என் மலர்
ஈரோடு
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா பர்கூர் மலை பகுதியை அடுத்துள்ள தேவர்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜி. கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவம்மாள் (வயது 24).
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிவம்மாளுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 108 ஆம்புலன்சை அழைத்தனர்.
டிரைவர் ஆனந்தன் ஆம்புலன்ஸ் மூலம் தேவர்மலை கிராமத்திற்கு வந்து சிவம்மாளை பிரசவத்திற்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது செல்லும் வழியில் தாமரைக்கரை அடர்ந்த வன பகுதியில் ஒற்றை யானை ஒன்று சாலையை வழிமறித்தது நின்றது.
தொடர்ந்து அந்த யானை நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது.
இந்நிலையில் சிவம்மாளுக்கு பிரசவ வலி அதிகமாகவே நிலைமையை புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் சிவம்மாளுக்கு 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவர் சிவா பிரசவம் பார்த்தார்.
அப்போது சிவம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு பின் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து சென்று அனுமதிக்கபட்டார். தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி, சங்கு நகர் பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 40). இவரது கணவர் முருகேசன். இவர்களுக்கு 23 வயதில் ஒரு மகளும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் சுமதி,முருகேசனுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 5 வருடங்களாக சுமதி கணவரை பிரிந்து தாய் வீட்டில் மகன், மகளுடன் வசித்து வந்தார். அவ்வப்போது முருகேசன் தனது மகள் மற்றும் மகனைப் பார்த்து சென்று வந்தார்.
சுமதியின் மகள் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுமதியின் மகள் தான் காதலிக்கும் வாலிபருடன் வீட்டை விட்டு சென்று விட்டார். இதுகுறித்து சுமதி சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் சுமதிக்கு அவரது மகள் போன் செய்து தான் மீண்டும் வந்துவிடுவதாக கூறினார்.
பின்னர் சுமதி வீட்டுக்கு வந்து சோகத்துடன் இருந்துள்ளார். தன்னுடைய கணவரும் தன்னுடன் இல்லை. மகளும் காதலுடன் சென்றுவிட்டாளே என்ற வேதனையில் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் திடீரென தூக்குப்போட்டு கொண்டார்.
உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுமதி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருேக கொடிேவரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் கொடிேவரி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும் கண்டு ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் உளபட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
மேலும் விடுமுறை நாட்கள் மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். அணைக்கு வரும் பொதுமக்கள் தடுப்பு அணையில் கொட்டும் தண்ணீரில் குளித்தும் மகிழ்வார்கள். மேலும் அங்கு விற்பனை செய்யப்படும் மீன்களை ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுவார்கள். இதற்காகவே பலர் தடுப்பணைக்கு வருவார்கள்.
இந்த நிலையில் பவானி சாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் வரத்து குறைந்து பாறைகளாக காட்சி அளிக்கிறது.
இந்த நிலையில் கொடிவேரி தடுப்பணை பகுதியில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் 4ந் தேதி (புதன்கிழமை) வரை 6 நாட்களுக்கு பொதுமக்கள் கொடிவேரி தடுப்பணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளே செல்ல தடை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும் போது, தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று முதல் வரும் 4ந் தேதி வரை பொதுமக்கள் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் அனுமதி இல்லை என்றனர்.






