என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்த வண்ணம் உள்ளனர்.

    பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பழனி முருகன் கோவிலில் தை மாத கார்த்திகை உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜை நடைபெற்றது.

    இதையடுத்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரம், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 6 மணிக்கு கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 6.40 மணிக்கு தங்கமயில் வாகன புறப்பாடும், இரவு 7 மணிக்கு மேல் சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

    இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் தைப்பூச திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்த வண்ணம் உள்ளனர்.

    அதன்படி வடமதுரை, பொள்ளாச்சியை சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் கிரிவீதிகளில் ஆடி வந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இதேபோல் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பக்தர்கள் குழு பாரம்பரிய முறையில் மாட்டுவண்டிகளில் நேற்று பழனிக்கு வந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது, பாதயாத்திரை வருவது போல் நாங்கள் பல தலைமுறைகளாக மாட்டு வண்டிகளில் பழனிக்கு வந்து தரிசனம் செய்து செல்கிறோம். அதன்படி பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி நேற்று பழனி சண்முகநதிக்கு வந்தோம். அங்கு புனித நீராடிவிட்டு பழனிக்கு வந்து சேர்ந்தோம். பழனியில் சாமி தரிசனம் முடித்த பிறகு மீண்டும் மாட்டுவண்டியில் செல்வோம் என்றனர்.

    • கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மழை பெய்தது.
    • மழை நின்றவுடன் மீண்டும் கடும் பனி நிலவியது.

    கொடைக்கானல்:

    வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலை நிலவி வந்தது.

    இரவில் கடும் பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில் நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் பனியின் தாக்கம் சற்று குறைந்தபோதிலும் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மழை பெய்தது. மழை நின்றவுடன் மீண்டும் கடும் பனி நிலவியது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் சாரல் மழை தொடங்கி இரவு வரை நீடித்தது. மீண்டும் நள்ளிரவு முதல் பெய்த மழை இன்று காலையிலும் தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் இன்று காலை பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் சாரல் மழையில் நனைந்தபடியே சென்றனர். கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. பனிமூட்டத்துடன் பெய்து வரும் சாரல் மழையால் அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் 3, கொடைக்கானல் 3.6, பழனி 1.5, நிலக்கோட்டை 7, வேடசந்தூர் 7.8, பிரையண்ட் பூங்கா 6.2 என மாவட்டத்தில் 33.9 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • வடமதுரை அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் கடந்த பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
    • இளைஞர்கள், மாடுபிடி வீரர்களாக மாறி பல்வேறு ஊர்களுக்கு சென்று காளைகளை அடக்கி பரிசுகளை பெற்று வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகளால் சில கிராமங்களில் இதுபோன்ற விளையாட்டுகள் நடத்தப்படுவது குறைந்து வருகிறது. இருந்தபோதும் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் ஆர்வம் குறையவில்லை. ஏராளமானோர் இதுபோன்ற காளைகளை வளர்த்து மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க வைத்து வெற்றி வாகை சூடி வருகின்றனர்.

    ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இதுபோன்ற காளை வளர்ப்பில் மிகுந்த ஈடுபாடு செலுத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் கடந்த பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதே போல் இந்த கிராமத்தில் ஏறு தழுவுதல் என்ற நிகழ்ச்சியும் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆனால் இது போன்ற விளையாட்டுகள் தற்போது குறைந்து வருவது பழங்கால மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனை தற்கால இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இங்குள்ள கோவில் மற்றும் முக்கிய இடங்களில் சுவர் ஓவியமாக வரைந்துள்ளனர்.

    குறிப்பாக தாத்தையன் கோவிலில் ஏறு தழுவுதல் நிகழ்ச்சி தொடர்பான சுவர் ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. இது குறித்த வரலாறுகளை இப்பகுதி மக்கள் இளைஞர்களுக்கு எடுத்து கூறி காளைகள் வளர்ப்பதின் அவசியம் குறித்தும் நாட்டு மாடுகள் பாதுகாக்கப்படுவதின் அவசியம் குறித்தும் எடுத்து கூறி வருகின்றனர்.

    இதனால் இளைஞர்கள், மாடுபிடி வீரர்களாக மாறி பல்வேறு ஊர்களுக்கு சென்று காளைகளை அடக்கி பரிசுகளை பெற்று வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பல கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு தற்போது அரசின் கெடுபிடிகளால் நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையிலும் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டும், மாடுபிடி வீரர்களையும் உருவாக்குவதில் இந்த கிராமம் முன் உதாரணமாக விளங்கி வருகிறது.

    • தைப்பூசத்திருவிழா நெருங்கி வரும் நிலையில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர்.
    • பல்வேறு இடங்களில் சாலைகள் குறுகலாக இருப்பதாலும், நடந்து செல்ல முடியாத அளவுக்கு கற்கள் கொட்டிக் கிடப்பதாலும் பக்தர்கள் வாகனங்கள் செல்லும் சாலையிலேயே செல்கின்றனர்.

    திண்டுக்கல்:

    விருதுநகர் அருகே உள்ள சத்திரப்பட்டி அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது 45). இவர் பேண்டேஜ் துணி உற்பத்தி செய்யும் வேலை பார்த்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை தனது நண்பர்களுடன் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார்.

    நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது பக்தர்கள் கூட்டத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் புகுந்தது. இதில் அவர்கள் அனைவரும் சிதறி ஓடினர். ரெங்கராஜன் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரெங்கராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ரெங்கராஜன் உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தைப்பூசத்திருவிழா நெருங்கி வரும் நிலையில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர். பல்வேறு இடங்களில் சாலைகள் குறுகலாக இருப்பதாலும், நடந்து செல்ல முடியாத அளவுக்கு கற்கள் கொட்டிக் கிடப்பதாலும் பக்தர்கள் வாகனங்கள் செல்லும் சாலையிலேயே செல்கின்றனர்.

    இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் பல இடங்களில் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கப்படுவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பக்தர்கள் ஆபத்தான முறையில் பாத யாத்திரை செல்கின்றனர். போலீசார் இது போன்ற விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெருமாள் மலை பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியதால் அகற்றப்பட்டது.
    • தனியார் மதுபான விடுதி உள்ள நிலையில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் எனக்கோரி திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நகர் மற்றும் மேல்மலை, கீழ்மலை கிராம பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. பெருமாள் மலை பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியதால் அகற்றப்பட்டது.

    ஆனால் தற்போது அதே பகுதியில் தனியார் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடையைவிட இங்கு மதுபானங்கள் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் கூலித்தொழிலாளர்கள் அதிக விலை கொடுத்து மதுவாங்க சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பெருமாள்மலை பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தனியார் மதுபான விடுதி உள்ள நிலையில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் எனக்கோரி திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நேற்று தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனியில் 16 வருடங்களுக்கு பிறகு கடந்த 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் பெரும்பாலான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை நேரடியாக காண முடியாமல் இணையதளம் மற்றும் எல்.இ.டி. திரை மூலம் கண்டுகளித்தனர். நேற்று தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் அடிவாரம், கிரிவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. தைப்பூசத் திருவிழா நெருங்கும் நாட்களில் மேலும் பக்தர்கள் வருகை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் போது வெயிலின் தாக்கம் இல்லாமல் இருக்க குளிர்ச்சி தரும் மேற்கூரை வேயப்பட்டு இருந்தது. கும்பாபிஷேகத்துக்காக அவை அகற்றப்பட்டது. தற்போது கேரள கோவில்களிலும், கட்டிடங்களிலும் பாரம்பரிய முறையில் அமைக்கப்படும் கூரைகள் போல பழனி கோவிலிலும் பிரசாத ஸ்டால், அன்னதானக்கூடம் உள்ளிட்ட இடங்களில் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற இடங்களிலும் இதே போன்று கூரைகள் வேயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கும்பாபிஷேகம் முடிந்த நிலையிலும் பக்தர்களின் வருகை அதிகரிப்பால் மலைக்கோவிலில் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. 

    • தமிழக அரசு மர்ம நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டும்.
    • நோய்க்கான காரணம் குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த எஸ்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு முகேஷ் (வயது 10). ஹரீஷ் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். முகேஷ் அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், முகேசுக்கு லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரக்கூடிய "வில்சன் காப்பர்" என்ற மர்ம நோயால் பாதிக்கப்பட்டு கல்லீரல் முழுமையாக செயல் இழந்தது.

    இதனையடுத்து, மதுரையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது மேலும் அவருக்கு துணை நோய்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டார். உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என டாக்டர்கள் கூறியதால், அமைச்சர் இ.பெரியசாமியின் பரிந்துரையின்பேரில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாக, சிறுவனின் குடும்பத்தினரை அழைத்து பேசி நோய் விவரங்களை கேட்டறிந்தார்.

    பின்னர் சிறுவனை சென்னை ஸ்டான்லி பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிறப்பு சிகிச்சையளித்து வந்தனர். இந்நிலையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவ குழு மூலம் ஆயத்த பரிசோதனைகள் செய்து வந்த நிலையில் திடீரென கடுமையான வயிற்றுவலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதன் பின்னர் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனையடுத்து அவரின் உடல் சொந்த ஊரான செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அக்கிராமத்தையே கடும் சோகத்தில் ஆழ்த்தியது.

    மேலும், அந்த குடும்பத்திற்கு அடுத்த பெரும் பேரிடியாக, அந்த தம்பதியினரின் மற்றொரு மகனான ஹரீசுக்கும் அதே மர்ம நோயின் பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. அவனுக்கும் கல்லீரல் தொடர்பான தீவிர சிகிச்சையளிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே பல லட்சங்களை செலவு செய்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று தனது ஒரு மகனை காப்பாற்ற முடியாமல் போன நிலையில் மற்றொரு மகனுக்கும் அதே தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த கொடிய நோயால் மூத்த மகன் முகேஸை பரிகொடுத்த பெற்றோர்களுக்கு, இளைய மகனுக்கும் அதேநிலை என்பதால், பெற்றோர்கள் மட்டுமின்றி உறவினர்கள் என அனைவரும் கடும் சோகத்தில் உள்ளனர். எனவே தமிழக அரசு மர்ம நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டும். மேலும் இந்த நோய்க்கான காரணம் குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • மூகாம்பிகை நகர் அருகே சாலையோரம் இருந்த மரத்தில் கார் பயங்கரமாக மோதியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி:

    பழனி அருகே உள்ள கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் குணசுந்தர் (வயது 55). இவரது மனைவி சண்முகப்பிரியா (45). இவர்களுக்கு தர்மேஸ்குமார் (25), ரஞ்சித்குமார் (19) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். குணசுந்தர் தனது குடும்பத்தினருடன் திருச்சியில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று தனது காரில் சென்றார்.

    இவர்களுடன் உறவினரான இந்திராநகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி நிர்மலா (70) என்பவரும் சென்றார். காரை குணசுந்தர் ஓட்டி வந்துள்ளார்.

    சாமி தரிசனம் செய்து முடித்து விட்டு அவர்கள் பழனி நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர். நள்ளிரவு நேரத்தில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது மூகாம்பிகை நகர் அருகே சாலையோரம் இருந்த மரத்தில் கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் குணசுந்தர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மற்ற அனைவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் விபத்தை பார்த்து உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். உயிருக்கு போராடிய நிர்மலா தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற அனைவரும் சிகிச்சையில் உள்ளனர்.

    இது குறித்து பழனி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வால் நட்சத்திரத்தை இன்று மாலை பார்க்கலாம்.
    • வால்மீனை வெறும் கண்ணால் பார்க்கலாம்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் வான்இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு விஞ்ஞானிகள் வானில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தற்போது வால்மீன் என்பது குறித்து விஞ்ஞானிகள் தெரிவித்ததாவது,

    ஓடுகிளவு எனப்படும் நீண்டகால வால்மீன் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மவுண்டுபலோமேரில் சுவிக்கிடிரான்சியன்ட் பெசிலிட்டி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காலம் 50 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு தற்போது இந்த வால்மீன் பூமி சுற்றுவட்ட பாதையில் வருகின்றது. இந்த வால் நட்சத்திரத்தை இன்று மாலை பார்க்கலாம்.

    கடந்த டிசம்பர் 2022-ம் ஆண்டு முதல் பிரகாசமாக தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ஜனவரி மாதத்தில் மிகவும் அருகில் நெருங்கி வருகின்றது. இந்த வால்மீனை வெறும் கண்ணால் பார்க்கலாம். கடந்த ஜனவரி 12-ந்தேதி சூரியனில் இருந்து பெரிகோலினை கடந்து பூமி வட்டபாதையில் செல்லும் வால் நட்சத்திரம் பிப்ரவரி 1-ந்தேதி பூமிக்கு அருகே நெருங்கி வரும்.

    50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வார விடுமுறை என்பதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்.
    • இரவு நேரத்தில் குளிரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதால் கொடைக்கானலுக்கு வரும் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலை சுற்றிப்பார்க்க பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை வருடம் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும். இங்கு மிதமான காலநிலையும், இயற்கை எழில் கொஞ்சும் அழகும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

    தற்போது இடை நாட்களில் பெய்த மழை குறைந்த நிலையில் மீண்டும் கடும்குளிர் தொடங்கியுள்ளது.இருப்பினும் கொடைக்கானலுக்கு நடுங்கும் குளிரிளும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிக்கிறது. வார விடுமுறை என்பதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர். வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது வாடிக்கையாகி உள்ளது.

    மற்ற நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை சற்று குறைவாகவே இருந்து வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இதனால் பல இடங்களில் வாகன நெரிசல், தங்கும் விடுதிகள் நிரம்பி வழிவது, கட்டண உயர்வுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. தற்போது குளிர்காலம் என்பதால் மாலை வேளையில் வெயில் சற்று தணிந்து குளிரின் தாக்கம் தொடங்குகிறது.

    பின் இரவு வேளையில் அதிகரிக்கிறது. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயில், அவ்வப்போது மேக கூட்டம் இவையெல்லாம் இதமான சூழலாக பகல் நேரத்தை மாற்றுகிறது. இரவில் தலைகீழாக நிலைமை மாறி உறைய வைக்கும் குளிர் நிலவுகிறது. இந்த குளிர் சீசன் ஜனவரி முடியும் வரை தொடரும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    பகலில் இதமான வெப்பநிலையும், இரவு நேரத்தில் குளிரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதால் கொடைக்கானலுக்கு வரும் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    • டவுசர் மட்டும் அணிந்துவந்த கொள்ளையன் வீட்டிற்குள் புகுந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடி தப்பிச்செல்ல முயன்றார்.
    • பொதுமக்கள் கொள்ளையனை பிடித்து தர்மஅடி கொடுத்து செம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பழைய செம்பட்டியை சேர்ந்தவர் வீரமணி(33). ஒர்க்ஷாப் தொழிலாளி. நேற்று குடும்பத்துடன் வீட்டு மாடியில் தூங்கிகொண்டிருந்தார்.

    அப்போது டவுசர் மட்டும் அணிந்துவந்த கொள்ளையன் வீட்டிற்குள் புகுந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடி தப்பிச்செல்ல முயன்றார். இதைபார்த்ததும் வீரமணி குடும்பத்தினர் சத்தம் போட்டனர்.

    அவர்கள் சத்தம் கேட்டு ஒன்றுகூடிய பொதுமக்கள் கொள்ளையனை பிடித்து தர்மஅடி கொடுத்து செம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த நபர் ஈேராட்டை சேர்ந்த செல்வம்(25) என தெரியவந்தது.

    இவர் தனியாக திருடவந்தாரா அல்லது இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பழனி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூச திருவிழா முக்கிய சிறப்பு வாய்ந்தது.
    • தைப்பூச தேரோட்டம் பிப்ரவரி 4-ம் தேதி நடக்கிறது.
    • 48 நாட்கள் மண்டல பூஜை 11 கலசங்கள் வைத்து நடைபெறும்.

    முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். கும்பாபிஷேகத்திற்கு பிறகு அவர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடந்த ராஜகோபுரம், தங்ககோபுரம் மற்றும் உப சன்னதிகளில் வழிபட்டு சென்றனர்.

    பழனி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூச திருவிழா முக்கிய சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவிற்காக மதுரை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருது நகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு வருகை தருவார்கள். கும்பாபிஷேக நிகழ்ச்சியால் பக்தர்கள் வருகை கடந்த சில நாட்களாக குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் பழனி நோக்கி பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

    தைப்பூச திருவிழா இன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கிழக்கு ரதவீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் பிப்ரவரி 4-ம் தேதி நடக்கிறது. அன்றுகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி தோளுக்கிணியாலில் சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்த நிகழ்ச்சியும், மதியம் 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டம், தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    பிப்ரவரி 5ம் தேதி திருக்கல்யாணமும், அன்று இரவு சாமி வீதிஉலாவும் நடைபெறும். பிப்ரவரி 7ம் தேதி தெப்பத்தேர் உற்வசத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    தைப்பூச திருவிழாவால் மண்டல பூஜை எந்த வகையிலும் தடை படாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்ப்பட்டது. அதன்படி 48 நாட்கள் மண்டல பூஜை 11 கலசங்கள் வைத்து நடைபெறும். இறுதி நாளில் 1008 சங்கு பூஜைகள் நடைபெறும். ஆகம விப்படி அனைத்து பூஜைகளும் நடைபெற்று வருவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    தைப்பூசத்தையெட்டி பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பழனிக்கு படையெடுத்து வருகின்றனர். எனவே குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்து வருகின்றனர். மேலும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×