என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை மறியல்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு ரத்து செல்லும்: கடலூரில் பா.ம.க.வினர் சாலை மறியல்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு ரத்து செய்தது செல்லும் என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதையடுத்து கடலூரில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர்:-
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு ரத்து செய்தது செல்லும் என்று சுப்ரீம்கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது. இந்த தகவல் தமிழகம் முழுவதும் காட்டு தீபோல பரவியது. இதனால் பா.ம.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.
கடலூரில் பா.ம.க.வினர் மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் ஒன்று திரண்டனர். அப்போது இந்த தீர்ப்பு சமூகநீதி மறுக்கப்பட்ட நாள் என அறிவித்து பா.ம.க.வினர் கடலூர் திருப்பாதிரிபுலியூர் உழவர்சந்தை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் சரவணன், நிர்வாகிகள் விஜயவர்மன், அசோக் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இவர்கள் கண்களில் கருப்புதுணி கட்டி சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அந்த பகுதியில் யாரும் செல்லமுடியிவல்லை.
தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் அங்கு விரைந்தனர். மறியல் செய்த பா.ம.க.வினரிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story






