என் மலர்
உள்ளூர் செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர்ந்து விசாரணை நடத்திய ரவுடி- போலீஸ் சூப்பிரண்டு அதிரடி விசாரணை
- கடந்த 2007-ம் ஆண்டு சகாபுதீன் போலீஸ் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு காவல்துறை பதிவேட்டில் ரவுடியாக பதிவு செய்யப்பட்டது.
- ரவுடி சகாபுதீன் சப்-இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர்ந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தியது உண்மை என தெரிய வந்தது.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூர் பகுதியை சேர்ந்தவர் சகாபுதீன் (58). இவர் போலீசில் ஏட்டாக பணியாற்றிவர்.
இவர் தனது பணியின்போது பொது இடத்தில் தகராறு செய்தது, மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இதையடுத்து கடந்த 2007-ம் ஆண்டு சகாபுதீன் போலீஸ் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு காவல்துறை பதிவேட்டில் ரவுடியாக பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சகாபுதீன் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். பின்னர் அவர் சப்-இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர்ந்து போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்தவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளார்.
இதுகுறித்து தகவல் தெரிய வந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மற்றும் கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி. சியாமளாதேவி ஆகியோர் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசாரை வரவழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது ரவுடி சகாபுதீன் சப்-இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர்ந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தியது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து போலீசாரை எச்சரித்து அனுப்பினர்.
மேலும் இதுதொடர்பாக சகாபுதீனிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவரை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் ஈரோடு மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






