என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில்  ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நாளை தொடக்கம் இன்று வனத்துறை சார்பில் பயிற்சி
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நாளை தொடக்கம் இன்று வனத்துறை சார்பில் பயிற்சி

    • மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நாளை தொடங்குகிறது.
    • வனச்சரகர்கள் தலைமையில் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு இப்பறவைகள் கணக்கெடுப்பு மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு அரசு வனத்துறை மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நாளை தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்ட வனத்துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள ஈரநிலங்கள் அடங்கிய 20 குளங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வனச்சரகர்கள் தலைமையில் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு இப்பறவைகள் கணக்கெடுப்பு மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது.

    ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட பாச்சலூர் அணை, நல்லதங்காள் ஓடை, கரைமாரியம்மன் குளம் ஆகிய ஈரநிலங்களில் இப்பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. உலகின் பல்வேறு ஈரநிலங்களை வாழ்வாதாரமாக கொண்டுள்ள நீர்பறவைகள், கரையோர பறவைகள் , நன்னீர்மீன்கள், தவளைகள், வண்ணத்துபூச்சிகள் என பல்வேறு உயிரினங்களின் வாழிட சிக்கல்களை அறிந்து கொள்ளவும், இப்பறவைகள் கணக்கெடுப்பு உதவுகிறது.

    மிக முக்கியமாக பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவலை கொண்டே ஈரநிலங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்று அறியப்படுகிறது. அதுவும் வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவலில் இருந்தே இந்திய ஈரநிலை பறவைகளின் வாழ்நிலையை அறிய முடியும். அதற்கேற்ப பறவைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்கவும் முடியும்.

    மனிதர்கள் இன்றி பறவைகள் வாழ்ந்திட முடியும். ஆனால் பறவைகள் இன்றி மனிதனால் வாழவே முடியாது. எனும் பறவையியல் அறிஞர் சாலின்அலியின் கருத்தை ஏற்று இந்திய ஈரநில பறவைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஒன்றான இப்பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×