என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கருக்கை பகுதியைச் சேர்ந்தவர் ராசாத்தி (வயது 60). இவரது உறவினர் சாரங்கபாணி நேற்று இரவு மினி லாரியில் ராசாத்தியின் வீட்டிற்கு சென்றார்.
அப்போது அந்த பகுதியில் உள்ள சந்திரலேகா என்பவரின் வீட்டிற்குள் ஒருவர் செல்கிறார் என சந்திரலேகாவின் உறவினர்களான சதீஷ்குமார் (20), தனவேல் (50) ஆகியோரிடம் சென்று சாரங்கபாணி கூறினார்.
உடனே அவர்கள் 2 பேரும் எங்களது உறவினர் வீட்டிற்கு யார் சென்றால் உனக்கு என்ன என்று கேட்டு சாரங்கபாணியை அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டினர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சதீஷ்குமார், தனவேல் ஆகிய 2 பேரும் சேர்ந்து சாரங்கபாணியை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த ராசாத்தி மற்றும் அவரது மகள் சங்கீதா ஆகிய 2 பேரும் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்றனர்.
இதில் மேலும் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், தனவேல் ஆகிய 2 பேரும் சேர்ந்து ராசாத்தியை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ராசாத்தி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், தனவேல் ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமயிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட ராசாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய சதீஷ்குமார், தனவேல் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ப.எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ். கூலித் தொழிலாளி. அவரது மனைவி பாக்கியலட்சுமி(வயது36) இவர்களின் மகள் திவ்யா, (17) இருப்புக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மகன் திவாகரன் (15) என்பவர் கோட்டேரி அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
பாக்கியராஜ் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது உண்டு. இதனை பாக்கியலட்சுமி தட்டிக்கேட்டதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் பாக்கியராஜ் தனது பிள்ளைகளிடமும் குடிபோதையில் தகராறு செய்து வந்தார்.
நேற்றும் வழக்கம் போல் மது அருந்த போவதாக பாக்கியலட்சுமிக்கு, பாக்கியராஜ் செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தார்.
இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி தனது மகள் திவ்யா, திவாகரன் ஆகியோரை நேற்று மாலை அதே பகுதியில் உள்ள சொந்த நிலத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு மூவரும் முந்திரி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து ஆலடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
ஒரே குடும்பத்தில் தாய், மகள், மகன் என 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பொது போக்குவரத்து, வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிபந்தனைகளுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவில்களில் திருமணம் நடத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முகூர்த்தநாளான இன்று திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் முன்பு திருமண ஜோடிகள் மற்றும் அவரது உறவினர்கள் திரண்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் மலைமீது உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதற்கு அனுமதிக்கவில்லை. இதையடுத்து திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் முன்பு உள்ள சாலையில் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

இன்று காலை நடைபெற்ற பெரும்பாலான திருமணத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒரே இடத்தில் திரண்டு இருந்ததால் தொற்று நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் நிலவியது.
ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற முகூர்த்த நாட்கள் மற்றும் முக்கிய விழா நாட்களில் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்கள் கூட்டம் சேராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கிள்ளை அருகே உள்ள பனங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமதுரை மகன் வேல்முருகன் (வயது 45). இவருடைய வீட்டின் அருகில் குட்டை ஒன்று உள்ளது. இந்த குட்டையில் வேல்முருகனின் தம்பி விவசாயி ராஜீவ்காந்தி(35) என்பவர் நேற்று முன்தினம் இரவு குளிப்பதற்காக சென்றார்.
அவா் தண்ணீருக்குள் இறங்கியபோது, அங்கு முதலை ஒன்று வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அலறியடித்துக் கொண்டு குட்டையில் இருந்து வெளியே ஓடினார்.
ஆனால் அதற்குள் அந்த முதலை ராஜீவ்காந்தியை பிடித்து, கடித்து குதறியது. இதில் அவரது முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இருப்பினும் முதலையிடம் இருந்து சாமா்த்தியமாக தப்பிய ராஜீவ்காந்தி, ஊருக்குள் சென்று பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே அப்பகுதி பொதுமக்கள் அந்த குட்டைக்கு ஒன்று திரண்டு சென்றனா். பின்னா் குட்டைக்குள் இறங்கி நீண்ட நேரம் போராடி அந்த முதலையை பிடித்தனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று, பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த முதலையை கைப்பற்றினா். பின்னா் அதனை பிடித்து பாதுகாப்பாக வக்காரமாரி நீர்த்தேக்கத்திற்கு கொண்டு சென்று விட்டனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே உள்ள தவர்த்தான்பட்டு குளத்து மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 48). தொழிலாளியான இவர் நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள வடக்கு ராஜன் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வாய்க்காலில் இருந்த முதலை ஒன்று மாரியப்பனை கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து முதலையை விரட்டி மாரியப்பனை மீட்டனர். பின்னர் அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வடக்கு ராஜன் வாய்க்காலில் ஏராளமான முதலைகள் இருப்பதாகவும், அவைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பொதுமக்களை கடிக்கின்றன. எனவே அவற்றை பிடித்து நீர்த்தேக்கத்தில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள அகர சோழதரம் பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது.
இந்த அங்கன்வாடி மையத்திலிருந்து குழந்தைகள் நேற்று மாலை வீட்டிற்கு சென்றவுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வழக்கம்போல் அங்கன்வாடி கட்டிடத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.
இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நள்ளிரவில் அங்கன்வாடி மையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கன்வாடி மையக் கட்டிடத்தின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு இருந்த பாத்திரங்கள் மற்றும் அரிசி பருப்புகளை கொள்ளையடித்து கொண்டு மர்ம மனிதர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அங்கன்வாடி மையத்தில் ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சோழதரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கொள்ளை நடந்த அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அங்கன்வாடி மையத்தில் புகுந்து பாத்திரங்கள் மற்றும் அரிசி பருப்புகளை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம்:
தமிழகம் முழுவதும் கடந்த 1-ந் தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் 469 அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ- மாணவிகள் மகிழ்ச்சியுடன் வகுப்புகளுக்கு வந்தனர். அவர்களுக்கு சானிடைசர் தெளித்து முக கவசம் வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு முகாமில் தடுப்பூசி போடப்பட்டது.
என்றாலும் கடலூர் மஞ்சக்குப்பம் வேணுகோ பாலபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அதனை தொடர்ந்து அவர் தனிமைபடுத்தப்பட்டார். இதனால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
நேற்று நெய்வேலி தனியார் பள்ளி ஆசிரியைகள் 2 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டது. இந்த 2 பேரும் நெய்வேலியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இன்றும் ஆசிரியை ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்சாலம் அருகே பெரிய நெசலூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் உடனடியாக ஆஸ்பத்திரியில் தன்னை பரிசோதித்து கொண்டார். இதற்கான முடிவு இன்று காலை வந்தது. அப்போது அந்த ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாணவ- மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து அந்த வகுப்புகளை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் 4 ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால் மாணவ- மாணவிகள் இடையே அச்சம் நிலவி வருகிறது.
கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்களை திறக்க உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இதேபோல் கடலூர் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்திற்கும் மாணவிகள் வருகை தந்தனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்பறைகளில் மாணவிகள் அமர வைக்கப்பட்டு, ஆசிரியர்கள் பாடம் எடுத்தனர். அப்போது ஓய்வறையில் அமர்ந்து இருந்த இடைநிலை ஆசிரியை ஒருவருக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. இதனால் அவரை சக ஆசிரியர்கள் தனியாக அமர வைத்து ஆசுவாசப்படுத்தினர்.
அவருக்கு ஏற்கனவே உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால், அவர் கொரோனா பரிசோதனை எடுத்து இருந்தார். அவருக்கு காலை 11 மணி அளவில் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி, ஒருவர் தகவல் தெரிவித்தார். அவரது மகளுக்கும் பாதிப்பு உறுதியாகி இருந்தது. இதை அறிந்ததும் சக ஆசிரியர்களும், மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஆசிரியரை பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த தகவல் நேற்று தான் வெளியானது. இதனிடையே அந்த ஆசிரியை இருந்த அறையில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.






