என் மலர்
கடலூர்
பண்ருட்டி:
கடலூரை அடுத்த ஆலப்பாக்கம் அருகே பெருமாள் ஏரி உள்ளது. தொடர் மழை காரணமாக இந்த ஏரி முழு கொள்ளளவான 6½ அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் 9,800 கனஅடி உபரிநீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.இதன் காரணமாக ஆதிநாராயணபுரம், திருச்சோபுரம், ஆலப்பாக்கம், அகரம், பூண்டியாங்குப்பம், பெரியபட்டு உள்பட 23 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த கிராமங்களை எந்த நேரத்திலும் வெள்ளம் சூழ்ந்து விடும் அபாய நிலை உள்ளதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையிலான மீட்பு குழுவினர் அதிரடி நட வடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 செ.மீ., பரங்கிப்பேட்டையில் 26 செ.மீ., காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடியில் 25 செ.மீ., பேச்சியார்தோப்பு 20, புவனகிரி 19 செ.மீ., கொத்தவாச்சேரியில் 33 செ.மீ., லால்பேட்டையில் 29 செ.மீ. மழை பதிவானது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 22 செ.மீ., குடவாசலில் 21 செ.மீ., நன்னிலத்தில் 14 செ.மீ., வலங்கைமானில் 13 செ.மீ. மழை பதிவானது.
மயிலாடுதுறை கொள்ளிடத்தில் 33 செ.மீ., சீர்காழி 19 செ.மீ., தரங்கம்பாடியில் 5 செ.மீ. மழை பதிவானது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 20 செ.மீ., தங்கச்சிமடத்தில் 8 செ.மீ., பாம்பனில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
கரூர் மாவட்டத்தில் பாலவிடுதி 5 செ.மீ., மயிலம்பட்டி 4 செ.மீ., கிருஷ்ணாபுரம், மாயனூர், அரவக்குறிச்சியில் தலா 2 செ.மீ. மழை பதிவானது.
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் 11 செ.மீ., திருமானூர் 9.7 செ.மீ., செந்துறை 9.5 செ.மீ., அரியலூரில் 7.4 செ.மீ. மழை பதிவானது.
பெரம்பலூர், மன்னார்குடியில் தலா 10 செ.மீ., உத்திரமேரூரில் 7 செ.மீ., காஞ்சிபுரத்தில் 4 செ.மீ., ஸ்ரீபெரும்புதூரில் 3 செ.மீ. மழை பதிவானது.
திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை, ஜீரோ பாயிண்ட்டில் தலா 11 செ.மீ., சோழவரத்தில் 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:
வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மிககன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது.
கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுநகர், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், வண்டி பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று காலைமுதல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக் கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் களம் போல் தேங்கிநின்றது.
மழையின் காரணமாக காலைநேரத்திலும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். பாத சாரிகள் மழையில் நனைந்த படியும், குடை பிடித்த படியும் சென்றதை காண முடிந்தது.
ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுபட்டார பகுதி களான தேத்தாம்பட்டு, ஸ்ரீநெடுஞ்சேரி, சாத்தமங்களம், குணமங்களம், சுத்துகுறிச்சி, பாளையங்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 4 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு இரவு முழுவதும் பெய்து கொண்டே இருந்தது.
இதனால் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள வியாசமணி தெரு, எம்.ஜி.ஆர்.நகர், மலைமேடு, பாணக்கார தெரு பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர்புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். வீடுகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் சரியாக தூர்வாராபடாமல் இருப்பதால் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் இரவில் வீடுகளில் தூங்க முடியாமல் கடும் அவதியடைந்தோம்.
வடிகால் வாய்க்காள்களை தூர்வாரவேண்டும் என்று சம்மந்தப்பட்டதுறை அதிகாரிகளுடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் பெண்ணாடம் சுற்றுவட்டாரபகுதிகளில் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடிய விடிய தொடர் மழை காரணமாக பெண்ணாடத்தில் கடை வீதி மற்றும் பஸ் நிலையம் திட்டக்குடி விருத் தாசலம் சாலையில் பொதுமக்கள் இன்றி வெறிச் சோடி காணப்பட்டது.
தினந்தோறும் காலை 7 மணிக்கு வணிகர்கள் தங்களது வணிக நிறுவன ங்களை திறப்பது வழக்கம் மழை காரணமாக 8 மணியாகியும் யாரும் கடைகளை திறக்க வில்லை. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தேங்கிய மழை நீரை அகற்ற வராததால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை பொதுமக்களே சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த 2 நாட்களாக காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது.
இன்று காலை ஏரியின் நீர்மட்டம் 45.90 அடியாக இருந்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி வடவாறில் இருந்து ஏரிக்கு வரும் நீர் குறைக்கப்பட்டு 51 கனஅடி நீர்மட்டுமே வந்து கொண்டிருந்தது. தற்போது ஏரியின் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. ஏரியில் இருக்கும் தண்ணீரை வி.என்.எலஸ். மதகு வழியாக 90 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டம் செங்கால்ஓடையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று காலை வரை 41 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர் மழை காரணமாக நேற்று மதியம் அது 110 கனஅடி நீராக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி வடவாறில் இருந்து வரும் தண்ணீரின் அளவு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தொடர் மழை காரணமாக வடவாறுக்கும் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் வடவாறில் இருந்து இன்று மதியத்துக்கு மேல் 900 கனஅடி நீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட உள்ளது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயரக்கூடும். அதற்கேற்ப ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து வீராணம் ஏரியை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் மணல் மூட்டைகளை கொண்டு வீராணம் ஏரியின் கரையை பலப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் வீராணம் ஏரியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதி பொதுமக்களிடையே வீராணம் ஏரி நிரம்பி வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
வீராணம் ஏரி நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கரையோர பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக திருமண மண்டபங்கள், முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
தற்போது வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக ராட்சத குழாய் மூலம் 68 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
விருத்தாசலம் அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்காரன் மகன் வேல்முருகன் (வயது 37) விவசாயி. இவருக்கு உஷா என்கிற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உஷா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் கார்கூடல் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வேல்முருகன் உஷாவை நேரில் சந்தித்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு உஷா மறுத்து விட்டார்.
இதனால் மனமுடைந்த வேல்முருகன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், வேல்முருகன் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






