என் மலர்tooltip icon

    கடலூர்

    வேப்பூர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேப்பூர்:

    வேப்பூர் அருகே சாத்தியம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). இவர் வேப்பூர் பகுதியில் கஞ்சா விற்க முயன்றார். வேப்பூர் அருகே நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் டீனு பையா (20) . இவரும் கஞ்சா விற்க முயன்றதும் தெரிய வந்தது. இவர்களை வேப்பூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரிடமும் இருந்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது தனித்தனியே வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    தீ விபத்தில் வீட்டின் முன்பகுதி முழுவதும் தரைமட்டமாகி பொருட்கள் வெளியில் சிதறியது. இதனைதொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே கலையூர் கிராமத்தை சேர்ந்தவர் திலகவதி (வயது 50). இவர் தானே புயலில் கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இன்று காலை வழக்கம் போல் திலகவதி கியாஸ் அடுப்பில் டீ போட்டுக் கொண்டிருந்தார். அப்போது சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென்று தீ மளமளவென பரவியது.

    அதிர்ச்சி அடைந்த திலகவதி தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் திலகவதி அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்த போது திடீரென்று பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது. அப்போது திலகவதிக்கு காயம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து தீ விபத்தில் வீட்டின் முன்பகுதி முழுவதும் தரைமட்டமாகி பொருட்கள் வெளியில் சிதறியது. இதனைதொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தன்ராஜ், தண்டபாணி, கதிரவன் ஏகாம்பரம், திவாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

    காயமடைந்த திலகவதியை உடனடியாக மீட்டு தங்களது தீயணைப்புத் துறை வாகனத்தில் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    திட்டக்குடி அருகே 11-ம் வகுப்பு மாணவியை வாலிபர் கடத்தியதாக தாய் அளித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திட்டக்குடி:

    திட்டக்குடி அருகே கூடலூர் சாமிநாதன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். அவரது மகள் கிருத்திகா(வயது 16). இவர் பெண்ணாடம் இறையூர் அருணா மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற கிருத்திகா இது வரை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கிருத்திகாவை உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுபற்றி அக்கம் பக்கம் விசாரிக்கவே கிருத்திகாவை பெண்ணாடம் சோழன் நகரை சேர்ந்த காசி விசுவநாதன் மகன் அரவிந்த் என்பவர் அழைத்து சென்றதாக கூறினர்.

    இதுகுறித்து கிருத்திகாவின் தாய் மஞ்சுளா ஆவினங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கிருத்திகாவை கடத்தி சென்ற அரவிந்தை தேடி வருகிறார்கள்.
    மங்கலம்பேட்டையில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    மங்கலம்பேட்டை:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை போலீஸ் நிலைய உதவி ஆய்வாளர் கனகராஜ் மற்றும் போலீசார், மங்கலம் பேட்டையை அடுத்த கர்ணத்தம் கிராமப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது 25 கிராம் கஞ்சாவை விற்பதற்காக வைத்திருந்த உளுந்தூர்பேட்டை மெயின் ரோடு, மங்கலம்பேட்டையைச் சேர்ந்த அன்வர் அலி மகன் இம்ரான் (எ) முகமது அலி (வயது 22) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 25 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு ரத்து செய்தது செல்லும் என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதையடுத்து கடலூரில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கடலூர்:-

    வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு ரத்து செய்தது செல்லும் என்று சுப்ரீம்கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது. இந்த தகவல் தமிழகம் முழுவதும் காட்டு தீபோல பரவியது. இதனால் பா.ம.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.

    கடலூரில் பா.ம.க.வினர் மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் ஒன்று திரண்டனர். அப்போது இந்த தீர்ப்பு சமூகநீதி மறுக்கப்பட்ட நாள் என அறிவித்து பா.ம.க.வினர் கடலூர் திருப்பாதிரிபுலியூர் உழவர்சந்தை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் சரவணன், நிர்வாகிகள் விஜயவர்மன், அசோக் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இவர்கள் கண்களில் கருப்புதுணி கட்டி சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அந்த பகுதியில் யாரும் செல்லமுடியிவல்லை.

    தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் அங்கு விரைந்தனர். மறியல் செய்த பா.ம.க.வினரிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
    பண்ருட்டி காந்தி ரோட்டில் அரசுமேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நேற்று நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி காந்தி ரோட்டில் அரசுமேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நேற்று நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார். ஆய்வின்போது வகுப்பறைக் கட்டிடங்கள், கழிவறை வசதிகள் சத்துணவுக் கூடம் ஆகியவைகள் குறித்து கேட்டறிந்தார். 

    ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அறிவியல் ஆய்வுக்கூடம், அலுவலக கட்டிடம், வகுப்பறைகளுக்கு கூடுதல் கட்டிடம், மாணவ-மாணவிகளுக்கு தனி தனியாக கழிவறை அமைத்து தரவேண்டும் என்று தலைமை ஆசிரியர் பூவரா கவமூர்த்தி வேண்டுகோள் விடுத்தார். பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் சரசா, கவுன்சிலர்கள் ரமேஷ், ராமலிங்கம், அனிபா, பழனி, மதியழகன், தி.மு.க. பிரமுகர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
    பண்ருட்டி பஸ் நிலையத்தில் இலவச கழிவறையை மூடப்பட்டதால் பஸ் பயணிகள் ஓட்டுநர்,நடத்துனர் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி நகராட்சிக்கு சொந்தமான பண்ருட்டி பஸ் நிலையத்தில் பஸ் பயணிகள் சிறுநீர் கழிக்க கடலூர் பஸ் நிறுத்தம் அருகில் இலவச கழிவறை அமைக்கப்பட்டிருந்தது இந்த கழிவறை முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் பாதுகாப்பற்று காணப்பட்டது. இதனை தொடர்ந்து முள்வேலி அமைத்து மூடப்பட்டது.

    இந்த இலவச கழிவறையை மூடப்பட்டதால் பஸ் பயணிகள் ஓட்டுநர்,நடத்துனர் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த இலவச கழிப்பறையை உடனடியாக புதிப்பித்து திறக்க வேண்டும் என்று அதிமுக கவுன்சிலர் மோகன் நகராட்சி ஆணையரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து ஏராளமான பொருட்செலவில் இலவச கழிவறை சீரமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
    விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ .12 லட்சத்து 89 ஆயிரத்து 165 நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கோர்ட்டு உத்தரவிட்டும் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு தொகையை வழங்கவில்லை.
    கடலூர்:

    கடலூர் அருகே கல்குணம் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன். அவரது மனைவி ஜோதி (வயது 48). இவர் கடந்த 3.8.2014 அன்று கடலூர்-விருத்தாசலம் செல்லும் அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

    அந்த பஸ் நெத்தனாங்குப்பம் பிரியும் ரோடு அருகே சென்ற போது, அந்த வழியாக சென்ற மொபட் மீது மோதி சென்று சாலையோர மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் ஜோதி பலத்த காயமடைந்தார். இதையடுத்து விபத்தில் காயமடைந்த ஜோதி நஷ்ட ஈடு கேட்டு கடலூர் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வக்கீல்கள் ராம.ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் மூலம் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட ஜோதிக்கு வட்டியுடன் சேர்த்து ரூ .12 லட்சத்து 89 ஆயிரத்து 165 நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் கோர்ட்டு உத்தரவிட்டும் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு தொகையை வழங்கவில்லை.

    தொடர்ந்து ஜோதி தரப்பில் நிறைவேற்ற மனு தாக்கல் செய்ததில், அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்ல முயன்ற அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்து, கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
    மோதல் சம்பந்தமாக பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் இரண்டு தரப்பையும் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    கடலூர்:

    சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமர். இவர் திமுக ஒன்றிய பொருளாளர். இவரது உறவினர் பரந்தாமன் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒன்றிய பொருளாளராக உள்ளார். சம்பவத்தன்று மாலையில் இவர்களின் தங்கை மகன் ஹரிஷ், வசந்த் ஆகியோர் வயல் வெளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, வானவதெருவில் ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது.

    இதனை பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவி சங்கர் தேன்மொழியின் உறவினர் விக்னேஷ் மற்றும் காண்டீபன் உள்ளிட்டோர், எதற்கு ஹாரன் அடிக்கிறாய்? என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. 

    ஹரிஷ் மற்றும் வசந்த் ஆகியோர் வீட்டிற்கு வந்ததும் நடந்த சம்பவம் குறித்து மாமா ராமர் மற்றும் பரந்தாமனிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் விக்னேஷ் மற்றும் காண்டீபனிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இருவரும் வீடு திரும்பி உள்ளனர்.

    இந்நிலையில் விக்னேஷ், காண்டீபன் ஆகியோர் இரவு நேரத்தில் ரவுடிகளுடன் வந்து, ராமர், பரந்தாமன் மற்றும் அவர்களின் உறவினர்களை ஆயுதங்களால் கடுமையாக தாக்கி உள்ளனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது சம்பந்தமாக பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் இரண்டு தரப்பையும் சேர்ந்த 5 பேர் மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    விருத்தாசலம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மங்கலம்பேட்டை:

    விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை ஏரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மங்கலம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 19) என்பதும், இவர் கஞ்சா விற்பனை செய்துவருவதும் தெறியவந்தது. உடனே போலீசார் ராமச்சந்திரனை கைது செய்து அவரிடமிருந்து 25 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் இதுநாள் வரை 2 கோடியே 80 லட்சத்து 85 ஆயிரத்து 841 எண்ணிக்கையிலான மகளிர்கள் கட்டணமில்லாமல் பஸ் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் பெண்கள் அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பஸ்களில், பணிபுரியும் மகளிர், கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பஸ் பயண அட்டை இல்லாமலும் பயணிக்க ஆணை பிறப்பித்தார்.

    கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் இதுநாள் வரை 2 கோடியே 80 லட்சத்து 85 ஆயிரத்து 841 எண்ணிக்கையிலான மகளிர்கள் கட்டணமில்லாமல் பஸ் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.

    மேலும் 2,04,099 எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளும், 8131 எண்ணிக்கையிலான மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்களும் அரசு பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளார்கள். மேலும் 19,987 எண்ணிக்கையிலான திருநங்கைகள் அரசு பஸ்களில் இலவசமாக பயணச்சலுகை பெற்று பயனடைந்துள்ளனர்.

    ஆகையால் இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்தினை பெண்கள் தொடர்ந்து பயன்படுத்தி பயன் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
    மங்கலம்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த பிளஸ்-1 மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மங்கலம்பேட்டை:

    விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை போலீஸ் சரகத்திற்குட்பட்ட எடைச்சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பரசுராமன் (16). இவர் மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சுப்ரமணியன் வீடு அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அமைந்துள்ளது.

    நேற்று மாலை அங்குள்ள கிணற்றில் இருந்து, மின் மோட்டார் மூலம் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது கிணற்றின் அருகே துணிகளை துவைத்துக் கொண்டிருந்த பரசுராமன் தண்ணீர் சற்றுக் குறைவாக வந்ததால் கிணற்றுக்குள் எட்டி பார்த்தார். அப்போது எதிர்பாராத விதமாக சுமார் 130 அடி ஆழமுள்ள கிணற்றில் பரசு ராமன் தவறி விழுந்தார். கிணற்றில் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்ததால் பாறைகளின் மீது விழுந்த பரசுராமனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பரசு ராமனின் அலறல் சத்தம் கேட்ட அவரது தந்தை சுப்ரமணியன் மற்றும் அக்கம் பக்கத்தினர், மங்கலம் பேட்டை போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத் திற்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில், அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பரசுராமனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பரசுராமன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×