என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசாரால் கைது செய்யப்பட்ட ஷாஜகானையும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களையும் படத்தில் காணலாம்.
    X
    போலீசாரால் கைது செய்யப்பட்ட ஷாஜகானையும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களையும் படத்தில் காணலாம்.

    இன்ஸ்பெக்டர் வீடு உள்பட 6 இடங்களில் திருடிய கொள்ளையன் கைது - ரூ.5 லட்சம் பொருட்கள் மீட்பு

    சிதம்பரத்தில் இன்ஸ்பெக்டர் வீடு உள்பட 6 இடங்களில் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள வைகை நகரை சேர்ந்தவர் நடனசேகர். இவர் சென்னையில் சி.ஆர்.பி.எப். பிரிவில் இன்ஸ்பெக்டராக உள்ளார். நடனசேகர் தனது குடும்பத்துடன் சென்னையிலேயே வசித்து வருவதால், கடந்த 6 மாதங்களாக சிதம்பரத்துக்கு வரவில்லை. இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி காலையில் இவரது வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டின் உள்ளே இருந்த பீரோ கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. அதில் இருந்த நகை-பணத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது.

    இதேபோல் சிதம்பரம் நடராஜ காட்டன், பள்ளிப்படை, பூதகேணி, நடேசன் நகர், ஆசீர்வாத நகர் ஆகிய இடங்களில் உள்ள வீடுகளிலும் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்தது. அடுத்தடுத்து 6 வீடுகளில் கொள்ளை நடந்ததால் நகர மக்கள் பீதி அடைந்தனர். அதேநேரத்தில் கொள்ளையனை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து கொள்ளையனை பிடிக்க சிதம்பரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்முருகன், லூயிஸ்ராஜ் மற்றும் போலீசார் சிதம்பரம் மீதிகுடி ரெயில்வேகேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து, போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரை நகர போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஷாஜகான்(வயது 52) என்பதும், தற்போது சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் தெருவில் மனைவி, குழந்தையுடன் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவர், சிதம்பரம் பகுதியில் காலை நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, இரவில் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து ஷாஜகானை போலீசார் கைது செய்தனர். மேலும் மேற்கண்ட 6 வீடுகளில் இருந்து கொள்ளையடித்ததாக அவரிடம் இருந்த 10 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப்பொருட்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டனர்.

    Next Story
    ×