என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஹெல்மெட் அணியாமலும், ஒரே பைக்கில் 3 முதல் 4 மாணவர்கள் வருவதும் நடந்து வருகிறது.
    • போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு அபராதம் மற்றும் தண்டனை உள்ளிட்டவற்றை விதித்து விபத்துகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்கள் மோட்டார் சைக்கிள்கள் ஓட்டக்கூடாது என்று அந்தந்த பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தால் அவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும் என மாவட்ட கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

    இருந்தபோதும் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இதனை கண்டுகொள்வதில்லை. பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஹெல்மெட் அணியாமலும், ஒரே பைக்கில் 3 முதல் 4 மாணவர்கள் வருவதும் நடந்து வருகிறது. மாலையில் பள்ளி முடிந்து செல்லும்போது சாகச பயணம் மேற்கொள்வதாக நினைத்து ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு பைக் ஓட்டிச்செல்வதால் சாலையில் நடந்து செல்லும் அப்பாவி பொதுமக்கள் விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

    இவர்களை பார்த்து மற்றவர்களும் விதிமீறி பயணம் செய்வதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. திண்டுக்கல் நகரை பொறுத்தவரை பெரும்பாலான சாலைகள் குறுகலாகவும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உடையதாகவும் உள்ளது. பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் முக்கிய சாலைகளை கடந்து செல்வதே மிகவும் சிக்கலான விசயமாக இருந்து வருகிறது. இதுபோன்ற சாலைகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விதிமீறி பயணம் செய்து தாங்களும் விபத்தில் சிக்கி மற்றவர்களையும் விபத்தில் சிக்கவைத்து விடுகின்றனர்.

    போக்குவரத்து போலீசார் அவ்வப்போது விதிமீறும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தாலும் இதுபோன்ற சம்பவம் தினசரி நடந்து வருகிறது. எனவே இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்க தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு அபராதம் மற்றும் தண்டனை உள்ளிட்டவற்றை விதித்து விபத்துகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • திண்டுக்கல் நகர் பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் சுற்றி திரிந்து வருகிறது.
    • திண்டுக்கல் மாநகராட்சி 42 மற்றும் 44 வது வார்டு பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த 10 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகர் பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் சுற்றி திரிந்து வருகிறது. நாய்கள் துரத்துவதால் வாகன ஓட்டிகள் கிழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் நாய் கடிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். மேலும் கவுன்சிலர்களும் நாய்கள் தொல்லை குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலர் செபாஸ்டின் முன்னிலையில், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் நகர் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல் மாநகராட்சி 42 மற்றும் 44 வது வார்டு பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த 10 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர். இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிறுதானிய உணவுகளின் பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியை கலெக்டர் பூங்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறுதானிய உணவுகளின் பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஆரோக்கிய நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

    பேரணியை கலெக்டர் பூங்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் கம்பு உடலுக்கு தெம்பு, சோம்பல் நீக்கும் சோளம், குதிரை வாலி தந்திடும் குறைவில்லா வாழ்வு, புற்றுநோயை போக்கும் பனிவரகு என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

    300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பேரணி கலெக்டர் முகாம் அலுவலகத்தில் தொடங்கி தலைமை தபால் நிலையம், பஸ்நிலையம், காமராஜர் சிலை, அரசு மருத்துவக்கல்லூரி, அண்ணாசிலை வழியாக மீண்டும் முகாமை வந்தடைந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்பு தடுப்பூசி பணியானது நாளை தொடங்கி 30 நாட்களுக்கு இலவசமாக செலுத்தப்படவுள்ளது.
    • கால்நடை மருந்தகங்கள் மூலமாக நடைபெறும் முகாம்களில் தடுப்பூசியினை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    ஆட்டுக்கொல்லி நோய் ஆடு வளர்ப்போருக்கு அதிக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் ஒரு கொடிய நோயாகும். இந்நோய் மோர்பில்லி வைரஸ் என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு அதிக காய்ச்சல், சோர்வு, தீனி உட்கொள்ளாத தன்மை, மூக்கிலிருந்து சளி வடிந்து உறைந்து இருத்தல், கண்களில் பூளை தள்ளுதல், வாயின் உட்புறங்கள் ஈறுகள் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டு அதிக உமிழ்நீர் சுரத்தல். கழிச்சல், இருமல் ஆகியவை ஏற்படும்.

    இந்நோய் பரவாமல் தடுப்பதற்கு பாதிக்கப்பட்ட ஆடுகளை உடன் அருகில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். ஆட்டுக்கொட்டில்களையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆட்டுக்கொல்லி நோய் வராமல் தடுப்பதற்கு ஆண்டுக்கு 1முறை குறிப்பாக 4 மாத வயத்திற்கு மேற்பட்ட ஆட்டுக்குட்டி களுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி கண்டிப்பாக செலுத்த வேண்டும்.

    ஆட்டுக்கொல்லி நோய் பாதிப்பினை ஒழிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் திண்டுக்கல் உட்பட 12 மாவட்டங்களில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்பு தடுப்பூசி பணியானது நாளை தொடங்கி 30 நாட்களுக்கு இலவசமாக செலுத்தப்படவுள்ளது.

    எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடு வளர்க்கும் விவசாயிகள் 4 மாதத்திற்குமேல் வயதுடைய ஆட்டுக்குட்டிகளுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள் மூலமாக நடைபெறும் முகாம்களில் தடுப்பூசியினை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • நத்தம் என்‌.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் சார்பாக ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2023 போட்டிகள் நடைபெற்றது.
    • இவ்விழாவில் 47 அணிகளில் 282 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்கள் மற்றும் படைப்புகளை செய்து காட்டினர்.

    நத்தம்:

    நத்தம் என்.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் சார்பாக ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2023 போட்டிகள் நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் சுந்தரராஜன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக மதுரை எம்.எஸ்.எம்.இ., டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட் உதவி இயக்குனர் உமா சந்திரிகா, சென்னை காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சீனியர் அசோசியேட் துர்கேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவி ரோசலின் பானு அனைவரையும் வரவேற்றார். ஜீவதாரிணி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.

    சிறப்பு விருந்தினர்கள் தொழில்நுட்பங்கள் பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். இவ்விழாவில் 47 அணிகளில் 282 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்கள் மற்றும் படைப்புகளை செய்து காட்டினர். மாணவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்கள் மதிப்பீடு செய்யப்பட்டு ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2023க்கு அனுப்பப்பட்டது.

    போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கல்வி இயக்குனர் (பொறுப்பு) கோபி சாமிநாதன், கல்பனா சான்றிதழ்கள் வழங்கினர். முடிவில் மாணவி ஹரிணி நன்றி கூறினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • குடி போதையில் பெண்ணை தாக்கிய வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசாரை வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள ஆவாரம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி விஜயா (வயது 45). சம்பவத்தன்று இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சேதுபதி (27) என்பவர் குடி போதையில் தகராறு செய்து தாக்க முன் வந்தார்.

    இதை தடுக்க வந்த அவரது மகன் பிரேம் குமாரையும் கம்பியால் தாக்கினார். பலத்த காயமடைந்த விஜயா நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சேதுபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • தமிழக கால்பந்து அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் இம்மாணவி தேசிய அணிக்கும் தேர்வு பெற வாய்ப்புள்ளது.
    • சாதனை படைத்த மாணவிக்கு ஆசிரியர்கள், சக மாணவிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே பரளிபுதூர் ஊராட்சி அம்பேத்கர் நகரில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி - ராஜ திலகம். இவர்களது மகள் கோதைநாயகி மதுரை ஸ்ரீ ராம் நல்லமணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவி கால்பந்து விளையாட்டின் மீது கொண்ட ஆர்வமிகுதியால் 8ம் வகுப்பு முதல் கால்பந்து விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.

    பள்ளியில் நடத்தப்படும் அனைத்து கால்பந்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கு பெற்று வட்டார அளவில் பல பரிசுகளும், மாவட்ட அளவில் பல பரிசுகளும், பதக்கங்களும், பாராட்டு சான்றிதழ்களும் பெற்று தற்போது தமிழக கால்பந்து அணிக்கு தேர்வாகியுள்ளார்.

    தமிழக கால்பந்து அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் இம்மாணவி தேசிய அணிக்கும் தேர்வு பெற வாய்ப்புள்ளது. வறுமை நிலையில் இருந்து படித்து விளையாட்டில் சாதனை படைத்த மாணவிக்கு ஆசிரியர்கள், சக மாணவிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    • சிவனை, சரியாக வேலை செய்யவில்லை என்று வேலையை விட்டு நிறுத்திவிடுவதாக உரிமையாளர் எச்சரித்தார்.
    • ஆத்திரமடைந்த சிவன் இந்த பிரச்சினைக்கு அங்கு வேலை செய்யும் பெண் தான் காரணம் என்று அவரை தாக்க திட்டமிட்டார்.

    பெரும்பாறை:

    பெரும்பாறை அருகே உள்ள பாச்சலூர் பேத்தரைப்பாறை பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 58). பாச்சலூர் கரடிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சிவன் என்ற சிவா (35). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள மாரிமுத்து என்பவரின் பங்களா வீட்டில் வேலை பார்த்தனர்.

    இந்நிலையில் சிவனை, சரியாக வேலை செய்யவில்லை என்று வேலையை விட்டு நிறுத்திவிடுவதாக மாரிமுத்து எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த சிவன் இந்த பிரச்சினைக்கு ராணி தான் காரணம் என்று அவரை தாக்க திட்டமிட்டார். அதன்படி, கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி ராணியின் வீட்டிற்கு சென்ற சிவன் அவரை தகாத வார்த்தைகளால் பேசி, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த ராணி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீ சார் வழக்குப்பதிவு செய்து சிவனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு கொடைக்கானல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திக் குற்றம்சாட்டப்பட்ட சிவனிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தர விட்டார்.

    • கிராம மக்களை வன ஊழியர்கள் தரக்குறைவாக நடத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
    • விவசாயிகள், பொதுமக்கள் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் - பழனி சாலையில் வட கவுஞ்சி மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விவசாயிகள் மற்றும் கிராமத்தைச் சுற்றியுள்ள 16 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் விவசாயம் செய்வதற்கும், தங்களது கிராமப் பகுதிகளை ஒட்டியுள்ள மலை கோவில்களுக்கு செல்வதற்கும், விவசாய நிலங்களில் வேலி அமைத்துக் கொள்வதற்கும் வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

    அத்துடன் கிராம மக்களை வன ஊழியர்கள் தரக்குறைவாக நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவற்றை கண்டித்து வட கவுஞ்சி பிரிவு அருகே பஸ் மறியல் போராட்டம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்திருந்தனர். இதை அடுத்து இது பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ள ஆர்.டி.ஓ அலுவலகம் வருவதற்கு போலீசாரும், வனத்துறையினரும் வருவாய் துறையின் கிராம மக்களை அழைத்தனர். இதை அடுத்து இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் கொடைக்கானல் கோட்டாட்சியர் ராஜா தலைமையில், காவல் துணை கண்காணிப்பாளர் மதுமதி, வனத்துறை சரகர்கள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம மக்களை தரக்குறைவாக நடத்தும் வன ஊழியர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விவசாயிகள் பயன்படுத்தும் பாதைகள் உள்ளிட்டவைகளை எப்பொழுதும் போல் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பது என்றும் இந்த அமைதி பேச்சு வார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது.

    ஏற்கனவே இந்த பகுதியில் 15,000 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலம் வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பாணை 16-வெளி வந்த பின்னர் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • மாணவியின் உறவினர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை தேடி வந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே குளத்தூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன். (வயது 30). கூலித் தொழிலாளி. 9ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்த 16 வயது பள்ளி மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்கா தேவி உத்தரவின் படி வடமதுரை மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை செய்ததில் மாணவிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் பதுங்கியிருந்த மணிகண்டனை கைது செய்து திண்டுக்கல் சிறையில் சிறையில் அடைத்தனர்.

    • கருணாநிதி, மு.க.ஸ்டாலினால்தான் தி.மு.க. வளர்ந்தது என உதயநிதி நினைத்துக் கொண்டுள்ளார்.
    • 1972-ல் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கி இந்த இயக்கத்தை வெற்றி இயக்கமாக மாற்றினார்.

    திண்டுக்கல்:

    ஒட்டன்சத்திரத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்புரையாற்றி பேசியதாவது:-

    பேரறிஞர் அண்ணா 1952-ல் தி.மு.க.வை ஆரம்பித்தபோது கடும் சோதனைகளுக்கு ஆளானார். காங்கிரசை எதிர்த்து 15 எம்.எல்.ஏ.க்களை வெற்றிபெற வைத்தார். 1957-ல் 50 எம்.எல்.ஏ.க்களை பெற முடிந்தது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆண்ட காங்கிரசை எதிர்த்து 1967-ல் தேர்தல் வந்த போது பஞ்சம் தலைவிரித்தாடியது.

    அண்ணாவுக்காக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தார். குண்டடிபட்ட எம்.ஜி.ஆரின் கழுத்தில் மப்ளருடன் உள்ள போஸ்டர் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டது. இதனால் அண்ணா வெற்றிபெற்று முதல்வர் ஆனார். அண்ணாவுக்கு மரியாதை செலுத்த வந்த அதிகாரிகளிடம் முதலில் வெற்றிக்கு காரணமான எம்.ஜி.ஆருக்கு நன்றி சொல்லுங்கள் என கூறினார். அந்த பெருந்தன்மை அவரைத் தவிர வேறு யாருக்கும் வராது.

    அண்ணா மறைவுக்கு பின்பு நாவலர் நெடுஞ்செழியன் முதல்-அமைச்சராக வந்திருக்க வேண்டும். குறுக்கு வழியில் முதல்-அமைச்சர் பதவியை பிடித்தவர் கருணாநிதி. இந்த வரலாறு உதயநிதிக்கு தெரியாது. கருணாநிதி, மு.க.ஸ்டாலினால்தான் தி.மு.க. வளர்ந்தது என உதயநிதி நினைத்துக் கொண்டுள்ளார்.

    கருணாநிதி முதல்வரான பிறகு 3 வருடங்களில் லஞ்சம் தலைவிரித்தாடியது. அதன் பிறகு 1972-ல் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கி இந்த இயக்கத்தை வெற்றி இயக்கமாக மாற்றினார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழகத்தில் நல்லாட்சி நடத்தினர். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி நல்லாட்சியைத் தொடர்ந்து குடிமராமத்து நாயகனாக போற்றப்பட்டார். ஆனால் தற்போதைய முதல்-அமைச்சர் ஸ்டாலின் அ.தி.மு.க.வில் அறிவிக்கப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியுள்ளார். தி.மு.க. ஆட்சியில் கடந்த 29 மாதங்களில் ரூ.3 லட்சம் கோடி கடன் வைத்துள்ளனர். இந்தியாவிலேயே அதிக கடன் வைத்துள்ள மாநிலம் தமிழ்நாடுதான். தி.மு.க. ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த அதிருப்தியை திசை திருப்ப சனாதனத்தை கையில் எடுத்துள்ளனர்.

    இந்துக்களை ஒழித்து விட்டு சிறுபான்மையினர் ஆதரவை பெற்று விடலாம் என தி.மு.க.வினர் கனவு காண்கின்றனர். அனைத்து மதத்தினருக்கும் உற்ற நண்பனாக விளங்குவது அ.தி.மு.க.தான். தற்போது டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகி வரும் நிலையில் காவிரி நீரை பெற்றுத் தர முடியாத நிலையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் உள்ளார். இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் முதல்வரிடம் காவிரி நீரை பெற முடியாத ஸ்டாலினால் மக்கள் எதிர்ப்பை சந்திக்க முடியவில்லை. விரைவில் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 150 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    • இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அரிசி, காய்கறிகள் மற்றும் சமையல் பாத்திரங்களுடன் குடியேறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் சவேரியார் பாளையம், அசனாத்புரம், ஜீவாநகர், சி.கே.சி. காலனி பகுதியை சேர்ந்த 540 பேர் கடந்த 2018ம் ஆண்டு வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதில் 150 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பதிலும் இல்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், நகர செயலாளர் அரபு முகமது ஆகியோர் தலைமையில் இன்று கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் குவிந்தனர். அவர்கள் அரிசி, காய்கறிகள் மற்றும் சமையல் பாத்திரங்களுடன் குடியேறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்ததும் கிழக்கு தாசில்தார் வில்சன் தேவதாஸ் மற்றும் நகர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கிழக்கு தாசில்தார் ஆதிதிராவிடர் மக்கள் 30 பேருக்கு வீட்டுமனை பட்டா தயாராக உள்ளது. மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 120 பேருக்கு வெள்ளோடு பகுதியில் இடம் தேர்வு செய்து வருகின்றனர். விரைவில் அவர்களுக்கும் பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×