என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அவருக்கு உதவியாளராக சரவணன் இருந்துள்ளார்.
    • அரியப்பம்பாளையம் பகுதியில் உள்ள மிலிட்டரி சரவணன் வீட்டு அருகே உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.ஈஸ்வரன்(46). புஞ்சைபுளியம்பட்டி அருகே புஜங்கனூரியில் வசித்து வருகிறார்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி ஒரு இடத்தில் அடைத்து வைத்து அடித்து கொடுமைப்படுத்தியது. ரூ.3 கோடி கொடுத்தால் விடுவதாக அந்த கும்பல் ஈஸ்வரனை மிரட்டியது.

    இதையடுத்து ஈஸ்வரன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை ரூ.1.50 கோடி வீட்டில் உள்ளது அதை தருகிறேன் என்று கூறினார். இதையடுத்து கடத்தல் கும்பல் ஈஸ்வரனை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று ரூ.1.50 கோடி பணத்தை பெற்றுக் கொண்டு அவரை அங்கேயே விட்டு சென்றது.

    இது குறித்து ஈஸ்வரன் புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி மிலிட்டரி சரவணன் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அவருக்கு உதவியாளராக சரவணன் இருந்துள்ளார். அவர் தூண்டுதல் பேரில் 6 பேர் ஈஸ்வரனை கடத்தி அடித்து உதைத்து பணம் பறித்தது தெரிய வந்தது.

    கடத்தல் கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த கடத்தல் சம்பவத்தில் இது வரை 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். எனினும் இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்ட மிலிட்டரி சரவணன் என்பவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பகுதியில் உள்ள மிலிட்டரி சரவணன் வீட்டு அருகே உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மிலிட்டரி சரவணனை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் மிலிட்டரி சரவணன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 2007-ம் ஆண்டு சகாபுதீன் போலீஸ் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு காவல்துறை பதிவேட்டில் ரவுடியாக பதிவு செய்யப்பட்டது.
    • ரவுடி சகாபுதீன் சப்-இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர்ந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தியது உண்மை என தெரிய வந்தது.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூர் பகுதியை சேர்ந்தவர் சகாபுதீன் (58). இவர் போலீசில் ஏட்டாக பணியாற்றிவர்.

    இவர் தனது பணியின்போது பொது இடத்தில் தகராறு செய்தது, மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    இதையடுத்து கடந்த 2007-ம் ஆண்டு சகாபுதீன் போலீஸ் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு காவல்துறை பதிவேட்டில் ரவுடியாக பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சகாபுதீன் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். பின்னர் அவர் சப்-இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர்ந்து போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்தவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளார்.

    இதுகுறித்து தகவல் தெரிய வந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மற்றும் கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி. சியாமளாதேவி ஆகியோர் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசாரை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ரவுடி சகாபுதீன் சப்-இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர்ந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தியது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து போலீசாரை எச்சரித்து அனுப்பினர்.

    மேலும் இதுதொடர்பாக சகாபுதீனிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவரை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஈரோடு மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பவித்ராவின் கணவர் பிரவீன்குமார் வளைகாப்புக்கு பொருட்கள் வாங்க கொடுமுடிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
    • மனைவிக்கு வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் கணவர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொடுமுடி:

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள வேட்டமங்கலம் என்ற பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (27). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் கபிலர் மலை சோளிபாளையத்தை சேர்ந்த ராஜா என்பவரது மகள் பவித்ரா (21) என்பவருக்கும் கடந்த 1 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

    தற்போது பவித்ரா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வளைகாப்பு நடத்த முடிவு செய்து ஏற்பாடுகள் நடந்து வந்தது.

    பவித்ராவின் கணவர் பிரவீன்குமார் நேற்று ஆயுத பூஜையையொட்டி வீட்டில் பூஜைகள் செய்து விட்டு மனைவியின் வளைகாப்புக்கு பொருட்கள் வாங்க ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    பிரவீன்குமார் கொடுமுடி அருகே உள்ள சோளக்காளிபாளையம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் பிரவீன்குமார் மீது மோதியது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த ஒரு சுவற்றின் மீது மோதி நின்றது.

    இந்த விபத்தில் பிரவீன்குமார் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி தெரிய வந்ததும் அவரது மனைவி பவித்ரா மற்றும் குடும்பத்தினர் விரைந்து வந்து பிரவீன்குமார் உடலை பார்த்து கதறி அழுதனர். நாளை மனைவிக்கு வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் கணவர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீர் பந்தல் மேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது இவர்களின் பின்னால் வந்த ஒரு கார் மோதியதில் சகுந்தலா மற்றும் அவரது கணவர் சீனிவாசன் ஆகியோர் கீழே தூக்கி வீசப்பட்டனர்.
    • இது குறித்து அந்தியூர் போலீசில் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவுட்டுப்பாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (50) விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா (50).இவர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து மாலை நேரத்தில் நடை பயிற்சிக்காக வெள்ளையம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது தண்ணீர் பந்தல் மேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது இவர்களின் பின்னால் வந்த ஒரு கார் மோதியதில் சகுந்தலா மற்றும் அவரது கணவர் சீனிவாசன் ஆகியோர் கீழே தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் சகுந்தலாவிற்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. சீனிவாசனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியோடு அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவ–மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசில் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    • ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும்.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.40 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 478 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 -ந் தேதி பவானி–சாகர் அணை 102 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து–விடப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    எனினும் அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வந்தது.

    இந்நிலையில் 56 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.92 அடியாக குறைந்தது. தொடர்ந்து நீட்டிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.40 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 478 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், காலிங்கராயன் பாசன–த்திற்கு 400 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • அருகில் இருந்தவர்கள் உங்களது தந்தை குடிபோதையில் சைக்கிள் எடுத்துக்கொண்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்று கூறினர்.
    • இது குறித்த தகவலின் பெயரில் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த சாணார்பாளையம் ஆண்டாள் நகரை சேர்ந்தவர் ராமசாமி(52).

    இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு தேவி, லாவண்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சரோஜா கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். ராமசாமி மட்டும் ஆண்டாள் நகரில் தனியாக வசித்து வந்தார். தேவி, லாவண்யா தினமும் தந்தையிடம் போனில் பேசி வந்தனர்.

    எங்களின் கடந்த 28-ந் தேதி மகள்கள் இருவரும் தந்தைக்கு போன் செய்தனர். ஆனால் போனை அவர் எடுக்கவில்லை. இதனை அடுத்து மகள்கள் இருவரும் ஆண்டாள் நகருக்கு வந்து விசாரித்த போது அருகில் இருந்தவர்கள் உங்களது தந்தை குடிபோதையில் சைக்கிள் எடுத்துக்கொண்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்று கூறினர்.

    இதையடுத்து தந்தையை பல்வேறு இடங்களில் தேடினர். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி தாட்டரவலசு, கருக்கன் காட்டு தோட்டம் பகுதியில் உள்ள கிணற்றில் ராமசாமி பிணமாக கிடந்தார்.

    இது குறித்த தகவலின் பெயரில் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீட்டை விட்டு வெளியே சென்ற ராமசாமி குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தெருவிளக்கு வசதிகள் இல்லாததால் இரவு நேரங்களில் இந்த பகுதியை கடந்து வர எங்கள் பகுதி பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • ஏற்கனவே இந்த பகுதியில் வழிப்பறி சம்பவங்களும் நடந்து உள்ளன. ரோடு குண்டும் குழியுமாக இருக்கின்றன.

    ஈரோடு:

    ஈரோடு நசியனூர் ரோடு, காரமடை அருகே பிளசிங் ரெவென்யு பகுதி உள்ளது. இங்கு 35 குடும்பத்தினர் கடந்த 10 வருடத்துக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

    காரமடை பஸ் நிறுத்தத்தில் இருந்து பிளஸ்சிங் ரெவென்யூ பகுதி வரை கிட்டத்தட்ட 1½ கிலோ மீட்டர் தூரம் உள்ளது. தினமும் இந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள், கல்லூரி மாணவ, மாணவிகள் வேலைக்கு செல்லும் பெண்கள் இந்த 1½ கிலோ மீட்டர் தூரம் நடந்தது தான் செல்ல வேண்டும்.

    இந்த பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லை. மேலும் தார் ரோடு, சாக்கடை வசதி, குடிநீர் வசதியும் இல்லை. இரவு நேரம் தெருவிளக்கு இல்லாததால் இந்த பகுதியில் நடந்து செல்லும்போது சில சமயம் வழிப்பறி சம்பவங்களும் நடந்து உள்ளன.

    இதனையடுத்து இப்பகுதி மக்கள் தெரு விளக்கு, தார் ரோடு, சாக்கடை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி நசியனூர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    ஆனால் இதுவரை அந்த மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிட்டத்தட்ட மனு கொடுத்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. இது குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் சென்று கேட்டால் நிதி இல்லை என்று கூறிவிட்டனர்.

    இதையடுத்து இப்பகுதி மக்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு கொடுத்தனர். ஆனால் அதற்கும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

    இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் 7 நாட்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி காந்தி ஜெயந்தியான இன்று தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,

    நாங்கள் 10 வருடங்களுக்கும் மேலாக இந்த பகுதியில் குடியிருந்து வருகிறோம். எங்கள் பகுதியில் தெரு விளக்கு, சாக்கடை வசதி, குடிநீர் வசதி, தார் ரோடு வசதி எதுவும் இல்லை. காரமடை பஸ் நிறுத்தத்தில் இருந்து எங்கள் பகுதிக்கு கிட்டத்தட்ட 1½ கிலோமீட்டர் நடந்து வரவேண்டும்.

    தெருவிளக்கு வசதிகள் இல்லாததால் இரவு நேரங்களில் இந்த பகுதியை கடந்து வர எங்கள் பகுதி பெண்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே இந்த பகுதியில் வழிப்பறி சம்பவங்களும் நடந்து உள்ளன. ரோடு குண்டும் குழியுமாக இருக்கின்றன.

    மழைக்காலங்களில் ரோடுகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும். முறையான சாக்கடை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் நீர் தேங்கி நிற்கிறது. எனவே அடிப்படை வசதி செய்து தரக்கோரி 2 வருடமாக மனு கொடுத்து வருகிறோம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

    எனவே காந்தி ஜெயந்தியான இன்று எங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இன்று முதல் தொடர்ந்து 7 நாட்கள் எங்கள் வீடு, தெருக்களில் கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டு இருக்கும். இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பன்னீர்செல்வம் பார்க் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டும் பணியை இன்று அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இதேபோல் காளை மாடு சிலை அருகேயும் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ரூ.51 கோடி மதிப்பில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது. இந்த பணியை இன்று அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஈரோடு ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் பணி முடியும் தருவாயில் உள்ளது. ரூ.51 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு 292 கடைகள் வர உள்ளது.

    இதேப்போல் 153 நான்கு சக்கர வாகனங்களும், 263 இரு சக்கர வாகனங்களும் நிறுத்த இடம் வசதி உள்ளது. மொத்தம் 3 லட்சம் சதுர அடியில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

    இங்கு துணி வாங்க வருபவர்கள் பஸ்சில் வந்து இறங்கி செல்வதற்கும், மீண்டும் துணிகளை வாங்கி திரும்பி செல்வதற்கும் சிரமம் இன்றி செல்லும் வகையில் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    நமது மாவட்டத்தில் ஒவ்வொரு பணிகள் குறித்து ஆய்வு செய்யும் போது அது குறித்து முதல்-அமைச்சர் கேட்டு வருகிறார்.

    இந்த ஒருங்கிணைந்த ஜவுளி வளாகத்தில் ஏற்கனவே இருக்கும் வியாபாரிகளுக்கு முன்னு ரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்க அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறோம்.

    இதில் சில சட்ட சிக்கல்கள் பிரச்சி னைகள் உள்ளன. அவை நிவர்த்தி செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்ப டையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் காளை மாடு சிலை அருகேயும் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    இந்நிலையில் இன்று காரமடை அருகே அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து நானே சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்வேன். இதேபோல் பூந்துறை பகுதிகளிலும் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் பேசி சுமுகமான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோசனம் ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டத்திற்கு நம்பியூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
    • போதிய அளவு மக்கள் கூட்டம் இல்லாததால் கிராம சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோசனம் ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டத்திற்கு நம்பியூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    அதில் 25 நபர்களுக்கு குறைவாக பொதுமக்கள் இருந்துள்ளனர். இது குறித்து அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் கூறியதாவது:-

    கிராமசபை அறிவிப்பு பற்றி எங்களுக்கு முறையான எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் கிராமத்தின் குடிநீர் தொட்டிகள் சரியாக சுத்தம் செய்வது இல்லை, தெருவி ளக்குகள் எரிவதில்லை, வீட்டு வரி ரசீது கொடுப்ப தில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை பொது மக்கள் முன்வைத்தனர்.

    மேலும் கிராம சபை தொடர்பான கோரிக்கை களை கிராம பொதுமக்கள் கலெக்டருக்கு புகார் மனுவாக அனுப்பி வைக்க உள்ளனர்.

    மேலும் பொதுமக்களிடம் போலீசார் மற்றும் நம்பியூர் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து போதிய அளவு மக்கள் கூட்டம் இல்லாததால் கிராம சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் இன்றும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.65 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்ப குதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    எனினும் அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வந்தது.

    இந்நிலையில் 56 நாட்களுக்கு பிறகு நேற்று பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.92 அடியாக குறைந்தது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் இன்றும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 913 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி என மொத்தம் 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது இயற்கை இடர்பாடுகளால் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • மழை நீர் வடிந்த பின் பயிர்களுக்க ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் மரகதமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது இயற்கை இடர்பாடுகளான புயல், மழை, வெள்ள பெருக்கால் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அறுவடைக்கு தயாராக உள்ள தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு, மரங்களின் சுமையை குறைக்க வேண்டும். காற்றால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க மரங்களை கவாத்து செய்து மரத்தின் சுமையை குறைக்க வேண்டும். மழை நீர் தேக்கத்தை குறைக்க உபரி நீர் வடிந்த பின் நடவு அல்லது விதைப்பு பணிகளை செய்ய வேண்டும்.

    வடிகால் வசதி அற்ற நிலங்களில் ஆங்காங்கு வடிகால் வாய்க்கால் அமைத்து மழை நீர் தேக்கத்தை தவிர்க்கலாம். காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்து செடிகள் சாய்ந்து விடாமல் தடுக்க வேண்டும்.

    மரங்களை சுற்றி மண் அணைத்து காக்க வேண்டும். மழை நீர் வடிந்த பின் பயிர்களுக்க ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைக்க வேண்டும். இலைவழி உரம் கொடுத்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை நிவர்த்தி செய்யலாம்.

    தோட்டங்களில் பசுமைக்குடில், நிழல் வலைக்குடில் அமைத்திருந்தால் அதன் அடிப்பக்கம் பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைத்து உறுதி செய்ய வேண்டும். பழப்பயிர், மிளகு, கொக்கோ, வாழை, காய்கறி, மரவள்ளி, பூக்கள் போன்ற பயிர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • வெங்கடேஷ் குடும்ப பிரச்சினை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்,
    • இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையம், தேவகியம்மாபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் ( வயது 38 ) இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.

    இவருக்கு முருகேஸ்வரி (29) என்ற பெண்ணுடன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஓராண்டாக கணவன்-மனைவி சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் வெங்கடேசன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது . சண்டையிடும் போதெல்லாம் நான் தூக்கு மாட்டி அல்லது விஷமருந்தி தற்கொலை செய்து கொள்வேன் என கூறி வந்துள்ளார்.

    அதன்படி சம்பவத்தன்று வெங்கடேஷ் குடும்ப பிரச்சினை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார், மனைவி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது வீட்டு வாசலில் வாயில் நுரையுடன் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது டாக்டர் பரிசோதித்து பார்த்ததில் வெங்கடேசன் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×