என் மலர்tooltip icon

    கடலூர்

    பண்ருட்டியில் கொள்ளையர்கள் நூதன திருட்டில் ஈடுபட்டு வருவது வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் எல்.என்.புரம் முத்தையா நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). லாரி அதிபர். இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு இரவு படுக்க சென்றார்.

    காலையில் எழுந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்த பின் சக்கரம் காணாமல் போய் இருந்தது.

    இதுகுறித்து செல்வம் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை விசாரித்தார் யாருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். மோட்டார் சைக்கிள் திருட வந்தவன் மோட்டார் சைக்கிளை திருட முடியாமல் சக்கரத்தை மட்டும் கழட்டி சென்றது விநோதமாக தெரிந்தது.

    இதேபோல அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் ஜன்னலில் அமைக்கப்பட்டிருந்த கொசு வலையை கிழித்தெறிந்து அங்கு ஏதாவது கிடைக்குமா என்று ஆராய்ந்துள்ளான்.

    இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து மோட்டார் சைக்கிள் சக்கரத்தை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்

    இதுபோன்று கொள்ளையர்கள் நூதன முறையில் திருடி வருவது வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே 50 பவுன் நகை தர மறுத்த மாமியாரின் வீட்டை மருமகன் எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். அவரது மனைவி ஜோதி (வயது79). இவர் தனது 2 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு சிறுபாக்கம் கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    ஜோதியின் மூத்த மகள் வினோ தச்செல்வியை (45) அதே பகுதியைச் சேர்ந்த ஜெயவேல் (59) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்களும், பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

    நேற்று மதியம் ஜெயவேல் தனது மாமியார் ஜோதியிடம் சென்று தனக்கு 50 பவுன் நகையும், மோட்டார் சைக்கிளும் வாங்கித்தர வேண்டும் எனக்கூறி குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே உனக்கு 3 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளேன். தற்போது என்னிடம் பணம், நகை இல்லை. நானே வயதாகி தனிமையில் வசித்து வருகிறேன் எனக் கூறி நகை, பணம் தர மறுத்துள்ளார்.

    ஆத்திரமடைந்த ஜெயவேல், ஜோதி வசித்து வந்த கூரை வீட்டிற்கு தீ வைத்துள்ளார். அதிர்ச்சி அடைந்தஜோதி அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார்.

    தகவல் அறிந்த வேப்பூர் நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கூரை வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

    இது குறித்த புகாரின்பேரில், சிறுபாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயவேலை கைது செய்தனர்.
    பண்ருட்டி அருகே மோதலில் ஈடுபட்ட இருதரப்பு மாணவர்களையும் தனித்தனியாக அழைத்து அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை போலீசார் வழங்கினர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே சிறுகிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சிறு கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குள் திடீர் வாய்தகராறு ஏற்பட்டது.

    வாய்தகராறு முற்றி இரு தரப்பு மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டம் நிலவியது.

    இதுகுறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சிறுகிராமம் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு விரைந்துசென்றனர். அங்கு மோதலில் ஈடுபட்ட இருதரப்பு மாணவர்களை அழைத்து எச்சரித்தனர்.

    உடனடியாக மோதலுக்கு காரணமான மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டனர். பள்ளி ஆசிரியர்கள், மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்,பெற்றோர்களிடம் பேசி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதனால் அங்கு பதட்டம் தணிந்தது.

    அதனை தொடர்ந்து இரு தரப்பு மாணவர்களையும் தனித்தனியாக அழைத்து அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை போலீசார் வழங்கினர்.

    நெல்லிக்குப்பத்தில் பறக்கும் படை அதிரடி வாகன சோதனையில் சிக்கிய ரூ. 1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடலூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி மாவட்டம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பேருந்து நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் மணிவண்ணன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தின் பின்புறம் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    மேலும் வாகனம் முழுவதும் சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து எண்ணிப் பார்த்தபோது ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 320 ரூபாய் இருந்தது தெரியவந்தது. மேலும் உரிய ஆவணம் இன்றி பணம் எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. பின்னர் பணத்தை பறிமுதல் செய்து நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் நேற்று பறக்கும் படை தாசில்தார் ஸ்ரீதரன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அனுமதியின்றி எடுத்து வந்த 33 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு பண்ருட்டி,தொரப்பாடியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பண்ருட்டி:

    தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு பண்ருட்டி,தொரப்பாடியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடலூர் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பண்ருட்டி, புதுப்பேட்டையில் முகாமிட்டு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் அமைதியாகவும் பொது மக்கள் அச்சம் இன்றியும் வாக்களிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உத்தரவிட்டார்.

    அதோடு பண்ருட்டி துணை போலீஸ்சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், நந்தகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பதட்டமான வாக்குசாவடி மையங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

    பரங்கிப்பேட்டை அருகே வீட்டு சுவர் இடிந்து விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். (வயது 75). விவசாயி. இவர் கூரை வீட்டில் வசித்து வந்தார். கடந்த சிலநாட்களாக பரங்கிப்பேட்டை பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் ஆறுமுகத்தின் வீடு நனைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது.

    நேற்று இரவு வழக்கம் போல் ஆறுமுகம் தனது வீட்டில் தூங்கினார். நள்ளிரவு சமயம் திடீர் என வீட்டுசுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் ஆறுமுகம் சிக்கினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை மீட்டனர். ஆனால் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் இறந்தார்.

    தகவல்அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவிலில் எந்த பொருட்களும் திருடு போகவில்லை. என்றாலும் கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே விழமங்கலத்தில் பிரசித்திப்பெற்ற காளி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடிந்ததும் நடைசாத்தப்பட்டது. நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பொருட்கள் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துன் திரும்பினர்.

    இன்று காலை பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா இன்ஸ்பெக்டர் சந்திரன், மற்றும் போலீசார் கோவிலுக்கு விரைந்தனர்.

    கோவிலில் எந்த பொருட்களும் திருடு போகவில்லை. என்றாலும் கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திட்டக்குடி நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு கடந்த 3 மாதங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையோரம் தேங்கி சாக்கடை நீராக மாறி உள்ளது.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி நீர்த்தேக்கத் தொட்டி மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கி வருகிறது. விருத்தாசலம்- ராமநத்தம் மாநில நெடுஞ்சாலை ஓரம், திட்டக்குடி நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு கடந்த 3 மாதங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையோரம் தேங்கி சாக்கடை நீராக மாறி உள்ளது. அதிக அளவில் அந்த இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் சூழ்நிலை உள்ளது.

    இது குறித்து திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேரடி யாக பலமுறை தெவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    எனவே மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு உள்ள குடிநீர் குழாயை உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பிரபல நகைக்கடை உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று காலை திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கடலூர் லாரன்ஸ் சாலையில் பிரபல நகைக்கடைகள் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று காலை திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நகை கடைகள் மற்றும் அதன் உரிமையாளர்களின் வீடுகள் மூடப்பட்டது. முன்னதாக இன்று காலை வழக்கம்போல் லாரன்ஸ் சாலை மற்றும் திருவந்திபுரம் சாலையில் கடைகள் திறந்திருந்தன.

    வருமான வரித்துறையினர் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனையில் ஈடுபட்டபோது அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் அவசர அவசரமாக கடைகளில் வெளிப்புறத்தில் இரும்பு கதவுகளை கொண்டு மூடப்பட்டதோடு, ஒரு சில கடைகளில் துணிகளை கொண்டு அவசர அவசரமாக மூடியதும் காணமுடிந்தது.

    மேலும் வெளி நபர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. கடையின் உரிமையாளர்கள் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் என அனைவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    பொது மக்களின் நலன் கருதி உடனடியாய் கடலூர் முதுநகர் துணை அஞ்சலகத்தில் ஆதார் கார்டு புதிதாக எடுத்தல் மற்றும் அனைத்து ஆதார் கார்டு பணிகள் நடை பெற ஆவண செய்ய வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட அஞ்சலக தலைமை அலுவலகத்தில் அஞ்சல் துறை துணைக் கோட்டக் கண்காணிப்பாளரிடம் கடலூர் அனைத்து வணிகர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ராம முத்துக்குமரனார் கோரிக்கை மனு அளித்தார். மனுவில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசின் மக்கள் திட்டம் அனைத்தும் இந்திய அஞ்சல் துறை மூலமாக சிறப்பாக நடைப்பெற்று வருகிறது கடலூர் முதுநகர் சங்கர நாயுடு தெருவில் உள்ள துணை அஞ்சலகத்தில் பல ஆண்டுகளாக புதிய ஆதார் கார்டு எடுத்தல் மற்றும் ஆதார் கார்டு முகவரி மாற்றம், பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், மொபைல் எண் மாற்றம் என ஆதார் கார்டு சம்பந்தமான அனைத்து பணிகளும் நடைப்பெற்று வந்தது.

    தற்போது ஓராண்டு காலமாக கொரோனோ தொற்று நோய் காரணம் காட்டி ஆதார் கார்டு சம்பந்தப்பட்ட எந்த பணிகளும் கடலூர் முதுநகர் துணை அஞ்சலகத்தில் நடைபெற வில்லை. இங்கு வரும் பொது மக்களை கடலூர் தலைமை அஞ்சலகம் செல்லுங்கள். அங்குதான் ஆதார் கார்டு புதிதாக எடுக்க முடியும்.

    ஆதார் கார்டு சம்பந்தபட்ட எல்லா பணிகளும் தலைமை அஞ்சலகத்தில் தான் நடைபெறுகிறது என்று பொதுமக்களை திருப்பி அனுப்புகிறார்கள். சுமார் 20 கிராம மக்கள் இந்த கடலூர் முதுநகர் துணை அஞ்சலகத்தின் மூலம் பயன் பெற்று வந்தார்கள்.

    தற்போது பொதுமக்கள் மன உளைச்சலால் 5 கி.மீ தூரம் தாண்டி உள்ள கடலூர் தலைமை அஞ்சலகம் செல்ல வேண்டிஇருக்கிறது.

    எனவே பொது மக்களின் நலன் கருதி உடனடியாய் கடலூர் முதுநகர் துணை அஞ்சலகத்தில் ஆதார் கார்டு புதிதாக எடுத்தல் மற்றும் அனைத்து ஆதார் கார்டு பணிகள் நடை பெற ஆவண செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் மனுவில் கூறி உள்ளார்.

    இந்த மனுவின் நகல் சென்னை , திருச்சி அஞ்சல் துறை உயர் அதிகாரிகளுக்கும் அஞ்சலக விரைவு பதிவு தபாலில் அனுப்பட்டது.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், சங்கத்தின் நல்வாழ்வு இயக்குனர் முனுசாமி, நதி அறக்கட்டளை செயலாளர் திருமாறன், இக்னைட் டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் ஜோஸ் மகேஷ் கலந்து கொண்டனர்.

    கடலூர் மாவட்டத்தில் 726 வாக்குச்சாவடி மையங்களில் 410 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள்ளது.
    கடலூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடலூர் மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி கடலூர் மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் பாலசுப்பிரமணியம் மேற்பார்வையில் வாக்குச்சாவடி மையங்கள், வாக்குச் எண்ணும் மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடலூர் மாவட்ட எல்லையான ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் இன்று காலை திடீரென்று ஆய்வில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை போலீசார் எவ்வாறு சோதனை செய்கின்றனர்? ஏதேனும் சந்தேகப்படும் படியான வாகனங்கள் வருகிறதா? என்பதை ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவல்துறை துணைத்தலைவர் அறிவுறுத்தலின்படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஈடுபட்டு வருகின்றோம்.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த ஏதேனும் ஜாதி கலவரம், ஊர் தகராறு போன்றவற்றை கணக்கில் எடுத்து அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றோம். மேலும் அந்தப்பகுதி முழுவதும் பதற்றமானவை என கணக்கீடு எடுத்து போலீசார் தினந்தோறும் கண்காணித்து வருகின்றனர். இது மட்டுமன்றி குடிபோதையில் தகராறுகள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

    இது மட்டுமின்றி கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தொடர் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நடவடிக்கையால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் ஏற்படுத்தி வருகின்றோம். இதுமட்டுமின்றி தேர்தல் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதற்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் தேர்தல் மற்றும் மாசி மக விழா சேர்ந்து நடைபெற உள்ளதால் குறிப்பாக புதுச்சத்திரம், பெரியபட்டு, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, திட்டக்குடி விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனித்தனியாக போலீசாரை நியமனம் செய்து தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 726 வாக்குச்சாவடி மையங்களில் 410 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக இங்கு கூடுதலாக போலீசார் நியமித்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபட அறிவுறுத்தி உள்ளோம். ஆகையால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


    பண்ருட்டி அருகே பணத்துக்காக கார் புரோக்கரை கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஊமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 42). கார் புரோக்கர். இவர், மதுரையில் உள்ள உத்தங்குடி வளர்நகரில் தற்போது வசிக்கிறார்.

    இவர், தொழிலில் ஏற்பட்ட கடனை அடைக்க பண்ருட்டி அருகே காட்டாண்டிக்குப்பம் அன்பு ராஜா என்பவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கிஇருந்தார். பின்னர் அன்புராஜா அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து 20 லட்சம் ரூபாய் தரவேண்டும் என மதியழகனிடம் கேட்டார்.

    இதற்காக மதியழகன் தனக்கு சொந்தமான 60 சென்ட் நிலத்தை ஒரு சென்ட் 1 லட்சம் ரூபாய் என விலை பேசி, 60 லட்சத்திற்கு அன்புராஜாவிற்கு கிரையம் செய்து தருவதாக கூறினார். கிரையம் பத்திரம் தயார் செய்வதற்காக கடந்த 9-ந் தேதி பண்ருட்டி லாட்ஜில் மதியழகன் தங்கினார். அவருடன் ஏற்கனவே தைல மரவியாபாரம் செய்த நண்பர் பெரியகாட்டுப்பாளையம் செல்வா தங்கியிருந்தார்.

    கடந்த 11-ந் தேதி காலை10 மணிக்கு செல்வாவின் காரில் மதியழகன், பெரியகாட்டுப்பாளையம் டிரைவர் சுதாகர், கார்த்திக் ஆகியோருடன் கம்மாபுரம் பத்திர பதிவு அலுவலகம் சென்றனர். அங்கு, கிரையம் முடிந்ததும், அன்புராஜா பண்ருட்டிக்கு வா மீதி பணம் தருகிறேன் என, மதியழகனிடம் கூறினார்.

    அதன்பேரில், மதியழகன் மீண்டும் பண்ருட்டிக்கு அதே காரில் திரும்பிக் கொண்டிருந்தார். செம்மேடு கெடிலம் பாலம் அருகில் மதியழகன் இயற்கை உபாதைக்கு இறங்கினார். பின்னர் காரில் ஏறிய அவரை, செல்வா உள்பட 3 பேரும் மீதி 40 லட்சத்தை தர முடியாது எனக் கூறி, தாக்கி, கடத்திச் சென்று மேட்டுக்குப்பத்தை சேர்ந்த பட்டுராஜா மகன் சிவமணியின் முந்திரிதோப்பில் கட்டிப் போட்டு, கொலைமிரட்டல் விடுத்தனர்.

    இதனிடையே கடந்த 13-ந் தேதி சிவமணியின் தந்தை பட்டுராஜா மற்றும் உறவினர்கள் முந்திரி தோப்பில் கட்டப்பட்டிருந்த மதியழகனின் கட்டை அவிழ்த்துவிட்டு பஸ்சில் ஏற்றி அனுப்பினர். படுகாயமடைந்த மதியழகன் கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். அவர், கொடுத்த புகாரின்பேரில் செல்வா உட்பட 4 பேர் மீது காடாம் புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் வழக்குப் பதிந்து விசாரித்தில், 40 லட்சத்திற்காக மதியழகனை கடத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட கார் டிரைவர் சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் செல்வா, கார்த்திக், சிவமணி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? என, விசாரித்து வருகின்றனர்.

    ×