என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • சர்வதேச தொழில் சார்ந்த 40 கருத்தரங்க அமர்வுகளும் நடத்தப்படுகிறது.
    • மாணவர்கள் கண்டுபிடித்த பேட்டரி பைக்கை பார்வையிட்டு, அதன் தொழில் நுட்பங்களை கேட்டரிந்து மாணவர்களை பாராட்டினார்.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு அரசின் "ஸ்டார்ட் அப்" என்கின்ற தொழில் நிறுவனம்., மாநிலத்தில் ஒரு நல்ல தொழில் முனைவோருக்கான சுற்றுச்சூழல் அமைப்பை வளர்த்து வருகிறது.

    துபாய் நாட்டில் நடத்தப்படும் உலகலாவிய நவீன தொழில் நுட்ப முதலீட்டாளர்கள் கண்காட்சி போன்று "யுமாஜின்-சென்னை" என்ற பெயரில் வரும் 23ம் தேதி முதல் 25 வரை சென்னை டிரேட் சென்டரில் நவீன தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது., இதில் 250 சர்வதேச பேச்சாளர்கள், 3000 தொழில் அதிபர்கள் பங்கேற்கிறார்கள். சர்வதேச தொழில் சார்ந்த 40 கருத்தரங்க அமர்வுகளும் நடத்தப்படுகிறது.

    இதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்ப இன்ஜினியரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்படுத்தி, பயனடைய வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து கல்லூரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதற்கான சேவை பிரிவுகளை துவக்கி வருகிறது., மாமல்லபுரம் அடுத்த பையணூரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ஏ.வி.ஐ.டி கல்லூரியில் அதன் நிகழ்ச்சியை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார். பின்னர் அங்கு மாணவர்கள் கண்டுபிடித்த பேட்டரி பைக்கை பார்வையிட்டு, அதன் தொழில் நுட்பங்களை கேட்டரிந்து மாணவர்களை பாராட்டினார். திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ பாலாஜி, கல்லூரி இயக்குநர் டாக்டர் கணேசன், டாக்டர் அனுராதா, சுரேஷ், சாமுவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அ.தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், அதன் கவுன்சிலர்களான வளர்மதி தலைவராகவும், ராகவன் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கபட்டனர்.
    • 8 கவுன்சிலர்களை கொண்ட தி.மு.க., தற்போதைய அ.தி.மு.கவினரின் பேரூராட்சி நிர்வாகம் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, மாமல்லபுரம் பேரூராட்சியை கைப்பற்ற உள்ளது.

    மாமல்லபுரம்:

    கடந்த ஆண்டு பிப்.19 ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் அ.தி.மு.க 9 வார்டும், தி.மு.க 4 வார்டும், ம.தி.மு.க 1, சுயேச்சை 1, வெற்றி பெற்றது.

    அ.தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், அதன் கவுன்சிலர்களான வளர்மதி தலைவராகவும், ராகவன் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கபட்டனர். ஏற்கனவே ம.தி.மு.க கூட்டணியில் இருப்பதாலும், சுயேச்சை கவுன்சிலரான பூபதி, தி.மு.கவில் இணைந்ததாலும் தி.மு.க வினரின் பலம் தொடர்ந்து 6 ஆக இருந்து வந்தது.

    இந்நிலையில் 2வது வார்டு கவுன்சிலர் சீனிவாசன், 12வது வார்டு கவுன்சிலர் சரிதா ஆகிய இருவரும் தி.மு.க விற்கு தாவியுள்ளனர். முறைப்படி தி.மு.க வடக்கு காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் வெ.விஸ்வநாதன், 5வது வார்டு தி.மு.க கவுன்சிலர் மோகன்குமார் முன்னிலையில் தி.மு.க வில் இணைந்தனர். பின்னர் இருவரும் அமைச்சர் அன்பரசனிடம் ஆசி பெற்று தி.மு.க வினராக செயல்பட துவங்கி விட்டனர்.

    இதனால் 8 கவுன்சிலர்களை கொண்ட தி.மு.க., தற்போதைய அ.தி.மு.கவினரின் பேரூராட்சி நிர்வாகம் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, மாமல்லபுரம் பேரூராட்சியை கைப்பற்ற உள்ளது., 2001 ஆம் ஆண்டிற்கு பிறகு பேரூராட்சியை கைப்பற்ற முடியாத தி.மு.க தற்போது 2 கவுன்சிலர்கள் மாறியதால் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாமல்லபுரம் பேரூராட்சியை கைப்பற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல்கட்டமாக 2.7 கி.மீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்.
    • பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி அதன் கரைகளை விரிவாக்கம் செய்து அதன் கரையோரங்களை அழகுபடுத்த அரசு திட்டமிட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    அடையாறில் கூவம் ஆறு கலக்கும் முகத்துவார பகுதியில் இருந்து முட்டுக்காடு படகு இல்லம் வரை சுமார் 22 கி.மீட்டர் தூரத்துக்கு பக்கிங்காம் கால்வாய் உள்ளது.

    இந்த கால்வாய் கரைகளை ஆக்கிரமித்து இரு புறமும் ஏராளமான வீடுகள், கட்டுமானங்கள் உள்ளன. இதனால் கால்வாயின் அகலம் சுருங்கி வந்தது. மழை, வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதி மன்றம் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற சம்பந்தப் பட்ட அனைத்து துறையினருக்கும் உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி அதன் கரைகளை விரிவாக்கம் செய்து அதன் கரையோரங்களை அழகுபடுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    இதில் நீர்வளத்துறை, வருவாய்த்துறை, சென்னை மாநகராட்சி, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இதைத்தொடர்ந்து பக்கிங்காம் கால்வாயில் முதல்கட்டமாக 2.7 கி.மீட்டர் தூரத்துக்கு கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற உள்ளது.

    கூவம் ஆற்றின் முகத்துவார பகுதியில் இருந்து ஆர்.கே.சாலை பாலம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட உள்ளது. இதனால் சுமார் 1,200 குடும்பத்தினர் வெளியேற்றப்படலாம் என்று தெரிகிறது.

    இதையடுத்து அவர்களுக்கு குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

    சென்னையில் உள்ள முக்கிய நீர்வழிப் பாதையான பக்கிங்காம் கால்வாயை மீட்டு அதன் கட்டமைப்பை மேம்படுத்தி கரையோரங்களை அழகுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கால்வாயை பொழுது போக்கு இடமாக மாற்றவும் அரசு முடிவு செய்து இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து பங்கிங்காம் கால்வாய் கரையோரத்தில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. முதல் கட்டமாக, கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்து ஆர்.கே.சாலை பாலம் வரை 2.7 கி.மீ. தூரத்துக்கு மறு சீரமைக்கப்பட உள்ளது. இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் முக்கியமாக கால்வாயின் எல்லையை நிர்ணயிப்பதும், கரைகளை பலப்படுத்துவதும் ஆகும்.

    இதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள திரவியவதி நதியின் மறுசீரமைப்புத் திட்டம், ஒடிசாவில் உள்ள தாலடண்டா கால்வாய் மறு சீரமைப்பு மற்றும் குஜராத்தில் உள்ள சபர்மதி நதி முகப்பு மேம்பாடு போன்ற வெற்றிகரமான மறுசீரமைப்பு திட்டங்களை நீர்வளத்துறை யினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அங்கு செயல்படுத்தப் பட்டதை போல் பங்கிங்காம் கால்வாயிலும் திட்டம் செயல்படுத்தப்படும். இதில் பல்வேறு உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    கூடுதலாக, கால்வாய் பகுதியில் கழிவுநீர் வெளி யேறும் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன. பக்கிங்காம் கால்வாயில் உள்நாட்டு நீர்வழிப் பாதையை கடந்த 2016-ம் ஆண்டு இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் கைவிட்டது. பக்கிங்காம் கால்வாயின் மறுசீரமைப்பு, பொது மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும். இதனால் நீரின் தரம் மற்றும் சுற்றுச் சூழல் மாற்றம் அடையும். மறுசீரமைப்பு திட்டம் இன்னும் திட்டமிடுதல் கட்டத்தில் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ரவி மது குடிப்பதை குடும்பத்தினர் கண்டித்து வந்தனர்.
    • மனவேதனை அடைந்த ரவி வீட்டின் அருகே திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த ஆதிகேசவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது47). கூலித்தொழிலாளி. இவர் மது குடிப்பதை குடும்பத்தினர் கண்டித்து வந்தனர். இதனால் மன வேதனை அடைந்த ரவி வீட்டின் அருகே திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 16 வகையான கைத்திறன் தொழில்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
    • 30 வயதிற்கு உட்பட்ட 150 இளம் கலைஞர்களுக்கும் விருதுகள், ரொக்க பரிசுகள், சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான பூம்புகார் கைவினைஞர்கள் விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் 16 வகையான கைத்திறன் தொழில்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    "குழு உற்பத்தி விருது" 3 குழுவினருக்கும், "பயன்பாடு சார்ந்த கைவினைப் பொருட்கள் விருது" 3 கைவினை கலைஞர்களுக்கும், "பூம்புகார் மாவட்ட கலைத்திறன் விருது" 36 பெண்கள் உட்பட 85 பேருக்கும், அடுத்த தலைமுறைக் கைவினைஞர்கள் கலைத்திறன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற, 30 வயதிற்கு உட்பட்ட 150 இளம் கலைஞர்களுக்கும் விருதுகள், ரொக்க பரிசுகள், சான்றிதழ், பதக்கங்களை அமைச்சர் அப்பரசன் வழங்கினார்

    விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் ஷோபனா, அரசு முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், எம்.எல்.ஏக்கள் பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • திருக்கழுக்குன்றம் பகுதியில் பையுடன் சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
    • வனத்துறை அதிகாரிகள் வாலிபரை கைது செய்து வேட்டையாடப்பட்ட பறவைகளை பறிமுதல் செய்தனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பறவைகள் வேட்டையாடப்படுவதாக வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்கல்பட்டு வனச்சரக அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திருக்கழுக்குன்றம் பகுதியில் பையுடன் சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அவர் வைத்திருந்த பையை திறந்து பார்த்த போது அதில், வேட்டையாடப்பட்டு தோல் உரித்து சுத்தம் செய்யப்பட்ட நிலையில் நீர்க்காகம்-3,வெள்ளை கொக்கு-10 இருந்தன.

    விசாரணையில் அவர் கொத்திமங்களம் கிராமத்தை சேர்ந்த குமார் என்பது தெரிந்தது. அவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து வேட்டையாடப்பட்ட பறவைகளை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, பறவைகளை வேட்டையாடுவது மற்றும் இறைச்சி ள் விற்பது மற்றும் வாங்குவது குற்றம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளனர்.

    • பூண்டியாங்குப்பம், சட்டநாதபுரம், நாகப்பட்டினம் இடையிலான 113 கிலோ மீட்டர் தூர பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.
    • முகையூர்-மரக்காணம் இடையிலான 31 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்று இ.சி.ஆர். எனப்படும் கிழக்கு கடற்கரை சாலை.

    கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் செய்யப்படுமா? என்று பாராளுமன்றத்தில் ம.தி.மு.க. தலைவர் வைகோ எம்.பி. மற்றும் தி.மு.க. எம்.பி. சண்முகம் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி பதில் அளித்தார். அப்போது அவர் மகாபலிபுரம் முதல் கன்னியாகுமரி வரை இந்த கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் செய்யப்படும், என்றார்.

    கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக ரூ.24 ஆயிரத்து 435 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகளும் நடந்து வருகிறது.

    விரிவாக்கத்தின்போது பாலங்கள், இணைப்பு சாலைகள், வாகன சுரங்க பாதைகள் போன்றவை அமைக்கப்படும். இப்பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

    விரிவாக்கம் செய்யப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம் முதல் கன்னியாகுமரி வரை 697 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. இதனை 8 பிரிவுகளாக பிரித்து விரிவாக்கம் செய்து வருகிறார்கள். இதில் புதுச்சேரி முதல் கடலூர் பூண்டியாங்குப்பம் வரையிலான 38 கிலோ மீட்டர் தூர பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வருகிற நவம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் முடிவு பெறும் என தெரிகிறது.

    இதுபோல மகாபலிபுரம்-முகையூர் இடையிலான 31 கிலோ மீட்டர் சாலை பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் இந்த சாலை பணி முடியும் என்று தெரிகிறது.

    மேலும் பூண்டியாங்குப்பம், சட்டநாதபுரம், நாகப்பட்டினம் இடையிலான 113 கிலோ மீட்டர் தூர பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.

    இதுபோல முகையூர்-மரக்காணம் இடையிலான 31 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்-ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையிலான சாலை விரிவாக்க பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மரக்காணம்-புதுச்சேரி இடையிலான 46 கிலோ மீட்டர் சாலையை மேம்படுத்தவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    இச்சாலை விரிவாக்க பணியில் தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி இடையிலான சாலை விரிவாக்க திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை மாநில அரசிடம் ஒப்படைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது.

    சாலை விரிவாக்க பணிகளுக்கு மாநில அரசு தொடர்ந்து நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வந்ததால் இது தொடர்பாக மாநில அரசுடன் முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்து கொண்டது.

    கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து சாலை விரிவாக்க பணிகள் வேகமாக நடப்பதாகவும், அடுத்த ஆண்டுக்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிவுக்கு வரும் எனவும் தேசிய நெடுஞ்சாலை துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • தாம்பரம் அடுத்த வேங்கைவாசலில் நடைபெறும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் சந்தன்குமார் தங்கி வேலை பார்த்து வந்தார்.
    • மின்சாரம் பாய்ந்து சந்தன்குமார் பரிதாபமாக பலியானார்.

    தாம்பரம்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தன்குமார் (22). இவர் தாம்பரம் அடுத்த வேங்கைவாசலில் நடைபெறும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் கீழ் தளத்தில் வேலை பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த தண்ணீரில் கால் வைத்தார். இதில் மின்சாரம் பாய்ந்து சந்தன்குமார் பரிதாபமாக பலியானார்.

    இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    • மின்சார டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதால் அங்குள்ள எந்திரங்கள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது.
    • கடந்த ஒரு வாரமாக 5 கோடி லிட்டர் மட்டுமே உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை உள்ளது. இங்கு தினமும் 11 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு அடையாறு, ஆலந்தூர், பெசன்ட்நகர், திருவான்மியூர், கண்ணகிநகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதால் அங்குள்ள எந்திரங்கள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் கடந்த ஒரு வாரமாக 5 கோடி லிட்டர் மட்டுமே உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நீலாங்கரை, வேளச்சேரி, திருவான்மியூர், அடையாறு, பெசன்ட்நகர், துரைப்பாக்கம் பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் வினியோகம் சரி செய்யப்பட்டு வரும் நாட்களில் குடிநீர் உற்பத்தி சீராகும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • ஒவ்வொரு மாதமும் 2-வது அல்லது 3-வது வெள்ளிக்கிழமை மற்றும் ஒவ்வொரு ஆண்டும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
    • முகாமில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் https://tnprivatejobs.tn.gov.in இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் 2-வது அல்லது 3-வது வெள்ளிக்கிழமை மற்றும் ஒவ்வொரு ஆண்டும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது 2023-ம் ஆண்டிற்கான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்த உள்ளது.

    இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனித வள தேவைக்குரிய நபர்களை நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள்.

    வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், செவிலியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

    வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 18-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேலும் முகாமில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் https://tnprivatejobs.tn.gov.in இணைய தளத்தில் பதிவு செய்யலாம். இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மனவேதனையில் செல்வம் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
    • போலீசார் செல்வத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மது போதையில் இருப்பது தெரிந்தது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியில் செல்போன் கோபுரம் உள்ளது. இன்று காலை அவ்வழியே வந்த வாலிபர் ஒருவர் திடீரென செல்போன் கோபுரத்தில் ஏறினார். அவர் விறுவிறுவென செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்றார்.

    அங்கிருந்து அவர் கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறி கூச்சலிட்டார். இதனை கண்டு அவ்வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த வாலிபரை கிழே இறங்கும் படி அறிவுறுத்தினர். ஆனால் அந்த வாலிபர் கிழே இறங்க மறுத்தார். இதையடுத்து அங்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

    அவரை மீட்பதற்காக போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் முயன்று செல்போன் கோபுரத்தில் ஏறினால் அவர் கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் திகைத்தனர். சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக அவர் கீழே இறங்காமல் போக்குகாட்டி அடம்பிடித்தார்.

    இதற்கிடையே அந்த வாலிபரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி விசாரித்தபோது தற்கொலை மிரட்டல் விடுத்தது அதே பகுதியை சேர்ந்த செல்வம்(30) என்பது தெரியவந்தது.

    இதுபற்றி அறிந்ததும் செல்வத்தின் மாமியார் அங்கு வந்தார். இதனை அறிந்த செல்வம் எதுவும் பேசாமல் ஏறிய அதே வேகத்தில் விறு, விறுவென கீழே இறங்கி வந்தார்.

    இதையடுத்து போலீசார் செல்வத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மது போதையில் இருப்பது தெரிந்தது. குடும்ப தகராறில் அவரது மனைவி பிரிந்து மாமியார் வீட்டுக்கு சென்று இருப்பது தெரிந்தது.

    இதனால் மனவேதனையில் செல்வம் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. பின்னர் அவருக்கு போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர். இதனால் அப்பகுதி இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    • கோடைவிடுமுறையையொட்டி பார்வையாளர்களை கவர வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
    • புலிகள் உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கும் அதற்கான ஏற்பாடுகள் மார்ச் மாத கடைசியில் இருந்து தொடங்கப்படும் என்றனர்.

    வண்டலூர்:

    வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    பூங்காவில் உள்ள வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

    கோடைவிடுமுறையையொட்டி பார்வையாளர்களை கவர வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் அதிக அளவு வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஏற்றாற்போல் தற்போதே பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடைகாலம் ஆரம்பமானதை தொடர்ந்து பூங்காவில் உள்ள யானை, காண்டாமிருகம், மனித குரங்கு போன்ற விலங்குகளுக்கு மதிய வேளையில் ஷவர் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவை ஷவரில் உற்சாக குளியல் போட்டு செல்கின்றன.

    குட்டையில் தேங்கி உள்ள தண்ணீரில் யானைகள் உற்சாக ஆட்டம் போடுகின்றன. செயற்கை அருவியில் இருந்து விழும் தண்ணீரில் மனித குரங்குகள் அவ்வப்போது வந்து தங்களது உடலை தண்ணீரில் நனைத்து சூட்டை தணித்து செல்கின்றன. இது பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மனித குரங்குகளுக்கு மதிய வேளையில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களான தர்பூசணி, கிர்ணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட பழங்கள் கொடுக்கப்படுகிறது.

    இதேபோல் மற்ற விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கோடைக்காலம் தொடங்குவதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக பறவைகள் இருப்பிடங்களுக்கு அருகே தாகத்தை தீர்க்க கூடுதலாக ஆங்காங்கே தண்ணீர் வைக்கப்படுகிறது.

    மேலும் பறவைகள் அமைக்கப்பட்ட கூண்டை சாக்கு பையால் சுற்றி அதன் மீது தண்ணீர் ஊற்றப்படுகிறது. இதனால் பறவைகூண்டுகளின் உள்புறம் குளிர்ச்சியான சூழலில் இருக்கும்.

    இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரிகள் கூறும்போது, கோடை காலத்தை சமாளிக்க பறவைகள், விலங்குகளுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் முதல் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புலிகள் உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கும் அதற்கான ஏற்பாடுகள் மார்ச் மாத கடைசியில் இருந்து தொடங்கப்படும் என்றனர்.

    ×