என் மலர்tooltip icon

    ஈரோடு

    • வீட்டில் காயத்துடன் மர்மமான முறையில் காதர்மொய்தீன் இறந்து கிடந்தார்.
    • சந்தேக மரண வழக்கை கொலை வழக்கமாக மாற்றி கருங்கல்பாளையம் போலீசார் லோகுவை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிருஷ்ணம்பாளையம், சிந்தன் நகர், 4 -வது வீதியைச் சேர்ந்தவர் காதர்மொய்தீன் (62). பெயிண்டர். தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் காயத்துடன் மர்மமான முறையில் காதர்மொய்தீன் இறந்து கிடந்தார். கருங்கல்பாளையம் போலீசார் உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். காதர்மொய்தீன் பிரேத பரிசோதனை முடிவு வெளி வந்தது.

    அதில் விலா எலும்பு உடைந்து நுரையீரலில் குத்தியதில் காதர் மொய்தீன் இறந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக கருங்கல் பாளையம் பச்சையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த லோகு (34) என்ற கட்டிட தொழிலாளியை போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது அவர் மொய்தீனை கொன் றதை ஒப்புக் கொண்டார்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:

    காதர் மொய்தீன், லோகு பல இடங்களில் ஒன்றாக வேலை பார்த்த போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி மதுவும் அருந்தி வந்துள்ளனர்.

    காதர் மொய்தீன் அடிக்கடி நாகூர் சென்று பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். அங்கு வீட்டு வேலை செய்ய ஒரு பெண் தேவை என்று கேட்டுள்ளார். இதையடுத்து லோகுவின் மனைவியை அங்கு வேலைக்கு சேர்த்து உள்ளார்.

    இந்நிலையில் மனைவி மாயமானதாக நினைத்து லோகு ஆத்திரத்தில் இருந்து உள்ளார். நாகூரில் அவர் வேலை செய்வதும் அதற்கு காதர் மொய்தீன் தான் காரணம் என்று தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    கடந்த 7-ந் தேதி இரவு இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது லோகு, காதர் மொய்தீனை கைகளால் தாக்கியும், நெஞ்சு விலா எலும்பு பகுதியில் கால்களால் ஏறியும் மிதித்துள்ளார்.

    இதில் மொய்தீன் மூச்சுத் திணறி இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    இதனை அடுத்து சந்தேக மரண வழக்கை கொலை வழக்கமாக மாற்றி கருங்கல்பாளையம் போலீசார் லோகுவை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். 

    • பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.
    • அந்தியூர் சப்- இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மற்றும் தொடக்க வேளாண்மை அலுவலக அதிகாரிகளிடத்தில் பேச்சுவார்த்தை செய்ததில் உடன்பாடு ஏற்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இதுவரை கொடுத்துள்ள 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர் விண்ணப்பத்தில் ஒருசிலரை மட்டும் சேர்த்துவிட்டு ரசீது போடப்பட்டது.

    மேலும் ரசீது போடாத மீதமுள்ள உறுப்பினர் சேர்க்கையை முழுவதும் முடிக்காமல் காலம் தாழ்த்துவது கண்டித்து கூட்டுறவு சங்க செயலாளர், முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

    பின்னர் பேச்சு வார்த்தையில் அந்தியூர் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் மற்றும் தொடக்க வேளாண்மை அலுவலக அதிகாரிகளிடத்தில் பேச்சுவார்த்தை செய்ததில் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து உள்ளிருப்பு போராட்டம் கைவி டப்பட்டது.

    இதில் மாநிலத் துணைத் தலைவர் பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினர் கோபால், சம்பத், ஒன்றிய செயலாளர் நடராஜ், மாவட்ட துணைச்செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய பொருளாளர் ராஜி, மாவட்ட துணைச்செ யலாளர் செங்கோட்டையன், மாவட்ட இளைஞர் சங்க துணை தலைவர் சரவணன், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வெங்கிடுசாமி வீட்டிற்கு வந்து மர பீரோவைத்திறந்து பார்த்தபோது பணத்தை காணவில்லை.
    • இதில் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்ட தம்பி வீரனை போலீசார் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே ஊஞ்சபாளையம் மேக்கால் தோட்டத்தை சேர்ந்தவர் வெங்கிடுசாமி (75). இவரது தோட்டத்து அருகே சுப்பிரமணியம் என்பவரது தோட்டத்திற்கு கூலி வேலைக்கு வந்தவர் ஊஞ்சபாளையம் காலனியை சேர்ந்த நவீன் என்கிற தம்பி வீரன் (28).

    இவர் சம்பவத்தன்று சுப்பிரமணியம் தோட்டத்திற்கு வேலைக்கு வந்து விட்டு அருகில் இருந்த வெங்கிடுசாமி என்பவரிடம் தனது மோட்டார் சைக்கிளை அடமானம் வைத்துள்ளேன்.

    அதை மீட்க ரூ.5 ஆயிரம்தேவைப்படுகிறது. எனவே ரூ.5 ஆயிரம் கடன் கொடுங்கள் மீண்டும் கொடுத்து விடுகிறேன் என கேட்டுள்ளார்.

    அதற்கு வெங்கடசாமி இல்லை என கூறிவிட்டு தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை அங்குள்ள ஒரு மறைவிடத்தில் வைத்து விட்டு சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட நவீன் என்கிற தம்பி வீரன் வெங்கிடுசாமி வெளியே சென்ற பிறகு அங்கிருந்து சாவியை எடுத்து பூட்டை திறந்து வீட்டில் இருந்த மர பீரோவில் வெங்கிடுசாமி வைத்திருந்த ரூ.8 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு மீண்டும் வீட்டை பூட்டி சாவியை அதே இடத்தில் வைத்துவிட்டு சென்று விட்டார்.

    பின்னர் மாலை வெங்கிடுசாமி வீட்டிற்கு வந்து மர பீரோவைத்திறந்து பார்த்தபோது பணத்தை காணவில்லை. விசாரித்ததில் தம்பி வீரன் என்பவர் வீட்டில் இருந்து வெளியே சென்றதாகவும், அவரை விசாரித்தால் தெரியும் எனவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

    இதனையடுத்து நவீன் என்கிற தம்பி வீரன் தலைமறைவானார்.

    இதனையடுத்த அருகில் இருக்கும் ஒரு விவசாய கரும்பு தோட்டத்திற்கு தம்பி வீரன் வேலைக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்ததும் வெங்கிடுசாமி அவரை கையும், களவுமாக பிடித்து அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தார்.

    இதில் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்ட தம்பி வீரனை போலீசார் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    • புஞ்சைபுளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் மாட்டு இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தது.
    • இந்த கடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் மாட்டு இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் சுகாதாரக் கேடு நோய் தொற்று ஏற்படுவதாக நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

    இதையொட்டி இந்த கடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

    இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த வாரச்சந்தையில் மாட்டிறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தது.

    சந்தை வளாகத்தில் மாட்டு இறைச்சி கடைகள் மீண்டும் வைக்கவும் விற்பதற்கு அனுமதிக்க வேண்டும். மற்றும் அந்த பகுதியில் கடைகள் கட்டி தர வேண்டும் என அவர்கள் கோஷங்கள் எழுப்பி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    • ஆனந்தன் கருக்கம்பாளையம் மாகாளியம்மன் கோவில் முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பெரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (40). கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா (36). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஆனந்தன் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.

    இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றி வந்துள்ளார். மேலும் வீட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்துள்ளார். வெளியூரிலிருந்து எப்போதாவது வீட்டுக்கு வரும் ஆனந்தன் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அதே ஊரை சேர்ந்த ஒருவரிடம் ரூ.300 கடன் பெற்று கொண்டு வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் ஆனந்தன் ஈரோடு மாவட்டம் லக்காபுரம் அடுத்த கருக்கம்பாளையம் மாகாளியம்மன் கோவில் முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆனந்தன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து ஆனந்தன் மனைவி கீதாவுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 

    • போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
    • இதில் விவசாயிகள், பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த நல்லூர் கிராமத்தில் புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் உள்ள சாய ப்பட்டறை மற்றும் அப்பகுதி ரசாயன கழிவுகள் சாக்கடை வடிகாலில் கலப்பதாகவும் அந்த கழிவுகள் நல்லூர் குளத்தின் நீரில் கலப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    இது குறித்து அதிகாரி களிடம் மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை என மக்கள் புகார் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் புளியம்பட்டி எஸ்.ஆர்.டி. அருகே உள்ள நகராட்சி பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் வடிகாலில் டிப்பர் லாரியில் மண் கொண்டு வந்து கழிவு நீர் வடிகாலை தடுத்து அடை த்தனர்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் விவசாயிகள், பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை. குளத்தில் வந்து கழிவுநீர் கலப்பதால் மண்ணை கொட்டி அடைத்துள்ளோம் என தெரிவித்தனர்.

    இதில் பொதுமக்கள் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சென்னிமலை போலீசார் இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • இதனைத் தொடர்ந்து கல்யாணசுந்தரம் மற்றும் போத்தீஸ்குமார் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை கே. ஜி. வலசு, பெருமாள்மலையை சேர்ந்தவர் கருப்பண்ணன் (75). விவசாயி. இவரது மனைவி மல்லிகா. இவர்களின் மகள் தீபா.

    கடந்த 2021 ஜூன் 26-ந் தேதி தனது தோட்டத்தில் மனைவி மல்லிகா, மகள் தீபா மற்றும் கூலி தொழிலாளி முருங்கத் தொழுவை சேர்ந்த குப்பம்மாள் ஆகியோருடன் கருப்பண்ணன் வேலை செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது வந்த ஒரு வாலிபர் கொரோனா பரிசோதனை செய்ய வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். அதற்கு முன் மாத்திரை சாப்பிடுங்கள் என்று கூறி 4 பேருக்கும் மாத்திரை கொடுத்தார்.

    மாத்திரை சாப்பிட்ட 4 பேரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கினர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் விசார ணையில் கருப்பண்ணன் நிலத்தை குத்தகைக்கு எடுத்த சென்னி–மலை அம்மாபாளையத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் (43) என்பவருக்கும் கருப்பண்ணனுக்கும் பணம், கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது தெரிய வந்தது.

    கருப்பண்ணன், கல்யாண சுந்தரத்துக்கு ரூ.14 லட்சம் வரை பணம் கொடுத்து ள்ளார். அந்த பணத்தை கருப்பண்ணன் கல்யாண சுந்தரத்திடம் திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார்.

    பணத்தை திரும்ப கேட்டதால் ஆத்திரம் அடைந்த கல்யாண சுந்தரம் கருப்பண்ணனை கொலை செய்யும் நோக்கத்தில் தோட்டத்துக்கு பயன்படுத்தப்படும் விஷ மாத்திரைகளை சென்னிமலை எம்.பி.என். காலனியை சேர்ந்த கல்லூரி மாணவர் போத்தீஸ் குமார்(20)என்பவர் மூலம் கொடுத்து தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்தது.

    இதனை அடுத்து சென்னிமலை போலீசார் இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    நீதிபதி மாலதி நேற்று இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்தார். அதில் முக்கிய குற்றவாளி யான விவசாயி கல்யாண சுந்தரத்திற்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    இதேப்போல் மற்றொரு குற்றவாளியான போத்தீஸ்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து கல்யாணசுந்தரம் மற்றும் போத்தீஸ்குமார் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • ரிங்ரோடு சாலை விரி வாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • சோலார் பஸ் நிலையம் திறப்பதற்கு முன்பு, சாலை விரிவாக்கம் செய்யும் பணி விரைவாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மொடக்குறிச்சி:

    சோலாரில் புதிய பஸ் நிலையம் உதயமாவதை அடுத்து ரூ.6 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் ரிங்ரோடு சாலை விரி வாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஈரோடு நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் கனரக வாகனங்கள் நகருக்குள் செல்லாமல் ரிங் ரோடு வழியாக செல்வதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்துறை ரோடு, திண்டல் அடுத்த வேப்பம்பாளையத்தில் தொடங்கி சென்னிமலை ரோடு ரங்கம்பாளையம், அவல்பூந்துறை ரோடு ஆனைக்கல்பாளையம், முத்தூர் ரோடு லக்காபுரம், கரூர் ரோடு வழியாக கொக்கராயன் பேட்டை மற்றும் திருச்செங்கோடு ரோட்டை இணைக்கும் புறவழிச்சாலை ரிங் ரோடு அமைக்கப்பட்டது.

    இதில் ஆனைக்கல்பாளை யத்தில் இருந்து திண்டல் செல்லும் ரோட்டில் ரிங்ரோட்டிற்காக நிலம் எடுக்கப்பட்டது. ஆனால் இழப்பீடு வழங்குவதில் பிரச்சனை நீடித்ததால் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

    இதனால் ரிங் ரோட்டில் இணைப்பு சாலை ஒரு பகுதி மட்டும் இணைக்கப்படாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பணிகளை முடித்து இணை க்கப்படாத சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் இணைத்து போக்குவரத்தை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.

    இதனையடுத்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் ரிங் ரோடு வழியாக நகருக்குள் செல்லாமல் திருச்செங்கோடு, நாமக்கல் போன்ற ஊர்களுக்கு சென்று வருகிறது.

    அதே போல் தென் மாவட்டங்களில் இருந்து கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் வாகனங்கள் ஈரோடு நகருக்குள் செல்லாமல் ரிங் ரோடு வழியாகவும் சென்று வருகிறது.

    மேலும் ஈரோடு மாவட்டம் - நாமக்கல் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து வானங்கள் பெரும்பாலும் ரிங் ரோடு வழியாக சென்று வருகிறது.

    இந்நிலையில் ரிங் ரோடு அமைத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால் சாலையை சீரமைக்கவும், மேலும் சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி யும் நடைபெற்று வருவதால் பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் நிலை உள்ளது.

    அப்போது ரிங் ரோடு வழியாக அதிகளவில் போக்குவரத்து இருக்கும் என்பதாலும், கரூர் ரோட்டில் இருந்து முத்தூர் ரோட்டில் உள்ள லக்காபுரம் ரிங் ரோடு வரை உள்ள சாலை இரு வழிச்சாலையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    இதனையடுத்து ரிங் ரோட்டில் சாலை விரி வாக்கம் செய்யும் பணி செய்ய முடிவு செய்து, அதன்படி நெடுஞ்சாலை துறையின் சார்பில் ரூ.6 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடை பெற்று வருகிறது.

    இதற்காக கரூர் சாலை யிலிருந்து சாலையின் இரு புறமும் அகலப்படுத்து வதற்காக ராட்சத ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலைகள் அகலப்படுத்தி தற்போது இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் சாலையின் இரு புறமும் எதிரெதிரே வரும் வாக னங்கள் முந்தி செல்ல முடியாதபடி இருந்த சாலையை கணக்கில் எடுத்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் ஏற்கனவே லக்காபுரம் ரிங் ரோட்டில் இருந்த ஆனைக்கல்பாளை யம் ரிங் ரோடு வரை 3 வழி சாலையாக உள்ளது. அதே போல் திண்டல் ரிங் ரோட்டில் இருந்து சென்னி மலை ரோடு வரை இருவழிச் சாலையாக உள்ளது.

    லக்காபுரம் ரிங் ரோடு பணிகள் 4 வழிச் சாலை அமைக்கும் பணிகள் நிறை வடைந்த பின்னர் லக்காபுரம் ரிங் ரோட்டில் இருந்து திண்டல் ரிங்ரோடு வரை 4 வழிச்சாலையாக அமைக்கப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சோலார் பஸ் நிலையம் திறப்பதற்கு முன்பு, சாலை விரிவாக்கம் செய்யும் பணி விரைவாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.52 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    மேலும் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.52 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 778 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி, பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையிலிருந்து 2,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலையில் மாரிமுத்து ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.
    • அப்போது திடீரென அவரை பாம்பு கடித்து விட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஈஞ்சம்பள்ளி, கரிய கவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (62). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மாரிமுத்து அதே பகுதியில் ஒரு தோட்டத்தில் விவசாய கூலி வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலையில் மாரிமுத்து ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவரை பாம்பு கடித்து விட்டது.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மாரிமுத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதா பமாக மாரிமுத்து இறந்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீயும் நானும் வேறு இல்லடா ரெண்டு பேரும் ஒத்த உசுருடா என்று அஜித், விஜய் ரசிகர்கள் சார்பாக இந்த டிஜிட்டல் பேனர் வைத்துள்ளோம்.
    • தமிழ் திரை உலகில் அஜித், விஜய் இருவரும் இரு பெரும் கண்கள்.

    சென்னிமலை:

    பொங்கல் பண்டிகையையொட்டி அஜீத் நடித்த துணிவு படமும், விஜய் நடித்த வாரிசு படமும் நாளை வெளியாகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் இரண்டு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    பல ஊர்களில் ஒரே மாலில் உள்ள இரண்டு தியேட்டர்களில் இருவர் நடித்த படமும் வெளியிடப்படுகிறது. அப்படி உள்ள இடத்தில் தியேட்டர் முன்பு கட்அவுட், பேனர் வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் இரண்டு ரசிகர்கள் மத்தியிலும் ஒரு வித பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள ஒரு தியேட்டரில் அஜித்தின் துணிவு படம் மட்டும் வெளியாகிறது.

    இதையடுத்து அந்த தியேட்டர் முன்பு விஜய், அஜித் ரசிகர்கள் ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாக அஜித், விஜய் ஆகியோரின் போட்டோக்களை போட்டு இரண்டு படத்தின் பெயரையும் குறிப்பிட்டு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர். அதில் ''நீயும் நானும் வேற இல்லடா... ரெண்டு பேரும் ஒத்த உசுருடா...'' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

    இது குறித்து சென்னிமலை ஒன்றிய அஜித் ரசிகர்கள் மன்ற நிர்வாகியான நேதாஜி என்பவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகை என்றாலே சிலருக்குப் பொங்கல் சாப்பிடப் பிடிக்கும் சிலருக்கு கரும்பு சாப்பிடப் பிடிக்கும் ஆனால், பொங்கல் இல்லாத கரும்போ அல்லது கரும்பில்லாத பொங்கலோ ரசிக்கவும் பிடிக்காது ருசிக்கவும் பிடிக்காது.

    அதுபோல் தமிழ் திரை உலகில் அஜித், விஜய் இருவரும் இரு பெரும் கண்கள். இதில் ஒருவரை வெறுத்து இன்னொருவரை ரசிப்பது கரும்பை ஒதுக்கி பொங்கல் கொண்டாடுவது போல, என்னும் நோக்கில் "நீயும் நானும் வேறு இல்லடா ரெண்டு பேரும் ஒத்த உசுருடா" என்று அஜித், விஜய் ரசிகர்கள் சார்பாக இந்த டிஜிட்டல் பேனர் வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டு புடவைகளை வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றுவதை வழக்கமாக வைத்திருந்தது தெரிய வந்தது.
    • பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் அனைவரும் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் பட்டுப் புடவைகளுக்கு தேவையான மூலப் பொருட்களை வாங்கி வந்து கைத்தறியில் நெசவு செய்து அதனை தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அந்தியூர், தவிட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த கைத்தறி பட்டு நெசவாளரான லட்சுமணன்(45) என்பவரை கோவை மாவட்டம் சுங்கம், சின்னையாபிள்ளை வீதியைச் சேர்ந்த சுஜாதா (42) என்பவரும் சேலம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரும் அணுகினர்.

    இவர்கள் கோவை சின்னியம்பாளையத்தில் ஜவுளி கடை நடத்தி வருவதாகவும், கடைக்கு பட்டுப்புடவைகள் தேவைப்படுவதாக தெரிவித்து சில லட்சம் ரூபாய்க்கு பட்டுப்புடவைகளை வாங்கிச் சென்றுள்ளனர்.

    தொடர்ந்து ஓரிரு மாதங்கள் பட்டுப் புடவைகள் வாங்கியும் அதற்கான பணத்தையும் சரியாக செலுத்தி வந்தனர்.

    தொடர்ந்து இவர்கள் சென்னையைச் சேர்ந்த குமார், கோவையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற 2 பேரை அறிமுகம் செய்து வைத்தனர்.

    தொடர்ந்து இவர்கள் 4 பேரும் லட்சுமணன் மற்றும் அருகே உள்ள மற்ற நெசவாளர்களிடமும் புடவைகள் வாங்கி வந்தனர். வரவு-செலவு சரியாக செய்து வந்ததன் காரணமாக லட்சுமணனும் அவர்களை நம்பி புடவைகள் கொடுக்கவும் ஒரு மாதம் கழித்து பணம் வாங்குவதுமாக இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் 4 பேருக்கும் சேர்த்து (2018 மே மாதம்) ரூ.28 லட்சம் ரூபாய்க்கு புடவைகள் வழங்கியுள்ளார்.

    இதில் 12 லட்சம் ரூபாய்க்கு சுஜாதா செக் வழங்கியுள்ளார், தொடர்ந்து பணம் தராமல் இழுத்து அடித்து வந்த சுஜாதா, பணம் கேட்கும் போதெல்லாம் இன்னும் சிறிது காலம் கழித்து செக்கை போடுங்கள் எனக்கூறி காலம் தாழ்த்தி வந்தார்.

    ஒரு கட்டத்தில் சுஜாதாவை லட்சுமணன் செல்போனில் அழைத்தபோது சுஜாதா அழைப்பை எடுக்கவில்லை. அப்போதுதான் ஏமாற்றப்பட்டதை தெரிந்த லட்சுமணன் மற்ற வியாபாரிகளிடம் இதுபற்றி தெரிவித்தார். அப்போது அவர்களும் ஏமாற்றப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து லட்சுமணன் மற்ற நெசவாளர்களிடமும் விசாரித்தார். அப்போது சுஜாதா உள்பட 4 பேரும் ஈரோடு மாவட்டம் அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த முனுசாமி, சம்பத், சகுந்தலா அன்பழகன், ராஜேந்திரன், எல்லபாளையம் சம்பத், சத்தியமங்கலம் பகுதியில் டி.ஜி. புதூர், பவானிசாகர், கோவை மாவட்டம் அன்னூர் பகுதிகளைச் சேர்ந்த கைத்தறி பட்டுப்புடவை உற்பத்தியாளர்களிடமும் ஒரு கோடி ரூபாய்க்கு பட்டுப் புடவைகளை வாங்கி விட்டு பணம் தராமல் மோசடி செய்தது தெரிய வந்தது.

    இவர்கள் அனைவரும் கடந்த 5 ஆண்டுகளாக சுஜாதாவை தேடி வந்த நிலையில் நேற்று பெருந்துறையில் ஒரு டீக்கடையில் வைத்து சுஜாதாவிடம் 12 லட்சம் ரூபாய்க்கு பட்டுப் புடவைகள் வழங்கி ஏமாற்றம் அடைந்த அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் பார்த்துள்ளார்.

    தொடர்ந்து சுஜாதா குறித்து பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் மற்றும் பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்த பாண்டியம்மாள், சுஜாதாவை பிடித்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்.

    போலீஸ் நிலையத்தில் வைத்து சுஜாதாவிடம் விசாரணை நடத்தியதில், சுஜாதா, ரவி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் குமார் ஆகிய 4 பேரும் இணைந்து பட்டுப்புடவை வியாபாரிகளை அணுகி முதலில் வரவு செலவு கணக்கு சரியாக வைத்து அவர்களை நம்ப வைத்து பின்னர் பெரிய தொகைக்கு பட்டு புடவைகளை வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றுவதை வழக்கமாக வைத்திருந்தது தெரிய வந்தது.

    இந்த பட்டுப் புடவைகளை சுஜாதா உள்பட 4 பேரும் வெளி மாநிலங்களுக்கு குறிப்பாக வட மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து அதில் வரும் பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

    தொடர்ந்து சுஜாதா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரவி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மேலும் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்த 5 வியாபாரிகளும் தங்களிடம் 50 லட்சம் ரூபாய்க்கு பட்டுப் புடவைகள் வாங்கி சுஜாதா மோசடி செய்ததாக புகார் தெரிவிக்க வந்தனர்.

    அவர்களை தங்களது எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கும் படி அறிவுறுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் கூறும்போது, சுஜாதா தங்களைப் போன்று பல்வேறு நபர்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளதால் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கலாம் எனவும், சுஜாதாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும், அதேபோல் தாங்கள் ஏமாந்த பணத்தை மீட்டுத் தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் அனைவரும் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ×