என் மலர்
திண்டுக்கல்
- கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைவாக இருந்தது.
- மழை ஓய்ந்த நிலையில் கடும் குளிர் வாட்டி வருகிறது. இருந்தபோதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் கடும் குளிர் வாட்டி வருகிறது. இருந்தபோதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து தேனிலவு கொண்டாட வரும் இளம்ஜோடிகள் வருகை அதிகமாக உள்ளது. மோயர் சதுக்கம், பைன்மரக்காடு, குணா குகை, பசுமைப்பள்ளத்தாக்கு, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, படகு குழாம் போன்ற பகுதிகளில் அதிக அளவில் குவிந்தனர். ஒரு சில வாரங்களுக்கு பின் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருப்பதால் சிறுகுறு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அடுத்த மாதம் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தாண்டிக்குடி அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி ஜீப் ஓடி 150 பள்ளத்தில் கவிழ்ந்தது.
- இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 8 பேர் படுகாயமைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை தாண்டிக்குடி அருகே அசன்கொடை கிராமத்தை சேர்ந்த குப்புச்சாமி மகன் அபிராமன்(28). இவர் அப்பகுதியில் அவகோடா, பேசன்புரூட் உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட்டு வந்தார். மேலும் அதேபகுதியை சேர்ந்த விவசாயிகளுடன் ஜீப்பில் பெருமாள்மலை சந்தைக்கு சென்றார். ஜீப்பை ஈஸ்வரன் என்பவர் ஓட்டிச்சென்றார்.
பின்னர் அவர்கள் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். நள்ளிரவு சமயம் தாண்டிக்குடி அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி ஜீப் ஓடியது.
150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அபிராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் ஈஸ்வரன் மற்றும் விவசாயிகள் நாகராஜன்(32), சரத்குமார்(27), பன்னீர்செல்வம்(26), செந்தில்குமார்(35), சேகர்(35), ரவிச்சந்திரன்(45) உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர் அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அபிராமன் உடல் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- குடகனாற்று தடுப்பணை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
- எதிர்பாராமல் கால் தவறி வழுக்கி ஆற்றில் இருந்த நீர் சுழல் பகுதியில் விழுந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.
செம்பட்டி:
செம்பட்டி அருகே வக்கம்பட்டி அடுத்த முன்னிலைக்கோட்டை ஊராட்சி ஏசுபாளையத்தை சேர்ந்த அந்தோணி மகன் மரியகவுதம் (வயது 19). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் பிரிவு 2ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று வக்கம்பட்டியை சேர்ந்த நண்பர்கள் சிலருடன் குடகனாற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றிருந்தார். வீ.கூத்தம்பட்டி பார்வதி அம்மன் கோயில் அருகே உள்ள குடகனாற்று தடுப்பணை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராமல் கால் தவறி வழுக்கி ஆற்றில் இருந்த நீர் சுழல் பகுதியில் விழுந்தார். இதில் தண்ணீருக்குள் அவர் மூழ்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அப்போது நண்பர்கள் தண்ணீரில் உயிருக்கு போராடி தத்தளித்துக் கொண்டிருந்த மரிய கவுதமை கரைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீரில் மூழ்கி பலியான மரியகவுதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து வேடசந்தூர் வரை செல்லும் குடகனாற்றில் யாரும் குளிக்க கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
- 2,3வது பிளாட்பாரங்களுக்கு செல்ல சுரங்கப்பாதை உள்ளது. இங்கு மழை காலங்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் பயணிகள் சிரமமடைந்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் வழியாக தினசரி 60க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாக இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணிகள் வருகின்றனர்.
ஆனால் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். நுழைவு பகுதியிலிருந்து 2,3வது பிளாட்பாரங்களுக்கு செல்ல சுரங்கப்பாதை உள்ளது. இங்கு மழை காலங்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் பயணிகள் சிரமமடைந்தனர்.
குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள் ரெயில்களை பிடிக்கும் அவசரத்தில் ஆபத்தான முறையில் தண்டவாளத்தில் இறங்கி மற்ற பிளாட்பாரங்களுக்கு செல்கின்றனர். இங்குள்ள மழைநீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றுகின்றனர். சுரங்கப்பாதையையொட்டி பெரிய கிணறு உள்ளது.
மழை காலங்களில் கிணறு நிரம்பி தண்ணீர் செல்ல வழியின்றி ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இது தொடர்கதையாகி வருகிறது. தற்போது 3 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வெளியேற்றப்படாமல் உள்ளது. இதற்கு ரெயில்வே அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் பயணிகள் பாடு திண்டாட்டமாக உள்ளது. எனவே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை நிரந்தரமாக எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வுக்காக 28 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
- இதில் 5994 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 2640 பேர் தேர்வு எழுத வரவில்லை.
திண்டுக்கல்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது.
இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் உயர்பதவி தேர்வுகளான குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள துணை கலெக்டர், டி.எஸ்.பி, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி உள்ளிட்ட 92 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
இத்தேர்வுக்கு ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். தமிழகம் முழுவதும் ஆண், பெண்கள் என மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் நடைபெறுவதாக இருந்த இந்த தேர்வு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.
இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 28 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் தேர்வு எழுத 8 634 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 5994 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 2640 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனங்களும் கொண்டுவர தடைவிதிக்கப்பட்டிருந்தது.
மோதிரம் அணிந்து வரவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடைபெறும் இடங்களில் தேர்வர்களை தவிர வேறுயாரும் அனுமதிக்கப்படவில்லை. பலத்த பாதுகாப்புடன் காலை 9.30 மணிக்கு தொடங்கிய இத்தேர்வு மதியம் 12.30 மணிக்கு நிறைவடைந்தது.
திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். பள்ளியில் முதன்மை கண்காணிப்பாளரும், பள்ளி முதல்வருமான ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றது.
- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.
- பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் விவசாய கடன் சம்மந்தப்பட்ட தங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக்கூடத்தில் வரும் 25-ந்தேதி காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.
அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உள்ளனர்.
அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் கருவிகள், ஒழுங்கு முறை விற்பனைக்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் விவசாய கடன் சம்மந்தப்பட்ட தங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம். கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து நபர்களும் தவறாது முகக்கவசம் அணிந்து கொள்ளவும், தனிநபர் இடைவெளியும் கண்டிப்பாக கடைபிடித்தாக வேண்டும் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
- பொட்டி செட்டிபட்டி பிரிவு பகுதியில் சாலையில் சென்றபோது கார் பைக் மீது மோதியதில் படுகாயந்து உயிரிழந்தார்.
- இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரித்து வருகின்றார்.
திண்டுக்கல்:
கொடைரோடு அருகே சாண்டலார்புரத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 56). இவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட ராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
பொட்டி செட்டிபட்டி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கார் பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட வெள்ளைச்சாமி படுகாயம் அடைந்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரித்து வருகின்றார்.
- பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
- பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
குள்ளனம்பட்டி:
கோபால்பட்டியில் உள்ள கடைகள் மற்றும் பேக்கரிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அசோக்குமார் தலைமையில் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக்கூடாது. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய கூடாது. மேலும் மருந்துக் கடைகளில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கக்கூடாது. மருந்துக் கடைகளில் சட்டவிரோதமாக மருத்துவம் பார்த்தல், ஊசி செலுத்துதல் போன்றவை கூடாது என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் எச்சரிக்கை அறிவிப்புகள் இல்லாமல் பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
- பஸ் கடந்த சில மாதங்களாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் மிகுந்த அவதியடைந்தனர்.
- பழனி-உடுமலைப்பேட்டை சாலையில் திடீரென தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி:
பழனி அருகில் உள்ள நெய்காரப்பட்டிக்கு சின்னகாந்திபுரம், வாய்க்கால்பட்டி வழியாக புளியம்பட்டி மார்க்கத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் கடந்த சில மாதங்களாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் மிகுந்த அவதியடைந்தனர்.
நீண்டதூரம் நடந்து வந்தும் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தியும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனுக்கள் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் இன்று பழனி-உடுமலைப்பேட்டை சாலையில் திடீரென தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்காமல் போராட்டத்தை தொடர்ந்ததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- கோவைைய சேர்ந்த தனியார் நிறுவனம் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர்களை கொண்டு ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியது.
- கொடைக்கானல் மலை ப்பகுதியில ஒரு ெஹலி காப்டர் பலமுறை குடியி ருப்பு பகுதியில் தாழ்வாக பறந்து சென்றதால் பர பரப்பு ஏற்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களை கவரும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. கோவைைய சேர்ந்த தனியார் நிறுவனம் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர்களை கொண்டு ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியது.
அவ்வப்போது ஹெலி காப்டரில் சுற்றுலா பயணி களை அழைத்துவந்து கொடைக்கானல் மலை ப்பகுதியை சுற்றி காண்பித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று கொடைக்கானல் மலை ப்பகுதியில ஒரு ெஹலி காப்டர் பலமுறை குடியி ருப்பு பகுதியில் தாழ்வாக பறந்து சென்றதால் பர பரப்பு ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், சுற்றுலா பயணிகளை ஏற்றி க்கொண்டு அடிக்கடி ஹெலிகாப்டர்கள் வான்ப குதியில பறந்து வருகிறது.
ஆனால் இந்த ஹெலிகாப்டர் மிகவும் தாழ்வாக வந்தது. அதில் அமர்ந்திருந்தவர்கள் தெரியும் அளவிற்கு மிகதாழ்வாக பறந்ததால் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டது.
பின்னர் தரையிறங்க இடம் இல்லாததால் அந்த ஹெலிகாப்டர் மீண்டும் அங்கிருந்து சென்றுவிட்டது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டதாக கோவையை சேர்ந்த தனி யார் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அடிக்கடி இது போல் தாழ்வாக பறக்கும் ெஹலிகாப்டர்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
எனவே முறையான பயிற்சி பெற்றபின் அனுமதிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றனர். இந்த ஹெலிகாப்டர் பழனி பகுதியிலும் வட்டமடித்து சென்றது.
- மாணவி பிட் அடித்ததாக தெரிகிறது. இதனை பார்த்த ஆசிரியர் உனக்கு தெரிந்ததை மட்டும் தேர்வில் எழுது. பொதுத்தேர்வில் நன்றாக எழுதினால் போதும் என அறிவுரை கூறியுள்ளார்.
- இதனால் தலைகுனிவு ஏற்பட்டதால் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள கருப்பமூப்பன்பட்டியை சேர்ந்த மாசாணம் மகள் அர்ச்சனாதேவி(16). இவர் விராலிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளியில் 2-ம் நிலை பருவத்தேர்வுகள் நடைபெற்றது. அப்போது அர்ச்சனாதேவி பிட் அடித்ததாக தெரிகிறது. இதனை பார்த்த ஆசிரியர் உனக்கு தெரிந்ததை மட்டும் தேர்வில் எழுது. பொதுத்தேர்வில் நன்றாக எழுதினால் போதும் என அறிவுரை கூறியுள்ளார்.
இதனால் சகமாணவிகள் மத்தியில் அர்ச்சனாதேவிக்கு தலைகுனிவு ஏற்பட்டது. மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய அர்ச்சனாதேவி தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இரவு சாப்பிட அழைப்பதற்காக அவரது தாய் கதவை தட்டினார். ஆனால் அவர் திறக்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அர்ச்சனாதேவி தூக்குமாட்டிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து மாணவியின் தோழிகளிடம் விசாரித்தபோது பள்ளியில் நடந்த விபரங்களை அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
- தற்போது ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது.
- விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும்.
திண்டுக்கல் :
திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது:-
கூட்டுறவு சங்கங்களுக்கு தி.மு.க. ஆட்சியில் தான் சொந்த கட்டிடம் கட்டித்தரப்பட்டது. தற்போது 6 ஆயிரத்து 500 பேருக்கு கூட்டுறவுத்துறையில் வேலை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவிலேயே 2-வது இடமாக கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைய இருக்கிறது.
தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டப்படும். விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார்.
அதன்படி மாநிலம் முழுவதும் 13 லட்சத்து 50 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் புதிதாக விண்ணப்பித்து உள்ளவர்களில் தகுதியான அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படும்.
தற்போது ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது.
ஆனால் கூலி வேலைக்கு செல்வோர், முதியவர்களின் விரல் ரேகை சரியாக பதிவு ஆகாததால், பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருக்கிறது.
இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை தமிழகம் முழுவதும் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.
இதன் முன்னோட்டமாக சென்னையில் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. மேலும் ரேஷன் கடைக்கு வர இயலாதவர்கள் உரிய படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால், பிற குடும்ப உறுப்பினர்கள் மூலம் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி பேசினார்.






