என் மலர்tooltip icon

    ஈரோடு

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 3300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளி யேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது.

    இதன் காரணமாக அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.

    இன்று 19-வது நாளாக பவானிசாகர் அணை 102 அடியில் நீடித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் 3,400 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • சத்தியமங்கலம் அருகே மூலக்கிணறு பகுதியில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கொடுமை பொருள் குற்றப்புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உத்தரவின் பெயரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தி ரசேகர் தலைமையிலான போலீசார் சத்தியமங்கலம் அருகே மூலக்கிணறு பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிரு ந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஆம்னி வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை அடுத்து வேனை ஒட்டி வந்த நபரிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் பவானி பழனிபுரத்தை சேர்ந்த தனபால் (45) என்பதும், பெருந்துறையில் தங்கி உள்ள வட மாநில த்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து தனபாலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் அவரிடம் இருந்து 1,450 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ஆப்பக்கூடல் ஏரி பகுதியில் உள்ள வளைவில் பஸ் திரும்பிய போது நிலைதடுமாறி பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் சுரேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • விபத்தில் சிக்கிய சுரேஷை மீட்டு ஆப்பக்கூடல் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (36).

    இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் இரவு 7.30 மணியளவில் ஈரோடு-சத்தியமங்கலம் செல்லும் தனியார் பஸ்சில் ஆப்பக்கூடல் பஸ் நிறுத்தத்தில் ஏறி பஸ்சின் கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார்.

    அப்போது ஆப்பக்கூடல் ஏரி பகுதியில் உள்ள வளைவில் பஸ் திரும்பிய போது நிலைதடுமாறி பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் சுரேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து உடனே விபத்தில் சிக்கிய சுரேஷை மீட்டு ஆப்பக்கூடல் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்து வமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து சுரேஷின் மனைவி இருசாயி அளித்த புகாரில் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நவீன எந்திரங்கள் மூலம் கலைஞரின் முழு உருவச்சிலையை பீடத்தின் மீது பொருத்தும் பணி நடைபெற்றது.
    • இப்பணியினை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    டி.என்.பாளையம்:

    கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப் பட்டியில் நூலகத்துடன் கூடிய மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை வரும் 25-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    இதற்காக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக இரவு, பகலாக கலைஞர் நூலகம் மற்றும் சிலையின் பீடம் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது.

    இப்பணியினை அமைச்சர் சு.முத்துசாமி , ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர்என்.நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன் ஆகியோர் தினமும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு நவீன எந்திரங்கள் மூலம் கலைஞரின் முழு உருவச்சிலையை பீடத்தின் மீது பொருத்தும் பணி நடைபெற்றது.

    இப்பணியினை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் ஆகியோர் பார்வை யிட்டனர். உடன் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் இருந்தனர்.

    • ஈரோடு மாநகர் பகுதியில் சாலைகளில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
    • மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில் 42.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கலந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அரை மணி நேரம் மழை பெய்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்நிலையில் மதியம் 2 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதன் பிறகும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் சாலைகளில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இதுபோல் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

    பவானி, கவுந்தப்பாடி குண்டேரிபள்ளம், வரட்டு பள்ளம் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில் 42.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்த திடீர் மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: கோபி-42.4, பவானி-32, ஈரோடு-30, கவுந்தப்பாடி-24.2, குண்டேரிபள்ளம்-8.20, வரட்டுபள்ளம்-7.

    • பெருமாள் மலைப்பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
    • இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1050 பறிமுதல் செய்யப்பட்டது.

    பவானி:

    பவானி அருகே உள்ள பெருமாள் மலைப்பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது பெருமாள் மலை பஸ் நிறுத்தம்  அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.1050 பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அவர்கள் பெருமாள் மலைப் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (29), கிருஷ்ணமூர்த்தி (40), சுதாகர் (28), விக்னேஸ்வரன் (29) என தெரிய வந்தது. அவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • கிருஷ்ணமூர்த்தி மது போதையில் வாணியை சந்தேகப்பட்டு பேசி, தகராறு செய்ததாக தெரிகிறது.
    • அக்கம்பக்கத்தினர் வாணிக்கு போன் செய்து கிருஷ்ணமூர்த்தி தூக்குமாட்டியதில் பேச்சு, மூச்சு இல்லாமல் இருப்பதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா வள்ளிபுரத்தான் பாளையம், கள்ளியங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (30). இவரது மனைவி வாணி (26). இவர்களுகு 8 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இருவரும் கடந்த 20-ந் தேதி ஈரோடு வைராபாளையத்தில் உள்ள வாணியின் தாய் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு கிருஷ்ணமூர்த்தி மது போதையில் வாணியை சந்தேகப்பட்டு பேசி, தகராறு செய்ததாக தெரிகிறது.

    பின்னர் அவர் கோபத்துடன் அங்கிருந்து புறப்பட்டு கள்ளியங்காட்டு வலசில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் இரவு அக்கம்பக்கத்தினர் வாணிக்கு போன் செய்து கிருஷ்ணமூர்த்தி தூக்குமாட்டியதில் பேச்சு, மூச்சு இல்லாமல் இருப்பதாகவும், ஈரோடு அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர்.

    இதையடுத்து வாணி மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது கிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வாணி அளித்த புகாரின்பேரில் வெள்ளோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அவினாசி கவுண்டன் பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக பக்த ர்கள் முளைப்பாரி மற்றும் தீர்த்தம் எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து மாலை விநாயகர் பூஜை, புண்யகம், வாஸ்து சாந்தி, அங்குூரார்பணம், ரக்ஷா பந்தனன் மற்றும் கும்ப அலங்காரம் செய்யப்பட்டு, முதல் காலையாக பூஜை, உபச்சார வழிபாடு மற்றும் திருமுறை பாராயணம் செய்யப்பட்டு மகா தீபாரா தனை நடைபெற்றது.

    தொடர்ந்து அஷ்ட பந்தனம் மருந்து சாற்றுதல் நடை பெற்றது. விழாவையொட்டி நேற்று காலை விநாயகர் பூஜை, 2-ம் கால யாக பூஜை மகா தீபாரதனையும் நடை பெற்றது.

    இதை தொடர்ந்து விநாயகர், செல்வநாயகி அம்மன் கோபுர கலசம், மூலவர் செல்வநாயகி அம்மன், கருப்பராயர், கன்னிமார், மாயவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபி ஷேகம் நடை பெற்றது.

    அதை தொடர்ந்து தச தரிசனம், தசதானம், மகா அபிஷேகமும் நடைபெற்று பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. விழாவில் கவுந்தப்பாடி, அவினாசி கவுண்டன் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தார்கள்.

    • மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    • மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் 29,046 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.

    இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனை வருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது.

    மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியா ளர்கள் ஈடுபட்டனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்த ப்பட்டது.

    மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 1,041 பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 16 ஆயிரத்து 361 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 11 ஆயிரத்து 644 பேரும் என மொத்தம் 29,046 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்து ள்ளனர்.

    • மாடிப்படியில் தேங்கியிருந்த மழை நீரில் கால் வைத்தபோது தறிபட்டறை தொழிலாளி வழுக்கி கீழே விழுந்தார்.
    • இதில் அவரது தலையின் பின் பகுதியில் அடிப்பட்டதில், காதில் ரத்தம் வந்து மயங்கி விழுந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள லக்காபுரம், சுப்பராய வலசு பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (55). இவரது மனைவி பேபி (50). இருவரும் லக்காபுரத்தில் உள்ள தறிப்பட்டறை ஒன்றில் வேலை செய்து வந்தனர்.

    சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து பேபி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது முதல் தளத்தில் உள்ள தங்களது வீட்டில் இருந்து கிருஷ்ணமூர்த்தி இறங்கி வந்துள்ளார். அப்போது மாடிப்படியில் தேங்கியிருந்த மழை நீரில் கால் வைத்தபோது வழுக்கி கீழே விழுந்தார்.

    இதில் அவரது தலையின் பின் பகுதியில் அடிப்பட்டதில், காதில் ரத்தம் வந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ–மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மயில்சாமி உயிரிழந்தார்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • அந்தியூர் அடுத்த செம்பளிச்சம்பாளையம் காலனி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதியதாக கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
    • இதனால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த செம்பளிச்சம்பாளையம் காலனி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதியதாக கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டது.

    இந்தப் பணி 2 மாதங்களாக நடந்து முடிந்தும் கழிவுநீர் வெளியே செல்ல முடியாத நிலையில் அப்படியே தேங்கி கிடந்தது. அந்த கழிவு நீர் சாலையில் சென்று துர் நாற்றம் வீசியது. இதனால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதனால் அந்த பகுதி பொதுமக்களும் மிகுந்த வேதனையோடு இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் மாலை மலரில் இது தொடர்பான செய்தி வெளியிடப்பட்டது. இதையொட்டி ஒட்ட பாளையம் ஊராட்சி தலைவர் பெருமாள்சாமி, ஊராட்சி செயலாளர் (கிளார்க்) குருசாமி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் அதை சரி செய்ய நட வடிக்கை எடுத்தனர்.

    இதை தொடர்ந்து பணியாளர்கள் மூலம் அந்த இடத்தில் மண் கொண்டு வரப்பட்டு சாலையில் நீர் தேங்கிய பகுதிகளில் கொட்டப்பட்டு ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் சமன்படுத்தப்பட்டு சரி செய்யப்பட்டது.

    • கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் கருங்கல்பாளையம் போலீஸ் தலைமை காவலர் அற்புதராஜ் என்பவர் நேற்று வாகன சோதனை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • அப்போது நள்ளிரவு 1.30 மணி அளவில் பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கொண்டிருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் காவிரி ஆற்றுப்பாலம் அருகே சோதனைசாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேரமும் கருங்கல்பாளையத்தை சேர்ந்த போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு-சேலம் முக்கிய போக்குவரத்தாக காவிரி ஆற்று பாலம் உள்ளது. இதனால் இந்த சோதனை சாவடியில் போலீசார் 24 மணி நேரமும் பணியில் இருந்து வாகனங்களை சோதனை செய்த பிறகு உள்ளே அனுமதிப்பார்கள்.

    இந்நிலையில் வழக்கம் போல் கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் கருங்கல்பாளையம் போலீஸ் தலைமை காவலர் அற்புதராஜ் (48) என்பவர் நேற்று வாகன சோதனை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது நள்ளிரவு 1.30 மணி அளவில் பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கொண்டிருந்தனர். அந்த மோட்டார் சைக்கிளை அற்புதராஜ் நிறுத்த முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் அற்புதராஜ் மீது மோதியது.

    இதில் அற்புதராஜன் 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சடைந்த மற்ற போலீசார் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து அற்புதராஜை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மது போதையில் வந்து உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×