என் மலர்
திண்டுக்கல்
- 2 நாட்களாக வாலிபரின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
- வாலிபர் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள பித்தளைபட்டியை சேர்ந்தவர் ரத்தினம். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மகன் சுரேஷ்குமார் (40). இவருக்கு திருமணம் ஆகவில்லை. ரத்தினம் தனது மகளுடன் வெளியூரில் வசித்து வருகிறார். சுரேஷ் குமார் மட்டும் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவரது வீடு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் சந்தேகம் அடைந்து தாலுகா போலீ சாருக்கு புகார் அளித்தனர்.
இதனையடுத்து போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது சுரேஷ்குமார் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரி சோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் எவ்வாறு இறந்தார், தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- அருகில் அமர்ந்திருந்த 3 பேர் மீதும் தெறித்து தீப்பொறி பரவியது.
- இடையகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள இளந்தாரியூரை சேர்ந்தவர் சந்துரு (வயது27). இவரது வீட்டிற்கு நேற்று உறவினர்களான உடுமலைப்பேட்டை அருகில் உள்ள உருதுமலைப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (57), திருப்பூர் மாவட்டம் தண்டிக்காரப் பாளையத்தை சேர்ந்த வேலுச்சாமி (66) ஆகியோர் வந்திருந்தனர்.
வீட்டு விஷேசம் தொடர்பாக அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சந்துருவின் செல்போன் சார்ஜ் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென செல்போன் வெடித்து சிதறியது. அருகில் அமர்ந்திருந்த 3 பேர் மீதும் தெறித்து தீப்பொறி பரவியது. இதனால் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இடையகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கடந்த 3ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- விவசாய பணிகள் தொடங்கி உள்ள நிலையில் கூட்டுறவு சங்கங்கள் மூடி கிடப்பதால் விவசாயிகள் தனியார் உரக்கடைகளை நாடிச் செல்லும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் பயிர் கடன், கால்நடை வளர்ப்பு கடன், நகைக்கடன், சிறு வணிக கடன், மாற்றுத்திற னாளி கடன், மகளிர் குழுவிற்கான கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.
இந்த சங்கங்களில் அட மானம் வைத்துள்ளவர்க ளின் கடன்கள் அடிக்கடி அரசால் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் அதற்குரிய தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குவதில்லை. இதனால் பல சங்கங்கள் கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடி வருகின்றனர். இதனால் டெபாசிட் தாரர்களுக்கு முதிர்வு தொகையை கூட வழங்க முடியாத நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் ரேசன் கடை ஊழியர்களுக்கான ஊதியம், கடை வாடகை, மின் கட்டணம் போன்றவை கூட்டுறவு சங்கங்கள் மூலமே வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த தொகையை அரசு ஓரிரு ஆண்டுகளுக்கு பின்னரே சங்கங்களுக்கு வழங்கி வருகிறது. இதனி டையே டிராக்டர், நெற்கதிர் அறுக்கும் எந்திரம், கரும்பு வெட்டும் எந்திரம், டிரோன், லாரிகள், சரக்கு வாகனம் உள்ளிட்டவற்றை வாங்க வேண்டும்.
கிட்டங்கிகள் கட்ட வேண்டும் என கூட்டுறவு சங்கங்களை அதிகாரிகள் நிர்பந்தம் செய்து வருகின்ற னர். இதற்கு தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த 3ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட த்தில் 198 கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டு ள்ளன. இதனால் பயிர் கடன், நகை கடன் மற்றும் உரம் வினியோகம் ஆகி யவை கடுமையாக பாதிக்க ப்பட்டுள்ளது. விவசாய பணிகள் தொடங்கி உள்ள நிலையில் கூட்டுறவு சங்கங்கள் மூடி கிடப்பதால் விவசாயிகள் தனியார் உரக்கடைகளை நாடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஐ.சி.டி.பி., ஆர்.ஐ.டி.எப். அக்ரோ சர்வீஸ் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் டிராக்டர் மற்றும் விவசாய உபகரண ங்கள் வாங்கப்பட்டன. கிடங்குகளும் கட்டப்பட்டன. தற்போது அவை பயன்பாட்டில் இல்லாததால் கூட்டுறவு சங்கங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல தற்போதும் எந்திரங்கள் வாங்கவும், கிடங்குகள் கட்டவும் வற்புறுத்தி வருகின்றனர். இதற்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை செலவு செய்ய நேரிடும். இதனால் சங்கங்கள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் என்பதால் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர்.
- இந்த திட்டம் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த திட்டம். தமிழகத்தில் மிகச் சிறப்பாக 200 சதவீதம் செயல்பட்டு வருகிறது.
- அடுத்த வாரம் அவரவர் வங்கி கணக்கில் மத்திய அரசிடம் இருந்து நிதி வந்த பின்பு செலுத்தப்பட்டு விடும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நிர்வாக கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை திட்டமிட்டு தமிழக முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். ஊரக வளர்ச்சித்துறை மட்டுமல்லாது அனைத்து துறையும் மிக சிறப்பாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
100 நாள் வேலைத்திட்டத்தில் 8 வாரம் ஊதியம் விடுவிக்கப்படவில்லை என்று பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ரூ.2100 கோடி விடுவிக்க வேண்டி இருந்த நிலையில் ரூ.1,800 கோடி மட்டுமே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது. மீதமுள்ள ரூ.300 கோடி அடுத்த வாரம் அவரவர் வங்கி கணக்கில் மத்திய அரசிடம் இருந்து நிதி வந்த பின்பு செலுத்த ப்பட்டு விடும்.
100 நாள் வேலைத்திட்டத்தை இந்தியாவிலேயே முழுமையாக செயல்படுத்துவது தமிழகத்தில்தான். இந்த திட்டம் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த திட்டம். தமிழகத்தில் மிகச் சிறப்பாக 200 சதவீதம் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஆண்டில் 27 கோடி வேலை நேரத்தை தாண்டவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் இந்த மாதம் வரை 27 கோடி மனித நாட்கள் பயன்படுத்தப்பட்டு விட்டது. குடிநீர் வசதியில் இந்தியாவில் தமிழகம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கிராமங்களில் 3500 மேல்நிலை தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. 2024க்குள் 8 ஆயிரம் டேங்க் கட்டி முடிக்கப்பட்டு விடும். தற்போது மழைநீர் குறைவாக உள்ளது. இருந்தாலும் தமிழக முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியால் சரியாக திட்டமிடப்பட்டு குடிநீர் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குடிநீர், மின்விளக்கு வசதி, சாலைவசதி விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக மின்விளக்கு வசதி செய்யப்படவில்லை.
அதனால் தற்போது அனைத்து கிராமங்களிலும் கடைக்கோடி கிராமம் வரை மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ. 4 ஆயிரம் கோடியில் சாலை வசதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பாதுகாக்கப்பட்ட அரசாக தமிழகத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரை அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர் வினோத் குமார் அத்துமீறி நுழைந்து டாக்டர்கள் மற்றும் பேராசிரியர்களை மரியாதை குறைவாக நடத்தினார்.
- இதனை கண்டித்து திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவு முன்பு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
மதுரை அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர் வினோத் குமார் அத்துமீறி நுழைந்து டாக்டர்கள் மற்றும் பேராசிரியர்களை மரியாதை குறைவாக நடத்தினார். இதனை கண்டித்து திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவு முன்பு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் டாக்டர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் குமார் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் கார்த்திகேயன், தங்கராஜ், லலித்குமார், சுந்தரம், கிருஷ்ணசாமி பிரசாத், சிவா, பெருமாள், கீதா, விஜயா, மேகலா சங்கீதா, தன்யா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
இதேபோல் தேனி க.விலக்கு மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மதுரை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். டாக்டர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் அவர்கள் கோஷமிட்டனர்.
- பக்தர்களின் சிரமத்தை போக்க 2-வது ரோப்கார் அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தமிழக அரசு தெரி வித்தது.
- ரூ.30 கோடி கூடுதலாக உள்ளது எனக்கூறி 2-வது ரோப்கார் திட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி:
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாக வும், எவ்வித சிரமம் இன்றியும் மலைக்கோவி லுக்கு செல்ல ரோப்கார் மற்றும் மின் இழுவை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 50 சதவீதத்துக்கு மேல் பக்தர்கள் இதனையே பயன்படுத்தி மலைக்கோவி லுக்கு சென்று வருகின்றனர்.
பண்டிகை நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அந்த சமயங்களில் கூட்டம் அலைமோதி வரும். எனவே பக்தர்களின் சிரமத்தை போக்க 2-வது ரோப்கார் அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தமிழக அரசு தெரி வித்தது.
அதன்படி கிழக்கு பகுதியில் 2-வது ரோப்கார் நிலையம் அமைக்கப்பட்டு அதற்கான அலுவலகமும் திறக்கப்பட்டது. இந்த பணிக்காக வெளிநாட்டு நிறுவனம் சார்பில் டெண்டர் விடப்பட்ட நிலையில் ரூ.73 கோடிக்கு பணி முடிக்கப்படும் என தெரிவித்தது. ஆனால் ரூ.30 கோடி கூடுதலாக உள்ளது எனக்கூறி 2-வது ரோப்கார் திட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2-ம் ரோப்கார் திட்டப்பணிகள் கொரோனா காலக்கட்ட ங்களில் தாமதப்படுத்த ப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது டெண்டர் ரத்து செய்யப்ப ட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
- திண்டுக்கல் மாவட்டம் சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
- இப்போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்டன.
திண்டுக்கல்:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்டம் சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவிலான ஆண்களுக்கான வாலிபால் போட்டிகளை மாவட்ட கலெக்டர் பூங்கொடி இன்று தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்டன. நாளை பெண்க ளுக்கான வாலிபால் போட்டிகள் நடைபெற வுள்ளன.
இதில் மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, நடுவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
- சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவை கேள்விக்குறியாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் அளித்த வண்ணம் உள்ளனர்.
- ஆண்கள் கட்டண கழிப்ப றை, இலவச கழிப்பறை, பயணிகள் ஓய்வு அறைகளை ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையம், பெரும் நகரங்களான மதுரை, திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை இணை க்கும் பாலமாக இருந்து வருகிறது. தினந்தோறும் ஏராளமான பயணிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவை கேள்விக்குறியாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் அளித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இன்று மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆண்கள் கட்டண கழிப்ப றை, இலவச கழிப்பறை, பயணிகள் ஓய்வு அறைகளை ஆய்வு செய்தார். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க தினந்தோறும் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். கரூர் பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் மேற்கூரை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மேலும் நேருஜி நினைவு மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்திற்கு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் உதவி ஆணை யர்கள் சரவணகுமார், சாமிநாதன், மாநகர் நல அலுவலர் செபாஸ்டின், சுகாதார ஆய்வாளர் தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- முட்புதர்களால் சூழப்பட்டுள்ள ஆதார் மையத்தை ஒட்டி அரசு அலுவலகங்கள் மற்றும் மகளிர் சிறைச்சாலை உள்ளது.
- இப்பகுதி முட்புதர்கள் மற்றும் குப்பைகள் கொட்டும் இடமாக மாறுவதால் விஷ பூச்சிகள் அதிக அளவு உலா வரும் இடமாகவும் உள்ளது.
நிலக்கோட்டை, அக்.9-
நிலக்கோட்டை தாலுகா அலுவலக வளாகப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ஆதார் மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையம் திடீரென மூடப்பட்டது. அப்போதிருந்து இப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் ஆதார் மையம் முழுவதும் தற்போது முட்புதர்களால் சூழ்ந்துள்ளது.
இதனால் தற்சமயம் ஆதார் மையம் வேறு ஒரு இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த முட்புதர்களால் சூழப்பட்டுள்ள ஆதார் மையத்தை ஒட்டி வருவாய்த்துறை அலுவலகம், பழைய தாலுகா அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகம், தனி வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் மற்றும் மகளிர் சிறைச்சாலை உள்ளது.
இப்பகுதி முட்புதர்கள் மற்றும் குப்பைகள் கொட்டும் இடமாக மாறுவதால் விஷ பூச்சிகள் அதிக அளவு உலா வரும் இடமாகவும், தொற்று நோய் உற்பத்தி செய்யும் மையமாகவும் மாறி உள்ளது. எனவே இங்குள்ள முட்புதர்களையும், குப்பைகளையும் அகற்றி பாதுகாப்பான இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆத்திரமடைந்த ஆறுமுகம் தனது மகன் சரத்குமாரை வீட்டில் இருந்த ஒரு அறைக்குள் தள்ளி வெளியே பூட்டிக் கொண்டார்.
- தள்ளிவிட்டதால் அவர் இறந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மேற்கு பூத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், சரத்குமார் (25) என்ற மகனும் சங்கீதா என்ற மகளும் உள்ளனர். சரத்குமார் தனியார் வாகனம் ஓட்டும் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். திருமணம் ஆகவில்லை.
சரத்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி தனது தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதன்படி நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த சரத்குமார் தனது தந்தையை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தனது மகன் சரத்குமாரை வீட்டில் இருந்த ஒரு அறைக்குள் தள்ளி வெளியே பூட்டிக் கொண்டார்.
இன்று காலையில் பார்த்த போது பின் தலையில் ரத்தக் காயங்களுடன் சரத்குமார் இறந்து கிடந்தார். இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சரத்குமார் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது குடும்பத்தினர் தெரிவிக்கையில், போதையில் அறையில் வைத்து பூட்டியதால் சரத்குமார் மேற்கூரையை உடைத்து தப்பிக்க முயன்ற போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். இருந்தபோதும் ஆறுமுகம் தள்ளி விட்டதால் அவர் இறந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் சாலையோர ஆற்றுபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
- இதில் டிராக்டரில் உட்கார்ந்து வந்த சிறுவன் கீழே விழுந்து பலத்த காயமடைந்தான்.
நத்தம்:
நத்தம் அருகே பட்டணம்பட்டியை சேர்ந்தவர் அழகன். (வயது40) கொத்தனார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அழகனின் 3-வது மகன் கர்ணன் (8) தனது சகோதரருடன் டிராக்டரில் சென்றார். மோட்டார்சைக்கிள் பெட்ரோல் இல்லாமல் இருந்ததை டிராக்டரில் கட்டி இழுத்து சென்றனர்.
எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் சாலையோர ஆற்றுபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரில் உட்கார்ந்து வந்த சிறுவன் கர்ணன் கீழே விழுந்து பலத்த காயமடைந்தான்.
ஆபத்தான நிலையில் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கன மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
- வார சந்தை நாளான நேற்று காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள்,காய்கறி வியாபாரிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் மிதமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் மேகமூட்டம் நிலவி வந்தது .
அதனைத்தொடர்ந்து மாலையில் கொடைக்கானல் நகர் பகுதிகளான அண்ணா சாலை, பஸ் நிலையப்பகுதி, ஏரிச்சாலை, கே.ஆர்.ஆர்.கலையரங்கம் பகுதி, அப்சர்வேட்டரி, பாம்பார்புரம், செண்பகனூர், ஆனந்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக சாலைகள் முழுவதிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கன மழையின் காரணமாக கொடைக்கானல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
மேலும் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். வார சந்தை நாளான நேற்று காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள்,காய்கறி வியாபாரிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். தொடர் கனமழையால் நீர் நிலைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வாகன ஓட்டிகள் பகல் பொழுதிலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்லும் நிலை ஏற்பட்டது.






