என் மலர்
திண்டுக்கல்
- கொள்ளையனை சரமாரியாாக தாக்கி பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.
- வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால், துணிவு திரைப்படம் பார்த்து கொள்ளையடிக்க வந்ததாக கொள்ளையன் வாக்குமூலம்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் வாணிவிலாஸ் சிக்னல் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இன்று காலை ஒரு பெண் உள்பட 4 ஊழியர்கள் பணிக்கு வந்தனர். மற்ற ஊழியர்கள் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென உள்ளே புகுந்த ஒரு வாலிபர் வங்கி ஊழியர்கள் மீது மயக்க ஸ்பிரே மற்றும் மிளகாய்பொடியை தூவினார்.
இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தனர். உடனே அந்த வாலிபர் மற்ற 2 ஊழியர்களை கையை கட்டிபோட முயன்றார். உடனே அவர்கள் கூச்சலிட்டனர். அப்போது வங்கிக்குள் வந்த மேலாளர் மற்றும் ஒரு சில ஊழியர்கள் அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர்.
அவரை ஒரு அறையில் வைத்து தர்மஅடி கொடுத்தனர். அவர் ஹிந்தியில் பேசியதால் வங்கிக்குள் கொள்ளையடிக்க முயன்ற வடமாநில வாலிபராக இருக்கலாம் என்று சந்தேகமடைந்தனர்.
இதனையடுத்து நகர்மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அதிவிரைவுபடையினரும் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் பிடிபட்டவாலிபரை விசாரித்தபோது திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த கலில்ரகுமான்(25) என தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் "தான் பல்வேறு இடங்களில் வேலை பார்த்தும் எனக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய தொகையை கொள்ளையடித்து வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்தேன். சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்தை பார்த்து அதேபோல வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்தேன்" என்றார்.
இதனைதொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வங்கிக்குள் இவர் மட்டும்தான் உள்ளே வந்தாரா? வேறு யாரேனும் கூட்டாளிகளாக உள்ளனரா என்றும் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து வாலிபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பனிமூட்டத்துக்கிடையே பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றனர்.
- கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த 15 நாட்களாக கடும் குளிருடன் உறைபனி பொதுமக்களை வாட்டி எடுத்தது. கொடைக்கானல் நகர் மற்றும் மலைப்பகுதி கிராமங்களில் கடும் உறைபனி நிலவியதால் பொதுமக்களின் அன்றாடப்பணிகள் பாதிப்படைந்தது.
அதிகாலை நேரங்களில் விவசாய பணிகளுக்கு செல்ல முடியாத விவசாயிகள் கடுமையான இன்னலுக்கு ஆளாகி வந்தனர். மாலை நேரங்களில் சுற்றுலா பயணிகள் அறைகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. ஏரிச்சாலை பகுதியில் கடும் உறைபனி நிலவியதால் காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. முழுமையான பனிமூட்டம் நிலவியது.
இதன் காரணமாக இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மாலை வேளையில் திடீர் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. விட்டு விட்டு பெய்த சாரல் மழை இரவு 12 மணி வரை நீடித்தது. இதன் காரணமாக உறைபனி சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்னும் ஓரிரு நாட்கள் மழை தொடர்ந்தால் பனிக்காலம் குறைந்து இதமான சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்றும் காலையில் வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் காலை நேரங்களில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றனர்.
பனிமூட்டத்துக்கிடையே பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றனர். பனிக்காலம் ஓரளவு குறைந்தாலும் கடும் பனிமூட்டமும், சாரல் மழையும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது.
இருந்தபோதும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
- ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.21.25 கோடி மதிப்பீட்டில் காந்தி மார்கெட் புதிய காய்கனி வளாகம் கட்டுமான பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
- பேரூராட்சி, ஊராட்சி, ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கென ரூ.1000 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் தமிழக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டு, வரும் 31-ந் தேதி அதற்கான டெண்டர் விடப்படுகிறது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.21.25 கோடி மதிப்பீட்டில் காந்தி மார்கெட் புதிய காய்கனி வளாகம் கட்டுமான பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒட்டன்சத்திரம் பகுதியில் காய்கறி உற்பத்தி அதிகமான பகுதியாக உள்ளது. தினசரி 1000 டன் முதல் 1500 டன் வரை காய்கறி வியாபாரம் நடைபெறுகிறது. மேலும், இப்பகுதியில் காய்கறி விலை குறைவாக உள்ள சமயங்களில் அவைகளை சேமித்து வைக்கும் விதமாக ரூ.5 கோடி மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்கு கட்டப்பட்டு வருகிறது.
தொழிற்பயிற்சி நிலையத்திற்கென ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்படவுள்ளது. மேலும், ஒட்டன்சத்திரம் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் ரூ.2 கோடி மதிப்பீட்டிலும், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ரூ.3 கோடி மதிப்பீட்டிலும் கட்ட ப்படவுள்ளது. விருப்பாட்சி பகுதியில் போக்குவரத்து பணி மனை கட்டப்படவுள்ளது.
ஒட்டன்சத்திரம் மற்றும் இப்பகுதியில் உள்ள பேரூராட்சி, ஊராட்சி, ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கென ரூ.1000 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் தமிழக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டு, வரும் 31-ந் தேதி அதற்கான டெண்டர் விடப்படுகிறது. பணிகள் 15 மாத காலத்திற்குள் முடிவடையும்.
இதற்கென புதிய 20 மீட்டர் உயரம் கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் நமது பகுதி மக்களுக்கு தினந்தோறும் குடிநீர் கிடைக்கும்.
மேலும், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் 3 இடங்களில் மக்கள் சாலைகளை கடக்க லிப்ட் வசதியுடன் நடைமேடை பாதை அமைக்கப்படும். ஒட்டன்சத்திரம் நகராட்சியை குப்பையில்லா நகராட்சியாக மாற்றும் வகையில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் குப்பை கிடங்கு அமைப்பட்டு குப்பைகள் தரம் பிரிக்கப்படவுள்ளது.
மேலும் இங்கு பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் ரூ.12 கோடியில் நடைபாதை பூங்கா அமைக்கப்படவுள்ளது. இந்த பகுதியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானமும் அமைக்கப்படவுள்ளது.
ஒட்டன்சத்திரம் பகுதியில் குற்றசெயல்களை தடுக்க அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படவுள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் 26 பணிகள் ரூ.47.65 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. 2451 எல்.இ.டி விளக்குகள் புதியதாக அமைக்கப்ப டவுள்ளது.
ஒட்டன்சத்திரம் அரசு பொது மருத்துவமனை ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர் திருமலைச்சாமி, நகர்மன்ற துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, ஒன்றியகுழு தலைவர் அய்யம்மாள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் சத்தியபுவனா ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கொடைக்கானல் மலைப்பகுதியில் சட்டவிரோதமாக வணிக பயன்பாட்டிற்காக பாறைகள், மலைக்குன்றுகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு வருகின்றன.
- குறிப்பாக வெடி வைத்து பாறைகள் உடைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக வணிக பயன்பாட்டிற்காக பாறைகள், மலைக்குன்றுகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு வருகின்றன. பிரதான நெடுஞ்சாலைகளில் கடைகள் அமைத்து சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கொடைக்கானல் ஆர்.டி.ஓ ராஜா கூறியதாவது, கொடைக்கானல் மலைப்பகுதியில் பாறைகள் உடைக்க அனுமதி கிடையாது. குறிப்பாக வெடி வைத்து பாறைகள் உடைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் மற்றும் வில்பட்டி பகுதிகளில் பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்படுவதாக தெரிகிறது.
இந்த பகுதிகளை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை அடுத்து சுரங்க துறையினர் மூலம் இந்தப் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதேபோல கொடைக்கானல் நெடுஞ்சாலை துறை பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்துள்ளவர்கள் தாமாக முன்வந்து கடைகளை அகற்றாவிடில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு இந்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
- 18வது கொண்டை ஊசி வளைவில் பஸ் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே காட்டு மாடு திடீரென புகுந்தது.
- விபத்து நடந்த இடத்தில் சிறுமலை பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் பொதுமக்களை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலையில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளன. இங்கு வேலை செய்ய திண்டுக்கல் மற்றும் கிராமங்களில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் பணிக்கு சென்று வருகின்றனர்.
இன்று அதிகாலையில் 18 பயணிகளுடன் அரசு பஸ் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சிறுமலை நோக்கி சென்றது. பஸ்சை தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த விஜயகுமார் (40) என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக திண்டுக்கல் கள்ளிபட்டியை சேர்ந்த சேகர் இருந்தார்.
திண்டுக்கல்லில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்த நிலையில் சிறுமலை பகுதி முழுவதும் கடும் பனி மூட்டம் நிலவியது.
18வது கொண்டை ஊசி வளைவில் பஸ் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே காட்டு மாடு திடீரென புகுந்தது. இதனால் டிரைவர் பஸ்சை ஓரமாக திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை மீட்க ஓடி வந்தனர்.
பஸ்சுக்குள் சிக்கி இருந்தவர்களை அவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 2 ஆம்புன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த வெங்கடேஷ் (40), சிறுமலை தென்மலையை சேர்ந்த பழனியம்மாள் (65), பாஸ்கரன் (62), கார்த்திக் (26), கணேசன் (67), ஒய்.எம்.ஆர். பட்டியை சேர்ந்த கோபால் (40) ஆகியோர் உள்பட 14 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் சிறுமலை பஞ்சாயத்து தலைவர் சங்கீதா வெள்ளி மலை, கிராம நிர்வாக அதிகாரி வசந்தகுமார் ஆகியோர் பொதுமக்களை அழைத்து சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
- 3 நாட்களில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர்.
பழனி முருகன் கோவிலில், வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால், இந்த விழா பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசிக்க பக்தர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். அதில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. அவர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 18-ந்தேதி ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது. 20-ந்தேதி வரை 3 நாட்களில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர். பின்னர் விண்ணப்பித்தவர்களில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குலுக்கல் முறையில் கடந்த 21-ந்தேதி தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வான 2 ஆயிரம் பேருக்கு செல்போன் எண், இமெயிலில் இ-சான்றிதழ் அனுப்பப்பட்டது. மேலும் அவர்கள் 23, 24-ந்தேதிகளில் பழனி ஆர்.எப்.ரோட்டில் உள்ள கோவில் வேலவன் விடுதியில் அடையாள சான்றுடன் வந்து, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிச்சீட்டை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி நேற்று காலை 10 மணி முதல் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள தேர்வான பக்தர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொள்ள தேர்வானவர்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் இருந்தனர். இதனால் காலையிலேயே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அனுமதிச்சீட்டை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
இந்த அனுமதிச்சீட்டில் வரிசை எண், நேரம், நாள், எங்கு அமர வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் கோவிலின் 'ஹோலோகிராம்' முத்திரை இருந்தது.
- 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
- 12 வித மூலிகை குச்சிகளை கொண்டு முதற்கால யாக பூஜை நடந்தது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனியில் முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கிறார். கோவில் மூலவர் சிலை பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் பெருமானால் பல மூலிகைகளை கொண்டு தயாரித்த நவபாஷணத்தால் செய்யப்பட்டது.
மிகவும் பிரசித்தி பெற்ற பழனி முருகப்பெருமானை தரிசிக்க உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்தநிலையில் பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கடந்த 18-ந்தேதி பூர்வாங்க பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
இதையொட்டி கடந்த மாதம் 25-ந்தேதி முகூர்த்தக்கால்கள் நடப்பட்டன. அன்றைய தினம் ராஜகோபுரம், உபசன்னதி கோபுரங்களில் கலச ஸ்தாபனம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 21-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கஜ, பரி, ஆநிரை பூஜைகள் நடந்தது. மேலும் மிராஸ் பண்டாரத்தார், அர்ச்சகர்கள் சார்பில் சண்முகநதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
இதற்கிடையே கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் நேற்று மாலை 5 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்கியது. முன்னதாக புண்ணியாக வாஜனம், கலசபூஜை நடந்தது. அதையடுத்து விநாயகர் பூஜை, விதை தெளித்தல், நறும்புகை, படையல், தீபாராதனை, நெய்வேத்தியம் நடைபெற்றது.
பின்னர் சிவன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்று மங்கல நாண் அணிதல் வழிபாடு நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமான் எழுந்தருளும் பொருட்டு ஐந்துவகை நூல் சுற்றி, பட்டாடை உடுத்தி சந்தனத்தால் கலசம் அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும் ஆனந்தவிநாயகர், கைலாசநாதர், மலைக்கொழுந்து அம்மன், மலைக்கொழுந்தீஸ்வரர், சண்முகர், வள்ளி-தெய்வானை, சின்னக்குமாரர், மூலவர் தண்டாயுதபாணி சுவாமி, தங்கவிமானம், ராஜகோபுரம், சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய கலசங்கள் பாரவேல் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.
அதன்பிறகு மூலவர் சன்னதியில் அருட்சக்தியை கலசத்தில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா', 'வீரவேல் முருகனுக்கு அரோகரா', 'ஞான தண்டாயுதபாணிக்கு அரோகரா' என சரண கோஷம் எழுப்பினர். மேலும் மலர்களை தூவி வழிபட்டனர். பின்னர் கலசங்கள் உட்பிரகாரம் வலம்வந்து பாரவேல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் பாரவேல் மண்டபத்தில் சிறப்பு பூஜையில் வைக்கப்பட்ட ஆனந்தவிநாயகர், கைலாசநாதர் உள்ளிட்ட சக்தி கலசங்களுடன் மூலவர் கலசம் யாகசாலைக்கு புறப்பாடு நடந்தது. பின்னர் மங்கல இசையுடன் யாகசாலையில் அங்கரிக்கப்பட்ட கும்ப மேடையில் கலசங்கள் வைத்து பூஜைகள் தொடங்கியது. பின்னர் விதை, வேர், இலை, தண்டு, பூ, காய், கனி, கிழங்கு, வாசனை திரவியங்கள், அறுசுவை சோறு, பலகாரம், சுண்டல், பாயாசம், பால், தயிர், தேன், நெய், 12 வித மூலிகை குச்சிகளை கொண்டு முதற்கால யாக பூஜை நடந்தது. பின்னர் மூலவர் கலசம் மற்றும் அலங்கரிக்கப்பட்ட முருகனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருமறை, சைவ ஆகமம், கட்டியம், கந்தபுராணம் ஆகியவை பாடப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
முன்னதாக கும்பாபிஷேகத்தையொட்டி சூரியனில் இருந்து அக்னி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக சூரியக்கதிர்கள் குவிக்கப்பட்டு அக்னி எடுக்கப்பட்டது. பின்னர் எடுக்கப்பட்ட அக்னி கோவிலில் உலா வந்து யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து யாகத்தில் அக்னி இடப்பட்டது. பின்னர் நெய்வேத்தியம், தீபாராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேக யாகசாலை பூஜை நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள், கும்பாபிஷேக உபயதாரர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
- வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
- நெல்லை சுந்தர் மீது 10க்கும் மேற்பட்ட கொலை, திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் தென்னம்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். வெல்லமடை பிரிவு அருகே சந்தேகத்திற்கிடமாக சிலர் நின்று கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களை நோக்கி சென்றபோது சிலர் தப்பி ஓட முயன்றனர். இதனால் மேலும் சந்தேகம் அடைந்து போலீசார் அவர்களை விரட்டி சென்று 3 பேரை சுற்றி வளைத்தனர்.
விசாரணையில் நெல்லை சுத்தமல்லியை சேர்ந்த பிரபல ரவுடி சுந்தர் (வயது31), வடமதுரை அருகே உள்ள பிலாத்து கிராமத்தை சேர்ந்த ரமேஷ்குமார் (34) மற்றும் நல்லாண்டவர் (29) என தெரிய வந்தது.
இவர்கள் வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
ஆனால் போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. நெல்லை சுந்தர் மீது 10க்கும் மேற்பட்ட கொலை, திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இவரை போலீசார் தேடி வந்த நிலையில் இங்கு தனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதேபோல் பிலாத்து பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தன்னை பத்திரிகையில் பணிபுரிவதாக கூறிக்கொண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.
தப்பி ஓடிய 4 பேர் யார்? என்பது குறித்தும், அவர்கள் எங்கு பதுங்கி உள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிபட்ட 3 ரவுடிகளிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து இவர்கள் தொடர்பில் உள்ள ரவுடிகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு திண்டுக்கல் சிறையில் எதிரிகள் இருக்கலாம் என்பதால் அவர்கள் தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த கும்பல் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- முறையான பராமரிப்பு இல்லாததாலும் பனியின் தாக்கத்தாலும் ரோஜா செடிகள் அனைத்தும் கருகி வருகிறது. மேலும் நுழைவுக் கட்டணம் செலுத்தி உள்ளே செல்லும்போது மலர்கள் இன்றி பாலைவனம் போல் இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- மேலும் பனிப்பொழிவு அதிகமான நேரங்களில் மலர் செடிகளை பசுமை போர்வைகளை கொண்டு மூடி பனியின் தாக்கத்தால் மலர் செடிகள் பாதிப்படையாமல் பாதுகாத்து பராமரிக்க வேண்டும். இது போன்ற சமயங்களில் நுழைவுக் கட்டணத்தை குறைத்தால் நன்றாக இருக்கும் எனவும் சுற்றுலாப் பயணிகள் அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் பிரையண்ட் பூங்காவுக்கு அடுத்தபடியாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக புதிதாக திறக்கப்பட்ட ரோஜா பூங்கா உள்ளது. தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோஜா பூங்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் இருந்து வந்தது.
தற்போது பனியின் தாக்கத்தாலும் முறையான பராமரிப்பு இல்லாததாலும் பூங்காவில் மலர்கள் இன்றி காணப்படுகிறது. இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மலர்கள் இன்றி காய்ந்த செடிகளை கண்டு பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும் முறையான பராமரிப்பு இல்லாததாலும் பனியின் தாக்கத்தாலும் ரோஜா செடிகள் அனைத்தும் கருகி வருகிறது. மேலும் நுழைவுக் கட்டணம் செலுத்தி உள்ளே செல்லும்போது மலர்கள் இன்றி பாலைவனம் போல் இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இப்பகுதியில் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி. செயல்பாடு இல்லாமல் உள்ளதால் குற்றங்கள் நடைபெறுவதற்கு ஏதுவாக ரோஜா பூங்கா அமைந்துள்ளது. மேலும் பனிப்பொழிவு அதிகமான நேரங்களில் மலர் செடிகளை பசுமை போர்வைகளை கொண்டு மூடி பனியின் தாக்கத்தால் மலர் செடிகள் பாதிப்படையாமல் பாதுகாத்து பராமரிக்க வேண்டும். இது போன்ற சமயங்களில் நுழைவுக் கட்டணத்தை குறைத்தால் நன்றாக இருக்கும் எனவும் சுற்றுலாப் பயணிகள் அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
மக்களின் மனம் கவர்ந்து வந்த ரோஜாபூங்கா தற்போது மலர்கள் இன்றி பாலைவனம் போல் இருப்பதால் உரிய பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
திண்டுக்கல்
கொசவபட்டி, செங்குறிச்சி துணைமின் நிலையங்களில் நாளை (24-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே கொசவபட்டி, செம்மடைப்பட்டி, கொழிஞ்சிப்பட்டி, தொட்டியபட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, வஞ்சம்பட்டி, ராகலாபுரம், தவசிமடை, நொச்சிஓடைப்பட்டி, குரும்பபட்டி, கவராயப்பட்டி, கூவனூத்தூர், ராஜக்காபட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, செங்குறிச்சி, கம்பிளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- யாகசாலை பூஜைகள் நாளை தொடங்குகிறது.
- கும்பாபிஷேகம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இங்கு பக்தர்கள் அனுதிக்காக இந்துஅறநிலையத்துறை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 51295 பக்தர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
பழனி கோவில் அலுவலகத்தில் நேற்று குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது. அதில் 2000 பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்ய தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டன. குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் தகவலுடன் அடையாள அட்டையை காண்பித்து கோவில் அலுவலகத்தில் நாளைக்குள் கும்பாபிஷேக அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தை யொட்டி பழனி கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு 90 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. கார்த்திகை மண்டபத்தில் நாளை(23-ந்தேதி) யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. இதையொட்டி அடிவாரம் பாதவிநாயகர் கோவில் முதல் பரிவார தெய்வங்கள் என அனைத்திற்கும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய தீர்த்தகுடங்கள் அலங்கரிக்கப்பட உள்ளன.
இவை மேளதாளங்களுடன் திருமுறை ஓதுதலோடு உலாவருகிறது. பின்னர் யாகசாலைக்கு செல்கிறது. அங்கு ஆதவன் வழிபாடு, மங்களஇசை, சூர்யகதிரிலிருந்து வேள்விக்கு நெருப்பு எடுத்தல் உள்பட பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதனைதொடர்ந்து முதல் கால யாகபூஜை தொடங்குகிறது. சிறப்பு பூஜை, விதை, தண்டு, இலை, காய்கனி, வாசனை திரவியங்கள், அறுசுவை சாதம், பால்,தயிர், சுண்டல், 12 விதமான மூலிகை குச்சிகளால் வேள்வி நடைபெறுகிறது.
பாதயாத்திரை பக்தர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். மலைக்கோவிலில் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- பழனி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாள் முழுவதும் அன்னதான திட்டம் அடிவாரம் கிரிவீதியில் 3 இடங்களில் நடைபெறும்.
பழனி:
பழனி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது,
பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்ய அனுமதி பெற்ற பக்தர்கள் 39 இடங்களில் தனித்தனியாக அனுமதிக்கப்படுவார்கள். தலா 500 பக்தர்கள் ரோப்கார் மற்றும் மின்இழுவை ரெயில் மூலம் அனுமதிக்கப்படுவார்கள்.
மற்ற பக்தர்கள் யானைப்பாதை வழியாக மலைக்கோவில் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாள் முழுவதும் அன்னதான திட்டம் அடிவாரம் கிரிவீதியில் 3 இடங்களில் நடைபெறும். மலைக்கோவில் அடிவாரம் முதல் பஸ்நிலையம் வரை 10 எல்.இ.டி திரைகள், 16 டி.வி திரைகள் வைக்கப்படும். கண்காணிப்பு காமிரா எச்சரிக்கை, வழிகாட்டும் பலகைகள் அதிகளவில் வைக்கப்பட உள்ளது.
பஸ்கள் புறநகர் பகுதியிலும், அங்கிருந்து பக்தர்கள் பஸ்ஸ்டாண்டு பகுதிக்கு வந்து செல்ல இலவச அரசு பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட கலெக்டர் விசாகன், ஐ.ஜி.அஷ்ராகார்க், டி.ஜ.ஜி அபினவ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கோவில் இணை ஆணையர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






