search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடக்கம்
    X

    பழனி கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை பூஜை நடந்தபோது எடுத்த படம்.

    பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடக்கம்

    • 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • 12 வித மூலிகை குச்சிகளை கொண்டு முதற்கால யாக பூஜை நடந்தது.

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனியில் முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கிறார். கோவில் மூலவர் சிலை பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் பெருமானால் பல மூலிகைகளை கொண்டு தயாரித்த நவபாஷணத்தால் செய்யப்பட்டது.

    மிகவும் பிரசித்தி பெற்ற பழனி முருகப்பெருமானை தரிசிக்க உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்தநிலையில் பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கடந்த 18-ந்தேதி பூர்வாங்க பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    இதையொட்டி கடந்த மாதம் 25-ந்தேதி முகூர்த்தக்கால்கள் நடப்பட்டன. அன்றைய தினம் ராஜகோபுரம், உபசன்னதி கோபுரங்களில் கலச ஸ்தாபனம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 21-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கஜ, பரி, ஆநிரை பூஜைகள் நடந்தது. மேலும் மிராஸ் பண்டாரத்தார், அர்ச்சகர்கள் சார்பில் சண்முகநதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.

    இதற்கிடையே கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் நேற்று மாலை 5 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்கியது. முன்னதாக புண்ணியாக வாஜனம், கலசபூஜை நடந்தது. அதையடுத்து விநாயகர் பூஜை, விதை தெளித்தல், நறும்புகை, படையல், தீபாராதனை, நெய்வேத்தியம் நடைபெற்றது.

    பின்னர் சிவன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்று மங்கல நாண் அணிதல் வழிபாடு நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமான் எழுந்தருளும் பொருட்டு ஐந்துவகை நூல் சுற்றி, பட்டாடை உடுத்தி சந்தனத்தால் கலசம் அலங்காரம் செய்யப்பட்டது.

    மேலும் ஆனந்தவிநாயகர், கைலாசநாதர், மலைக்கொழுந்து அம்மன், மலைக்கொழுந்தீஸ்வரர், சண்முகர், வள்ளி-தெய்வானை, சின்னக்குமாரர், மூலவர் தண்டாயுதபாணி சுவாமி, தங்கவிமானம், ராஜகோபுரம், சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய கலசங்கள் பாரவேல் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.

    அதன்பிறகு மூலவர் சன்னதியில் அருட்சக்தியை கலசத்தில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா', 'வீரவேல் முருகனுக்கு அரோகரா', 'ஞான தண்டாயுதபாணிக்கு அரோகரா' என சரண கோஷம் எழுப்பினர். மேலும் மலர்களை தூவி வழிபட்டனர். பின்னர் கலசங்கள் உட்பிரகாரம் வலம்வந்து பாரவேல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் பாரவேல் மண்டபத்தில் சிறப்பு பூஜையில் வைக்கப்பட்ட ஆனந்தவிநாயகர், கைலாசநாதர் உள்ளிட்ட சக்தி கலசங்களுடன் மூலவர் கலசம் யாகசாலைக்கு புறப்பாடு நடந்தது. பின்னர் மங்கல இசையுடன் யாகசாலையில் அங்கரிக்கப்பட்ட கும்ப மேடையில் கலசங்கள் வைத்து பூஜைகள் தொடங்கியது. பின்னர் விதை, வேர், இலை, தண்டு, பூ, காய், கனி, கிழங்கு, வாசனை திரவியங்கள், அறுசுவை சோறு, பலகாரம், சுண்டல், பாயாசம், பால், தயிர், தேன், நெய், 12 வித மூலிகை குச்சிகளை கொண்டு முதற்கால யாக பூஜை நடந்தது. பின்னர் மூலவர் கலசம் மற்றும் அலங்கரிக்கப்பட்ட முருகனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருமறை, சைவ ஆகமம், கட்டியம், கந்தபுராணம் ஆகியவை பாடப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    முன்னதாக கும்பாபிஷேகத்தையொட்டி சூரியனில் இருந்து அக்னி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக சூரியக்கதிர்கள் குவிக்கப்பட்டு அக்னி எடுக்கப்பட்டது. பின்னர் எடுக்கப்பட்ட அக்னி கோவிலில் உலா வந்து யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து யாகத்தில் அக்னி இடப்பட்டது. பின்னர் நெய்வேத்தியம், தீபாராதனை நடைபெற்றது.

    கும்பாபிஷேக யாகசாலை பூஜை நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள், கும்பாபிஷேக உபயதாரர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×