என் மலர்tooltip icon

    ஈரோடு

    திம்பம் மலைப்பாதையில் பெயிண்ட் ஏற்றி வந்த மினி லாரியில் இருந்து புகை வெளியேறியதால் பரபரப்பு நிலவியது.
    சத்தியமங்கலம்: 

    திம்பம் மலைப்பாதையில் பெயிண்ட் ஏற்றி வந்த மினி லாரியில் இருந்து 
    புகை வெளியேறியதால் பரபரப்பு நிலவியது.


    குஜராத் மாநிலம் ஜக்காடியா என்ற பகுதியில் இருந்து  கோவைக்கு பெயிண்ட் ஏற்றிக் கொண்டு ஒரு மினி லாரி திம்பம் மலைப்பாதை வழியாகஇரவு வந்து கொண்டு இருந்தது.  

    அந்த மினி லாரி பண்ணாரி சோதனை சாவடி பகுதியில் வந்த போது மினி லாரியின் பின்பக்க டயர் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதைபார்த்த சோதனை சாவடியில்இருந்த போலீசார் லாரியை ஒதுக்குப்புறமாக நிறுத்தி தண்ணீர் ஊற்றினர். 

    மேலும் இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து புகை  மூட்டத்துடன் தீப்பிடித்து எரியும் நிலையில் இருந்த மினி லாரி மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

     திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி பீரேக் பயன்ப டுத்தியதால் பிரேக் ட்ரம் சூடாகி மினி லாரியில் புகை வந்தது தெரிய வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அந்தியூர் தேர்வீதியில் செல்போன் கடை ஷட்டரை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அந்தியூர்:

    அந்தியூர் தேர்வீதியில் செல்போன் கடை ஷட்டரை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர் தேர்வீதி ஜி.எச். கார்னர் பகுதியில் ஆத்தப்பம் பாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ் (32) என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். 

    நேற்று இரவு  இவர் வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். இந்த நிலையில்  இன்று காலை செல்போன் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு பாதி திறந்த நிலையில் இருந்தது. இதைப்பார்த்த சிலர் இத குறித்து தினேசுக்கு தகவல் கொடுத்தனர். 
    அவர் விரைந்து வந்து பார்வையிட்டார். 

    அப்போது கடையின் பூட்டை உடைத்து  2 செல்போன்கள் மற்றும் ரு. 10 ஆயிரம்பணம் ஆகியவை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தினேஷ், அந்தியூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

    ஏற்கன வே இந்த பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் கொள்ளை முயற்சி நடந்தது. மேலும் ஒரு பயணிகள் ஆட்டோவில் டேப் ரெக்கார்டரும் திருடப்பட்டது. இந்த நிலையில் தற்போது செல்போன் கடையிலும் கொள்ளை போய் இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    டி.ஜி.புதூர் நால்ரோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    டி.என்.பாளையம்:

    டி.ஜி.புதூர் நால்ரோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் அங்கனகவுண்டன் புதூர் அருகே உள்ள செங்கோட்டையன் நகரை சேர்ந்தவர் பசுவய்யா (65). 
    சம்பவத்தன்று பசுவய்யா தனது வீட்டில் இருந்து சொந்த வேலை காரணமாக சைக்கிளில் டி.ஜி.புதூர் நால்ரோடு பகுதிக்கு வந்து விட்டு மீண்டும் வீடு திரும்பி சத்தியமங்கலம் சாலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென பசுவய்யா சாலையை கடக்க முயன்றார்.  அப்போது பின்னால் வந்த  மோட்டார் சைக்கிள் எதிர்பாராமல் அவர் மீது மோதியது.

    இதில் பசுவய்யாக்கு தலையில் அடிப்பட்டு ரத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 
    அதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியி லேயே பசுவய்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கார்த்தி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் விசாரணை நடத்தி பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தை கொடுமுடி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது.

    அதில் ஒரு போலீஸ்காரர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பெயரை குறிப்பிட்டு பெருந்துறை பணிக்கம் பாளையத்தில் கஞ்சா வியாபாரி வீட்டுக்கு சென்று அவரிடம் பணத்தை மட்டும் பறிமுதல் செய்து வியாபாரி மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் அவரை தப்பவிட்டனர்.

    அதேபோல் அடுத்தடுத்த ஆடியோக்களில் பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், ஊர்க்காவல் படை போலீஸ்காரர் ஒருவர் ஆகியோர் கஞ்சா வியாபாரிகளிடம் எவ்வளவு மாமூல் வாங்குகின்றனர் என்பது குறித்த விவரங்கள் தொடர்பான உரையாடல்களும் வெளியாகின.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் விசாரணை நடத்தி பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தை கொடுமுடி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்தார். அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக இரண்டாம் நிலை காவலரான ராஜீவ்காந்தி என்பவரை மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர்கள் 2 பேர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காதலியுடன் வீடியோ காலில் பேசிய வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கீழத்தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் ரஞ்சித் (வயது 21). இவர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி மேற்கு அக்ரஹாரம் பகுதியில் தங்கி இருந்து கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் பிரசாத ஸ்டாலில் வேலை பார்த்து வந்தார்.

    ரஞ்சித் கும்பகோணத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தான் காதலிக்கும் பெண்ணுடன் ரஞ்சித் வீடியோ காலில் பேசியுள்ளார்.

    அப்போது ரஞ்சித் விரக்தியுடன் பேசியதாகவும், தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அவரது காதலியிடம் கூறி உள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ரஞ்சித்துடன் வேலை பார்த்து வரும் பாண்டியன் என்பவருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். உடனடியாக பாண்டியன் ரஞ்சித்துடன் தங்கியிருக்கும் பார்த்தீபன் என்பவரிடம் இதுகுறித்து போனில் தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து பார்த்தீபனும் அவரது உறவினர் ஒருவரும் ரஞ்சித் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது ரஞ்சித் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ரஞ்சித்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரஞ்சித் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துக் கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    கொடுமுடி இன்ஸ்பெக்டர் முருகன், போலி ஆவணம் கொடுத்த 2 பெண்கள் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.
    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வருந்தியா பாளையம் என்ற பகுதியில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் திருப்பூரை சேர்ந்த ஜெகநாதன் (30) என்பவரை கொடுமுடி போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் ஜெகநாதனை ஜாமினில் கொண்டு வர திருப்பூர் செட்டிபாளையம் முத்துநகரை சேர்ந்த சேகர் என்பவரது மனைவி முத்துமாரி, அதே பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரது மனைவி அலமேலு ஆகியோர் கொடுமுடி கோர்ட்டில் மனு செய்தனர்.

    இதற்காக அவர்கள் 2 பேரும் ஆதார் அட்டை, ரேசன் கார்டு, வீட்டு வரி ரசீது, மற்றும் ஜாமீன் சான்று ஆகியவற்றை தயார் செய்து கொடுமுடி கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    அந்த ஆவணங்களை கோர்ட்டு ஊழியர்கள் சரி பார்த்தனர். அப்போது பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டது. குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், திருப்பூர் வடக்கு தாசில்தார் ஆகியோர் கையெழுத்துகளில் சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவர்கள் கொடுத்த முகவரி சான்றிதழிலும் முரண்பாடாக இருந்தது.

    இதுப்பற்றி விசாரணை நடத்தி உண்மை தன்மையை அறிய கொடுமுடி கோர்ட்டு தலைமை எழுத்தர் பாக்கியம் என்பவர் கொடுமுடி போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் வாலிபரை ஜாமீனில் எடுக்க முத்துமாரி, அலமேலு ஆகியோர் கொடுத்து ஆவணங்கள் போலியானவை என்று தெரியவந்தது.

    இதையடுத்து கொடுமுடி இன்ஸ்பெக்டர் முருகன், போலி ஆவணம் கொடுத்த 2 பெண்கள் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

    மேலும் தனிப்படை போலீசார் இன்று திருப்பூர் சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    பவானிசாகர் அணையில் இருந்து 2200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    சத்தியமங்கலம்:
     பவானிசாகர் அணையில் இருந்து 2200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 6 மணி நிலவரப்படி 80.58 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 823 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

     அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி என மொத்தம் 2200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    டி.என்.பாளையம் பகுதியில் பங்களா புதூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகம் படும்படி ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் பகுதியில் பங்களா புதூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகம் படும்படி ஒருவர் நின்று கொண்டு இருந்தார். 

    அவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் சுற்றி    வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். 

    இதில் அவர் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த ராமசந்திரன் (32) என்றும், அவர் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்தது. 

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    புஞ்சை புளியம்பட்டி& சத்தியமங்லம் ரோட்டில் போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த  வழியாக ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. 

    போலீசார் விசாரணையில் அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (32) என தெரிய வந்தது. இதையடுத்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து போதை பாக்குகள் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி& பவானிசாகர் ரோட்டில் உள்ள 2 ஓட்டல்களில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த ஓட்டலில் அனுமதியில்லாமல் சிலர் மது  குடித்து கொண்டு இரு-ந்தனர். இதையடுத்து மது குடிக்க அனுமதி அளித்ததாக புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (34) மற்றும் தங்கராஜ் (46) ஆகிய 2 பேரை புளியம்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கட்டுமான பணியின்போது முதல் தளத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
    அம்மாபேட்டை:
    கட்டுமான பணியின்போது முதல் தளத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி செல்லி கவுண்டனூரைச்சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி ஈஸ்வரி என்கிற ராஜேஸ்வரி (49). இவர் தனது ஊரைச் சேர்ந்த சிலருடன் செம்படாபாளையம் என்ற பகுதியில் சண்முகம் என்பவரது புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். 

    அப்போது முதல் தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த ராஜேஸ்வரி எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து ராஜேஸ்வரியின் மகள் ரேவதி (35) கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கட்டிட வேலை செய்து கொண்டிருந்த போது முதல் தளத்தில் இருந்து கீழே விழுந்து ராஜேஸ்வரி இறந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.
    நம்பியூர்-சென்னிமலை பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நம்பியூர்:

    நம்பியூர்-சென்னிமலை பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நம்பியூர் அடுத்த கெட்டி செவியூர், கல்லியப்பம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (61). இவர் தனது மகன் கதிரவன், மருமகள் ராஜேஸ்வரி மற்றும் பேரக் குழந்தை களுடன் ஒன்றாக வசித்து வந்தார். ஜெகதீசன், கதிரவன், ராஜேஸ்வரி ஆகியோர் கூலி வேலை பார்த்து வந்தனர். கதிரவ னுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத் தன்று கதிரவன் தனது மகனுடன் சினிமாவிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். பின்னர் சினிமா முடிந்து அதிகாலை 2 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது கதிரவன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிள் நிறுத்தும் போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் அவரது மூக்கு மற்றும் நெற்றியில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. பின்னர் ராஜேஸ்வரி கதிரவனுக்கு முதலுதவி செய்தார். பின்னர் அனைவரும் தூங்க சென்று விட்டனர். பின்னர் காலை கதிரவன் எழுந்து வந்து வாந்தி எடுத்துள்ளார். திடீரென நெஞ்சு வலிப்ப தாகவும் இடது தோள் பட்டை வலிப்பதாகவும் கூறினார்.

    உடனே ராஜேஸ்வரி தைலம் எடுத்து வைத்தார். இதனையடுத்து கதிரவன் மீண்டும் தூங்கி விட்டார். பின்னர் மாலை கதிரவனை எழுப்பிய போது அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு கோவை அரசு மருத்து வமனைக்கு கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கதிரவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி ஆசிர்வாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (56). இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை சரவணா நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து ஈரோடு அக்ரஹாரத்தில் உள்ள சாயப்பட்டறையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத் தன்று பொன்ராஜ் துணி துவைத்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே வீட்டு உரிமையாளர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பொன்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நம்பியூர் அருகே மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    நம்பியூர்:

    நம்பியூர் அருகே மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    நம்பியூர் அருகே உள்ள கோடுப்புள்ளம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (34). கோபியில் உள்ள தனியார் கல்லூரியில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி  சந்தியா (28) என்ற மனைவி உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 24-ந் தேதி சந்தியா தனது சித்தி வீட்டில் நடந்த விசேஷத்திற்கு சென்று வந்துள்ளார். அப்பொழுது ரமேஷ்குமார் சந்தியாவிடம் வீட்டிற்கு வர இவ்வளவு நேரமா என கேட்டுக்கொண்டு  தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளார்.

    இதில் சந்தியாவுக்கு இடது பக்க நெற்றியில் காயம் ஏற்பட்டது. இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் உன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

    இதனையடுத்து சந்தியா தனது தாயாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் சந்தியாவின் சித்தி மகன் கார்த்திக் என்பவர் வீட்டிற்கு வந்து கோபி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சந்தியாவை சிகிச்சைக்காக அனுமதித்தார்.
    இது குறித்து சந்தியா நம்பியூர் போலீஸ் நிலையத் தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார்  வழக்குப்பதிவு செய்த ரமேஷ் குமாரை கைது செய்தனர்.  
    பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
    அம்மாபேட்டை அருகே முதியவரை தாக்கிய ஆரம்ப சுகாதார நிலைய டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே முதியவரை தாக்கிய ஆரம்ப சுகாதார நிலைய டிரைவர்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    அம்மாபேட்டை அருகே உள்ள முகாசிபுதூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (32). இவர் கோபிசெட்டிபாளைம் அருகே உள்ள கூகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று சதீஷ் பூனாச்சி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு பேக்கரிக்கு சென்று சில்லி சிக்கன் கேட்டுள்ளார். அப்போது சில்லி சிக்கன் தர தாமதம் ஆனதால் கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அருகே இருந்த மயில்சாமி (60) என்ற முதியவர் சதீஷிடம் எதற்காக இவ்வாறு தகராறு செய்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு சதீஷ் மயில்சாமியை தகாத வார்த்தைகளால் திட்டி, அங்கிருந்த கல்லை எடுத்து தாக்கியதில் மயில்சாமியின் மண்டை உடைந்தது.

    உடனே மயில்சாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து மயில்சாமி அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சதீசை  கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ×