என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் அருகே தாழங்குடா கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
    கடலூர்:

    கடலூர் அருகே   தாழங்குடா கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.  இந்த மோதலில், இதில் ஒரு தரப்பினர், தாழங்குடா கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட படகுகளில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட மீன்பிடி வலைகளுக்கும் தீ வைத்து, விட்டு அந்த தரப்பினர் தப்பி ஓடிவிட்டனர். கடற்கரையோரத்தில் படகுகளும், மீன்பிடி வலைகளும் கொளுந்து விட்டு எரிந்தன.

    இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனுவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். நிகழ்விடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பதற்றம் தணிக்கப்பட்டது.

    இந்த நிலையில்,  தாழங்குடா கிராமத்தில் நடைபெற்ற மோதல்  தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டுள்ளார். மோதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து வருவாய் துறையினர், மற்றும் மீன்வளத்துறையினர் கணக்கெடுக்கும் பணியை துவங்கினர். மோதல் தொடர்பாக 60-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடலூர் அருகே உள்ள தாழங்குடா கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி. இவர், குண்டுஉப்பலவாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். தற்போது குண்டுஉப்பலவாடி ஊராட்சி மன்ற தலைவராக மதியழகன் மனைவி சாந்தி உள்ளார். உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக மாசிலாமணி தரப்பினருக்கும், மதியழகன் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் மாசிலாமணியின் தம்பியான மீனவர் மதிவாணன்(வயது 36) என்பவர் நேற்று இரவு 9 மணி அளவில் கண்டக்காட்டில் இருந்து தாழங்குடா நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது 2 கிராமத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கும்பல் அரிவாள், உருட்டுக்கட்டை, கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை வழிமறித்தது.இந்த கும்பலை பார்த்ததும் மதிவாணன், மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் போட்டுவிட்டு ஓடினார். உடனே அந்த கும்பல் அவரை விரட்டிச்சென்று சரமாரியாக தாக்கியது. மேலும் அந்த கும்பலில் அரிவாள் வைத்திருந்தவர்கள், மதிவாணனை சரமாரியாக வெட்டினர். 

    இதில் அவரது தலை, கை, கால் ஆகிய பகுதிகளில் வெட்டுக்காயங்கள் விழுந்தன.உருக்குலைந்து கீழே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். மதிவாணன் இறந்ததை உறுதி செய்ததும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

    இது பற்றி அறிந்ததும் மாசிலாமணியின் குடும்பத்தினர் மற்றும் அவரது தரப்பினர், அங்கு திரண்டு வந்தனர். மதிவாணன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அவர்கள், கதறி அழுதனர். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு கும்பல் தாழங்குடா கிராமத்திற்கு 
    சென்று 6 வீடுகளை அடித்து, நொறுக்கினர்.

    மேலும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களை உடைத்து, சேதப்படுத்தி சூறையாடினர். தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களுக்கும் அவர்கள் தீ வைத்தனர். இதை தட்டிக்கேட்டதால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் ஒரு தரப்பினர், தாழங்குடா கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட படகுகளில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட மீன்பிடி வலைகளுக்கும் தீ வைத்து, விட்டு அந்த தரப்பினர் 
    தப்பி ஓடிவிட்டனர். கடற்கரையோரத்தில் படகுகளும், மீன்பிடி வலைகளும் கொளுந்து விட்டு எரிந்தன.

    இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனுவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இதனை தொடர்ந்து மதிவாணனின் உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த கொலையால் தாழங்குடாவில் பதற்றமான சூழல் நிலவியது.

    எனவே பாதுகாப்புக்காக மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு, குவிக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட மதிவாணனுக்கு பிரதீமா(29) என்ற மனைவியும், துவாரகா(9) என்ற மகளும், பிரேமேஷ்(5) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில் இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. எழிலரசன், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் ஆகியோர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் தீவைத்து எரிக்கப்பட்ட படகுகள் மற்றும் சூறையாடப்பட்ட வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் போலீசார் 
    தெரிவித்தனர்.

    சேத்தியாத்தோப்பு மனித உரிமை கழகம் மற்றும் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    சேத்தியாத்தோப்பு:

    சேத்தியாத்தோப்பு அடுத்த ஆனைவாரி கிராமத்தில் சேத்தியாத்தோப்பு மனித உரிமை கழகம் மற்றும் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மனித உரிமை கழக துணை பொதுச்செயலாளர் டாக்டர் ஆனந்தபாபு தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் சந்தோஷ் ஞானசேகரன், ஒன்றிய செயலாளர் பந்தல்ராஜா, பன்னீர்செல்வம், தமிழரசன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் கடலூர் வட்டாரம் சார்பில் ஒரு பரு கரணை மூலம் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்து மாவட்ட விவசாயிகளுக்கு இணைய தளம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
    கடலூர்:

    வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை, வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் கடலூர் வட்டாரம் சார்பில் ஒரு பரு கரணை மூலம் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்து மாவட்ட விவசாயிகளுக்கு இணைய தளம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களில் இருந்தும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலகங்களில் இருந்தபடியே பயிற்சியில் கலந்து கொண்டனர்.

    பயிற்சியை கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கடலூர் வேளாண்மை துணை இயக்குனர் வேல்விழி, வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன், நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை விரிவாக்கத்துறை தலைவர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில் ஒரு பரு கரணை மூலம் நாற்றங்கால் அமைத்து பின் நடவு செய்தல், உரமிடுதல், பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கப்பட்டது. ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குனர் கண்ணாரப்பேட்டை மணி நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்து தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

    பயிற்சியில் கடலூர் வேளாண்மை அலுவலர் சுகன்யா, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் இளங்கோவன், உதவி தொழில்நுட்ப மேலாளர் அருண்ராஜ், கண்ணன், அட்மா திட்ட அலுவலக கணினி இயக்குனர் சிவக்குமார், கணக்காளர் மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக விவசாயிகளை நேரில் வரவழைக்காமல் புது முயற்சியாக இணைய தள வழி மூலம் அதிகாரிகள் பயிற்சி அளித்துள்ளனர்.
    சிதம்பரத்தில் இன்ஸ்பெக்டர் வீடு உள்பட 6 இடங்களில் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள வைகை நகரை சேர்ந்தவர் நடனசேகர். இவர் சென்னையில் சி.ஆர்.பி.எப். பிரிவில் இன்ஸ்பெக்டராக உள்ளார். நடனசேகர் தனது குடும்பத்துடன் சென்னையிலேயே வசித்து வருவதால், கடந்த 6 மாதங்களாக சிதம்பரத்துக்கு வரவில்லை. இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி காலையில் இவரது வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டின் உள்ளே இருந்த பீரோ கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. அதில் இருந்த நகை-பணத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது.

    இதேபோல் சிதம்பரம் நடராஜ காட்டன், பள்ளிப்படை, பூதகேணி, நடேசன் நகர், ஆசீர்வாத நகர் ஆகிய இடங்களில் உள்ள வீடுகளிலும் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்தது. அடுத்தடுத்து 6 வீடுகளில் கொள்ளை நடந்ததால் நகர மக்கள் பீதி அடைந்தனர். அதேநேரத்தில் கொள்ளையனை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து கொள்ளையனை பிடிக்க சிதம்பரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்முருகன், லூயிஸ்ராஜ் மற்றும் போலீசார் சிதம்பரம் மீதிகுடி ரெயில்வேகேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து, போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரை நகர போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஷாஜகான்(வயது 52) என்பதும், தற்போது சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் தெருவில் மனைவி, குழந்தையுடன் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவர், சிதம்பரம் பகுதியில் காலை நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, இரவில் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து ஷாஜகானை போலீசார் கைது செய்தனர். மேலும் மேற்கண்ட 6 வீடுகளில் இருந்து கொள்ளையடித்ததாக அவரிடம் இருந்த 10 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப்பொருட்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டனர்.

    சிறுமிகளின் ஆபாச படங்களை டுவிட்டரில் பதிவிட்ட பொறியாளரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    கடலூர்:

    சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு அதனை தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவேற்றம் செய்த பொறியாளர் இளவரசன் என்பவரை கடலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கடலூர் எஸ்.என்.சாவடிரட்சகர் நகரை சேர்ந்தவர் கண்ணன் . இவருடைய மகன் இளவரசன். இவர் ஒரு பொறியாளர். இவர்  தனியார் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுது பார்க்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் . சமீபத்தில் இவர் சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு அதனை தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது.

    அதனைத் தொடர்ந்து மற்றவர்களுக்கும் தன்னுடைய செல்போன் மூலமாக அனுப்பியுள்ளார். இதை தேசிய குழந்தைகள் பாலியல் தடுப்பு மைய அதிகாரிகள் கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை குழந்தைகள் நலக்குழுவுக்கு உத்தரவிட்டனர்.

    அவர்கள் உடனே கடலூர் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் கடலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்தனர்.

    புதுப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுப்பேட்டை:

    புதுப்பேட்டை அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி சத்யா (வயது 45). இவர் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று காலை இவர் தனது வீட்டில் உள்ள மின் மோட்டாரை இயக்க சுவிட்சை ஆன் செய்தார். 

    அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், தீபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

    மேலும் இறந்த சத்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது கணவர் ராஜ்குமார் கொடுத்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமாவளவன் பிறந்தநாளில் ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்க விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    கடலூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட செயலாளர் துரை.மருதமுத்து, தெற்கு மாவட்ட செயலாளர் பால.அறவாழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் மாவட்ட துணை அமைப்பாளர் மோ.தாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் முரளி, நகர செயலாளர் ராஜதுரை, நகர துணை செயலாளர்கள் சசிதரன், பிரபு, ராஜ்குமார், புவனகிரி மாறன் நெய்வேலி குழந்தைராஜ், ரவி, மோகன், ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆகஸ்டு 17-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடுவது, அன்றைய தினத்தில் ரத்த தானம் வழங்குவது, ஏழை , எளிய மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்குவது, மக்களுக்கு நிவாரணம், அன்னதானம் வழங்குவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கொரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கொரோனா தொற்றால் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பலியான பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பணியாளர் குடும்பத்தின் மருத்துவ செலவை முழுமையாக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் 28-ந்தேதி (அதாவது நேற்று) முதல் வருகிற 3-ந்தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து மாநிலந்தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அந்த வகையில் கடலூர் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு, டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் நேற்று காலை கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் அல்லிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயல் தலைவர் கோபால்சாமி, மாவட்ட செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சரவணன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். இதில் வட்ட தலைவர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், வடலூர், பரங்கிப்பேட்டை மற்றும் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினர் நாடு தழுவிய தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    கடலூர்:

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அனைத்து கடன்களையும் சங்கத்தின் மூலம் வழங்க வேண்டும். கொரோனா காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ரேசன்கடை பணியாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்த கமிட்டியை அமைப்பதுடன் அவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினர் நாடு தழுவிய தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூரில் ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மாவட்ட செயலாளர் சேகர், ஒன்றிய தலைவர் விஜயகுமார், பொருளாளர் கோவிந்தராஜலு உள்பட பலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
    கருவேப்பிலங்குறிச்சி அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ராஜேந்திரப்பட்டினம் ஊராட்சியில் குறுவை அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் வகையில் அப்பகுதியில் உள்ள திருக்குமாரசாமி கோவில் அருகே தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 23-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த நிலையில் அப்பகுதியில் கோவில் இருப்பதால், இங்கு நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்கக்கூடாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சிலர் புகார் அளித்தனர்.

    இதனால் நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்தபடவில்லை. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் பெய்த மழையால் நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக வைத்திருந்த நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைந்தது. இதையடுத்து தங்களது நெல்மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நிலையத்திற்கு அதிகாரிகள் வந்தனர். அப்போது அங்கு வந்த சிலர் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை இங்கு செயல்படுத்தக்கூடாது. வேறு இடத்துக்கு மாற்றுங்கள் என்று கூறினர். இதற்கு ஏராளமான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து இந்தாண்டு மட்டும் நேரடி நெல்முதல் நிலையத்தை செயல்படுத்தவும், வரும் ஆண்டுகளில் இங்கு நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதால், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    குறிஞ்சிப்பாடி அருகே குடும்ப தகராறில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி புவனகிரி சாலையில் வசித்து வந்தவர் ஜோதி (வயது 45). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ஜோதி, குறிஞ்சிப்பாடி அண்ணாநகர் பைபாஸ் ரோட்டை சேர்ந்த ராமலிங்கம் மகன் மாயவேல்(39) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. 

    குடிப்பழக்கம் உடைய மாயவேல் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் குடித்து விட்டு போதையில் வந்த மாயவேல், ஜோதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

    இதில் ஆத்திரமடைந்த அவர், ஜோதியை சரமாரியாக அடித்து உதைத்ததாக தெரிகிறது. இதில் அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாயவேல், அவரை சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ஜோதி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

    இதற்கிடையே ஜோதியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வந்தது. அதில் ஜோதி தாக்கப்பட்டதால் தான் இறந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. அதன் பேரில் போலீசார் சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து மாயவேலை கைது செய்தனர்.
    கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த 27 மீனவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரி ஒரு தரப்பினரும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினரும் கடந்த சில வாரங்களாக அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி சம்பவத்தன்று மீன்பிடித்ததாக தெரிகிறது. 

    இதுபற்றி அறிந்த கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரம்யாலட்சுமி, கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்த 27 மீனவர்கள் மீது துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×