என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி கோட்டை கோவிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேம் செய்வதையும், சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதையும் படத்தில் காணலாம்.
ஆடி மாத பிரதோஷத்தையொட்டி தருமபுரி, கிருஷ்ணகிரி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
- குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கோவில் வளா கத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது.
தருமபுரி,
ஆடி மாத பிரதோஷத்தையொட்டி நேற்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சாமி கோவிலில் ஆடிமாத பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது.
இதையொட்டி முதலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நந்திக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆரா தனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு ஆராதனைகள் மற்றும் உபகார பூஜைகளும், தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது.
இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோன்று தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், அன்னசாகரம் சோமேஸ்வரர் கோவில், சவுலுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட தருமபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆடி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன்கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.






