என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் கதவை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது
    X

    கோவில் கதவை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது

    • வீட்டில் தூங்கி கொண்டிருந்த தங்கராஜூம், அவரது அண்ணனும் வெளியே வந்து பார்த்தபோது, 2 மர்ம நபர்கள் கோவிலின் கதவின் பூட்டை உடைத்து கொண்டிருந்தனர்.
    • வாலிபர் வண்டியில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே ராஜாகொல்லஅள்ளி பகுதியில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (வயது40) என்பவர் பூசாரியாக வேலை செய்து வருகிறார்.

    இவர் கோவில் முன்பு உள்ள ஒருவீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் தங்கராஜ் வழக்கம்போல் நேற்று பூஜையை முடித்துவிட்டு இரவு கோவில் கதவுகளை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது அதிகாலையில் திடீரென்று வீட்டின் வெளியே பயங்கர சத்தம் கேட்டது. வீட்டில் தூங்கி கொண்டிருந்த தங்கராஜூம், அவரது அண்ணனும் வெளியே வந்து பார்த்தபோது, 2 மர்ம நபர்கள் கோவிலின் கதவின் பூட்டை உடைத்து கொண்டிருந்தனர்.

    உடனே தங்கராஜூம், அவரது அண்ணனும் சேர்ந்து திருடன், திருடன் என்று சத்தம் போட்டு மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்தனர். அதற்குள் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயன்றனர். தங்கராஜின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர்.

    அப்போது தங்கராஜ், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்ற வாலிபரை வண்டியுடன் மடக்கி பிடித்தனர். மற்றொரு வாலிபர் வண்டியில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

    இந்த சம்பவம் குறித்து தங்கராஜ் இண்டூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் பிடிப்பட்ட வாலிபரையும், மோட்டார் சைக்கிளையும் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் சிக்கிய வாலிபரிடம் விசாரித்ததில், அதகபாடி கூத்தாடி கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஜோதிமணி (வயது 27) என்பதும், அவருடன் வந்த நபர் குயிலாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் சக்திவேல் என்பதும் தெரியவந்தது.

    சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதிமணியை கைது செய்தனர். தலைமறைவான சக்திவேலை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். அதிகாலையில் கோவிலில் கதவை உடைத்து திருட முயன்ற வாலிபர் பிடிபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×