என் மலர்tooltip icon

    ஈரோடு

    • நம்பியூர் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.
    • நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாசில்தார் அலுவலகத்தில் 2019-2021-ம் ஆண்டிற்கான ஆண்டு தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் 2019-2021-ம் ஆண்டிற்கான தன்பதிவேடு, முன்கொணர் தன்பதிவேடு, பட்டா, இ-பட்டா, முதியோர் உதவித்தொகை, கனிமம் தொடர்பான கோப்புகள், வழக்கு பதிவேடு,

    நீண்டகால நிலுவையில் உள்ள அலுவலக கோப்புகள் உள்ளிட்ட முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஒவ்வொரு இருக்கைக்கு உரிய கோப்புகள் முன்கொணர் பதிவேட்டின் படியம் மற்றும் நிலஅளவைத் துறையில் உள்ள அளவீட்டு நிலுவை இனங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து குடிமைப்பொருள், சமூக பாதுகாப்பு திட்டம், கோட்டகலால், நிலஅளவைபிரிவு, ஆதார் சேவை மையம், பதிவறை, கோட்ட புள்ளியியல் பிரிவுகளை தணிக்கை செய்தார்.

    மேலும் ஓராண்டிற்கு மேலாக நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் தாசில்தார் அலுவலக சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது, நம்பியூர் தாசில்தார் பெரியசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் துரைசாமி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • வாழைத்தோட்டத்தில் பிணமாக முதியவர் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த ஏழூர் வேட்டுவன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர் (82). இவரது மனைவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இவருக்கு அம்மாசை குட்டி (54) என்ற மகன் உள்ளார். மகனுக்கு திருமணமான நிலையில் ராமசாமி கவுண்டர் வேட்டுவன் புதூர் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் ராமசாமி கவுண்டரை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அம்மாசை குட்டி டி.என்.பாளையத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் விட்டு வந்துள்ளார்.

    சம்பவத்தன்று ராமசாமி கவுண்டரை காணவில்லை. இதனையடுத்து அம்மாசை குட்டி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ராமசாமி கவுண்டரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் டி.என்.பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் கிரானைட்க்கு பின்புறம் உள்ள வாழைத்தோட்டத்தில் இறந்த நிலையில் பிணமாக முதியவர் கிடப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இறந்து கிடப்பது காணாமல் போன ராமசாமி கவுண்டர் என்பதை உறுதி செய்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதனையடுத்து ராமசாமி கவுண்டரின் உடலை மீட்ட போலீசார் கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராமசாமி கவுண்டர் அருகிலுள்ள அந்த வாழைத்தோட்டத்திற்கு எதற்கு வந்தார்? மயங்கி விழுந்து இறந்தார? இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்ற கோணத்தில் பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.96 அடியாக குறைந்து உள்ளது.
    • 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர்.

    இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.96 அடியாக குறைந்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 806 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து சென்றது.
    • வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவதும், சாலையை கடப்பதும் தொடர்கதையாகி வருகின்றன.

    இந்நிலையில் இரவு திம்பம் மலைப்பாதை 24-வது கொண்டை ஊசி வளைவு அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து சென்றது.

    பின்னர் சிறிது தூரம் சாலையில் நடந்து சென்ற சிறுத்தை அருகே உள்ள வனப்பகுதிக்குள் தாவி சென்று மறைந்தது.

    இந்த காட்சியை அவ்வழியாக வாகனத்தில் பயணித்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். சாலையில் உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

    தற்போது திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் எனவும்,

    திம்பம் மலைப்பாதை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    • சிறுதானியங்களை கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.
    • காட்டு பன்றிகளை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வன அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஸ் பிரபு தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க சத்தி மலை வட்டார செயலாளர் பி.சடையலிங்கம், பொருளாளர் பி.சடையப்பன், பர்கூர் மலை வட்டார செயலாளர் எஸ்.வி.மாரிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

    குத்தியாலத்தூர், குன்றி, கூத்தம்பாளையம் ஆகிய பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேரை மிதித்து கொன்றது.

    இந்த யானையை வேறு வனப்பகுதியில் கொண்டு சென்று விட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி பல முறை மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    கடம்பூர் வனச்சரகத்தில் குன்றி மலை கிராமத்தை சேர்ந்த பொம்மேகவுடர், சித்துமரி ஆகிய 2 பேரும் வன விலங்கால் கொல்லப்பட்டனர்.

    இதுபற்றியும் நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்கவும், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    வனப்பகுதி அதனையொட்டிய பகுதியில் காட்டு விலங்குகளான யானை, காட்டு பன்றி, மான் போன்ற விலங்கால் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு, மனு வழங்கியும் நிவாரணம் வழங்கப்படவில்லை.

    தமிழக அரசு சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் என சட்டசபையில் அறிவித்தனர். இத்திட்டத்தை ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் செயல்படுத்த வேண்டும்.

    வனப்பகுதியில் சேகரிக்கப்படும் சிறுதானியங்களை கொள்முதல் செய்ய அரசு கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.

    வனத்தையும், விவசாய பயிர்களையும் அழிக்கும் காட்டு பன்றிகளை சுட கேரளா அரசு அனுமதி வழங்கியது போல தமிழகத்திலும் காட்டு பன்றிகளை சுட்டுப்பிடிக்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

    பின்னர் வனத்துறை அலுவலர்கள் பேசுகையில், ''அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை கண்காணித்து வழக்கு பதிவு செய்யப்படும்.

    போக்குவரத்து துறை சார்பில் நடவடிக்கைக்கு ஆவணம் செய்யப்படும். வன விலங்குகளால் பாதிக்கப்படும் பயிர் சேதத்துக்கு இழப்பீடு உரிய காலத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

    • நலத்திட்ட உதவிகளை எளிதில் பெற முடியும்.
    • கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    ஈரோடு:

    பெருந்துறை வேளாண் உதவி இயக்குனர் குழந்தைவேலு, தாசில்தார் சிவசங்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகள் தங்கள் நிலத்தின் விபரங்களை 'கிரெய்ன்ஸ்' இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வணிகம், பட்டு வளர்ச்சி, கூட்டுறவு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட, 13 துறைகளின் நலத்திட்ட உதவிகளை எளிதில் பெற முடியும்.

    அதற்காக விவசாயிகள் தங்களது ஆதார் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், நில உரிமைச்சான்று, கணினி சிட்டா ஆகிய ஆவணங்களுடன் விலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்

    எனவே பெருந்துறை தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • கல்குவாரியில் அழுகிய நிலையில் தங்கராஜ் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலை வாழை தோட்ட வலசு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (40). இவரது மனைவி பேபி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    தங்கராஜ் லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. குடியை நிறுத்த முடியாததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சித்தோட்டில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று அதன் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் மோட்டார் சைக்கிளில் முத்தூரில் லேத் பட்டறைக்கு வேலைக்கு சென்று வருவதாக கூறி தங்கராஜ் சென்றுள்ளார்.

    அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் கொல்லன் வலசு பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் கழிவு கற்கள் கொட்டப்படும் இடத்தில் அழுகிய நிலையில் தங்கராஜ் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக மது அருந்தி இறந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருள்மொழிஅரசு விஷமாத்திரையை தின்று உயிருக்கு போராடினார்.
    • அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    மொடக்குறிச்சி அடுத்துள்ள அவல்பூந்துறையை சேர்ந்தவர் அருள்மொழிஅரசு (57). இவர் சித்த மருத்துவம் பார்த்து வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டார்.

    இதையடுத்து இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரையை தின்று சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்நிலையில் வீட்டில் இருந்த அருள்மொழிஅரசு தோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் விஷமாத்திரையை தின்று உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அருள்மொழி அரசு பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாக்கடை கால்வாயில் பெண் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பாக உள்ள சாக்கடை கால்வாயில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் உடல் நிர்வாண நிலையில் கிடப்பதாக சத்தியமங்கலம் டவுன் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகருக்கு தகவல் கிடைத்தது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் புகார் செய்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 8 அடி ஆழ சாக்கடையில் அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    நிர்வாண நிலையில் உடல் கிடந்ததாலும், அருகிலேயே பச்சை கலரில் சேலை கிடந்துள்ளதாலும் அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா? அல்லது தவறி சாக்கடையில் விழுந்தாரா? என்பது குறித்தும் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.98 அடியாக குறைந்து உள்ளது.
    • 802 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர்.

    அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.98 அடியாக குறைந்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 802 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

    காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • விடை த்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது.
    • ஈரோடு மாவட்டத்தில் 1,800 ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொது த்தேர்வு நிறைவடை ந்துள்ளது. தற்போது எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

    விடைத்தாள்கள் ஈரோடு மாவட்டத்தில் மாமரத்து பாளையம் இந்து கல்வி நிலையம், கொங்கம்பா ளையம் எஸ்.வி.என். பள்ளி, கோபிசெட்டிபாளையம் பாரதி வித்யாலயா பள்ளி யில் சேகரித்து வைக்கப்ப ட்டுள்ளது.

    குலுக்கல் முறை யில் விடைத்தாள்கள் வெவ்வேறு மாவட்டத்திற்கு ஏற்கனவே அனுப்பி வைக்க ப்பட்டு ள்ளது. அதேபோல் பிற மாவட்ட விடைத்தா ள்கள் ஈரோடு மாவட்டத்தி ற்கு வந்துள்ளது.

    இந்து கல்வி நிலையம், எஸ்.வி.என் பள்ளி, பாரதி வித்யாலயா பள்ளி மைய ங்களில் பிளஸ்-2, பிளஸ்-1 விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.

    இது குறித்து பள்ளி கல்வித்துறை யினர் கூறியதாவது:

    பிளஸ்-2, அதைத்தொ டர்ந்து பிளஸ்-1 விடை த்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது. 12 நாட்க ளில் ஈரோடு மாவட்டத்தில் விடைத்தாள்கள் திருத்தும் பணி முழுமையாக நிறைவு பெறும். இந்த பணியில் ஈரோடு மாவட்டத்தில் 1,800 ஆசிரிய, ஆசிரியைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இன்று 2-வது நாளாக கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
    • மாவட்டம் முழுவதும் 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக மீண்டும் வேகம் எடுத்து ள்ளது. தற்போது தினசரி பாதிப்பு 350-ஐ கடந்து விட்டது.

    நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதை தடுக்க தமிழக சுகாதாரத் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் அரசு ஆஸ்பத்தி ரிகள் நகர, கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பி க்கப்பட்டது.

    இந்த நடை முறை அமலுக்கு வந்து விட்டது. இதைபோல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகள், உடன் கவனித்து கொள்பவர்களும் முககவசம் அணிய வேண்டும் என நடைமுறை வந்துவிட்டது.

    இந்நிலையில் கொரோ னா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறையினர் அடுத்த கட்ட நடவடிக்கை யாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ மனைகளில் கொரோனா அவசர கால தடுப்பு ஒத்திகை 2 நாட்கள் நடைபெறும் என அறிவித்தி ருந்தனர்.

    அதன்படி நேற்று தமிழ்நாடு முழுவதும் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

    ஈரோடு மாவட்டத்திலும் நேற்று அரசு ஆஸ்பத்தி ரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்காக தனியாக 100 படுக்க வசதி கொண்ட வார்டு தயார் நிலையில் உள்ளது.

    மருந்து, உள் கட்டமைப்பு வசதிகளை அதிகாரிகள் உறுதி செய்த னர். ஆக்சிஜன், படுக்கை வசதி மருந்து கையிருப்பு ஆகியவற்றையும் அதிகாரி கள் ஆய்வு செய்தனர்.

    இதேபோல் கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், கொடுமுடி போன்ற அரசு ஆஸ்பத்திரி களிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடை பெற்றது.

    அதனை த்தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஈரோடு மாவட்ட த்தில் உள்ள அரசு ஆஸ்பத்தி ரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

    அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் வந்த நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி க்கப்பட்டு பதிவு செய்து பரிசோதனை முடிந்து ஆக்ஸிஜன் பொருத்துவது உள்ளிட்ட ஒத்திகைகள் செய்து பார்த்தனர்.

    கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளை எவ்வாறு மருத்துவமனைக்குள் கொண்டு வருவது. அவருக்கு எவ்வாறு முறையாக சிகிச்சை அளிப்பது போன்ற ஒத்திகையும் நடைபெற்றது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 2-வது நாளாக மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 725 ஆக உயரந்துள்ளது.

    மேலும் பாதிப்பில் இருந்து 3 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    இதனால் குணமடைந்த வர்கள் எண்ணிக்கை 1லட்சத்து 35 ஆயிரத்து 974 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள னர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    ×