search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் சில்வர் பீச்சில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்க வந்த போது எடுத்த படம்
    X
    கடலூர் சில்வர் பீச்சில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்க வந்த போது எடுத்த படம்

    கடலூர் சில்வர் பீச்சில் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் - வியாபாரிகள் மனு

    கடலூர் சில்வர் பீச்சில் கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் வியாபாரிகள் மனு அளித்தனர்.
    கடலூர்:

    கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடலூர் சில்வர் பீச்சில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ஆனால் திடீரென சில்வர் பீச்சுக்கு செல்ல தடை விதித்தனர்.மேலும் கடற்கரையில் எந்த கடைகளையும் மறு அறிவிப்பு வரும்வரை திறந்து வைக்கக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் வியாபாரிகள் கடந்த 2 நாட்களாக சில்வர் பீச்சில் கடைகள் வைக்கவில்லை.

    இந்நிலையில் சில்வர் பீச்சில் கடைகள் வைத்திருக்கும் சுவாமி விவேகானந்தர் கடல் தாய் சிறு வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் தமிழரசி, துணை தலைவர் தங்கதுரை, செயலாளர் நாகராஜன், துணை செயலாளர் சந்திரலேகா, பொருளாளர் ராமன் மற்றும் வியாபாரிகள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனை சந்தித்து மனு அளித்தனர்.

    பின்னர் அவர்கள் இது பற்றி கூறியதாவது:-

    கடலூர் சில்வர் பீச்சில் 130-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. நாங்கள் அனைவரும் இந்த தொழிலை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வருகிறோம். கொரோனா காரணமாக பல மாதங்களாக கடைகள் திறக்கப்படாத நிலையில், சமீபத்தில் தான் கடைகளை திறந்து வியாபாரம் செய்து வருகிறோம். ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் கடைகள் வைக்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் போலீசார் எந்த நாளும் கடைகளை வைக்கக்கூடாது என்று கூறி விட்டனர். இது பற்றி நகராட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்தால், போலீசார் தான் நடவடிக்கை எடுத்தார்கள். அவர்களை சென்று சந்தித்து பேசுங்கள் என்கிறார்கள். ஆகவே மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் எங்களுக்கு கடலூர் சில்வர் பீச்சில் மீண்டும் கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டும் என்றனர். இதையே மனுவாகவும் எழுதி போலீஸ் சூப்பிரண்டிடம் வழங்கினர். மனுவை பெற்ற அவர் இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
    Next Story
    ×