என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டது.
கடலூர்:
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் 13,320 மாணவர்களும், 15,710 மாணவிகளும் என மொத்தம் 29,030 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். மார்ச் 24-ந்தேதி நடைபெற்ற இறுதி நாள் தேர்வை ஊரடங்கு உத்தரவால் பல மாணவர்கள் எழுத முடியாமல் போனது. அவர்களுக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மீண்டும் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மாவட்டத்தில் 10,950 மாணவர்களும், 14,111 மாணவிகளும் என மொத்தம் 25,061 மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
இதையடுத்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் அனைவரும் கல்லூரி படிப்பிற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க ஏதுவாக கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்தது. ஆனால் தற்போது கொரோனா வைரசின் பரவல் அதிகமாக இருப்பதால் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறுவதற்காக பள்ளிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது.
அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகளுக்கு நேற்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்காக மாணவ- மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு முக கவசம் அணிந்தபடி நேரில் சென்றனர். அவர்களை சமூக இடைவெளியை பின்பற்றி நிற்க வைத்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வழங்கினர். சில மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருடன் பள்ளிக்கு வந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுச்சென்றனர்.
பரிசோதனை முடிவுகளை விரைவில் அறிந்து கொள்ள வசதியாக கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதாக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேற்று அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தினந்தோறும் சென்னையில் இருந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா பரவலை தடுக்க கிராம, நகர்ப்புற அளவில் 12 மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அரசு டாக்டர்களுடன், தனியார் மருத்துவமனை டாக்டர்களும் தன்னார்வலர்களாக சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். இது தவிர வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதன் மூலம் கொரோனா பரவலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதை கட்டுப்படுத்த முடியும். காய்ச்சல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டால் அங்கு சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் அமைத்து, அவர்களை கண்காணிக்கிறோம். தேவைப்படுவோருக்கு பரிசோதனை மேற்கொள்கிறோம். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமை-னையில் கொரோனா ஆய்வகம் உள்ளது. அதில் பி.சி.ஆர். கருவி வைத்து பரிசோதனை முடிவுகளை துரிதமாக வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது கூடுதலாக ஒரு கருவி அமைத்து, அதிலும் பரிசோதனை செய்து முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர கூடுதலாக கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கான கருவி வரவழைக்கப்பட்டு, அதை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் அதில் உமிழ்நீர், ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து முடிவுகளை விரைவில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வகம் செயல்பாட்டுக்கு வந்தால் நாள் ஒன்றுக்கு 1,500 பேருக்கு பரிசோதனை முடிவுகளை அறிவிக்க முடியும்.
ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணமாக இருந்தால் மட்டுமே வெளியே வர வேண்டும். வர்த்தக சங்கம், செஞ்சிலுவை சங்கம் போன்றவர்கள் ஒத்துழைப்பு தருகிறார்கள். மாவட்டத்தில் போதிய படுக்கை வசதிகள், கட்டமைப்பு வசதிகள் உள்ளன. கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணித்து வருகிறோம். சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோரை கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறினார்.
கொரோனா நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிய வீடுகள் தோறும் சென்று விவரங்களை சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துதல் மற்றும் குறைத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கண்காணிப்பை தீவிரப்படுத்தி நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கும், நோய் தொற்று பரவல் அதிகமுள்ளதாக அறியப்படும் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவதையும் நோக்கமாகக் கொண்டு மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிவதற்காக வீடுகள் தோறும் விவரங்களை பெறும் பணியில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் முதல் நிலை கண்காணிப்பு அலுவலர் என்ற நிலையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த பணியில் சுமார் 2500-க் கும் மேற்பட்ட களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், சுய உதவிக்குழுக்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நபர்கள் உள்ளனர். இவர்கள் தொடர்ந்து ஒரு வார காலம் இந்த பணியில் ஈடுபடுவார்கள்.
இந்த பணியாளர்கள், சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, நுகர்வு மற்றும் சுவை திறன் இழப்பு மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களின் விவரங்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இருதய நோய் மற்றும் சிறுநீரக கோளாறுகள் போன்ற இணை நோய்கள் உள்ளவர்களின் விவரங்களை சேகரிப்பார்கள்.
கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் மற்றும் இணை நோய் உள்ள நபர்கள் குறித்து தினந்தோறும் சேகரிக்கும் விவரங்களை நோய் தொற்று அறிகுறிகளின் அடிப்படையிலும், இணை நோய்களின் அடிப்படையிலும் ஊராட்சி அளவில் உரிய படிவத்தில் சுருக்க விவரம் தயாரிக்க வேண்டும். அத்துடன் குடும்பம் வாரியான விவரங்கள் சேகரிக்கும் படிவங்களை அன்றைய தினமே ஊரக பகுதிகளில் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவரை தலைவராக கொண்டு அமைக்கப்பட்டுள்ள ஊராட்சி அளவிலான கண்காணிப்பு குழுவிற்கு தெரிவிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் சுகாதார மேற்பார்வையாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
வட்டார அளவிலான குழு, நகராட்சி மற்றும் பேரூராட்சி அளவிலான குழு பெறப்பட்ட அறிக்கைகளை உடனடியாக பரிசீலித்து தேவையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து சிறப்பு முகாம்கள் நடத்தி சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, நுகர்வு மற்றும் சுவை திறன் இழப்பு மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் போன்ற அறிகுறிகளுடன் வருவோருக்கு மருத்துவ முகாமிலேயே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் அச்சம் தவிர்த்து நோய் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்
சிதம்பரத்தில் குடோனுக்கு ஏற்றி செல்லும் வழியில் லாரியில் இருந்து தவறி விழுந்த ரேஷன் அரிசி மூட்டைகள் சாலையில் கேட்பாரற்று கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்:
சிதம்பரம் மணுலூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு உள்ளது. ரெயில் மூலம் வரும் ரேஷன் அரிசி மூட்டைகள் கிடங்கில் இறக்கி வைக்கப்படும்.
பின்னர் இங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும். அதன்படி நேற்று சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சரக்கு ரெயில் வந்தது.
பின்னர் ரெயிலில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் சேமிப்பு கிடங்குக்கு எடுத்து செல்லப்பட்டது. அதன்படி ரெயில் நிலையத்தில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று குடோனை நோக்கி சென்று கொண்டிருந்தது. சிதம்பரம் தெற்கு வீதி அருகில் வந்தபோது திடீரென லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 12 அரிசி மூட்டைகள் அடுத்தடுத்து சாலையில் விழுந்தது. இதில் சில மூட்டை கிழிந்து சேதம் அடைந்ததால் அரிசி சாலையில் கொட்டிக் கிடந்தது. ஆனால் இதை டிரைவர் கவனிக்காமல் தொடர்ந்து லாரியை ஓட்டிச்சென்றார்.
லாரியில் இருந்து அரிசி மூட்டைகள் சாலையில் விழுந்தபோது பின்னால் வாகனங்கள் எதுவும் வராததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் சாலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் கேட்பாரற்று கிடந்ததை பார்த்து பொதுமக்கள் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து சாலையில் கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், கொட்டிக்கிடந்த அரிசியையும் அப்புறப்படுத்தினர். பின்னர் நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கு அதிகாரிகளை தொடர்பு கொண்டு லாரியில்இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் தவறி விழுந்து கிடப்பதை தெரிவித்தனர். பின்னர் கிடங்கு ஊழியர்கள் விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகளை எடுத்து சென்றனர். மேலும் இந்த சம்பவத்தால் சிதம்பரம் தெற்கு வீதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லாரியில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் தவறி விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புலம் பெயர்ந்து சொந்த ஊர் திரும்பிய இளைஞர்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.
கடலூர்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டமான ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் ஆகிய நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம், பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி மற்றும் குமராட்சி ஆகிய 6 வட்டாரங்களில் 280 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் திட்ட ஊராட்சிகளில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட முழு முடக்கத்தால், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர் மற்றும் உறுப்பினர் குடும்பங்களை சேர்ந்த புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலம் ரூ.1 லட்சம் வரை நீண்ட கால கடனாக வழங்கப்படும்.
இந்த நிதியை பெற புலம் பெயர்ந்து சொந்த ஊர் திரும்பிய 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களும், பெண்கள் என்றால் 18 வயது முதல் 40 வரை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்நிதியை பெற பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம், பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி மற்றும் குமராட்சி வட்டாரங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் புதுப்பாளையம் இரட்டைபிள்ளையார்கோவில் தெருவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலகத்தை நேரிலும், 04142-210185 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திட்டக்குடி, ராமநத்தம் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநத்தம்:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ராமநத்தம் பஸ்நிலையத்தில் கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு திட்டக்குடி வட்ட பொருளாளர் முருகன் தலைமை தாங்கினார். 2017-18 ம் ஆண்டு அரைத்த கரும்புக்கான பணம் ரூ.42 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும், கொரோனா காலத்தில் விவசாயிகளை பாதுகாத்திட குடும்பத்திற்கு ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும், 2020-21-ம் ஆண்டிற்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரத்து 500 அறிவிக்ககோரியும், ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.400 வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்ட செயலாளர் மகாலிங்கம் மற்றும் இளவரசன், தங்கராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு விவசாய சங்க துணை தலைவர் வரதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் மகாலிங்கம், வட்ட துணை செயலாளர் அன்பழகன், கிளை செயலாளர் மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக அதிகரித்துள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 58 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக அதிகரித்துள்ளது. விநாடிக்கு 1,195 கனஅடி நீர் வரும் நிலையில் சென்னை குடிநீர் தேவைக்காக 58 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
இதனால் சிதம்பரம் வட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக அதிகரித்துள்ளது. விநாடிக்கு 1,195 கனஅடி நீர் வரும் நிலையில் சென்னை குடிநீர் தேவைக்காக 58 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
இதனால் சிதம்பரம் வட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முழு ஊரடங்கை மீறி கடலூர் பாதிரிக்குப்பத்தில் திறந்திருந்த மரக்கடைக்கு கலெக்டர் உத்தரவின்பேரில் வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
கடலூர்:
கொரோனா பரவுவதை தடுக்க நேற்று கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவை பொதுமக்கள், வணிகர்கள் சரியான முறையில் கடைபிடிக்கிறார்களா? என்று மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேற்று மாலை கடலூர் பாதிரிக்குப்பத்தில் திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது சிலர் சாலையோரம் முககவசம் அணியாமல் இருந்தனர். அவர்களை கண்டித்த கலெக்டர், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்ததோடு, சமூக இடைவெளியை பின்பற்ற உத்தரவிட்டார். மேலும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளையும் தேவையின்றி வெளியே சுற்றித்திரியக்கூடாது என்று எச்சரிக்கை செய்தார்.
தொடர்ந்து பாதிரிக்குப்பம் மெயின்ரோட்டில் ஒரு மரக்கடை திறந்து இருந்தது. இதை பார்த்த கலெக்டர், முழு ஊரடங்கை மீறி ஏன் கடையை திறந்து வைத்து உள்ளர்கள் என்று கடை உரிமையாளரை கடுமையாக எச்சரிக்கை செய்தார். அதையடுத்து அந்த கடைக்கு சீல் வைக்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து தாசில்தார் செல்வக்குமார் முன்னிலையில் அந்த மரக்கடைக்கு கிராம நிர்வாக அலுவலர் வீரபாலன் மற்றும் அலுவலர்கள் சீல் வைத்தனர்.
அதன்பிறகு திருவந்திபுரம், வெள்ளகேட், கோண்டூர் ஆகிய இடங்களில் ஆய்வு செய்த கலெக்டர் செம்மண்டலம் வழியாக அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார், ஆட்டோ வந்தது. அதை மறித்த கலெக்டர், அதில் இருந்தவர்களிடம் முழு ஊரடங்கை மீறி எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டு எச்சரிக்கை செய்தார். மேலும் ஆட்டோ, கார் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்க போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆய்வின் போது தாசில்தார் செல்வக்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கதிரவன் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
கொரோனா பரவுவதை தடுக்க நேற்று கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவை பொதுமக்கள், வணிகர்கள் சரியான முறையில் கடைபிடிக்கிறார்களா? என்று மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேற்று மாலை கடலூர் பாதிரிக்குப்பத்தில் திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது சிலர் சாலையோரம் முககவசம் அணியாமல் இருந்தனர். அவர்களை கண்டித்த கலெக்டர், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்ததோடு, சமூக இடைவெளியை பின்பற்ற உத்தரவிட்டார். மேலும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளையும் தேவையின்றி வெளியே சுற்றித்திரியக்கூடாது என்று எச்சரிக்கை செய்தார்.
தொடர்ந்து பாதிரிக்குப்பம் மெயின்ரோட்டில் ஒரு மரக்கடை திறந்து இருந்தது. இதை பார்த்த கலெக்டர், முழு ஊரடங்கை மீறி ஏன் கடையை திறந்து வைத்து உள்ளர்கள் என்று கடை உரிமையாளரை கடுமையாக எச்சரிக்கை செய்தார். அதையடுத்து அந்த கடைக்கு சீல் வைக்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து தாசில்தார் செல்வக்குமார் முன்னிலையில் அந்த மரக்கடைக்கு கிராம நிர்வாக அலுவலர் வீரபாலன் மற்றும் அலுவலர்கள் சீல் வைத்தனர்.
அதன்பிறகு திருவந்திபுரம், வெள்ளகேட், கோண்டூர் ஆகிய இடங்களில் ஆய்வு செய்த கலெக்டர் செம்மண்டலம் வழியாக அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார், ஆட்டோ வந்தது. அதை மறித்த கலெக்டர், அதில் இருந்தவர்களிடம் முழு ஊரடங்கை மீறி எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டு எச்சரிக்கை செய்தார். மேலும் ஆட்டோ, கார் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்க போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆய்வின் போது தாசில்தார் செல்வக்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கதிரவன் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
கடலூர் கீழ்அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் சுபாஷ் மர்ம நபர்கள் சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் கீழஅருங்குணம் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வந்தவர் சுபாஷ். இவர் விடுதலை சிறுத்தைகள் கிழக்கு கட்சியின் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் இன்று மாலை கீழ்அருங்குணத்தில் மர்ம நபர்கள் சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் முன்பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை குறித்து நெல்லிக்குப்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் கீழஅருங்குணம் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வந்தவர் சுபாஷ். இவர் விடுதலை சிறுத்தைகள் கிழக்கு கட்சியின் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் இன்று மாலை கீழ்அருங்குணத்தில் மர்ம நபர்கள் சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் முன்பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை குறித்து நெல்லிக்குப்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நீரில் தவறி விழுந்த சிறுவன், சிறுமி உயிரிழந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஏ.கே.பாளையத்தில் செங்கல்சூளைக்கு மண் எடுத்த பள்ளத்தில் நீர் தேங்கி இருந்தது. அந்த பள்ளத்தில் தவறி விழுந்த சிறுவன் ஆதித்யா, சிறுமி பாரதி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஏ.கே.பாளையத்தில் செங்கல்சூளைக்கு மண் எடுத்த பள்ளத்தில் நீர் தேங்கி இருந்தது. அந்த பள்ளத்தில் தவறி விழுந்த சிறுவன் ஆதித்யா, சிறுமி பாரதி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரத்தில் விஷம் குடித்து பல்கலைக்கழக ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சிதம்பரம்:
சிதம்பரம் வேங்கான் தெருவில் வசித்து வருபவர் செல்வமுத்துக்குமரன்( வயது 47). இவரது மனைவி ரம்யா(37), இவர்களுக்கு கிருஷ்ணன்(14) என்ற மகனும், கிருஷ்ணவேணி(14) என்ற மகளும் உள்ளனர். செல்வமுத்துக்குமரன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் செல்வமுத்துக்குமரனின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் வீட்டின் பக்கவாட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது செல்வமுத்துக்குமரன் வாயில் நுரைதள்ளியபடி இறந்து கிடந்தார். மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் சிதம்பரம் நகர போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரம்யா உள்பட 3 பேரையும் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இறந்து கிடந்த செல்வமுத்துக்குமரன் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்வமுத்துக்குமரனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் செல்வமுத்துக்குமரன் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மனைவி ரம்யாவுக்கு திருச்சி சென்று மருந்து மாத்திரை வாங்கி வந்துள்ளார். ஆனால் ஊரடங்கு காரணமாக திருச்சிக்கு சென்று மருந்து வாங்கி வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ரம்யா மனநலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. மேலும் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த செல்வமத்துக்குமரன் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விஷம்குடித்து பல்கலைக் கழக ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியதாவது:-
மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகமான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நோய் தொற்று பரவுவது தடுக்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள 36 கட்டுப்பாட்டு பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தொற்று பரவாமல் தடுக்க அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி முன்னிலையில் அமைச்சர் எம்.சி.சம்பத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள வியாபாரிகள் இரவு நேரத்தில் இருட்டாக இருப்பதால், அந்த பகுதியில் மின்விளக்கு அமைக்க வேண்டும். மழை பெய்யும் போது கடைகளுக்குள் தண்ணீர் செல்கிறது. ஆகவே தண்ணீர் தேங்காதவாறு சிறிய வடிகால் அமைத்து தண்ணீரை வடிய வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட அமைச்சர், உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பிறகு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமையும் அமைச்சர் எம்.சி.சம்பத் பார்வையிட்டு, அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் முறையை ஆய்வு செய்தார். பின்னர் நோயாளிகளுக்கு சத்து மாத்திரை, முக கவசம் ஆகியவற்றை வழங்கினார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா, நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, பொறியாளர் புண்ணியமூர்த்தி, உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், முன்னாள் நகரசபை தலைவர் குமரன், ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பழனிசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் கந்தன், ஆர்.வி.மணி, எம்.ஜி.ஆர். என்கிற ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






