என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் 7 டிகிரி செல்சியசுக்கு கீழ் குறைந்த வெப்ப நிலை
- அனைத்து அணைகளும் நிரம்பி பல்வேறு இடங்களில் புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகின.
- பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த 14ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் அனைத்து அணைகளும் நிரம்பி பல்வேறு இடங்களில் புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகின.
அதன்பிறகு மழை முற்றிலும் குறைந்து தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பகல் நேரத்தில் இதமான வெயிலும், காலை, மாலை, இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இன்று காலை கொடைக்கானலில் 6.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. கடந்த 3 நாட்களாகவே 7 டிகிரி செல்சியசுக்கு குறைவான வெப்ப நிலையே காணப்படுகிறது.
இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் கம்பளி மற்றும் குல்லா அணிந்தே கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதியவர்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மக்கள் வெளியில் வர அச்சம் அடைந்துள்ளனர். ஏரிச்சாலை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் சாலையோர வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் தெருவில் தீ மூட்டி குளிர்காய்ந்து பின்னர் தங்கள் பணிக்கு சென்று வருகின்றனர்.
வழக்கமாக டிசம்பர் மாதத்தின் முதல்வாரத்தில்தான் இதுபோன்ற வெப்ப நிலை காணப்பட்டு பின்னர் உறைபனி சீசன் தொடங்கும். ஆனால் தற்போது நவம்பர் மாதத்திலேயே இதுபோன்ற கடும் குளிர் வாட்டி வருவதால் எதிர்வரும் நாட்களில் குளிரின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி எபினேசர் தெரிவித்துள்ளார்.






