என் மலர்tooltip icon

    ஈரோடு

    • காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருந்துறை, ஈரோடு தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் முத்துசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை.

    இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது அவ்வாறு அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் என்று விவசாயிகளின் ஒரு தரப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாக கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட கோரி பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், தாசில்தார் பூபதி ஆகியோர் விவசாயிகளுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்நிலையில் நேற்று காலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் சுந்தரராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதனைத் தொடர்ந்து பெருந்துறை ஒன்றியம் திருவாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கூரபாளையம் பிரிவு ஈரோடு ரோட்டில் ஏராளமான விவசாயிகள் கீழ்பாவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

    இந்த போராட்டத்துக்கு கீழ்பவானி பாசன பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற விவசாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயராது. அதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்று கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். மேலும் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர்.

    நேற்று மாலை தொடங்கிய இந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது. இன்றும் ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருந்துறை, ஈரோடு தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் மஞ்சள் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்தானது.

    அந்தியூர்:

    கரூரில் இருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூருக்கு மரப்பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை ஆசனூரை சேர்ந்த ஜெகதீஷ்வரன் (35) என்பவர் ஓட்டி வந்தார்.

    லாரி ஆசனூர் மலைப்பாதையில் வந்து கொண்டு இருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது. இதில் லாரி டிரைவர் ஜெகதீஷ்வரன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து ஆம்புலன்சு மூலம் அவரை மீட்டு தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் இருந்து ஒரு லாரி பர்கூர் மலைப்பாதை வழியாக மைசூர் நோக்கி சென்றது. லாரி தட்டகரை வேலம்பட்டி பிரிவு என்ற பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் மஞ்சள் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்தானது. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து விபத்துக்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சந்தோஷை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்து விட்டு தப்பியது.
    • சரணடைந்த இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    ஈரோடு,

    ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சி நகரை சேர்ந்தவர் சந்தோஷ் என்கிற சம்திங் சந்தோஷ் (29). இவர் மீது கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி ஈரோடு சூளை அருகே மதுபான பாரில் மது அருந்தி விட்டு வெளியே வந்தபோது அங்கு வந்த ஒரு கும்பல் சந்தோஷை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்து விட்டு தப்பியது.

    இந்த படுகொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட வீரப்பன்சத்திரம் போலீசார் இதில் தொடர்புடைய ரியாஜ் சித்திக்(34), மனோஜ் குமார்(37), சதீஷ்குமார்(30) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இதனிடையே இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட முகமது அலி ஜின்னா (38) மற்றும் மணிகண்டன் (32) ஆகிய 2 பேர் சில தினங்களுக்கு முன்பாக குமாரபாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

    இந்நிலையில் சரணடைந்த இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    கொலை செய்யப்பட்ட சந்தோஷை தனியார் நிதிநிறுவனம் ஒன்று, கடனில் வாகனம் வாங்கி விட்டு தவணை செலுத்தாதவர்களிடம் வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபடுத்தி உள்ளது. அவ்வாறு குமரன் என்பவரின் காரை பறிமுதல் செய்ய சந்தோஷ் சென்ற போது, குமரன் தனது காரை காப்பாற்றி கொள்ள அம்ஜத்கான் என்பவர் மூலம் முகமது அலி ஜின்னாவின் உதவியை நாடி உள்ளார்.

    எனினும் அதையும் மீறி சந்தோஷ், குமரனின் காரை பறிமுதல் செய்து நிதிநிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார். இதனால் சந்தோஷ் மற்றும் ஜின்னா இடையே, யார் பெரிய ஆள் என்பதில் போட்டியும் தகராறும் ஏற்பட்டு கொலையில் முடிந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்நிலையில் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து முகமது அலி ஜின்னா, மணிகண்டன் ஆகியோர் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்  இந்த வழக்கில் தொடர்புடைய அம்ஜத்கானை போலீசார் தேடி வருகின்றனர்.

    • காவிரி கரையில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர்.
    • கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    ஈரோடு, 

    ஈரோடு கருங்கல்பாளை யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பாளையம் கருமாரியம்மன் கோவில் காவிரி கரையில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.

    போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் லட்சுமணன்(46), அருன் குமரன்(40), மணிகண்டன்(28), காட்டுராஜா(50), பிரபு (38), சரவணன்(48), குமார்(40), சேட்டு (50) ஆகியோர் என்பதும் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.6, 150 பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.

    • உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர் பிறப்பித்தி ருந்தார்.
    • தாளவாடி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்ய ப்பட்டுள்ளனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பொறுப்பேற்ற நாளிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி அதற்கென்று தனியாக போலீசாரை நியமித்து உள்ளார்.

    இதேபோல் டாஸ்மாக் கடைகள், பார்களையும் போலீசார் கண்காணிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த 12 போலீசார் அதிரடியாக தாளவாடி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பிறப்பித்திருந்தார்.

    அதன்படி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த கிரேடு–1 ஜெய சங்கர மூர்த்தி, மூர்த்தி, கருங்கல்பாளையம் கிரேடு–1 பால முருகன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் சித்தோடு கோபால், பவானி ரமேஷ், அம்மாபேட்டை முருகன், பவானிசாகர் முத்துமாணிக்கம், ஈரோடு டவுன் மதுவிலக்கில் ராஜேந்திரன், செந்தில், ஆசனூர் மதுவிலக்கு சாதிக் பாட்சா, தலைமை காவ லர்கள் கடத்தூர் தினேஷ் குமார், கடம்பூர் அசோக் ஆகிய 12 பேரும் தாளவாடி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிட ப்பட்டுள்ளது. மேலும் நிர்வாக காரணத்திற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    • முன் கதவின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை திருடி சென்றதாக கூறப்படுகிறது.
    • கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பி பாளையம்பகுதியைச் சேர்ந்த தவசியப்பன் (45). இவர் சின்னத்தம்பி பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராவார். தற்போது அவரது மனைவி சுமதி தவசியப்பன் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீட்டின் முன் கதவை பூட்டிவிட்டு அருகில் உள்ள அவரது பழைய வீட்டில் வெயில் காலம் என்பதால் அங்கு காற்று நன்றாக வரும் என்று அங்கே படுத்து தூங்கினர். இந்த நிலையில் இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு 2 மணி அளவில்வீட்டின் மதில் சுவர் மேல் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்று உள்ளே சென்று முன் கதவின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அருகில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வருவதும் அதில் இருந்து இறங்கிய ஒருவர் பெண் பஞ்சாயத்து தலைவர் சுமதி தவசியப்பன் வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வரும் காட்சி பதிவாகி இருந்தது.

    மேலும் திருட்டு நடந்த வீட்டிற்கு மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி மோப்ப நாய் நின்றது. தொடர்ந்து போலீசார் நகை-பணம் திருடிசென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த திருட்டு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இரவு 10 மணி அளவில் மருத்துவ கழிவுகளை கொட்டி தீ வைத்தனர்.
    • கொட்டுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் ஒடை அருகே மருத்துவக் கழிவு மற்றும் பிளாஸ்டிக்கழிவு பொருட்களை கொட்டி இரவு நேரங்களில் தீ வைப்பதாகவும் இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ.விடம் புகார் கூறினர்.

    இதனை அடுத்து அவ்வாறு கழிவுகளை கொட்டி தீ வைக்கும் பொழுது உடனடியாக தகவலை கொடுங்கள் இரவு எந்த நேரமாக இருந்தாலும் அதனை பார்வையிட்டு உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறேன் என்றுதெரிவித்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மருத்துவ கழிவுகளை கொட்டி தீ வைத்தனர். இதனை அந்தப் பகுதி மக்கள் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ.வுக்கு தெரிவித்தார்கள்.

    உடனடியாக எம்.எல்.ஏ., அந்தப் பகுதிக்கு சென்று பார்வையிட்டு அந்தியூர் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் அந்தியூர் தீயணைப்பு நிலைய வாகனத்தையும் வரவழைத்து அந்த தீயை முற்றிலும் அனைத்து மருத்துவக் கழிவுகளை அகற்ற செய்தார்.மேலும் இனி இதுபோல் மருத்துவ கழிவுகளை இங்கு கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அவ்வாறு கொட்டுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார். அப்போது துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தார்கள்.

    • சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அவரை வழிமறித்து நிறுத்தினார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

    பெருந்துறை, 

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பெத்தாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாஞ்சன். டிரைவர். சம்பவத்தன்று இவர் சென்னிமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது பணிக்கம் பாளையம் பிரிவு என்ற பகுதியில் சென்ற போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அவரை வழிமறித்து நிறுத்தினார். பின்னர் திடீரென அந்த நபர் 500 ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.

    இதையடுத்து ஸ்ரீகாஞ்சன் பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் நாமக்கல் பகுதியை சேர்ந்த வடிவேல் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், சுரேந்திரகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
    • இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள் என 8 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு, 

    ஈரோடு மாநகரில் இயக்கப்படும் ஆட்டோக்களில் பயணி–களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி, மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், சுரேந்திரகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம், பன்னீர்செல்வம் பூங்கா, அரசு மருத்துவமனை சாலை போன்ற இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த–தாக 5 ஆட்டோக்கள், உரிமம், தகுதி சான்று, காப்புரிமை சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள் என 8 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அதுபோல ஷேர் ஆட்டோக்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்தது, சீருடை இன்றி வாகனத்தை ஓட்டியது போன்ற காரணத்துக்காக, 7 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மொத்தம் 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்ப–ட்டதாக வடடார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பவானிசாகர் தொப்பம் பாளையம் அண்ணாநகர் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • பாலித்தீன் கவரில் 100 கிராம் கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது.

    சத்தியமங்கலம்,

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சிறப்பு உதவி ஆய்வாளர் பூர்ணசந்திரன் மற்றும் போலீசார் பவானி சாகர் அருகே உள்ள தொப்பம் பாளையம், நால்ரோடு ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.

    அவர்கள் பவானிசாகர் தொப்பம் பாளையம் அண்ணாநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் தப்பிஓட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது அவர்களது மோட்டார் சைக்கிள் சீட்டிற்கு கீழே பாலித்தீன் கவரில் 100 கிராம் கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பவானி சாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த மதுரை செல்வன்(21), கவி என்கிற கவியரசன் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    • நன்மை தரும் பூச்சி, நுண்ணுயிர்களை அவை அழிக்கும்.
    • இலைப்புள்ளி, இலை கருகல், இலையுறை அழுகல் நோய்களை கட்டுப்படுத்தும்.

    ஈரோடு, 

    வேளாண் பயிர்கள் உற்பத்தியில் பயிர்களை தாக்கி சேதத்தை ஏற்படுத்தும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த ரசாயன பூச்சி கொல்லி மருந்துகள், பூஞ்சாண கொல்லிகள் பயன்படுத்தப்படுகிறது.

    ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல், உடல் நல பாதிப்பு, உண்ணக்கூடிய பயிர்களை நச்சு கொண்டதாக மாற்றும். எனவே மனிதர்களுக்கு மட்டுமின்றி, கால்நடைகளுக்கும் பல பிரச்னைகளை ஏற்படுத்துவதுடன், நன்மை தரும் பூச்சி, நுண்ணுயிர்களை அவை அழிக்கும்.

    எனவே, பூச்சி கொல்லி மருந்தால், பயிர்களுக்கான உற்பத்தி செலவு அதிகரிக்கும். எனவே உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேளாண் துறையின் கீழ் செயல்படும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் மூலம், உற்பத்தி செய்யப்படும்.

    எதிரி உயிரி பூஞ்சாணமான டிரைகோடெர்மா விரிடி பயிர்களில் ஏற்படும் வேர் அழுகல், கிழங்கு அழுகல் போன்ற மண்ணின் மூலம் பரவு நோய்களையும், எதிரி உயிரி பாக்டீரியாவான சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் மண்ணின் மூலம் பரவும் நோய்கள் மட்டுமின்றி, இலைப்புள்ளி, இலை கருகல், இலையுறை அழுகல் நோய்களை கட்டுப்படுத்தும்.

    மேலும் பல தொழில் நுட்பங்களை பயன்படுத்து–வதால், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் அனைத்தும், பூச்சி கொல்லி மருந்துகளை ஒப்பிடும்போது, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வினியோகிக்கப்பட்டு வருகிறது.ஈரோடு மாவட்ட விவசாயிகள், அருகே உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இந்த தகவலை வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • கோபிசெட்டிபாளையம் கோர்ட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும்.
    • ஆணி கழட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கோபி, 

    கோபிசெட்டிபாளைய த்தில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உள்பட 5 கோர்ட்டுகள் செயல்பட்டு வருகிறது.

    இங்கு சத்தியமங்கலம் வனப்பகுதி வழக்கு, கோபி செட்டிபாளையம், பங்களா புதூர் போலீஸ் நிலையங்களில் போடப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் ஆகியவை கோபிசெட்டிபாளையம் கோர்ட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும். இதை யடுத்து அந்த பெட்டகம் கோபிசெட்டிபாளையம் கருவூலத்தில் பாது காப்பாக வைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் கோர்ட்டு ஊழியர் மற்றும் பங்களா புதூர் போலீசார் வழக்கு விசாரணைக்காக முதலாம் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு தொடர்புடைய பெட்டகத்தை கோபிசெட்டி பாளையம் கருவூலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்தனர்.

    இதை தொடர்ந்து அந்த பெட்டியை நீதிபதி தனது அறையில் வைத்து திறக்க முயன்றார். அப்போது பெட்டியின் பூட்டின் மேல் வைக்கப்பட்டு இருந்த அரக்கு சீல் உடைக்கப்படா மல் அப்படியே இருந்தது. ஆனால் பெட்டியின் பூட்டு மாட்டி இருந்த கொண்டியில் இருந்து ஆணி கழட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் பெட்டியை திறந்து பார்த்தனர்.

    அப்போது அதில் கடம்பூர் போலீசாரால் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு இருந்த 48 கிராம் எடை கொண்ட 2 தங்க ஆரம், சத்தியமங்கலம் வனத்துறை மற்றும் பங்களா புதூர், கோபிசெட்டிபாளையம் போலீசார் பறிமுதல் செய்து வைக்கப்பட்டு இருந்த ரூ. 3 ஆயிரத்து 255 பணம் மாயமாகி இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் கைரேகை பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இத னால் பரபரப்பு நிலவியது.

    ×