என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மிலிட்டரி சரவணன்.
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கடத்தலில் தலைமறைவாக இருந்த முன்னாள் உதவியாளர் தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
- ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அவருக்கு உதவியாளராக சரவணன் இருந்துள்ளார்.
- அரியப்பம்பாளையம் பகுதியில் உள்ள மிலிட்டரி சரவணன் வீட்டு அருகே உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.ஈஸ்வரன்(46). புஞ்சைபுளியம்பட்டி அருகே புஜங்கனூரியில் வசித்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி ஒரு இடத்தில் அடைத்து வைத்து அடித்து கொடுமைப்படுத்தியது. ரூ.3 கோடி கொடுத்தால் விடுவதாக அந்த கும்பல் ஈஸ்வரனை மிரட்டியது.
இதையடுத்து ஈஸ்வரன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை ரூ.1.50 கோடி வீட்டில் உள்ளது அதை தருகிறேன் என்று கூறினார். இதையடுத்து கடத்தல் கும்பல் ஈஸ்வரனை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று ரூ.1.50 கோடி பணத்தை பெற்றுக் கொண்டு அவரை அங்கேயே விட்டு சென்றது.
இது குறித்து ஈஸ்வரன் புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி மிலிட்டரி சரவணன் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அவருக்கு உதவியாளராக சரவணன் இருந்துள்ளார். அவர் தூண்டுதல் பேரில் 6 பேர் ஈஸ்வரனை கடத்தி அடித்து உதைத்து பணம் பறித்தது தெரிய வந்தது.
கடத்தல் கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த கடத்தல் சம்பவத்தில் இது வரை 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். எனினும் இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்ட மிலிட்டரி சரவணன் என்பவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பகுதியில் உள்ள மிலிட்டரி சரவணன் வீட்டு அருகே உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மிலிட்டரி சரவணனை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் மிலிட்டரி சரவணன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






