என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெசவாளர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பட்டுப்புடவைகள் வாங்கி மோசடி செய்த பெண் கைது
- பட்டு புடவைகளை வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றுவதை வழக்கமாக வைத்திருந்தது தெரிய வந்தது.
- பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் அனைவரும் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் பட்டுப் புடவைகளுக்கு தேவையான மூலப் பொருட்களை வாங்கி வந்து கைத்தறியில் நெசவு செய்து அதனை தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அந்தியூர், தவிட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த கைத்தறி பட்டு நெசவாளரான லட்சுமணன்(45) என்பவரை கோவை மாவட்டம் சுங்கம், சின்னையாபிள்ளை வீதியைச் சேர்ந்த சுஜாதா (42) என்பவரும் சேலம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரும் அணுகினர்.
இவர்கள் கோவை சின்னியம்பாளையத்தில் ஜவுளி கடை நடத்தி வருவதாகவும், கடைக்கு பட்டுப்புடவைகள் தேவைப்படுவதாக தெரிவித்து சில லட்சம் ரூபாய்க்கு பட்டுப்புடவைகளை வாங்கிச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து ஓரிரு மாதங்கள் பட்டுப் புடவைகள் வாங்கியும் அதற்கான பணத்தையும் சரியாக செலுத்தி வந்தனர்.
தொடர்ந்து இவர்கள் சென்னையைச் சேர்ந்த குமார், கோவையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற 2 பேரை அறிமுகம் செய்து வைத்தனர்.
தொடர்ந்து இவர்கள் 4 பேரும் லட்சுமணன் மற்றும் அருகே உள்ள மற்ற நெசவாளர்களிடமும் புடவைகள் வாங்கி வந்தனர். வரவு-செலவு சரியாக செய்து வந்ததன் காரணமாக லட்சுமணனும் அவர்களை நம்பி புடவைகள் கொடுக்கவும் ஒரு மாதம் கழித்து பணம் வாங்குவதுமாக இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் 4 பேருக்கும் சேர்த்து (2018 மே மாதம்) ரூ.28 லட்சம் ரூபாய்க்கு புடவைகள் வழங்கியுள்ளார்.
இதில் 12 லட்சம் ரூபாய்க்கு சுஜாதா செக் வழங்கியுள்ளார், தொடர்ந்து பணம் தராமல் இழுத்து அடித்து வந்த சுஜாதா, பணம் கேட்கும் போதெல்லாம் இன்னும் சிறிது காலம் கழித்து செக்கை போடுங்கள் எனக்கூறி காலம் தாழ்த்தி வந்தார்.
ஒரு கட்டத்தில் சுஜாதாவை லட்சுமணன் செல்போனில் அழைத்தபோது சுஜாதா அழைப்பை எடுக்கவில்லை. அப்போதுதான் ஏமாற்றப்பட்டதை தெரிந்த லட்சுமணன் மற்ற வியாபாரிகளிடம் இதுபற்றி தெரிவித்தார். அப்போது அவர்களும் ஏமாற்றப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து லட்சுமணன் மற்ற நெசவாளர்களிடமும் விசாரித்தார். அப்போது சுஜாதா உள்பட 4 பேரும் ஈரோடு மாவட்டம் அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த முனுசாமி, சம்பத், சகுந்தலா அன்பழகன், ராஜேந்திரன், எல்லபாளையம் சம்பத், சத்தியமங்கலம் பகுதியில் டி.ஜி. புதூர், பவானிசாகர், கோவை மாவட்டம் அன்னூர் பகுதிகளைச் சேர்ந்த கைத்தறி பட்டுப்புடவை உற்பத்தியாளர்களிடமும் ஒரு கோடி ரூபாய்க்கு பட்டுப் புடவைகளை வாங்கி விட்டு பணம் தராமல் மோசடி செய்தது தெரிய வந்தது.
இவர்கள் அனைவரும் கடந்த 5 ஆண்டுகளாக சுஜாதாவை தேடி வந்த நிலையில் நேற்று பெருந்துறையில் ஒரு டீக்கடையில் வைத்து சுஜாதாவிடம் 12 லட்சம் ரூபாய்க்கு பட்டுப் புடவைகள் வழங்கி ஏமாற்றம் அடைந்த அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் பார்த்துள்ளார்.
தொடர்ந்து சுஜாதா குறித்து பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் மற்றும் பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்த பாண்டியம்மாள், சுஜாதாவை பிடித்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்.
போலீஸ் நிலையத்தில் வைத்து சுஜாதாவிடம் விசாரணை நடத்தியதில், சுஜாதா, ரவி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் குமார் ஆகிய 4 பேரும் இணைந்து பட்டுப்புடவை வியாபாரிகளை அணுகி முதலில் வரவு செலவு கணக்கு சரியாக வைத்து அவர்களை நம்ப வைத்து பின்னர் பெரிய தொகைக்கு பட்டு புடவைகளை வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றுவதை வழக்கமாக வைத்திருந்தது தெரிய வந்தது.
இந்த பட்டுப் புடவைகளை சுஜாதா உள்பட 4 பேரும் வெளி மாநிலங்களுக்கு குறிப்பாக வட மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து அதில் வரும் பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.
தொடர்ந்து சுஜாதா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரவி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்த 5 வியாபாரிகளும் தங்களிடம் 50 லட்சம் ரூபாய்க்கு பட்டுப் புடவைகள் வாங்கி சுஜாதா மோசடி செய்ததாக புகார் தெரிவிக்க வந்தனர்.
அவர்களை தங்களது எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கும் படி அறிவுறுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் கூறும்போது, சுஜாதா தங்களைப் போன்று பல்வேறு நபர்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளதால் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கலாம் எனவும், சுஜாதாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும், அதேபோல் தாங்கள் ஏமாந்த பணத்தை மீட்டுத் தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் அனைவரும் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.






