என் மலர்tooltip icon

    கடலூர்

    விருத்தாசலம் தாசில்தார் கொரோனாவுக்கு நேற்று இரவு பலியானார்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளனர்.

    இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த விருத்தாசலம் தாசில்தார் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

    விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வந்தவர் கவியரசு(வயது 48). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பரிசோதனை மேற்கொண்டதில் கடந்த 9-ந்தேதி கொரோனா தொற்று உறுதி ஆனது. தொடர்ந்து கவியரசு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கவியரசு நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

    விழுப்புரத்தை சேர்ந்த கவியரசுக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். அவர் இறந்த தகவலை அறிந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
    கொரோனா தொற்று காரணமாக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலம் வட்டாட்சியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    கடலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரேநாளில் 4,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4,731, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 76 பேர் உட்பட 4,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 47,179 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 4,807 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,60,907லிருந்து 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு 49,452 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசன் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    திட்டக்குடி:

    தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. களத்தில் நின்று பணியாற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்களை தொடர்ந்து கொரோனா பதம் பார்த்து வருகிறது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உள்ளனர். இதனால் அமைச்சர்களும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்தனர்.

    தற்போது 4-வதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து எம்.எல்.ஏ கணேசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளார்.
    கடலூரில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்று ரஜினி மக்கள் மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் தெற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் ஓ.எல்.பெரியசாமி கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், கடலூர் மாவட்டத்தில் ஏதாவது பெரிய அளவில் பேரிழப்பு ஏற்பட்டால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கோ அல்லது விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரிக்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட கடலூரில் மருத்துவகல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    அப்போது மாவட்ட இணை செயலாளர் ஆசை தாமஸ், துணை செயலாளர் எம்.ஜி.ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் ஆர்.வி.வெங்கடேசன், தொழிலாளர் அணி செயலாளர் தண்டபாணி, வர்த்தக அணி இணை செயலாளர் மாணிக்கம், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர் குடிகாடு கருணாகரன், கடலூர் பன்னீர்செல்வம், மேல்பட்டாம்பாக்கம் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
    பண்ருட்டி, கீழ்கவரப்பட்டு பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    பண்ருட்டி:

    பண்ருட்டி நகர துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாபாளையம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உ.சி.நகர், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பணிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இதேபோல் கீழ் கவரப்பட்டு துணை மின்நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வடக்கு பாளையம், லாலாப்பேட்டை, எம்.புதுப்பாளையம், சாலை நகர், கொங்கராயனூர், இடையன் வெளி, ராஜா நகர், நத்தமேடு, சிங்காரப்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம் மெயின் ரோடு மேற்கு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் பண்ருட்டி பழனிராஜூ, நெல்லிக்குப்பம் லீனா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    விருத்தாசலம் பூதாமூரில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழப்பாளையூர், மேலப்பாளையூர், கண்டியாங்குப்பம், விருத்தாசலம் நகரம், தென்னக ரெயில்வே, கார்மாங்குடி, சாத்துக்கூடல், ஆலிச்சிக்குடி, குமாரமங்கலம், சாத்தமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை விருத்தாசலம் மின்வாரிய செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார்.
    விருத்தாசலம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி ஷாபனா (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் ஷாபனாவிடம் அவரது மாமியார் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி நேற்று காலை அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தற்கொலை செய்து கொண்ட ஷாபனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே ஷாபனா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வாட்ஸ்-அப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், அம்மா என்னிடம் வரதட்சணை கேட்டு மாமனார்-மாமியார் துன்புறுத்துவதாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், தான் இறந்த பிறகு தனது மகனுக்கே அனைத்து சொத்தும் சேர வேண்டும், நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். என்னை வளர்த்து ஆளாக்கியது போல் எனது மகனையும் வளர்த்து ஆளாக்குங்கள் அம்மா, என உருக்கமாக பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ பதிவு வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆன்லைனில் பாடம் நடத்துவது மாணவர்களுக்கு பயன் அளிக்காது என திட்டக்குடியில் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
    திட்டக்குடி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று திட்டக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு கல்வி உரிமைச்சட்டம் மூலம் மாநில அரசுகளிடம் இருந்து அதிகாரங்களை பறிக்க முயல்கிறது. கல்வி அதிகாரத்தை மாநில அரசுகளிடம் இணைக்க வேண்டும். கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த மாநில அரசு முயற்சி செய்து வருகிறது.

    இந்த திட்டம் உரிய பயன் அளிக்காது. ஆசிரியர்கள், மாணவர்கள் முன்பு வகுப்புகளில் பாடம் நடத்தினால் மட்டுமே மாணவர்களால் பயன்பெற முடியும். அதனால் பள்ளிகள் திறக்கப்பட்டதும் ஒரு வகுப்புக்கு 20 மாணவர்கள் வீதம், சமூக இடைவெளியுடன் வகுப்புகள் நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் வாக்காளர்கள் அனைவரும் விருப்பப்பட்டால் தபால் ஓட்டு அளிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கொடுக்கப்பட்டு வந்த நகைக்கடன் உள்பட அனைத்து வகை கடன்களையும் திடீரென நிறுத்திவிட்டது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

    முன்னதாக திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு திருமாவளவன் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அப்போது அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், பெரம்பலூர் மண்டல செயலாளர் கிட்டு, திட்டக்குடி முன்னாள் மாவட்ட செயலாளர் தயா.தமிழன்பன், மகளிரணி மாநில துணை செயலாளர் சரஸ்வதி, மாநில துணை செயலாளர் நெப்போலியன், மாவட்ட அமைப்பாளர் குமார், நகர செயலாளர் கவுதமன், ஒன்றிய செயலாளர் ஜான்செங்குட்டுவன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 படித்து வரும் 46 ஆயிரத்து 278 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.
    கடலூர்:

    கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. கல்வி தொலைக்காட்சியின் மூலமாக வாரத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் 2½ மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பையும், பிறவகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பையும், பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

    இதைத் தொடர்ந்து நேற்று மாவட்டந்தோறும் மாணவ- மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது. கடலூர் மாவட்டத்திலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    கடலூர் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு உதவி தலைமை ஆசிரியை சுமதி பாடப்புத்தகங்களை நேற்று வழங்கினார். முன்னதாக புத்தகங்களை பெறவந்த மாணவிகள் அனைவரும் முக கவசம் அணிந்து வந்து சமூக இடைவெளியை கடைபிடித்து புத்தகங்களை வாங்கி சென்றனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் இந்த கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 145 மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வரும் 21 ஆயிரத்து 897 மாணவ-மாணவிகள், 296 உயர்நிலைப்பள்ளிகளில் படித்து வரும் 24 ஆயிரத்து 381 மாணவ-மாணவிகள் என மொத்தம் 46 ஆயிரத்து 278 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.

    ஒரு மணி நேரத்தில் 20 மாணவ-மாணவிகள் என்ற அடிப்படையில் மட்டுமே பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளதாகவும், இதுபற்றி அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் முன்கூட்டியே அந்தந்த பள்ளிகள் மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், வருகிற 19-ந் தேதிக்குள் அனைத்து பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும் என கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    கடலூர் மாவட்டத்தில் டாக்டர், செவிலியர் உள்பட 59 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,619 ஆக உயர்ந்துள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,560 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 1169 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 14 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று சிலரது உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 59 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

    இவர்களில் நல்லூரை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவரும், பண்ருட்டியை சேர்ந்த செவிலியரும், அண்ணாகிராமத்தை சேர்ந்த மருத்துவமனை ஊழியரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் சென்னையில் இருந்து வடலூர், காட்டுமன்னார்கோவில், அண்ணாகிராமம் பகுதிக்கு வந்த 4 பேரும், பெங்களூருவில் இருந்து கம்மாபுரம், கடலூர் வந்த 3 பேரும், பீகாரில் இருந்து என்.எல்.சி. குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒருவருக்கும் சளி, காய்ச்சலால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலம், கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த 16 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதுதவிர பண்ருட்டியை சேர்ந்த கர்ப்பிணிக்கும், புவனகிரியை சேர்ந்த குழந்தை பெற்ற பெண் ஒருவருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த பண்ருட்டி, கடலூர், விருத்தாசலத்தை சேர்ந்த 30 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1619 ஆக உயர்ந்துள்ளது.

    இன்னும் 1,344 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. நேற்று மட்டும் 51 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 1220 பேர் கொரோனா வைரசில் இருந்து குணமடைந்துள்ளனர்.
    கடலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் வண்டிப்பாளையம் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலூர் முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பணம் வைத்து சூதாடிய 5 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த அசோக் (வயது 27), சங்கர்(32), கலியமூர்த்தி மகன் சரவணன்(42), நத்தவெளி ரோடு துரைராஜ்(29), புருகீஸ்பேட்டை சரவணன்(37) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.
    சிதம்பரத்தில் 364 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது தொடர்பாக மாற்று இடம் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் தில்லை காளியம்மன் கோவில் தெரு, பூதக்கேணி, வாகீசன் நகர், குமரன் தெரு, கோவிந்தசாமி தெரு, அண்ணா தெரு உள்ளிட்ட பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுமார் 364 வீடுகள் கடந்த 2018-ம் ஆண்டு இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட 364 குடும்பங்களுக்கும் மாற்று இடம் வழங்குவதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் அப்பகுதி மக்களுக்கு இதுவரை மாற்று இடம் வழங்கப்படவில்லை.

    இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சிதம்பரம் சப்-கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று காலை சிதம்பரம் வடக்கு வீதி தபால் நிலையம் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள், நாங்கள் வீடுகளை இழந்து 2 ஆண்டுகள் ஆகியும், இதுவரை எங்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை. அதனால் எங்களுக்கு விரைவில் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    அண்ணாமலைநகர் அருகே சாலை வரியை ரத்து செய்யக்கோரி வாகன ஓட்டுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    அண்ணாமலைநகர்:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும். சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் நேற்று சி.முட்லூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலகுரு தலைமை தாங்கினார். செயலாளர் மகேந்திரன், நிர்வாகிகள் நைனாமுகமது, ஜோதிராஜ், சையத்முகமது, தனசிங், சக்திவேல், திருஞானம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் சங்க நிர்வாகிகள், வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணனை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய வாகன ஓட்டுநர் பேரவை, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம் மற்றும் அனைத்து மோட்டார் சம்பந்தப்பட்ட சங்கங்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு, ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும், அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி, மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
    ×