என் மலர்
திண்டுக்கல்
- கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
- பழனிக்கு ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி, ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதற்கிடையே கும்பாபிஷேகத்தையொட்டி மூலவர் தரிசனம் இல்லை என்பதால் பக்தர்கள் வருகை குறைந்தது.
இந்தநிலையில் கும்பாபிஷேகம் முடிந்ததாலும், தைப்பூச திருவிழா தொடங்க உள்ளதாலும் தற்போது பழனிக்கு மீண்டும் பக்தர்கள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர். அதன்படி, நேற்று பழனிக்கு ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். குறிப்பாக கோவை, சேலம், திருப்பூர், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பழனிக்கு அதிக அளவில் வந்தனர். அதேபோல் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்தனர்.
அவ்வாறு வந்த பக்தர்களில் ஏராளமானோர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து முருகப்பெருமானை வழிபட்டனர். முன்னதாக கிரிவீதி, வெளிப்பிரகாரத்தில் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் ஒரே வழியில் சென்று சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 3-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
- 4-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருகை தருவார்கள். அதேபோல் ஏராளமான பக்தர்கள் பஸ், ரெயில்களிலும் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.
இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா, பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், முதல் நாளன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து கொடிபூஜை, வாத்திய பூஜை நடைபெற்று கொடியேற்றம் நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு மேல் உச்சிக்கால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவார பாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறுகிறது.
தைப்பூச திருவிழாவையொட்டி தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி வீதிஉலா நடக்கிறது. அதேபோல் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது. திருவிழாவின் 6-ம் நாளான வருகிற 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்குமேல் வெள்ளிரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது.
மறுநாள் 4-ந்தேதி (சனிக்கிழமை) தைப்பூசம் அன்று அதிகாலையில் சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
வருகிற 7-ந்தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
- மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நாளை தொடங்குகிறது.
- வனச்சரகர்கள் தலைமையில் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு இப்பறவைகள் கணக்கெடுப்பு மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது.
திண்டுக்கல்:
தமிழ்நாடு அரசு வனத்துறை மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நாளை தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்ட வனத்துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள ஈரநிலங்கள் அடங்கிய 20 குளங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வனச்சரகர்கள் தலைமையில் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு இப்பறவைகள் கணக்கெடுப்பு மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது.
ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட பாச்சலூர் அணை, நல்லதங்காள் ஓடை, கரைமாரியம்மன் குளம் ஆகிய ஈரநிலங்களில் இப்பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. உலகின் பல்வேறு ஈரநிலங்களை வாழ்வாதாரமாக கொண்டுள்ள நீர்பறவைகள், கரையோர பறவைகள் , நன்னீர்மீன்கள், தவளைகள், வண்ணத்துபூச்சிகள் என பல்வேறு உயிரினங்களின் வாழிட சிக்கல்களை அறிந்து கொள்ளவும், இப்பறவைகள் கணக்கெடுப்பு உதவுகிறது.
மிக முக்கியமாக பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவலை கொண்டே ஈரநிலங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்று அறியப்படுகிறது. அதுவும் வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவலில் இருந்தே இந்திய ஈரநிலை பறவைகளின் வாழ்நிலையை அறிய முடியும். அதற்கேற்ப பறவைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்கவும் முடியும்.
மனிதர்கள் இன்றி பறவைகள் வாழ்ந்திட முடியும். ஆனால் பறவைகள் இன்றி மனிதனால் வாழவே முடியாது. எனும் பறவையியல் அறிஞர் சாலின்அலியின் கருத்தை ஏற்று இந்திய ஈரநில பறவைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஒன்றான இப்பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- 29-ம்தேதி தைப்பூசத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடக்கிறது.
- இன்று மாலை சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது..
பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 18-ந் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. இதனையடுத்து மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதனையடுத்து மூலவர் சன்னதி மூடப்பட்டு கலசங்களில் ஆஹாகனம் செய்யப்பட்ட முருகன் யாகசாலை பூஜையில் ராஜஅலங்காரத்தில் எழுந்தருளினார்.
இதனையடுத்து பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய முடியாமல் யாகசாலையில் எழுந்தருளிய முருகப்பெருமானை மட்டும் தரிசனம் செய்து சென்றனர். இன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 5.40 மணிக்கு மூலவர் சன்னதி திறக்கப்பட்டது.
இதனையடுத்து விநாகயகர் பூஜையுடன் தொடங்கி மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பின் மூலவருக்கு தங்கத்தால் புதிய வேல் சாற்றப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. ராஜகோபுரம், தங்ககோபுரம், கைலாசநாதர், மலைக்கொழுந்து அம்மன், மலைக்கொழுந்து சிவன், போகர் சன்னதி, சண்முகர் சன்னதி, பள்ளியறை, சின்னக்குமாரர் ஆகிய 9 சன்னதிகளுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன் பின் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மூலவரை தரிசனம் செய்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் பழனியில் விடுதியில் தங்கி காத்திருந்தனர்.
அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்துக்கு குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு பக்தர்கள் அனைவரும் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரெயில், ரோப்கார் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை பழனி மலைக்கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் தைப்பூசத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற உள்ளதால் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி நடந்து வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக குறைவாக காணப்பட்ட பக்தர்கள் கூட்டம் மீண்டும் அதிகரித்து வருகிறது.
- கொடைக்கானலில் மாணவிகளுக்கு தற்கொலை செய்யும் எண்ணங்களிலிருந்து விடுபடவும், மன அழுத்த ங்களில் இருந்து பாதுகாக்க வும் பயிற்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
- கொடைக்கானல் நீதிபதி தலைமை தாங்கி மாணவிகளுடன் கலந்துரையாடி பயிற்சிகளை வழங்கினார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வட்ட சட்டப் பணிகள் அமைப்பின் சார்பில் கொடைக்கானல் செயின்ட் ஜான்ஸ் பெண்கள் மேல்நிலை ப்பள்ளி மாணவிகளுக்கு தற்கொலை செய்யும் எண்ணங்களிலிருந்து விடுபடவும், மன அழுத்த ங்களில் இருந்து பாதுகாக்க வும் பயிற்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
கொடைக்கானல் நீதிபதி கார்த்திக் தலைமை தாங்கி மாணவிகள் தற்கொலை எண்ணம், மன அழுத்தத்திலி ருந்து விடுபட பல்வேறு உதாரணங்களை மேற்கோள் காட்டி பயிற்சிகள் வழங்கினார். நீதிமன்றம் மாணவிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் பேசினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். டாக்டர் மார்க்கண் பாலாஜி மாணவிகளுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள், அதற்கான காரணங்கள், மருத்துவ ரீதியில் இவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் பேசினார்.
கொடைக்கானல் வக்கீல்கள், ஆசிரியர்கள், செயின்ட் ஜான்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லூர்து மேரி, நீதிமன்ற பணி யாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 200-க்கும் அதிகமான மாணவிகள் கலந்து கொண்டுபயிற்சி பெற்றனர்.
- பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
- நேற்று இரவு முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவியத் தொடங்கினர்.
முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 வருடங்களுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 25-ந் தேதி நடந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த 18-ந் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் 94 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான படிப்பாதை பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று மலைக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 4.30 மணிக்கு 8ம் கால வேள்வியுடன் தொடங்கி திருக்குட நன்னீராட்டுப்பெருவிழா, மங்கள இசை, முதல்நிலை வழிபாடு, ஐங்கரன் வழிபாடு, சந்திரன் வழிபாடு, நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பெருநிறை வேள்வி, நறும்புகை விளக்கு, படையல், திருஒளி வழிபாடு, வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், காவியம், கட்டியம், கந்தபுராணம், திருஒளி வழிபாடு, பன்னிரு திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது.
அதன் பின் காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் புறப்பாடாகி ராஜகோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், பரமாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது கூடி இருந்த பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து ராஜகோபுரம் மீதும் பக்தர்கள் மீதும் மலர்கள் தூவப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதிகளுக்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்த 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இவை தவிர போலீசார், அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட 4 ஆயிரம் பேர் என மொத்தம் 6 ஆயிரம் பேர் மட்டுமே கும்பாபிஷேகத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மற்ற பக்தர்களுக்கு 16 இடங்களில் அகண்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு சிரமம் இன்றி கும்பாபிஷேகத்தை நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்று இரவு முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவியத் தொடங்கினர். அவர்கள் அடிவாரம், கிரி வீதி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த எல்.இ.டி. திரை முன்பு அமர்ந்து கும்பாபிஷேகத்தை கண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர். பக்தர்கள் வசதிக்காக 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தன. அந்த பஸ்கள் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து பழனி கோவில் வரை இயக்கப்பட்டது. கூட்ட நெரிசலை கண்காணிக்க ஹெலிகேம் பறக்க விடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி நகரில் பிறநகர் பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
முக்கிய இடங்களில் 300 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 7 கண்காணிப்பு மையங்கள் மூலம் பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன், இணை ஆணையர் நடராஜன், நீதிபதிகள், அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- நாளை ராஜகோபுரத்தில் குடமுழுக்கு நடக்கிறது.
- இன்று பக்தர்களுக்கும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நாளை 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 16-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் 90 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 300 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்கி வருகின்றனர். நேற்று 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை பழனி கோவில் படிப்பாதை மற்றும் உபசன்னதிகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காலை பாதவிநாயகர் கோவில், இடும்பன், கதம்பன், கிரிவீதியில் உள்ள 5 மயில்கள், படிப்பாதையில் உள்ள சேத்ரபாலகர், சண்டிகாதேவி, விநாயகர், குராவடிவேலர், அகஸ்தியர், சிவகிரிஸ்வரர், வள்ளிநாயகி, வேலாயுதசாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருக்குடஞானதிருவுலாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பக்தர்களுக்கும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
பழனி மலைக்கோவிலில் ராஜகோபுரம் உள்பட பிற சன்னதிகளில் நாளை காலை 8 மணிமுதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகத்தை காண 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மலைக்கோவிலுக்கு வரமுடியாத பக்தர்கள் கீழே இருந்து கும்பாபிஷேகத்தை காண வசதியாக அடிவாரம், கிரிவீதிகள், பஸ்நிலையம் உள்பட 18 இடங்களில் அகண்ட எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மலைக்கோவிலில் கோபுர விமான தளத்திற்கு சென்று கும்பாபிஷேகத்தை பார்க்க முடியாதவர்கள் பிரகாரத்தில் இருந்தபடியே பார்க்கவும் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டும், தைப்பூச விழாவை முன்னிட்டும் மதுரை-பழனி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இன்றும், நாளையும், பிப்ரவரி 3,4,5-ந்தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பழனி வந்து சேரும், மறு மார்க்கத்தில் பழனியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரையை வந்து சேரும்.
இந்த ரெயில் சோழவந்தான், கொடைரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரெயில்நிலையங்களில் நின்றுசெல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
பழனி கோவிலில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கண்ணன், கலெக்டர் விசாகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
கும்பாபிஷேகத்திற்கு அதிகளவு பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கோவில் மற்றும் பழனி நகருக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது, தற்காலிக பஸ்நிலையத்திலிருந்து இலவசமாக பஸ்களை இயக்குவது, டிரைவர்கள், கண்டக்டர்களை 3 சிப்டுகளாக பிரித்து இயக்குவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. தீயணைப்புத்துறையினர், மருத்துவக்குழுவினர் ஆகியோர் தயார் நிலையில் இருக்கவும், பழனி அரசு தனியார் ஆஸ்பத்திரிகளில் போதுமான மருந்துகள் இருப்பு வைக்கவும், ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம், அடிவாரப்பகுதிகளில் போதுமான ஆம்புலன்சுகளை நிறுத்தி வைக்கவும் அறிவுறுத்தினர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 3 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேகத்திற்கு மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வழிகாட்டி பலகைகள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளது.
நகரில் சேரக்கூடிய குப்பைகளை உடனுக்குடன் சேகரித்து அப்புறப்படுத்த தூய்மை பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பழனி பகுதியில் டிரோன்கள் பறக்க போலீசார் தடைவிதித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன், செந்தில்குமார் எம்.எல்.ஏ, அறங்காவலர் குழுதலைவர் சந்திரமோகன், கோவில் இணைஆணையர் நடராஜன், சுதர்சன், பாரதி, சுரேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வருகின்றன.
- பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு முருகப்பெருமான் மலை மீது தண்டாயுதபாணியாக காட்சி அளித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சிறப்பு வாய்ந்த பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் பழனி முருகன் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தையொட்டி நாளை காலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. பின்னர் காலை 7.15 மணிக்கு பெருநிறை வேள்வி, தீபாராதனை, கட்டியம், கந்தபுராணம், பன்னிரு திருமுறை விண்ணப்பம் ஆகியவை நடக்கிறது. காலை 8.15 மணிக்கு மங்கல இசையுடன் யாகசாலையில் இருந்து சக்தி கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து தேவாரம் பன்னிசை, திருப்புகழ் பாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமியின் ராஜகோபுரம், தங்கவிமானத்தில் உள்ள கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
அதன்பிறகு 8.45 மணிக்கு மலைக்கோவிலில் உள்ள தெய்வங்களின் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து காலை 9.15 மணிக்கு மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் மதியம் 12.05 மணிக்கு அன்னப்படையல், தீபாராதனை, திருமறை, சிவஆகமம், கட்டியம், கந்தபுராணம், திருமுறை விண்ணப்பம் பாடப்படுகிறது.
16 ஆண்டுகளுக்கு பிறகு பழனியில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
மேலும் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு போலீஸ் சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- பழனி முருகன் கோவிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடக்கிறது.
- இன்று 3, 4-ம் கால யாக பூஜைகள் நடைபெறுகிறது.
பழனி முருகன் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி பூர்வாங்க பூஜைகள், கலச ஸ்தாபனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து கோவிலில் சிறப்பு யாகம், பூஜைகள் நடந்து வருகிறது.
கடந்த 23-ந்தேதி மலைக்கோவிலில் உள்ள மூலவர் தண்டாயுதபாணி சுவாமி மற்றும் பாதவிநாயகர் கோவில் முதல் படிப்பாதையில் உள்ள இடும்பன், கடம்பன், அகஸ்தியர், குராவடிவேலர் உள்ளிட்ட உபசன்னதிகளில் தெய்வங்களின் திருக்கலசம் அலங்கரிக்கப்பட்டு அருட்சக்தி கொணர்தல் நிகழ்ச்சி நடந்தது. அனைத்து தெய்வ சக்தி கலசங்களும் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து நேற்று 2, 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) 3, 4-ம் கால யாக பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் கலசங்களுக்கு சிறப்பு தீபாராதனை, நெய்வேத்தியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 9.50 மணிக்கு பாதவிநாயகர் கோவில் உள்ளிட்ட அனைத்து உபசன்னதிகளில் யாகம் நிறைவு பெறுகிறது.
பின்னர் உபசன்னதி தெய்வங்களின் சக்தி கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு திரு உலா நடக்கிறது. பின்னர் கிரிவீதிகளில் உள்ள 5 மயில் சிலை, பாதவிநாயகர், சேத்ரபாலர், படிப்பாதை விநாயகர் சன்னதிகள், இடும்பன், கடம்பன், அகஸ்தியர் என படிப்பாதையில் உள்ள அனைத்து உபசன்னதிகளின் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் கந்தபுராணம், திருப்புகழ், திருமுறை பாடி சிறப்பு வழிபாடு நடக்கிறது.
- வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை பெய்து வருகிறது.
- பல ஆண்டுகளாக நீர் கசிவு ஏற்பட்டிருந்த நிலையில் முறையாக பராமரிக்கப்படாததால் குளம் உடைந்து விளைநிலங்களுக்குள் நீர் புகுந்தது.
கொடைக்கானல்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி கிராமத்தில் பெய்த தொடர்மழையால் அங்குள்ள அறம்புள்ளிப்பாறை குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்தது.
ஏற்கனவே பல ஆண்டுகளாக நீர் கசிவு ஏற்பட்டிருந்த நிலையில் முறையாக பராமரிக்கப்படாததால் குளம் உடைந்து விளைநிலங்களுக்குள் நீர் புகுந்தது.
இதனால் வளர்ந்து வரும் பயிர்களும் அறுவடைக்கு தயாராக இருந்த பணப்பயிர்களும் அழிந்து நாசமானது.மேலும் கவுஞ்சி கிராமத்தை ஒட்டிய கிராமங்களில் உள்ள குளங்களை முறையாக பராமரிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அங்கும் இது போன்ற நிலைமை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். எனவே அனைத்து அணைகள் மற்றும் நீர் தேக்கங்களை சீரமைக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் பிரதான கோவிலான மலைக்கோவில் கும்பாபிஷேகம் 27-ந் தேதி நடைபெறுகிறது.
- திண்டுக்கல் மாவட்டத்திற்கு 27-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு மாவட்ட கலெக்டர் கடிதம் எழுதியிருந்தார்.
சென்னை:
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் பிரதான கோவிலான மலைக்கோவில் கும்பாபிஷேகம் 27-ந் தேதி நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வர இருப்பதால் 27-ந் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு அந்த மாவட்ட கலெக்டர் கடிதம் எழுதியிருந்தார். அவரது கோரிக்கையை அரசு ஏற்று, 27-ந் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) உள்ளூர் விடுமுறையை அறிவிக்க கலெக்டருக்கு அதிகாரத்தை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
- ஜல்லிக்கட்டு போட்டியை காண திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அறிவுரையின் பேரில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தாடிக்கொம்பு:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி முதன்முறையாக கடந்த 20-ந்தேதி கொசவபட்டியில் ஜல்லிகட்டு நடந்தது.
2-வது போட்டியாக திண்டுக்கல் அருகில் உள்ள உலகம்பட்டியில் புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிகோரப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்பேரில் இன்று போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்க 500 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.
மதுரை, திருச்சி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 காளைகள் வரவழைக்கப்பட்டது. மேலும் மாடுபிடி வீரர்களுக்கு 22பேர் கொண்ட மருத்துவ குழுவினர் உடல்பரிசோதனை செய்து போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
காளைகளை பரிசோதிக்க 25 பேர் கொண்ட மருத்துவகுழுவினர் வந்திருந்தனர். போட்டிகளை திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி எடுத்துகொண்டதற்கு பின் 25 பேர் கொண்ட குழுவாக மொத்தம் 15 பிரிவு பிரிக்கப்பட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.
வாடிவாசலை கடந்து துள்ளி குதித்து ஓடிவந்த காளைகளை வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். வெற்றிபெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், அண்டா, டி.வி, கடிகாரம், செல்போன், தங்கநாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியை காண திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அறிவுரையின் பேரில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த போட்டியில் 4 பார்வையாளர்கள் உள்பட மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள் என 15 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் பெரியதனக்காரர்கள் செய்திருந்தனர்.






