என் மலர்
உள்ளூர் செய்திகள்

சதீஷ்.
முதியவரை தாக்கி ஆரம்ப சுகாதார நிலைய டிரைவர் சிறையில் அடைப்பு
அம்மாபேட்டை அருகே முதியவரை தாக்கிய ஆரம்ப சுகாதார நிலைய டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே முதியவரை தாக்கிய ஆரம்ப சுகாதார நிலைய டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அம்மாபேட்டை அருகே உள்ள முகாசிபுதூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (32). இவர் கோபிசெட்டிபாளைம் அருகே உள்ள கூகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று சதீஷ் பூனாச்சி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு பேக்கரிக்கு சென்று சில்லி சிக்கன் கேட்டுள்ளார். அப்போது சில்லி சிக்கன் தர தாமதம் ஆனதால் கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அருகே இருந்த மயில்சாமி (60) என்ற முதியவர் சதீஷிடம் எதற்காக இவ்வாறு தகராறு செய்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு சதீஷ் மயில்சாமியை தகாத வார்த்தைகளால் திட்டி, அங்கிருந்த கல்லை எடுத்து தாக்கியதில் மயில்சாமியின் மண்டை உடைந்தது.
உடனே மயில்சாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து மயில்சாமி அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சதீசை கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






