search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்.
    X
    சிதம்பரத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்.

    சிதம்பரத்தில் 364 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: மாற்று இடம் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயற்சி

    சிதம்பரத்தில் 364 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது தொடர்பாக மாற்று இடம் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் தில்லை காளியம்மன் கோவில் தெரு, பூதக்கேணி, வாகீசன் நகர், குமரன் தெரு, கோவிந்தசாமி தெரு, அண்ணா தெரு உள்ளிட்ட பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுமார் 364 வீடுகள் கடந்த 2018-ம் ஆண்டு இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட 364 குடும்பங்களுக்கும் மாற்று இடம் வழங்குவதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் அப்பகுதி மக்களுக்கு இதுவரை மாற்று இடம் வழங்கப்படவில்லை.

    இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சிதம்பரம் சப்-கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று காலை சிதம்பரம் வடக்கு வீதி தபால் நிலையம் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள், நாங்கள் வீடுகளை இழந்து 2 ஆண்டுகள் ஆகியும், இதுவரை எங்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை. அதனால் எங்களுக்கு விரைவில் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×