என் மலர்tooltip icon

    ஈரோடு

    • வழக்கமாக தீர்த்தம் கொண்டு செல்லும் காளை மாட்டுடன் புதியதாக வளர்க்கப்பட்ட காளை மாட்டினை பயிற்சிக்காக ஓட்டி சென்றனர்.
    • புதிய காளை மாடு பயிற்சி பெற்ற காளை மாடு போல் வெகு எளிதாக படி வழியில் ஏறியது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்த கிணற்றில் இருந்து காலை 8 மணி பூஜைக்கு பொதி காளைகள் மூலம் 1,320 படிவழியாக தீர்த்த குடங்கள் கொண்டு செல்வது பல வருடங்களாக தொற்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.

    இந்த அதிசயம் 100 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. மலை அடிவாரத்தில் உள்ள இடுபன் கோவிலுக்கு பூஜை செய்யும் குருக்கள் வந்து காலை 7.20 மணிக்கு தீர்த்த கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பொதி காளை மீதுள்ள மூங்கில் கூடையில் வைத்துவிடுவர். மலை கோவிலுக்கு படி வழியாக கோவில் பணியாளர்கள் காளை மாட்டினை ஓட்டி செல்வர்.

    இந்த பணிக்காக தனியாக கோசலையில் 3 பொதிகாளைகள் பாராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதில் ஒரு மாடு வயது ஆகிவிட்டதால் படி வழியாக திருமஞ்சன தீர்த்த குடம் கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறது. இதற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பக்தர் ஒருவர் முருகனுக்கு தானமாக கொடுத்த பொதி காளை மாடு சிறப்பாக பராமரிக்கபட்டு வந்தது.

    அந்த காளையினை கால்நடை உதவி மருத்துவர் மூலம் கடந்த 3 மாதங்களாக சிறப்பான உணவுகள் கொடுத்து பராமரித்து வந்த பணியாளர்கள் இன்று, வழக்கமாக தீர்த்தம் கொண்டு செல்லும் காளை மாட்டுடன் புதியதாக வளர்க்கப்பட்ட காளை மாட்டினை பயிற்சிக்காக ஓட்டி சென்றனர்.

    வழக்கமாக புதிய மாட்டினை படி வழியாக கொண்டு சென்றால் மிரண்டு கொள்ளும், படியில் ஏறாது. ஆனால் இந்த காளை சிறப்பாக இன்று வந்து சென்றது.

    இனி பயிற்சிக்காக தினமும் காலையில் மாலை, சந்தன பொட்டு, புதிய சலங்கை அணிவித்து பூஜை செய்து தீர்தகுடம் வைக்காமல் அதை பழக்கப்படுத்த பிடித்து செல்வர்.

    புதிய காளை மாடு பயிற்சி பெற்ற காளை மாடு போல் வெகு எளிதாக படி வழியில் ஏறியது. இதை காலை தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பார்த்து மெய்சிலிர்தனர். காளை சில இடங்களில் மட்டும் இரண்டு இரண்டு படியாக தாண்டி சென்றது. 3 மாதத்தில் நன்கு பயிற்சி பெரும் என மாடு பராமரிக்கும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

    • தாளவாடி மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • இரவு நேரங்களில் சாலையில் சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக நடந்து செல்கின்றன.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இரவு 9 மணி வரை மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் வனச்சாலை இரைச்சல் இன்றி இயல்பாக இருப்பதால் வன விலங்குகள் சாலையில் நடமாடுவதை பார்க்க முடிகிறது.

    இந்நிலையில் நேற்றிரவு சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு காரில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் திம்பம் 6-வது வளைவில் சிறுத்தை நடந்து செல்வதை பார்த்து காரை நிறுத்தி உள்ளனர். பின்னர் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

    வாகனத்தின் ஹெட் லைட் வெளிச்சத்தில் சிறுத்தை சிறிது நேரம் நடந்து சென்று பின்னர் சாலையோர தடுப்பு சுவரில் பதுங்கி கொண்டது. காரில் சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

    இது குறித்து வனத் துறையினர் கூறும்போது:

    தாளவாடி மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் சாலையில் சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக நடந்து செல்கின்றன. இந்த சமயம் வாகன ஓட்டிகள் அந்த பகுதியை கடந்து சென்றால் அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    தங்களது வாகனங்களை விட்டு இறங்கி செல்போன்களில் படம் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். சில சமயம் உயிருக்கு ஆபத்து கூட ஏற்படலாம். எனவே வாகன ஓட்டிகள் கவனமுடன் செயல் பட வேண்டும். இதை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • அத்தனூர் அம்பிகைக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம், சுமங்கலி பிரார்த்தனை நடந்தது.
    • சென்னிமலை முருகன் கோவில் அர்ச்சகர்கள் பெரும் திரளாக குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை மார்க்கண்டேய கோத்திரத்தை சேர்ந்த மூன்றாம் பங்காளிகள் சார்பாக ஆடி வெள்ளியினை முன்னிட்டு சென்னிமலை அடுத்துள்ள முகாசிப்பிடாரியூர், அத்தனூர் அம்மன் கோவிலில் அத்தனூர் அம்பிகைக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம், நவசக்தி அர்ச்சனை, சுமங்கலி பிரார்த்தனை நடந்தது.

    சென்னிமலை ஆதி சைவ அறக்கட்டளை தலைவர் மதி குருக்கள் தலைமையில் 30 வருடங்களுக்கு பிறகு இந்த பூஜையானது சிறப்பாக நடந்தது.

    இதில் சென்னிமலை முருகன் கோவில் அர்ச்சகர்கள் பெரும் திரளாக குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ரெயில்வே போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    நாடு முழுவதும் சுதந்திர தினவிழா வரும் 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினவிழா எந்த ஒரு அசம்பாவிதம் இல்லாமலும், அமைதியான முறையில் கொண்டாடும் வகையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    சுதந்திர தினத்திற்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் மாவட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் வாகன சோதனை, தங்கும் விடுதிகளில் சோதனை ஆகியவை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி லட்சுமி நகர் சோதனை சாவடி, கருங்கல்பாளையம் சோதனை சாவடி, நொய்யல் ஆற்று சோதனை சாவடி, பண்ணாரி அம்மன் சோதனை சாவடி, பர்கூர் சோதனை சாவடி,

    தாளவாடி அருகே உள்ள தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி என மாவட்டம் முழுவதும் 13 சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் கடும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப் படுகின்றன.

    இது தவிர ஆங்காங்கே கூடுதலாக தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்களை தீவிரமாக கண்காணிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இரவு நேர ரோந்து பணியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 சப்-டிவிஷனில் உள்ள டி.எஸ்.பி.க்கள் தலைமையில் அந்தந்த பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். சோதனையில் விடுதியில் யார், யார் தங்கி உள்ளனர். அவர்கள் பெயர், முகவரி பின்னணி குறித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

    மேலும் தங்கும் விடுதி மேலாளர்களிடம் சந்தேகப்படும்படி யாரும் இருந்தால் போலீஸ் உயர் அதிகா ரிகளுக்கும், அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்திலும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இந்த போலீஸ் சுதந்திர தினத்தன்று ஈரோடு மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், காளை மாட்டு சிலை, ஜி.எச். ரவுண்டானா, ஸ்வஸ்திக் கார்னர், கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி என மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

    இதேப்போல் பெரிய பெரிய வணிக வளாகங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஈரோடு ெரயில் நிலையம் நுழைவாயிலில் ெரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நடைமேடையாக சென்று ெரயில்வே போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் ஒவ்வொரு பயணிகளின் உடைமைகளையும் தீவிரமாக சோதனை செய்து அதன் பிறகே அவர்கள் ெரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    குறிப்பாக வட மாநிலத்தில் இருந்து வரும் வாலிபர்களின் பெயர், அவர்கள் எங்கு தங்கி பணி புரிகின்றனர் போன்ற விவரங்களை சேகரிக்கின்றனர்.

    இதேபோல் காவிரிக்கரை ெரயில்வே இரும்பு பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டம் சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • அந்தியூர் பேரூராட்சியில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.
    • 4-வது தீர்மானம் வாசிக்கும்போது வார்டு உறுப்பினர்களால் சலசலப்பு ஏற்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 18 வார்டுகளில் 2 அ.தி.மு.க.வும், ஒரு கம்யூனிஸ்டு கட்சியும், 15 தி.மு.க. உறுப்பினர்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் அந்தியூர் பேரூராட்சியில் மாதம்தோறும் மாமன்ற கூட்டம் நடைபெறும். அந்த வகையில் இந்த மாதம் மாமன்ற கூட்டம் கடந்த 11-ந் தேதி (வெள்ளிக் கிழமை) நடைபெறுவதாக கவுன்சிலர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

    பேரூராட்சி வார்டு உறுப்பினர்களால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் பேரூராட்சியில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

    இதனைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் பண்டிகை நடைபெறுவதால் உறவினர்கள் வீட்டிற்கு வந்திருக்கும் காரணத்தை முன்வைத்து மாமன்ற கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு மனு வழங்கியதாக தெரிவித்தனர்.

    ஆனால் அறிவித்த தேதியில் மாமன்ற கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்ததை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இதில் 35 தீர்மானங்கள் வாசிக்கும் நிலையில் 4-வது தீர்மானம் வாசிக்கும்போது வார்டு உறுப்பினர்களால் சலசலப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து மன்ற கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக பேரூராட்சி மன்ற தலைவரால் அறிவித்து விட்டு அங்கிருந்து தலைவர், துணைத்தலைவர், செயல் அலுவலர், நியமன குழு உறுப்பினர் சென்றனர்.

    இருப்பினும் 10 கவுன்சிலர்கள் மாலை 6 மணி வரை மாமன்ற கூட்டத்தொடர் அறை யிலேயே அமர்ந்திருந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

    மேலும் இங்கு வேறு ஏதேனும் கைகலப்பு ஏற்படும் என்று பேரூராட்சி அலுவலகம் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தனர்.

    • முப்பெரும் தேவிகளுக்கு மங்கள மஹா நவசண்டியாக யாகம் தொடங்கியது.
    • சப்தசதி வழிபாடு, 64 யோகினி மற்றும் 64 பைரவர் பலி பூஜை, தீபாராதனை ஆகியன நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் சென்னிமலை டவுன் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் உலக மக்கள் நன்மைக்காக வேண்டியும், தொழில், விவசாயம் செழிக்கவும் மாரியம்மன் மற்றும் மகாலட்சுமி, மகா சரஸ்வதி ஆகி முப்பெரும் தேவிகளுக்கு மங்கள மஹா நவசண்டியாக யாகம் காலை 8.30 மணிக்கு கோ பூஜை, விநாகயர் வழிபாடு, கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் தொடங்கியது.

    மாலை புண்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, சப்தசதி வழிபாடு, 64 யோகினி மற்றும் 64 பைரவர் பலி பூஜை, தீபாராதனை ஆகியன நடந்தது.

    மறுநாள் காலை 8 விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, தேவி கலசத்திற்கு நவாவரண பூஜை, அக்னி காரியம் 13 அத்தியா ஹோமம், நவசண்டியாகம், சண்டியாக ஸங்கல்பம் பஞ்சகவ்யம், சுமங்கலிபூஜை, கன்னியா பூஜை, வடுக பூஜை, மங்கல மஹா பூர்ணாஹுதி, கலச அபிஷேகம் பூஜை தீபாராதனையுடன் மாலை நிறைவு பெற்றது.

    விழா ஏற்பாடுகளை கால பைரவ விழாக்குழு அன்பர்கள் செய்து வருகின்றனர்.

    • கீழ்பவானி வாய்க்கால் பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டு வரும் புனரமைப்பு பணிகளை தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்திற்குட்பட்ட கூடக்கரை மற்றம் எலத்தூர் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் கீழ்பவானி திட்டத்தின் கீழ் வாய்க்கால் பகுதிகள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது:

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்ன சமுத்திரம் பகிர்மானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் பாசனத்திற்காக வருகின்ற 15-ந் தேதி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார்கள்.

    அதனைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    புனரமைப்பு பணிகளில் 2 இடங்களில் மட்டும் பணிகளை வேகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அந்த பணிகளும் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

    அதேப்போன்று பெரும்பாலான இடங்களில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் நடைபெற்று வரும் பணிகளும் ஒன்று அல்லது 2 நாட்களுக்குள் முடிக்கப்படும்.

    மேலும் வாய்க்கால் சுத்தம் செய்யும் பணிகளும் தொடர்ந்து நடைபெறும். மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை தொடர்புடைய அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள்.

    அதேபோன்று அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த பணிகளும் விரைவாக முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் மன்மதன், கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியளார் அருள் அழகன், நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார், நம்பியூர் தாசில்தார் மாலதி, அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் விதை உற்பத்தி குறித்து பயிற்சியளித்தார்.
    • இப்பயிற்சில் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவின் நிறுவனம் அருகே உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய பயிற்சி மையத்தில் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தை ேசர்ந்த தீவன விதை சாகுபடியாளர்களுக்கு ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் தரமான தீவன சான்று விதை உற்பத்தி குறித்து பயிற்சியளித்தார்.

    இப்பயிற்சியின்போது பயிர் சாகுபடி செய்ய வேண்டிய பருவம், ரகம் தேர்வு, பயிர் விலகுதூரம் கடைபிடித்தல், விதை நேர்த்தி, விதைப்பு முறைகள் மற்றும் உர நிர்வாகம் குறித்து பயிற்சியளித்தார். விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) ராதா விதைப்பறிக்கை பதிவு செய்தல் மற்றும் சான்று கட்டண விவரங்களை கூறினார்.

    மேலும் பவானி விதைச்சான்று அலுவலர் தமிழரசு கலவன்களை அகற்றுதல், ஒருங்கிணைந்த முறையில் படைப்புழு மேலாண்மை செய்தல், அறுவடையின்போது கவனிக்க வேண்டியவை, முத்திரையிடுதல், விதைசுத்தி மற்றும் சான்றட்டை பொருத்துதல் குறித்து பயிற்சியளித்தார்.

    தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் முதுநிலை மேலாளர் (கூட்டுறவு) கிருத்திகா நடப்பு ஆண்டில் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் ஆப்பிரிக்கன் டால் என்ற தீவன மக்காச்சோளம் ரகத்தினை விதைப்பண்ணையாக அமைத்து கிடைக்கப்பெறும் சான்று பெற்ற விதைகளை விவசாயிகளுக்கு சிறு தளைகளாக வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

    இப்பயிற்சில் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆவின் கால்நடை டாக்டர்.பாபு இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • 14 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • கழிவுகளை தூய்மை பணியாளர்கள் விற்று பணப்பயன் அடைகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலா ண்மை திட்டத்தின் கீழ் தினமும் 18 டன் திடக்க ழிவுகள் சேகரம் செய்ய ப்படுகிறது.

    இதில் 9 டன் மக்கும் கழிவுகளை எந்திரத்தில் அரைத்து, தொட்டிகளில் நிரப்பப்பட்டு 40 நாட்கள் மக்கிய பிறகு அவற்றை குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    3 டன் அதிக ஈரப்பதம் உள்ள உணவு கழிவுகள், பழ கழிவுகள் மற்றும் கோழி கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மின்சாரத்தை கொண்டு எந்திரங்கள் இயக்கப்படுகிறது.

    மக்காத மறுசுழற்சிக்கு பயன்படும் சில வகையான கழிவுகளை தூய்மை பணியாளர்கள் விற்று பணப்பயன் அடைகின்றனர். மக்காத மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பேப்ப ர்கள் போன்றவற்றை மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    தற்போது 14 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவ ரையிலும் கோபிசெட்டி பாளையம் நகராட்சியில் இருந்து 3,260 டன் பிளா ஸ்டிக் கழிவுகள் மாற்று எரிபொருளுக்காக சிமெ ண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சாராயம் விற்பதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சோலகாடு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் விற்று கொண்டிருந்த திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த மருதை மகன் செந்தில்குமார் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவரிடம் இருந்து 20 பாக்கெட் நாட்டு சாராயம் மற்றும் ரூ.3 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு துறைகளுக்கு இடையே மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொட ர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், கல்வித்துறை, காவல்துறை,

    கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை- உழவர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இடையே மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் துரிதப்படுத்தி விரைவில் முடித்திடுமாறு தொடர்பு டைய அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் (ஆசனூர்) சுதாகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ், (வளர்ச்சி) செல்வ ராஜன், வருவாய் கோட்டா ட்சியர்கள் சதீஸ்குமார் (ஈரோடு), திவ்யபிரிய தர்ஷினி (கோபிசெட்டி பாளையம்),

    ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் (தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்) (ஈரோடு) மோகன், (பெருந்துறை) உதயகுமார் உள்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் மட்டும் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • பச்சைநாயகி அம்மனுக்கு ஊஞ்சல் பாடல்கள் பாடி வழிபாடு நடைபெற்றது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொளப்பலூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சை நாயகி அம்மன் திருக்கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதில் முக்கிய நிகழ்ச்சியாக பெண்கள் மட்டும் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பெண்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை வைத்து படையலிட்டு திருவிளக்கேற்றி மக்கள் நலன் வேண்டியும், குடும்பம் செழிக்கவும், மழை வேண்டியும் வழிபாடு செய்தனர்.

    பச்சைநாயகி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்திலும், திருவிளக்கு பூஜை நடைபெறும் இடத்தில் பச்சை நாயகி அம்மன் வளையல்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதனைத்தொடர்ந்து ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளித்த பச்சைநாயகி அம்மனுக்கு ஊஞ்சல் பாடல்கள் பாடி வழிபாடு நடைபெற்றது.

    இந்த சிறப்பு பூஜையில் கொளப்பலூர், காமராஜ் நகர், சிறுவலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×