என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.கவிற்கு தாவிய அ.தி.மு.க கவுன்சிலர்கள் இருவரும் அமைச்சர் அன்பரசனிடம் வாழ்த்து பெற்றது
22 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரம் பேரூராட்சியை தி.மு.க கைப்பற்றுகிறது
- அ.தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், அதன் கவுன்சிலர்களான வளர்மதி தலைவராகவும், ராகவன் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கபட்டனர்.
- 8 கவுன்சிலர்களை கொண்ட தி.மு.க., தற்போதைய அ.தி.மு.கவினரின் பேரூராட்சி நிர்வாகம் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, மாமல்லபுரம் பேரூராட்சியை கைப்பற்ற உள்ளது.
மாமல்லபுரம்:
கடந்த ஆண்டு பிப்.19 ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் அ.தி.மு.க 9 வார்டும், தி.மு.க 4 வார்டும், ம.தி.மு.க 1, சுயேச்சை 1, வெற்றி பெற்றது.
அ.தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், அதன் கவுன்சிலர்களான வளர்மதி தலைவராகவும், ராகவன் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கபட்டனர். ஏற்கனவே ம.தி.மு.க கூட்டணியில் இருப்பதாலும், சுயேச்சை கவுன்சிலரான பூபதி, தி.மு.கவில் இணைந்ததாலும் தி.மு.க வினரின் பலம் தொடர்ந்து 6 ஆக இருந்து வந்தது.
இந்நிலையில் 2வது வார்டு கவுன்சிலர் சீனிவாசன், 12வது வார்டு கவுன்சிலர் சரிதா ஆகிய இருவரும் தி.மு.க விற்கு தாவியுள்ளனர். முறைப்படி தி.மு.க வடக்கு காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் வெ.விஸ்வநாதன், 5வது வார்டு தி.மு.க கவுன்சிலர் மோகன்குமார் முன்னிலையில் தி.மு.க வில் இணைந்தனர். பின்னர் இருவரும் அமைச்சர் அன்பரசனிடம் ஆசி பெற்று தி.மு.க வினராக செயல்பட துவங்கி விட்டனர்.
இதனால் 8 கவுன்சிலர்களை கொண்ட தி.மு.க., தற்போதைய அ.தி.மு.கவினரின் பேரூராட்சி நிர்வாகம் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, மாமல்லபுரம் பேரூராட்சியை கைப்பற்ற உள்ளது., 2001 ஆம் ஆண்டிற்கு பிறகு பேரூராட்சியை கைப்பற்ற முடியாத தி.மு.க தற்போது 2 கவுன்சிலர்கள் மாறியதால் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாமல்லபுரம் பேரூராட்சியை கைப்பற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.






