என் மலர்
தர்மபுரி
- ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில், 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
- பள்ளி யின் சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர், ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில், 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன், பள்ளி இயக்குநர் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வர் வெற்றிவேல் செல்வம் மற்றும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் பொது மக்களி டமும், கல்லூரி மாணவர்களிடமும், தேசப்பற்றை ஊட்டு வதற்காக அரூர் காவல் நிலையத்திற்கு அருகிலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலும், தேசப்பற்று மிக்க கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இதில் மாணவர்கள் தேசப்பற்று மிக்கப் பாடல்கள் பாடியும், சொற்பொழிவுகள் ஆற்றியும், நாடகம் மூலம் நடித்தும் தங்கள் தேசப்பக்தியை வெளிப்படுத்தினர். மேலும் மாணவர்கள் அரூர் பொதுமக்களிடம் 5000 தேசிய கொடியை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
மேலும் பள்ளி வளாகத்தில் மழலை மாணவர்கள் தேசப்பற்று மிக்க பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
- நிலத்திற்குள் சென்ற போது, நிலங்களை சுற்றிலும் காட்டுப்பன்றிக்காக போட்டு இருந்த மின்கம்பியை தமிழ் வீரன் மிதித்துள்ளார்.
- காவிரியப்பன் மற்றும் வேட்டைக்குச் சென்ற சேட்டு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்வீரன் (வயது 52). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சேட்டு (42). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நாட்டுத்துப்பாக்கியுடன் புதுப்பட்டி வனப்பகுதிக்கு முயல் வேட்டைக்கு சென்றனர்.
அப்போது நரசிபுரம் விவசாயி காவிரியப்பன் நிலத்திற்குள் சென்ற போது, நிலங்களை சுற்றிலும் காட்டுப்பன்றிக்காக போட்டு இருந்த மின்கம்பியை தமிழ் வீரன் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சேட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இதுகுறித்து பெரும்பாலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தமிழ்வீரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காவிரியப்பன் மற்றும் வேட்டைக்குச் சென்ற சேட்டு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் மலைகிராமப்புற பகுதிகளில் விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க சட்டவிரோதமாக விளைநிலங்களை சுற்றி மின்கம்பி வேலை அமைத்து வருகின்றனர். இதனால் விலங்குகள் மட்டும் இன்றி மனித உயிர்களும் பலியாகிறார்கள்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயிருக்காக போட்ட மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலியானது. இது பற்றி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை.
இதனால் வனத்துறையினர் மற்றும் மின்வாரிய துறையினர் தருமபுரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஓட்டியுள்ள பகுதிகளில் உள்ள விளைநிலங்களை ரோந்து சென்று தினமும் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
விடுத்து உள்ளனர்.
- மாணவர்கள் சுதந்திரப் பற்றை ஊட்டக் கூடிய நாடகங்கள், சுதந்திர போராட்ட தியாகங்களின் வாழ்க்கை வரலாறு, ஒற்றுமை போன்ற நிகழ்ச் சிகளை தத்துவமாக நடித்துக் காட்டினார்கள்.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிரீன் பார்க் சி.பி.எஸ்.இ பள்ளியில் 77-வது சுதந்திர தின நாளை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் மாணவர்கள் சுதந்திரப் பற்றை ஊட்டக் கூடிய நாடகங்கள், சுதந்திர போராட்ட தியாகங்களின் வாழ்க்கை வரலாறு, ஒற்றுமை போன்ற நிகழ்ச் சிகளை தத்துவமாக நடித்துக் காட்டினார்கள்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் எவரெஸ்ட் முனிரத்தினம் மற்றும் நிர்வாக அலுவலர் ராஜா பூவிழி , பள்ளியின் முதல்வர் ஜெகதீசன், சதானந்தம், தங்கம் பிரபா, இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேலும் பள்ளியில் பல்வேறு விளையாட்டு போட்டி, பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
- சந்தப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் பணம் வைத்து சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
- இவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 சீட்டு கட்டுகள் மற்றும், ரூ. 80 பணத்தை பறிமுதல் செய்தனர்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சந்தப்பட்டி, செட்ரப்பட்டி, மூக்கனூர்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்ற தடுப்பு நடவடக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் பணம் வைத்து சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் வளைத்து பிடித்து விசாரணை செய்ததில் சந்தப்பட்டி சேர்ந்த பழனி மகன் சரவணன் (30), சுப்பிரமணி மகன் பழனி (47), பொன்னுசாமி மகன் ராமு (50) மற்றும் பெத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் வெங்கடேசன் (42) என தெரிய வந்தது.
இவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 சீட்டு கட்டுகள் மற்றும், ரூ. 80 பணத்தை பறிமுதல் செய்தனர்.
- நேற்று இரவு கெங்கலாபுரம் மேம்பாலம், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது கார் ஒன்று எதிர்பாராத விதமாக சேட்டு மீது மோதியது.
- விபத்தில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பச்சியப்பன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 65). கூலி தொழிலாளி.
இவர் நேற்று இரவு கெங்கலாபுரம் மேம்பாலம், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சேட்டு மீது மோதியது. விபத்தில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்து கிடந்த சேட்டுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்,
இந்த விபத்து சம்பவம் குறித்து, தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அந்தந்த ஊராட்சியில் உள்ள புதிய இடங்களில் நடைபெறும் இந்த கிராம சபை கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்குகிறார்.
- அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் சுதந்திரதின கிராமசபை கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடத்தப்படவுள்ளது.
அந்தந்த ஊராட்சியில் உள்ள புதிய இடங்களில் நடைபெறும் இந்த கிராம சபை கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்குகிறார்.
அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள்.
கிராம சபை கூட்டத்தை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளரும், கிராம சபை கூட்டம் நடப்பதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உதவி இயக்குநர் நிலையிலும், இணை இயக்குனர் நிலையிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும், அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விதிகளை மீறி இரு சக்கர வாகனங்களை மது அருந்திவிட்டு ஓட்டிச் சென்றது தொடர்பாக மொத்தம் 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
- தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவுப்படி மாவட்டத்தின் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் சிறப்பு வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனங்களை மது அருந்திவிட்டு ஓட்டிச் சென்றது தொடர்பாக மொத்தம் 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக 70 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 28 வழக்குகளும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தொடர்பாக 27 வழக்குகளும், பணம் வைத்து சூதாடியது தொடர்பாக 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
- சிமெண்ட்டு கல் வைத்து கட்டிடம் கட்டும்போது திடீரென்று ஒரு கல் தவறி சின்னசாமி மீது விழுந்தது.
- கிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே முத்துகவுண்டன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது45). கட்டிட மேஸ்திரியான இவர் கடந்த 10-ந் தேதி பாலக்கோட்டில் ஒரு கட்டிடத்தில் வேலை செய்தார்.
அப்போது சிமெண்ட்டுகல் வைத்து கட்டிடம் கட்டும்போது திடீரென்று ஒரு கல் தவறி சின்னசாமி மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் வலியால் அலறி துடித்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அவர்களிடமிருந்து 34 ஆயிரம் ரூபாய் பணம், 11 இரு சக்கர வாகனங்கள் மற்றும் சீட்டு கட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- பணம் வைத்து சூதாடியதாக நீர்குந்தி பகுதியை சேர்ந்த மணி, செல்லப்பன், கார்த்திகேயன் மற்றும் இருளர் காலனி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பாலக்கோடு டி.எஸ்.பி சிந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் உத்தரவின் பேரில் காரிமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காரிமங்கலம் கும்பார அள்ளி சோதனை சாவடி அருகே பணம் வைத்து சூதாடிய 12 பேரை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர்.
பின்னர் விசாரித்ததில் பையம்பாட்டியானூரை சேர்ந்த முருகனாதன் (வயது43), அரசம்பட்டியை சேர்ந்த சிவலிங்கம் (50), இடைபையூரை சேர்ந்த செந்தில் (44), நரசியர் குளத்தை சேர்ந்த பழனிமுத்து (51), சின்ன கரடியூர் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை (49), பண்ணந்தூரை சேர்ந்த ஜெயபிரகாஷ் (43), குடிமனஅள்ளியை சேர்ந்த பரமசிவம் (39), பெரியாம்பட்டியை சேர்ந்த வடிவேல் (53) காரிமங்கலம் ஈ.பி. ஆபீஸ் பகுதியை சேர்ந்த பாலு (40), பெரியாம்பட்டியை சேர்ந்த மணி (34) பொம்மஅள்ளியை சேர்ந்த முருகேசன் (45), பெரியாம்பட்டியை சேர்ந்த பூபதி (52) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 34 ஆயிரம் ரூபாய் பணம், 11 இரு சக்கர வாகனங்கள் மற்றும் சீட்டு கட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பென்னாகரம் பகுதியில் பணம் வைத்து சூதாடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் பென்னாகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது பணம் வைத்து சூதாடியதாக நெர்குந்தி பகுதியை சேர்ந்த மணி, செல்லப்பன், கார்த்திகேயன் மற்றும் இருளர் காலனி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
- வீட்டில் தூங்கி கொண்டிருந்த தங்கராஜூம், அவரது அண்ணனும் வெளியே வந்து பார்த்தபோது, 2 மர்ம நபர்கள் கோவிலின் கதவின் பூட்டை உடைத்து கொண்டிருந்தனர்.
- வாலிபர் வண்டியில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே ராஜாகொல்லஅள்ளி பகுதியில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (வயது40) என்பவர் பூசாரியாக வேலை செய்து வருகிறார்.
இவர் கோவில் முன்பு உள்ள ஒருவீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தங்கராஜ் வழக்கம்போல் நேற்று பூஜையை முடித்துவிட்டு இரவு கோவில் கதவுகளை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது அதிகாலையில் திடீரென்று வீட்டின் வெளியே பயங்கர சத்தம் கேட்டது. வீட்டில் தூங்கி கொண்டிருந்த தங்கராஜூம், அவரது அண்ணனும் வெளியே வந்து பார்த்தபோது, 2 மர்ம நபர்கள் கோவிலின் கதவின் பூட்டை உடைத்து கொண்டிருந்தனர்.
உடனே தங்கராஜூம், அவரது அண்ணனும் சேர்ந்து திருடன், திருடன் என்று சத்தம் போட்டு மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்தனர். அதற்குள் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயன்றனர். தங்கராஜின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர்.
அப்போது தங்கராஜ், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்ற வாலிபரை வண்டியுடன் மடக்கி பிடித்தனர். மற்றொரு வாலிபர் வண்டியில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து தங்கராஜ் இண்டூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் பிடிப்பட்ட வாலிபரையும், மோட்டார் சைக்கிளையும் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் சிக்கிய வாலிபரிடம் விசாரித்ததில், அதகபாடி கூத்தாடி கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஜோதிமணி (வயது 27) என்பதும், அவருடன் வந்த நபர் குயிலாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் சக்திவேல் என்பதும் தெரியவந்தது.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதிமணியை கைது செய்தனர். தலைமறைவான சக்திவேலை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். அதிகாலையில் கோவிலில் கதவை உடைத்து திருட முயன்ற வாலிபர் பிடிபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர்.
- மாணவர்களும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டு தங்களது கடந்த கால பள்ளி வாழ்க்கை நினைவு படுத்தி உரையாடினார்கள்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கம்பை நல்லூர் ஸ்ரீராம் கல்வி குழுமங்களின் நிறுவனர் எம்.வேடியப்பன், கம்பைநல்லூர் பேரூராட்சி தலைவர் வடமலை முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
முன்னாள் மாணவர் கம்பை ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சக்திவேல், மதி, குமார், கெலவள்ளி மனோகரன், கம்பை நல்லூர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் 45 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர்களாக பணியாற்றிய ஆசிரியர்கள் பெரியண்ணன், வெங்கடேசன், ஹரிதாஸ், ஸ்ரீ ராமுலு, பன்னீர்செல்வம், ஜெயராமன், ராஜகோபால், ஆசிரியை பானுமதி மற்றும் தற்போதைய பள்ளி தலைமை ஆசிரியர் பழனி ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர் மாணவர்களும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டு தங்களது கடந்த கால பள்ளி வாழ்க்கை நினைவு படுத்தி உரையாடினார்கள்.
அப்போது பணியாற்றிய ஆசிரியர்களும் அப்போதைய ஆசிரிய பணியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
- குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கோவில் வளா கத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது.
தருமபுரி,
ஆடி மாத பிரதோஷத்தையொட்டி நேற்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சாமி கோவிலில் ஆடிமாத பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது.
இதையொட்டி முதலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நந்திக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆரா தனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு ஆராதனைகள் மற்றும் உபகார பூஜைகளும், தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது.
இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோன்று தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், அன்னசாகரம் சோமேஸ்வரர் கோவில், சவுலுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட தருமபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆடி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன்கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.






