்பன் (33), சதீஷ்குமார் (43), சிவகுமார்(43) என்பதும் அவர்கள் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள் ரூ.7,200 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து சத்தியமங்கலம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து 4  பேரையும் கைது செய்தனர்.
    மாடுகளை ஏற்றி செல்லும் லாரிகளை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.
    ஈரோடு:

    மாடுகளை ஏற்றி செல்லும் லாரிகளை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.


    ஈரோடு மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.  இதை யொட்டி மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் வந்து தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட வருவாய் அலுவல ரிடம் கொடுத்தனர்.

    அப்போது தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன்  தலைமையில் நிர் வாகிகள் பலர்  மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்தனர்.
    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:&

    ஈரோடு மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில்  வாகனங்களில் வியாபாரி கள் மாடுகளை ஏற்றி கொண்டு விற்பனைக்காக கொண்டு செல்கிறார்கள். மாடுகளை ஏற்றி செல்லும் வியாபாரிகளின் வாகனங் களை  ஒரு சிலர் தடுத்து நிறுத்தி டிரைவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். 
    மேலும் சில நேரங்களில் டிரைவர்களை அடித்து துன்புறுத்து கின்றனர்.  இதனால்  மாடுகளை ஏற்றிச் செல்ல டிரைவர்கள் முன்வருவ தில்லை.  இதனால் மாட்டு வியாபாரி கள் கடும் பாதிப்படைந்து. வருகிறார்கள். மேலும் அவர் களுக்கு பொருளாதார இழப்பும் ஏற்பட்டு வருகிறது.

    இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாட்டு வியாபாரிகளிடம் பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும் மாடுகளை விற்பனை செய்யும் வியா பாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
    இதில் மாவட்ட துணை செயலாளர்கள் தேசிங்கு, வெள்ளியங்கிரி உள்பட பலர் உடன் இருந்தனர்.

    அந்தியூர் தாலுக்கா பகுதியில் ரேசன்கடை பணியாளர்கள் தி.மு.க.எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர்.
    அந்தியூர்

    அந்தியூர் தாலுக்கா பகுதியில் ரேசன்கடை பணியாளர்கள் தி.மு.க.எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர்.

    அந்தியூர் தாலுக்கா பகுதிகளில்செயல்படும் 93 நியாய விலை கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் அந்தியூர் 
    ஜீ.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ.,யிடத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மாரசாமி தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை வழங்கி னார்கள் அதில் எதிர்வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனை யாளர்கள் தங்களுக்கு  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு அறிவித்த 14 சதவீத அகவிலைப்படி மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் நியாய விலை கடைகளை தனித்துறையாக அறிவிக்க வேண்டும்.

     உள்ளிட்ட கோரிக்கைகள். அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 
     இந்த நிகழ்ச்சியின் போது மாநில துணைத் தலைவர் சதாசிவம் மற்றும் அந்தியூர் பகுதி நியாவிலை கடை விற்பனையாளர்கள் பலர் கலந்து கொண்டனர் .கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்க டாசலம்.தங்களின் கோரிக்கைகளை வலியு றுத்தி கூட்டத் தொடரில் உறுதியாக பேசி தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுத் தருவேன் என்று அவர் களிடத்தில் தெரிவித்தார்.
    சென்னிமலை பேரூராட்சியில் 13 வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை பேரூராட்சியில் 13 வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.


    சென்னிமலை பேரூராட்சி வாரச் சந்தை வளாகத்தில் ரூ.66 லட்சம் மதிப்பீட்டிலான 13 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா நடந்தது மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமை தாங்கினார். அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்து பேசினார். 

    இதில், மாவட்ட கவுன்சிலரும், சென்னிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளருமான எஸ்.ஆர். எஸ்., செல்வம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீ தேவி அசோக், துணைத் தலைவர் சவுந்தரராஜன், சென்னி மலை யூனியன் சேர்மேன் காயத்ரி இளங்கோ, செயல் அலுவலர் ஆயிஷா, இளநிலை பொறியாளர் தியாகராஜன், பெருந்துறை தாசில்தார் கார்த்திக், சென்னிமலை நகர தி.மு.க., செயலாளர் எஸ்.எம்., ராமசாமி, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சி.பிரபு, நகர இளைஞர் அணி அசோக், உட்பட பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை நகரப் பகுதியில் பொதுமக்களுக்கு நேரம் அறிவிக்கும் வகையில் பஸ் நிலையத்தில் மின் சங்கு ஒலிக்கும் நடைமுறை கடிகாரங்கள் பரவலாக மக்களிடம் இல்லாத காலகட்டங்களில் இருந்து   சங்கு ஒலிக்கும் நடைமுறை இருந்து வந்து. சங்கு பழுதானதால் கடந்த 12 வருடங்களாக அதை டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சரி செய்யாமல் சங்கு ஒலிக்கும் பணி நிறுத்தப்பட்டு இருந்தது. புதியதாக பொறுப்பேற்ற டவுன் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்களின் சீரிய முயற்சியால் மின் சங்கின் பழுது நீக்கம் செய்து நேற்று முதல் ஒலிக்கும் பணி தொடங்கியது. டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதேவி அசோக் தலைமையில் இதை செய்தி துறை அமைச்சர் மு.பெ., சாமிநாதன் தொடங்கி வைத்தார். 

    இதில் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்.எஸ்., செல்வம், கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் பிரபு, நகர தி.மு.க., செயலாளர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இனி மேல் தினமும் பொது மக்களுக்கு நேரத்தை குறிக்கும் வகையில் காலை 5 மணி, காலை 8 மணி, மதியம் 1 மணி, மாலை 6 மணி ஆகிய நான்கு முறை மின் சங்கு ஒலிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    அந்தியூர் பகுதியில் சரியான ஆவணங்கள் இல்லாமல் வந்த 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
    அந்தியூர்:

    அந்தியூர் பகுதியில் சரியான ஆவணங்கள் இல்லாமல் வந்த 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

    அந்தியூரில் இருந்து தினமும் ஏராளமான வாக னங்கள் பல்வேறு  பகுதி களுக்கு சென்று வருகின்றன. இதனால் அந்தியூர் பகுதியில் நாளுக்கு நாள் வாக னங்களின் எண்ணிக்கை அதிகரித்து கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    மேலும்  வாகன ஓட்டிகள் பலர் விதிமுறைகளை மீறி  செல்வதாக புகார்களங் வந்தன. இதையடுத்து பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில்  பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற் கொண்டார். மேலும் அந்த வழியாக வந்த வாகனங்களை ஆய்வு செய் தார்.
     அப்போது 7 மினி ஆட்டோகள் தகுதிச் சான்று மற்றும் உரிமைச் சான்று இல்லாமல் வந்தது. இதே போல் 2 டெம்போ வேன் கள் சாலை வரி தகுதிச் சான்று இல்லாமலும், ஒரு ஆட்டோ ஒன்றுக்கு எந்த வகை சான்றும் இல்லா மலூம், பொக்லைன் எந்திரம் ஒன்று பதிவு இல்லாமலும், ஒரு கால் டாக்சி எப்.சி. இல்லாமலும், 2 ஆம்னி பஸ்கள் சாலை வரி கட்டாமலும் வந்தது தெரிய வந்தது.

    இதையத்து சரியான சான்றிதழ்கள் இல்லாமல் வந்த 15 வாகனங்களுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஈரோட்டில் அதிரடி சோதனையில் கஞ்சா, புகையிலை விற்ற 14 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோட்டில் அதிரடி சோதனையில்  கஞ்சா, புகையிலை விற்ற 
    14 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர்.

    தமிழம் முழுவதும் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் போலீசார் கடந்த சில நாட்களாக கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பவர்களை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 
    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் கடந்த சில நாட்களாக இரவு பகல் பாராமல் கஞ்சா குட்கா பொருட்கள் பதுக்கி விற்பவர்களை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

     இதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    கருங்கல்பாளையம் போலீசார் காமராஜ்நகர் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்களை விற்றதாக பி.பி.அக்ரஹாரம் கொங்குநகரை சேர்ந்த ஜெய்சிங் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

    இதேபோல் சுண்ணாம்பு ஓடையில் உள்ள ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்றதாக அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (47) என்பவரை கருங்கல் பாளையம் போலீசார் கைது செய்தார் கள். அவர்களிட மிருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு டவுன் போலீசார் குப்பிபாலம் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு கஞ்சா விற்றதாக வளையக்கார வீதியை சேர்ந்த பூபதியின் மகன் கை என்கிற செந்தில்குமாரை (29) கைது செய்தனர். சூரம்பட்டி போலீசார் ரெயில்வே காலனியில் ரோந்து சென்றபோது, அங்கு கஞ்சா விற்றதாக கொல்லம் பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (27) என்பவரை கைது செய்தனர்.  இதேபோல் வீரப்பன் சத்திரம் போலீசார் மாணிக்கம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது குட்கா பான்மசாலா விற்பனைக்கு வைத்திருந்த அதேப் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரை கைது செய்தனர். கவுந்தப்பாடி பி.மேட்டுப் பாளையம், பட்டா சாமி கோவில் அருகே கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த மேகநாதன் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் பழைய பஞ்சாயத்து ஆபிஸ் அருகில் உள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு, மசாலா பொருட்கள் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்து பங்களாப்புதூர் போலீசார்  சோதனையில் ஈடுபட்டனர்.

    கொங்கர்பாளையம் பொன்னம்பலம் வீதியை சேர்ந்த கோவிந்தராஜன் (48) என்பவரது இந்த மளிகை கடையில் போலீசார் சோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட 5,500 ரூபாய் மதிப்புள்ள போதை பாக்கு மற்றும் போதை பான் மசாலா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
    உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதை பாக்கு மற்றும் போதை பான் மசாலா பொருட்களை மளிகை கடையில் விற்பனை செய்ததால் மளிகை கடை உரிமையாளர் கோவிந் தராஜன் மீது வழக்கு பதிவு செய்த பங்களாப்புதூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
    மேலும் போலீசார் விசாரணையில், கோவிந் தராஜன் மளிகை கடைக்கு போதை பொருட்களை மொத்த விற்பனைக்கு கொடுத்து வந்த குணசேகரன் என்ற நபர் தலைமறை வானதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
    சென்னிமலை போலீசார் மணி மலைக்கரு பஸ் நிறுத்தம் அருகே குட்கா வைத்திருந்த ரவி என்பவரை கைது செய்தனர். தாளவாடி போலீசார் பணகள்ளி என்ற பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த நாகராஜன் என்பவரை கைது செய்தனர். 
    இதேபோல் தாளவாடி போலீசார் ஓசூர் ரோடு அருகே  குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த அப்துல் ஆதிக் என்பவரையும் கைது செய்தனர். மொடக்குறிச்சி போலீசார் லக்காபுரம் அருகே போதைப் பொருள்கள், வைத்திருந்த சண்முக பிரகாஷ், வனராஜா என்பவரை கைது செய்தனர்.பவானி போலீசார் பவானி மயிலம்பாடி ரோடு பகுதியில் குட்கா, பான் மசாலா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முத்து கண்ணன் என்பவரை கைது செய்தனர். இவ்வாறாக மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 14 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
    கோபிசெட்டிபாளையம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணேசன்புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 61). விவசாயி. இவர் காலில் நீர்கட்டி ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். 
    இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. 

    இதனால் முருகன் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது குருணை மருந்து (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். 

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.82 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.82 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.


    சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 

    5 மாநில சட்டசபை தேர்தல், ரஷியா- உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதன் காரணமாக 137 நாட்களுக்குப் பிறகு  கடந்த மாதம் 21-ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியது. 
    அதிலிருந்து ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல், விலை உச்சத்தைத் தொட்டு வருகிறது.
    இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல்   ரூ.109.44-க்கு விற்பனையானது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் ரூ.  99.54 காசுக்கு விற்பனை ஆனது. 

    இந்நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல், விலை உயர்ந்துள்ளது. ஈரோட்டில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் மேலும் 38 காசுகள் அதிகரித்து ரூ.109.82 காசுக்கு விற்பனை ஆனது. இதேப்போல் ஒரு லிட்டர் டீசல் மேலும் 38 காசுகள் அதிகரித்து ரூ.99.92 காசுக்கு விற்பனை ஆனது. அதாவது கடந்த 14 நாட்களில் 12 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

    தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் சிறு வியாபாரிகள் திணறி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு எதிரொலி காரணமாக மற்ற பொருட்களின் விலையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    சிவகாமிக்கு பிரசவ வலி அதிகரித்தது.நிலைமையை புரிந்துகொண்ட கடம்பூர் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சிவகாமிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலை கிராமம், குன்றி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி. நிறைமாத கர்ப்பிணியான சிவகாமிக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது.

    இதனை அடுத்து அவரது உறவினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்சில் மருத்துவ குழுவினர் அங்கு வந்து சிவகாமியை ஆம்புலன்சில் அழைத்துக் கொண்டு பிரசவத்திற்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.சிவகாமி கணவரும் உடனிருந்தார்.

    ஆம்புலன்ஸ் கெம்பநாயக்கன்பாளையம் அருகே வந்தபோது சிவகாமிக்கு பிரசவ வலி அதிகரித்தது.நிலைமையை புரிந்துகொண்ட கடம்பூர் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சிவகாமிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர். அப்போது சிவகாமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் அஜித் குமார் மற்றும் வாகன ஓட்டுனர் அரப்புலி சாமியை பொதுமக்கள் பாராட்டினர்.

    கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.
    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியதையொட்டி கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கிறது. இதனால் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து அனல் காற்று வீசி வருகிறது.

    இதனால் பெரும்பாலான பொதுமக்கள் பகல் வேளையில் வெளியில் வர தயக்கம் காட்டி வருகிறார்கள். மேலும் முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மற்றும் பெண்களும் குடைபிடித்தபடியே சென்று வருகிறார்கள். மேலும் இளம்பெண்கள் தங்கள் துப்பட்டாவால் தலையை மூடி கொண்டே செல்கிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வருவதால் பொதுமக்கள் பலர் நீர் நிலைகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகிறார்கள்.

    கொடிவேரி அணையில் பெரும்பாலும் விடுமுறை மற்றும் விசே‌ஷ நாட்களில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை வாய்க்காலில் பாசனத்துக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மற்றும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் கொடிவேரி அணையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

    கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கொவேரி அணைக்கு வந்திருந்தனர்.

    மேலும் ஈரோடு மாவட்ட மட்டுமின்றி கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்கள் அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த உணவு வகைகளை அங்கேயே அமர்ந்து சாப்பிட்டனர்.

    மேலும் பலர் அணையின் வெளி பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் வகைகளை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டனர். இதில் பலர் கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்திருந்தனர். இதனால் அணை பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் ரோட்டோரங்களில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

    இதனால் அணைப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் அணைக்கு வரும் பொதுமக்களிடம் பாதுகாப்பாக அணையில் குளிக்க வேண்டும் என வலியுறுத்தி கண்காணித்தனர்.

    கொடிவேரி அணைக்கு கடந்த 2-ந் தேதி 4 ஆயிரத்து 217 பேர் வந்தனர். நேற்று மட்டும் ஒரே நாளில் 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அணைக்கு வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர். இதனால் 2-ந் தேதி ரூ.25 ஆயிரத்து 905 வசூலானது. நேற்று மட்டும் 54 ஆயிரத்து 345 ரூபாய வசூலானதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×