என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • ஆகஸ்ட் 24-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் சிறப்பு ரெயில்(எண்.06046) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.
    • மங்களூர்- சென்னை சிறப்பு ரெயில்(எண்.06042) மறுநாள் காலை 4.45 மணிக்கு சென்னை சென்றடையும்.

    கோவை,

    கோவை- போத்தனூர் வழித்தடங்களில் 3 வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆகஸ்ட் 24-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம்-சென்னை சிறப்பு ரெயில்(எண்.06046) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.

    ஆகஸ்ட் 25-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சென்னை-எர்ணாகுளம் சிறப்பு ரெயில்(எண்.06045) மறுநாள் காலை 3 மணிக்கு எர்ணாகுளத்தைச் சென்றடையும்.

    இந்த ரெயிலானது, ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 5ந் தேதி வரை தாம்பரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் தாம்பரம்-மங்களூர் சிறப்பு ரெயில்(எண்.06041) மறுநாள் காலை 6.45 மணிக்கு மங்களூர் சென்றடையும்.

    ஆகஸ்ட் 23ந் தேதி முதல் செப்டம்பர் 6ந் தேதி வரை, மங்களூரில் இருந்து புதன்கிழமைகளில் காலை 10 மணிக்குப் புறப்படும் மங்களூர்- சென்னை சிறப்பு ரெயில்(எண்.06042) மறுநாள் காலை 4.45 மணிக்கு சென்னை சென்றடையும்.

    இந்த ரெயிலானது, காசர்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், குட்டிபுரம், ஷொரனூர், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 5ந் தேதி வரை, செவ்வாய்க்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 6.05 மணிக்குப் புறப்படும் கொச்சுவேலி-பெங்களூர் சிறப்பு ரெயில்(எண்.06083) மறுநாள் காலை 10.55 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.

    ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 6ந் தேதி வரை புதன்கிழமைகளில் நண்பகல் 12.45 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் பெங்களூர்-கொச்சுவேலி சிறப்பு ரெயில்(எண்.06084) மறுநாள் காலை 6 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

    இந்த ரெயிலானது, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, சங்கனச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    • ஜாமீனில் வெளியே வந்தவர் தந்தை மற்றும் அண்ணனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசுகிறார்.
    • புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை அருகே அன்னூரை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் அன்னூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து கொண்டு இருந்தேன். அப்போது அதே கல்லூரியில் படித்த சேலத்தை சேர்ந்த 26 வயது வாலிபருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று எங்களது காதலை வளர்த்து வந்தோம். அப்போது நாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அந்த வாலிபர் அவரது செல்போனில் எடுத்தார்.

    இந்த நிலையில் எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நான் அவருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்தேன்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நாங்கள் காதலிக்கும் போது நெருக்கமாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தேன். புகாரின் பேரில் போலீசார் வாலிபரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் எனது தந்தை மற்றும் அண்ணனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசுகிறார்.

    மேலும் நான் கொடுத்த வழக்கை வாபஸ் பெற வேண்டும். இழப்பீடாக ரூ.4 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டுகிறார்.

    கடந்த 12-ந் தேதி இரவு எனது வீட்டு காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்த வாலிபர் வீட்டில் உள்ள சுவரில் இது தான் கடைசி எச்சரிக்கை என எழுதி விட்டு சென்றுள்ளார்.

    சம்பவத்தன்று எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அவர் எனது அண்ணனிடம் வழக்கை வாபஸ் வாங்கவில்லை என்றால் குடும்பத்தில் யாரும் உயிரோடு இருக்க மாட்டீர்கள் என மிரட்டி விட்டு சென்றுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 67 பண்ணை பசுமை கடைகளில் ரூ.60க்கு தக்காளி விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் தக்காளியை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.

    கோவை,

    தமிழகம் முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்து உள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

    அதன்படி அரசு சார்பில் முதற்கட்டமாக 67 பண்ணை பசுமை கடைகளில் ரூ.60க்கு தக்காளி விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அதனை 111 நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தக்காளி விளைச்சல் குறைந்துள்ள நிலையில் கூடுதல் விலை கொடுத்து வாங்கி, கூட்டுறவு கடைகள், நியாயவிலைக்கடைகள் மூலம் தக்காளி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் விற்பனையை விரிவுபடுத்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் 500 நியாய விலைக்கடைகளில் நேற்று முதல் தக்காளி விற்பனை தொடங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் சராசரியாக 10 கடைகள், சில பகுதிகளில் 15 கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் 20 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக கோவை மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து தக்காளி பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அவை நேற்று கோவைக்கு கொண்டு வரப்பட்டன.

    இதனை தொடர்ந்து கோவை சாய்பாபா காலனி உள்பட 20 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. அங்கு ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.180க்கு விற்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இங்கு உள்ள ஒருசில ரேஷன் கடைகளில் ஒரு கிலோ ரூ.60க்கு விற்கப்பட்டது. எனவே பொதுமக்கள் நேற்று ரேஷன் கடைகளுக்கு அதிகளவில் திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் போட்டி போட்டு கொண்டு தக்காளி பழங்களை வாங்கி சென்றனர்.

    கோவையில் உள்ள 20 ரேஷன் கடைகளில் 500 கிலோ தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை தொடங்கியது. ஆனால் ஒரே நாளில் அனைத்து பழங்களும் விற்று தீர்ந்து விட்டன.

    கோவை சாய்பாபா காலனி ரேஷன் கடைக்கு தக்காளி வாங்குவதற்காக வந்திருந்த பெண்கள் கூறுகையில், காய்கறி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.180க்கு விற்கிறது. இதனால் நாங்கள் போதிய அளவில் வாங்க முடியாமல் வேதனைப்பட்டு வந்தோம்.

    இந்த நிலையில் அரசே, ரேஷன் கடைகள் மூலம் ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்து உள்ளது மகிழ்ச்சி தருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் தக்காளி விலை கட்டுக்குள் வரும்வரை அரசு ேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் தக்காளியை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வியாபாரிகள் முன்னிலையில் கொப்பரை மூட்டைகள் தரம் பிரித்து ஏலமிடப்பட்டது.
    • மொத்தம் 221 குவிண்டால் கொப்பரை ரூ.15.71 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது

    பொள்ளாச்சி,

    ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில் 493 கொப்பரை மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. கடந்த வாரத்தை விட 242 மூட்டைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இதுகுறித்து விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் கூறும்போது, ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 493 மூட்டைகள் கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தினர்.

    வியாபாரிகள் முன்னிலையில் அவை தரம் பிரித்து ஏலமிடப்பட்டது. முதல்தர கொப்பரை 205 மூட்டைகள், குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.7640-க்கும், அதிகபட்ச ரூ.8366-க்கும் விற்பனையானது.

    2-ம் தர கொப்பரை 288 மூட்டைகள், குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.4813-க்கும், அதிகபட்சம் ரூ.7292-க்கும் விற்பனையானது. 7 வியாபாரிகள், 66 விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.

    கடந்த வாரத்தைவிட 242 மூட்டைகள் வரத்து அதிகரித்தும், குவிண்டாலுக்கு ரூ.511 விலை உயர்ந்தும் காணப்பட்டது. மொத்தம் 221 குவிண்டால் கொப்பரை ரூ.15.71 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது" என்றார்.

    • விசாலாட்சி, உமாராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • குனியமுத்தூர் போலீசார் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவைப்புதூர் அருகே உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தன்(வயது 43). பிளம்பர்.

    இவரது மனைவி விசாலாட்சி (34). இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து விசாலட்சி சரவணம்பட்டியில் வசிக்கும் அவரது தாய் உமாராணி (55) என்பவரிடம் கூறினார். அவர் நான் நேரில் வந்து பேசுகிறேன். எல்லாம் சரியாகி விடும் என்றார்.

    அதன்படி சம்பவத்தன்று இவர் தனது மருமகனிடம் கணவன்-மனைவிக்கு இடையே உள்ள கருத்துவேறுபாட்டை பேசி சரி செய்வதற்காக சென்றார். பேசிக் கொண்டு இருந்த போது உமாராணிக்கும், ஆனந்தனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது மாமியாரை வெட்டினார்.

    இதனை பார்த்த விசாலாட்சி தடுக்க சென்றார். அவரையும் ஆனந்தன் அரிவாளால் வெட்டினர். இதில் அவர்களுக்கு தலை மற்றும் உடலில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. 2 பேரும் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டனர். பின்னர் ஆனந்தன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய விசாலாட்சி மற்றும் உமாராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி மற்றும் மாமியாரை அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவாக இருந்த ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார் குண்டு வெடிப்பு வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேஷா முபினின் நெருங்கிய நண்பர் தான் தற்போது கைதாகி உள்ள முகமது இத்ரீஸ்.

    கோவை:

    கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

    இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் இதில் பலியானார்.

    இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபின், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் பயங்கர நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது.

    இந்த வழக்கில் தொடர்புடையதாக முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.

    என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி, உமர் பரூக், பெரோஸ்கான், முகமது தவுபிக் ஆகியோரையும் கைது செய்தனர். இதுவரை கார் குண்டு வெடிப்பு வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட 11 பேர் மீது அண்மையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது இத்ரீஸ்(வயது25) என்பவருக்கும் தொடர்பு இருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முடிவில் நேற்று அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் அவரை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்றனர்.

    கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேஷா முபினின் நெருங்கிய நண்பர் தான் தற்போது கைதாகி உள்ள முகமது இத்ரீஸ். இவர் குண்டு வெடிப்பிற்கு முன்பு அதற்கான குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவரவே அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் அவரை தொடர்ந்து கண்காணித்தும் வந்தனர்.

    குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளாக முகமது இத்ரீசின் செல்போன் அழைப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

    மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவரிகளிடம் விசாரணை நடத்தியதிலும், முகமது இத்ரீசுக்கு குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதன் காரணமாகவே அவருக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி 2 நாட்களாக விசாரணை நடத்தியதும், விசாரணையின் முடிவில் அவரை கைது செய்ததும் தெரியவந்தது.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட முகமது இத்ரீசை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர். அதன்பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட உள்ளார்.

    கைதான முகமது இத்ரீசிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளும் நடந்து வருகிறது.

    கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 12-வது நபராக முகமது இத்ரீஸ் என்பவரும் கைதாகி உள்ளது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அபர்ணா அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசி வந்தார்.
    • மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூரை சேர்ந்த சியாம்குமார். இவரது மனைவி அபர்ணா (24). இவர்களுக்கு ஆயுஷ் (2) என்ற மகன் உள்ளார். அபர்ணா அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசி வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர் தனது கணவரிடம் பேசாமல் இருந்தார்.

    சம்பவத்தன்று சியாம்குமார் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அபர்ணா தனது 2 வயது மகனுடன் ஓட்டம் பிடித்தார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அவர், வீட்டில் மனைவி மற்றும் மகன் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் 2 பேரையும் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. இதுகுறித்து சியாம்கு மார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    சவுரிபாளையம் உப்பிலி பாளையம் ரோட்டை சேர்ந்தவர் மார்ட்டின். இவரது மகள் மெர்லின் ஜெசிகா (19). இவர் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மெர்லின் ஜெசிகா தனது பெற்றோரிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.

    • நாட்டு தக்காளி தற்போது 150 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டு வருகிறது.
    • தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    கோவை,

    கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    தற்போது தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் மழை பெய்து வருவதால், விவசாயிகள் அறுவடை பணிகளில் ஈடுபடவில்லை. இதனால் மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து குறைந்து வருகிறது.

    ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. எனவே அங்கும் விவசாயிகள் அறுவடை பணிகளை தொடங்குவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

    வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தற்போது தென் மாநிலங்களில் அதிகமாக தக்காளி பழங்களை இறக்குமதி செய்து வருகின்றனர். எனவே ஆந்திரா, கர்நாடகாவில் தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் அவற்றின் விலை கடந்த சில மாதங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    கோவை காந்திபுரம் தியாகி குமரன் மார்க்கெ ட்டில் இன்று ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.130க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.140 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட் சில்லரை விலை கடைகளில் நாட்டு தக்காளி தற்போது 150 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டு வருகிறது.

    தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். கிலோ கணக்கில் தக்காளி வாங்கியவர்கள் தற்போது, 100, 200 கிராம் கணக்கில் தக்காளியை வாங்கி செல்வதை காண முடிகிறது.

    இதுகுறித்து தியாகி குமரன் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கோவைக்கு சரக்கு லாரிகள் மூலம் தக்காளி பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

    ராஜஸ்தான், புதுடெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. எனவே அவர்கள் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அதிகளவில் தக்காளி பழங்களை கொள் முதல் செய்து வருகின்றனர். இதனால் தற்போது கோவை மார்க்கெட்டுகளில் தக்காளி வரத்து குறைந்ததுடன், விலையும் உயர்ந்து காணப்படுகிறது.

    தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்னும் ஒரு சில வாரங்களில் தக்காளி அறுவடை தொடங்க உள்ளது. எனவே கோவை சந்தைக்கு வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது தக்காளியின் விலை குறையும் என்றனர்.

    கோவை தியாகி குமரன் மார்க்கெட் சந்தையில் காய்கறிகளின் விலை விவரம் (ஒரு கிலோ): கத்தரிக்காய்-60, வெண்டைக்காய்-60, உருளை க்கிழங்கு-30, பீட்ரூட்-30, புடலங்காய்-40, சுரைக்காய்-40, பீர்க்கங்காய்-40, மிளகாய்-80, வாழைக்காய்-40, பூசணிக்காய்-30, எலுமிச்சை-60, முருங்கை-50, கேரட்-50, பீன்ஸ்-100, முட்டைக்கோஸ்-25.

    • முதல் கட்டமாக கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 4-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது.
    • பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை 2 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்ப விநியோகமானது 2 கட்டங்களாக நடத்திட தீர்மானிக்கப்பட்டது. முதல் கட்டமாக கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 4-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்து வருகிறார்கள்.

    சில குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளதாக தெரிய வருகிறது. எனவே விண்ணப்பங்கள் பெற்று பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு முகாமானது ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாமிலேயே வருகிற 3,4-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

    எனவே பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை 2 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

    விண்ணப்பம் இதுவரை பெறாதவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நியாயவிலைக்கடையின் விற்பனையாளரிடம் பெற்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் இணைந்து சுத்தம் செய்து சுகாதாரமாக பேணி காத்து வருகின்றனர்.
    • இந்த செயலை காவலர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, அன்னூர், பில்லூர் ஆகிய 5 காவல் நிலையங்கள் உள்ளது.

    இதில் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் மேட்டுப்பாளையம் நகரின் மத்தியில் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் ஏதாவது புகார் கொடுக்க வேண்டும் என்றால் இங்கு தான் வருவார்கள்.

    இந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக கடந்த ஓராண்டுக்கு முன்பு நவநீதகிருஷ்ணன் என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து சுத்தம் மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தான் மற்றும் தன்னை சுற்றி இருப்பவர்கள் எப்போதும் சுத்தம், சுகாதாரத்துடன் இருக்கவே விரும்புகிறார்.

    இவர் இங்கு வந்ததில் இருந்து போலீஸ் நிலையத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துள்ளார்.

    அதன்படி தினமும் காலையில் காவலர்களின் ரோல் கால் முடிந்தவுடன் காவலர்கள் குடியிருப்பு பகுதி மற்றும் போலீஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் இணைந்து சுத்தம் செய்து சுகாதாரமாக பேணி காத்து வருகின்றனர்.

    மேலும் போலீஸ் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் விழிப்புணர்வு ஓவியங்கள், போலீஸ் நிலையத்தை பூங்கா போல் அமைத்து உள்ளனர்.

    புகார் அளிக்க வரும் பொது மக்களுக்கு அமர்வதற்கு இருக்கை, மேலும் காவலர்கள் குடியிருப்பில் உள்ள குழந்தைகள் விளையாடுவதற்காக மைதானம் ஆகியவையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு ள்ளது.

    இவருடைய இந்த செயலை காவலர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    காலை 9.05 மணிக்கு புறப்படும்(வண்டி எண்:06802) கோவை-சேலம் மெமு ரெயில் 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    கோவை,

    தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை-சேலம் ரெயில் வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் பராமமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே கோவை ரெயில் நிலையத்தில் காலை 9.05 மணிக்கு புறப்படும்(வண்டி எண்:06802) கோவை-சேலம் மெமு ரெயில் இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06803 சேலம்-கோவை செல்லும் மெமு ரெயிலும் இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம் தலைமை தாங்கினார்.
    • போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்

    சூலூர்,

    சூலூர் அருகே முத்துக்கவுண்டன் புதூரில் தேங்காய்க்கு உரிய விலை கேட்டு தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம் தலைமை தாங்கினார். பொருளாளர் டாக்டர் தங்க ராஜ் முன்னிலை வகித்தார். பூரண்டாம்பாளையம் மணி, கோவை மாவட்ட தலைவர் கணேசன், மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

    கேரள அரசு தேங்காயை கொள்முதல் செய்வது போல தமிழக அரசும் பச்சை தேங்காயை கிலோ ஒன்றுக்கு ரூ.50க்கு கொள்முதல் செய்ய வேண்டும். கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்.

    மத்திய அரசு பாமாயில் இறக்குமதியை நிறுத்தி விட்டு தேங்காய் எண்ணை உற்பத்திக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

    இதுதவிர எல்லா நியாய விலை கடைகளிலும் தேங்காய் எண்ணை விற்பனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    இந்தப் போராட்டத்திற்கு பா.ஜனதா கட்சி விவசாய அணி மாநில தலைவர் ஜிகே நாகராஜ் ஆதரவு தெரிவித்து பங்கேற்றார்.

    போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்

    ×