என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • கார் மீது மோட்டார் சைக்கிளில் மோதியதில் மாணவரை சரிமாரியாக தாக்கி பைக்கை பறித்துச்சென்றனர்.
    • மனஉளைச்சலில் இருந்த மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பெருமாள்மலையை சேர்ந்த ராஜகோபால்- அங்காளஈஸ்வரியின் மகன் விஜேஸ் பாண்டியன் (வயது17). திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.

    தனது நண்பர் ஒருவர் இறந்து விடவே துக்கம் விசாரிப்பதற்காக கடந்த 19 - ஆம் தேதி கொடைக்கானல் வந்தார். பின்னர் அன்று இரவு சுமார் 9.30 மணி அளவில் தனது நண்பர்கள் சுபாஷ், தினேஷ் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

    பெருமாள்மலை-பழனி பிரிவு அருகில் உள்ள ரேஷன் கடை ஓரமாக இருந்த மண்ணெண்ணெய் பேரல் மீது மோதி பின்னர் அருகில் நின்றிருந்த ஒரு கார் மீதும் மோதி தவறி கீழே விழுந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த கார் உரிமையாளர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் சேர்ந்து 3 இளைஞர்களையும் தாக்கியுள்ளனர். மேலும் விஜேஸ்பாண்டியனின் மோட்டார் சைக்கிளையும் பறித்துக் கொண்டு காரை சரிசெய்து கொடுத்து விட்டு பைக்கை வாங்கிச் செல்லுமாறு கூறி உள்ளனர்.

    மோட்டார் சைக்கிள் பறிபோனது மட்டுமின்றி உடலில் காயங்களும் ஏற்பட்டதால் மன உளைச்சலுடன் வீட்டுக்குச் சென்றார். பின்னர் தனது அறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து விஜேஸ்பாண்டியனின் சகோதரர் விஷ்ணு பாண்டியன் தனது தம்பியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது குறித்து விசாரணை செய்த கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் கீழ் பெருமாள் மலையைச் சேர்ந்த வினோத் (33), தங்கம் (39) ஆகிய 2 பேரையும் கைது செய்தார். இவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • போதையில் டிரான்ஸ்பார்மரில் ஏரி வயரை பிடித்து இழுத்ததால் தீப்பிடித்து தூக்கிவீசப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • படுகாயமடைந்த வாலிபரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் எம்.ஜி.ஆர் சிலை அருகே இன்று காலை 3 மணியளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் குடிபோதையில் சத்தம் போட்டபடி இருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை விசாரித்தபோது சரிவர பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    குடிபோதையில் இருந்த அந்த வாலிபர் தமிழகத்தில் வடமாநில வாலிபர்கள் யாரும் இருக்ககூடாது. தமிழருக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே அவர்களை வெளியேற்றவேண்டும் என கூறினார். மேலும் அங்கிருந்த பேரிகார்டுகளை கீழே தள்ளி சாலையில் அமர்ந்து சத்தம்போட்டார். இதனால் பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறிய பஸ்களும் செல்ல முடியாமல் நின்றன.

    உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து அவரிடம் விசாரித்தனர். அப்போதும் அவர் சத்தம்போட்டபடி அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறி கூச்சலிட்டார். உடனடியாக அவரை இறங்குமாறு போலீசார் எச்சரித்தனர். மேலும் மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு மின்இணைப்பை துண்டிக்குமாறு கூறினர்.

    ஆனால் அதற்குள் அங்கிருந்த வயரை பிடித்து இழுத்ததால் தீப்பிடித்து தூக்கிவீசப்பட்டார். மேலும் பஸ்நிலைய சுற்றுவட்டார பகுதி முழுவதும் மின்வினியோகமும் தடைபட்டது.

    பின்னர் படுகாயமடைந்த அந்த வாலிபரை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விசாரணையில் அவர் தருமத்துப்பட்டி கோம்பை பகுதியை சேர்ந்த சடையாண்டி மகன் வேல்முருகன்(20) என தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. படுகாயமடைந்த வேல்முருகன் மீது போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு கடந்த 4 நாட்களாக தடைபட்டுள்ளது.
    • கொடைக்கானல் கோட்டாட்சியரிடம் கொடைக்கானல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் புகார் மனு அளித்தனர்

    கொடைக்கானல்:

    தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு கடந்த 4 நாட்களாக தடைபட்டுள்ளது.இதேபோல் கொடைக்கானலில் பி.எஸ்.என்.எல் சேவை கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக அடிக்கடி பாதிப்பு ஏற்படுவதால் கொடைக்கானல் நகர் முழுவதும் கேபிள் டிவி இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

    இதை நிவர்த்தி செய்யக்கோரி கொடைக்கானல் கோட்டாட்சியரிடம் கொடைக்கானல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் புகார் மனு அளித்தனர்.அந்த மனுவில் கொடைக்கானல் முதல் வத்தலக்குண்டு வரையிலான தேசிய நெடுஞ்சாலை மற்றும் பாலம் வேலை நடைபெறுவதால் 15 நாட்களுக்கு ஒரு முறை பி.எஸ்.என்.எல் 4ஜி சேவை துண்டிப்பு ஏற்படுகிறது.

    ஒருமுறை துண்டிப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்ய அனைத்து செலவுகளையும் வாகனம், ஜெனரேட்டர், வேலையாட்கள் என சரி செய்ய 2 நாட்களாகிவிடுகிறது. ஆனால் சிலர் தனியார் கேபிள் மூலமாக கொடைக்கானலில் இணைப்பு கொடுத்து வருகின்றனர்.ஆனால் அந்த தனியார் கேபிள் இணைப்புகள் துண்டிப்பு ஏற்படுவதில்லை.அப்படியே துண்டிப்பு ஏற்பட்டாலும் 2 அல்லது 3 மணி நேரத்தில் இணைப்பை சரி செய்து நிகழ்ச்சிகள் தடையில்லாமல் ஒளிபரப்பு செய்கின்றனர்.

    இதனால் பொதுமக்கள் அரசு கேபிளை தவிர்த்து தனியார் கேபிளுக்கு மாறி வருகின்றனர். எனவே ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கள் மனுவில் தெரிவித்தனர்.

    • அனைத்து அணைகளும் நிரம்பி பல்வேறு இடங்களில் புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகின.
    • பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த 14ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் அனைத்து அணைகளும் நிரம்பி பல்வேறு இடங்களில் புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகின.

    அதன்பிறகு மழை முற்றிலும் குறைந்து தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பகல் நேரத்தில் இதமான வெயிலும், காலை, மாலை, இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இன்று காலை கொடைக்கானலில் 6.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. கடந்த 3 நாட்களாகவே 7 டிகிரி செல்சியசுக்கு குறைவான வெப்ப நிலையே காணப்படுகிறது.

    இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் கம்பளி மற்றும் குல்லா அணிந்தே கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    முதியவர்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மக்கள் வெளியில் வர அச்சம் அடைந்துள்ளனர். ஏரிச்சாலை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் சாலையோர வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் தெருவில் தீ மூட்டி குளிர்காய்ந்து பின்னர் தங்கள் பணிக்கு சென்று வருகின்றனர்.

    வழக்கமாக டிசம்பர் மாதத்தின் முதல்வாரத்தில்தான் இதுபோன்ற வெப்ப நிலை காணப்பட்டு பின்னர் உறைபனி சீசன் தொடங்கும். ஆனால் தற்போது நவம்பர் மாதத்திலேயே இதுபோன்ற கடும் குளிர் வாட்டி வருவதால் எதிர்வரும் நாட்களில் குளிரின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி எபினேசர் தெரிவித்துள்ளார்.

    • கோவில் நிர்வாகத்தை வசப்படுத்திக்கொள்ள ஒரு தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
    • இதனை தட்டிக்கேட்டதால் கிரிமினல் வழக்குகளில் சிக்க வைக்க முயற்சி எடுத்து வருவதுடன் கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிபட்டி அடுத்துள்ள மம்மானியூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில் விநாயகர், காளியம்மன் கோவில் திருவிழா நடந்து முடிந்து 6 மாதங்கள் ஆகியது. துளசிராமன் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவரை பயன்படுத்தி கோவில் நிர்வாகத்தை வசப்படுத்திக்கொள்ள ஒரு தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கேட்டபோது மான், பன்றி போன்ற விலங்கினை வேட்டையாடி சாப்பிடுகின்றனர் என்று பொய்யான தகவலை வனத்துறையினருக்கு தெரிவிக்கின்றனர்.

    வனத்துைறயினர் எங்கள் வீடுகளில் வந்து சோதனை நடத்தி விட்டு சமைத்த உணவு பாத்திரங்களையும் திறந்து பார்த்து அதுபோல் எதுவும் இல்லை என சென்று விட்டனர். கோவில் நிலத்தை அபகரிக்க முயன்றதை தட்டிக்கேட்டதால் கிரிமினல் வழக்குகளில் எங்களை சிக்க வைக்க முயற்சி எடுத்து வருவதுடன் கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர்.

    எனவே சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

    • சுமார் 19 ஆண்டுகள் குளம் நிரம்பாமல் வறண்டு காணப்பட்டது. தற்போது முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்து வருகிறது.
    • குளம் நிரம்பும்போது ஒவ்வொரு வருடமும் ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் பாரம்பரிய முறைப்படி கிடா வெட்டி வழிபாடு நடத்துவது வழக்கம்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள அடியனூத்து ஊராட்சிக்குட்பட்ட நல்லாம்பட்டி கிராமத்தில் அச்சராஜ குளம் உள்ளது. இந்த குளம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெய்த கன மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது.

    குளம் நிரம்பும்போது ஒவ்ெவாரு வருடமும் ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் பாரம்பரிய முறைப்படி கிடா வெட்டி வழிபாடு நடத்துவது வழக்கம். சுமார் 19 ஆண்டுகள் குளம் நிரம்பாமல் வறண்டு காணப்பட்டது. தற்போது முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்து வருகிறது.

    இதனை முன்னிட்டு விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி அங்குள்ள விநாயகர் கோவிலில்சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று வாண வேடிக்கையுடன் குளக்க ரையில் அமைந்துள்ள முனியப்பன் மற்றும் கன்னிமார் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    பின்னர் குளம் நிரம்பி மறுகால் செல்லும் இடத்தில் மலர் தூவி வழிபட்டனர். பின்னர் அங்கு கிடா வெட்டி விருந்து தயாரிக்கப்பட்டது. அந்த உணவு ஊர் மக்கள் அனை வருக்கும் அன்னதானமாக வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஊர் முக்கிய நிர்வாகிகள், பூசாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பெரும்பாலான சமயங்களில் அரசு பஸ் நிறுத்தப்படுவதாலும் தாமதமாக வருவதாலும் தொழிலாளர்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்கின்றனர்.
    • இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, கானல்காடு, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி போன்ற பகுதிகளில் காபி, மிளகு, ஏலக்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், நெல்லூர், சித்தரேவு போன்ற தரைப்பகுதியிலிருந்து ஏராளமான கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர்.

    வத்தலகுண்டுவிலிருந்து பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, பெரும்பாறை, தடியன்குடிசை வழியாக தாண்டிக்குடிக்கு காலை முதல் மாலை வரை அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பெரும்பாலான சமயங்களில் அரசு பஸ் நிறுத்தப்படுவதாலும் தாமதமாக வருவதாலும் தொழிலாளர்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்கின்றனர். பெரும்பாறை, தாண்டிக்குடி மலைப்பாறை மிகவும் குறுகிய சாலையாக உள்ளது. இந்த குறுகிய சாலையில் மினி லாரிகளில் மிகவும் ஆபத்தான முறையில் இவர்கள் பயணம் செய்கின்றனர்.

    இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. நேற்று கூட ஜீப் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் படுகாயமடைந்தனர். அடிக்கடி விபத்துகள் நடந்து வந்த போதிலும் ஆபத்தை உணராமல் தொழிலாளர்கள் சரக்கு வேன்களில் பயணம் செய்வது தொடர்கதையாக உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இன்று காலை கொம்பேறிப்பட்டி நால்ரோடு பிரிவில் 7.30 மணிக்கு வர வேண்டிய பஸ் 1 மணி நேரம் தாமதமாக வந்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
    • இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, கொம்பேறிப்பட்டி வழியாக மம்மானியூர் வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் மூலம் பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவ-மாணவிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 1 மாதமாக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பஸ் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பஸ் இயக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வராததால் தாமதமாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட்டு விடுவதாக அவர்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் கூலித் தொழிலாளர்களும் உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டியது இருந்தது. இன்று காலை கொம்பேறிப்பட்டி நால்ரோடு பிரிவில் 7.30 மணிக்கு வர வேண்டிய பஸ் 1 மணி நேரம் தாமதமாக வந்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

    பல முறை தாங்கள் கோரிக்கை விடுத்தும் தாமதமாக பஸ் வருவதால் ஆசிரியர்களிடம் திட்டு வாங்குவதாகவும் தெரிவித்து டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமையில் அங்கு வந்தவர்கள் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகிகளிடம் எடுத்துக்கூறி உரிய நேரத்தில் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அரிசி வியாபாரம் செய்து வந்த சரவணனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதால் மன உளைச்சலில் இருந்தார்.

    வேடசந்தூர்:

    கோவை மாவட்டம் பொருளூர் பகுதியை சேர்ந்தவர் தினகரன் மகன் சரவணன் (வயது37). இவர் ஜெயப்பிரியா என்ற பெண்ணை காதலித்தார்.

    இதற்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் நண்பர் உதவியுடன் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நேருஜிநகரில் வசித்து வந்தார். இவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார். அரிசி வியாபாரம் செய்து வந்த சரவணனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதால் மன உளைச்சலில் இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து அறிந்ததும் வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாய்கள் விரட்டியதால் மிரண்டு ஓடி வந்த கடமான் மின் வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • மின் வேலி அமைத்த தனியார் எஸ்டேட் நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பாச்சலூர் அருகே உள்ள செம்பிரான்குளம் தனியார் எஸ்டேட்டில் அமைக்கப்பட்டு இருந்த சூரிய மின் வேலியில் சிக்கி 3 வயது மதிக்கத்தக்க ஆண் கடமான் பலியானது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பெரும்பள்ளம் வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இறந்து போன கடமானை அதே இடத்திலேயே உடற்கூராய்வு செய்தனர்.

    பின்னர் வனப்பகுதியில் அதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. நாய்கள் விரட்டியதால் மிரண்டு ஓடி வந்த கடமான் மின் வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே மின் வேலி அமைத்த தனியார் எஸ்டேட் நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

    • கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • திண்டுக்கல் ரெயில்வே நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    குள்ளனம்பட்டி:

    கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக எல்லைப்பகுதியிலும் கூடுதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ரெயில்நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி திண்டுக்கல் ரெயில்வே நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் உத்தரவின்படி, ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் அனைத்து ரெயில்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகளின் இருக்கைகள் மற்றும் உடைமைகள், நடைமேடை, கார் பார்க்கிங், பார்சல், ஆட்டோ ஆகியவற்றில் தீவிர சோதனை நடத்தினர்.

    • போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 நபர்களை அழைத்து விசாரித்ததில் போதைக்காளான் கஞ்சா விற்பனை செய்பவர்கள் என தெரியவந்தது.
    • 1.100 கிராம் கஞ்சா, 100 கிராம் போதை காளான் பறிமுதல் செய்யப்பட்டது.அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கொடைக்கானல் போலீசார் சிறையில் அடைத்தனர்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் படி கொடைக்கானல் டி.எஸ்.பி சீனிவாசன் அறிவுறுத்தலின்படி கொடைக்கானல் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்பவர்களை கைது செய்ய கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார், ராமராஜ், தலைமைக் காவலர் காசிநாதன், முதல் நிலைக் காவலர் சரவணன் ஆகியோர் கொண்ட தனிப்படையை அமைத்து தேடி வந்தனர்.

    கே.ஆர்.ஆர் கலையரங்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 நபர்களை அழைத்து விசாரித்ததில் போதைக்காளான் கஞ்சா விற்பனை செய்பவர்கள் என தெரியவந்தது.

    மேலும் அவர்கள் கொடைக்கானல் அப்சர்வேட்டரி வி.ஜி.பி கார்டன் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (32), அப்சர்வேட்டரி செல்லப்புரம் பகுதியை சேர்ந்த ராஜபாண்டி (26), தாமஸ் டவுன் புதிய பெங்களூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த கிளிப்ட்அகஸ்டின் (27) ஆகியோர் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அவர்களிடமிருந்து 1.100 கிராம் கஞ்சா, 100 கிராம் போதை காளான் பறிமுதல் செய்யப்பட்டது.அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கொடைக்கானல் போலீசார் சிறையில் அடைத்தனர். இவர்கள் தொடர்புடைய வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    ×