என் மலர்
செங்கல்பட்டு
- பிளாஸ்டிக் பாட்டில்களை தூள்களாக்கி மறுசுழற்சி செய்யும் வகையில் எந்திரங்களை வாங்கி உள்ளனர்.
- முதல் கட்டமாக 2 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர், குளிர்பானம் பாட்டில்களை சாலையோரம் வீசிசெல்வதால் புராதன சின்னங்கள் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு வந்தது. இதை பார்க்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் பகுதியில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திவிட்டு வீசி செல்லும் பிளாஸ்டிக் பாட்டில்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பிளாஸ்டிக் பாட்டில்களை தூள்களாக்கி மறுசுழற்சி செய்யும் வகையில் எந்திரங்களை வாங்கி உள்ளனர். முதல் கட்டமாக 2 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதில் ஒரு எந்திரம் மாமல்லபுரம் கடற்கரை சாலையிலும், மற்றொரு எந்திரம் ஐந்துரதம் பகுதியிலும் வைக்கப்பட்டு உள்ளது. பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறு சுழற்சி செய்யும் பகுதியில் துகள்களாக்கப்படுகிறது.
இந்த எந்திரங்களை மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் தொடங்கி வைத்தார்.
- சமூக ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்டப்பட்ட சம்பவம் திருக்கழுக்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொலையாளிகள் வேறு எங்கும் தப்பி சென்றுவிடாத வகையில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ருத்ரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சர்புதீன்.37 வயது வாலிபரான இவர் நேற்று மதியம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த மேட்டுமங்களம் பகுதியில் ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தார்.
சமூக ஆர்வலரான இவர் சென்னை செல்வதற்காக ஓட்டல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறி அமர்ந்தார். அப்போது அவரது காரை 10 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்தது. அவர்கள் திடீரென கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த சர்புதீன் காரில் இருந்து இறங்கி தப்ப முயன்றார். ஆனால் அதற்குள் மர்ம கும்பல் அவரை காருக்குள் வைத்தே சரமாரியாக வெட்டியது. இதில் சர்புதீனின் உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் அவரால் தப்பமுடியவில்லை. சம்பவ இடத்திலேயே சர்புதீன் துடிதுடித்து பலியானார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு திருக்கழுக்குன்றம் போலீசார் விரைந்து சென்றனர்.மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் தலைமையில் திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலையாளிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். சமூக ஆர்வலர் சர்புதீன் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக சர்புதீன் வழக்கு போட்டதும் அதன் காரணமாக திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் மற்றும் மோதல் இருந்து வந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். இதில் ஆக்கிரமிப்புகள் விவகாரம் தொடர்பாக இருந்து வந்த மோதல் காரணமாகவே சர்புதீன் திட்டம் போட்டு தீர்த்துக்கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சர்புதீனை வெட்டிக்கொன்றதாக 9 பேரை அதிரடியாக கைது செய்தனர். கொலை நடந்த 6 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
ரகுமான், மன்சூர், இப்ராகிம், அஜிஸ், நஸிம், ரகுமான், வெள்ளை,சலீம், பரூக். இவர்கள் அனைவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 9 பேரில் சலீம் வக்கீல் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கொலையாளிகள் வேறு எங்கும் தப்பி சென்றுவிடாத வகையில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சர்புதீனுக்கு திருமணமாகி மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.அவர்கள் சர்புதீன் உடலை பார்த்து கதறி அழுதனர். இது பரிதாபத்தை ஏற்படுத்தியது. சமூக ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்டப்பட்ட சம்பவம் திருக்கழுக்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கில் கேமரா காட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- கழிவறை மற்றும் கைகழுவும் இடதில் உள்ள பைப்புகளில் தண்ணீர் வரவில்லை.
- ரெயிலில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
செங்கல்பட்டு:
மும்பையில் இருந்து திருத்தணி, அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ்ரெயில் நேற்று இரவு வந்து கொண்டு இருந்தது.
இதில் கழிவறை மற்றும் கைகழுவும் இடத்தில் உள்ள பைப்புகளில் தண்ணீர் வரவில்லை. இதனால் ரெயிலில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் கடும் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து ரெயிலில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று தெரிகிறது.
இதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரெயில் நிலையத்திற்கு முன்பே நடுவழியில் அவசரகால சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ரெயில் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். பேச்சுவார்தை நடத்திய அதிகாரிகள் ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்பப்படும் என உறுதியளித்தனர். ஆனால் ரேணிகுண்டா ரெயில் நிலையத்தை கடந்தும் தண்ணீர் பிரச்சினை தீரவில்லை. மேலும் அரக்கோணத்தில் தண்ணீர் நிரப்பப்படும் என்று மாறி மாறி அதிகாரிகள் கூறினார். ஆனால் அரக்கோணம் தாண்டியும் தண்ணீர் நிரப்பப்படவில்லை என்று தெரிகிறது.
இதற்கிடையே எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரெயில் பெட்டிகளில் இருந்து இறங்கி நடைமேடையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயிலை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் வந்த ரெயில்வே அதிகாரிகளிடமும் பயணிகள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது விழுப்புரத்தில் கண்டிப்பாக தண்ணீர் நிரப்பப்படும் என்று அதிகாரிகள் மீண்டும் உறுதியளித்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு சுமார் 1மணி நேரம் தாமதாக நாகர்கோவில் நோக்கி ரெயில் புறப்பட்டு சென்றது. பயணிகளின் இந்த போராட்டம் காரணமாக பின்னால் வந்த அடுத்தடுத்த ரெயில்களும் தாமதமாக சென்றன.
- கடல்சார் உயிரினங்களை பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து காக்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் குறித்தும் உறுதிமொழி ஏற்றனர்.
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கடற்கரை கோயில் தென் பகுதி கடலோரத்தில், குவிந்து கிடந்த குப்பைகளை, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து, மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்க திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் இணைந்து அனைத்து வகை குப்பை கழிவுகளையும் அகற்றினர்.,
பின்னர் கடல்சார் உயிரினங்களை பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து காக்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் குறித்தும் உறுதிமொழி ஏற்றனர்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் அதிகாரி உதயகுமார், நிர்வாக தலைவர் சங்கர், மாவட்ட நிர்வாக அலுவலர்கள், மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பறவைகளுக்கு கோடை ஷவர் குளியல் வழங்கி வெயில் பாதிக்காமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
வண்டலூர்:
இந்தியாவில் மிகப்பெரிய பழமையான உயிரியல் பூங்கா வண்டலூர் உயிரியல் பூங்காவாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து இந்த பூங்காவை சுற்றிப் பார்க்க வருகின்றனர்.
தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால் உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் கோடை காலத்தையொட்டி வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க வண்டலூர் உயிரியல் பூங்காவில் தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவைகள் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உடல் சூட்டைத் தணிக்க கூடிய பழங்கள் தர்பூசணி, கிர்ணிப்பழம் மற்றும் இளநீர் அனைத்தும் சேர்க்கப்பட்டு அந்த பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து பழங்கள் உறைந்த நிலையில் அல்வா போன்று விலங்குகளுக்கு கொடுக்கிறார்கள் பறவைகளுக்கு அவைகள் இருப்பிடத்தை சுற்றி ஜன்னல் கோணி கட்டப்பட்டு அவைகளுக்கும் கோடை ஷவர் குளியல் வழங்கி வெயில் பாதிக்காமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று சிங்கம், புலிகளுக்கு நீந்தி குளிக்கும் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. காண்டாமிருகத்திற்கு ஷவர் குளியலுடன் இருக்கும் இடத்தை சுற்றி சேற்று குளியல் அமைத்துள்ளனர்.
அதேபோல் நீர்யானை இருக்கும் இடத்தையும் தண்ணீரால் நிரப்பி சேற்றுத் தன்மை மாறாதபடிக்கு ஈரப்பதத்தை கொடுத்து அந்த விலங்குகளின் சூட்டை தணிக்கின்றனர்.
அதேபோல் யானைக்கு ஷவர் குளியல் மற்றும் சேற்று குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெருப்புக்கோழி, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை போன்றவைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீரை சுழற்றி அடிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் பார்வையாளர்களின் வசதிக்காக ஆங்காங்கே தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுப் பொலிவுடன் திறக்கப்பட்ட உணவகங்கள், நிழற்குடைகள் என்று பார்வையாளர்களுக்கும் கோடை காலத்தில் சிறப்பான ஏற்பாடுகளை உயிரியல் பூங்கா நிர்வாகம் செய்துள்ளது.
- கோயம்பேடு பஸ் நிலையத்தை மிஞ்சும் அளவிற்கு 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகின்றது.
- கலைஞரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரின் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டு ஜூன் மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
வண்டலூர்:
சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு இந்த பஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது ஆசியாவில் மிகப்பெரிய கோயம்பேடு பஸ் நிலையத்தை மிஞ்சும் அளவிற்கு 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகின்றது.
இந்த பஸ் நிலைய பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கலைஞரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரின் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டு ஜூன் மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
இதற்காக மாதத்திற்கு 6 முறை ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதலமைச்சரால் திறக்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்துக்கு வரக்கூடிய பயணிகளின் வாகனங்கள், பார்க்கிங் இடம், 4 தங்குமிடம், 4 உணவு கூடங்கள் அமைக்கப்படும். 95 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது வீட்டு வசதிதுறை மற்றும் நகர்ப்புற துறை செயலாளர் அபூர்வா, மாவட்ட கலெக் டர் ராகுல்நாத், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், ஒன்றிய துணைத் தலைவர் வி.எஸ். ஆராவமுதன், ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்திக், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- குழந்தையின் பெற்றோர் குழந்தையிடம் விசாரித்தபோது குழந்தை பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளது.
- குழந்தையின் பெற்றோர் கூடுவாஞ்சேரி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமியிடம் புகார் அளித்தனர்.
வண்டலூர்:
சென்னை புது பெருங்களத்தூர், லால்பகதூர் சாஸ்திரி தெருவில் வசித்து வருபவர் திவாகர் (24) ஏசி மெக்கானிக். இவருக்கு திருமணம் ஆகவில்லை, இவர் பக்கத்து வீட்டாரின் 4 வயது குழந்தையை அவரது வீட்டில் விளையாட விடுவது வழக்கம்.
கடந்த 2 தினங்களுக்கு முன் குழந்தையை விட்டுச் சென்றபோது திவாகர் அந்த 4 வயது பெண் குழந்தையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த பாட்டி திவாகரின் செயலை பார்த்து கடும் கோபம் கொண்டு சத்தம் போட ஆரம்பித்தார். பின்னர் குழந்தையின் பெற்றோர் குழந்தையிடம் விசாரித்தபோது குழந்தை பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளது.
இதனை தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் கூடுவாஞ்சேரி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமியிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். திவாகர் போலீசார் வருவதை பார்த்து ஓட முயற்சித்தார். சுதாரித்துக்கொண்ட மகளிர் போலீசார் திவாகரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
- 11 சிறுவர்கள், 6 பெண்கள், உள்பட 27 பேர் திருப்போரூர் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மீட்டனர்.
- மீட்கப்பட்டவர்களை சொந்த ஊருக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
திருப்போரூர்:
கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் ஊராட்சியில் கொத்தடிமைகளாக மரம் வெட்டும் தொழில் செய்து வந்த 11 சிறுவர்கள், 6 பெண்கள், உள்பட 27 பேர் திருப்போரூர் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மீட்டனர்.
அவர்கள் அனைவரும் திருத்தணி அருகே கிருஷ்ணாபுரம், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மரம் வெட்டும் வேலை உள்ளதாக அழைத்து வந்து கொத்தடிமைகளாக பல வருடங்களாக வேலை வாங்கி வந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களை சொந்த ஊருக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
- வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,832 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது.
- வெள்ளைப்புலி மீது தண்ணீர் பாட்டில் வீசிய நபருக்கு ரூ.500 அபராதம் விதித்து கடும் எச்சரிக்கை செய்து பூங்காவில் இருந்து அந்த நபரை வெளியே அனுப்பினர்.
வண்டலூர்:
சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,832 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க வந்த ஒரு ஆண் பார்வையாளர் திடீரென தனது கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை கூண்டுக்குள் இருந்த வெள்ளைப்புலி மீது வீசினார். இதை பார்த்த பூங்கா ஊழியர் உடனடியாக புலி மீது தண்ணீர் பாட்டில் வீசிய நபரை கையால் தாக்கி மடக்கி பிடித்து வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.
இதனையடுத்து வெள்ளைப்புலி மீது தண்ணீர் பாட்டில் வீசிய நபருக்கு ரூ.500 அபராதம் விதித்து கடும் எச்சரிக்கை செய்து பூங்காவில் இருந்து அந்த நபரை வெளியே அனுப்பினர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலி மீது பார்வையாளர் ஒருவர் தண்ணீர் பாட்டிலை வீசும் காட்சி மற்றும் தண்ணீர் பாட்டில் வீசிய நபரை பூங்கா ஊழியர் தாக்கிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு தொழில்களை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என முதன்மை செயலர் தகவல்
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். கூட்டுறவு சங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். சங்கத்தின் அருகே புதிதாக தொடங்கப்பட்டுள்ள எண்ணைய் உற்பத்தி செய்யும் மரச்செக்கு ஆலையை நேரில் பார்வையிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கிராமப்பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலம் தொழில்நுட்ப ரீதியாக மேற்கொண்டுள்ள முன்னேற்ற செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன். இதன் ஒரு பகுதியாக, வாயலூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு, வாயலூர் சுற்றுப்புற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கடலை மூலம் எண்ணைய் தயாரிக்கும் வகையில், கூட்டுறவு சங்கத்தில் ரூ.20 லட்சம் கடன் பெற்று செக்கு ஆலை அமைக்கப்பட்டுள்ளது., இதில், உற்பத்தி செய்யப்படும் எண்ணைய் 1 லிட்டர் ரூ.220க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடன் சங்கங்கள் மூலம் அப்பகுதியில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான செயல்பாடுகள் மற்றும் 24 வகையான தொழில்கள் மூலம் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில், அந்தந்த பகுதிக்கு தேவையான வகையில் தொழில் மேற்கொள்ளப்படுகிறது. வாயலூர் கூட்டுறவு சங்கத்தில் செக்கு அமைத்துள்ளதுபோல், உசிலம்பட்டி பகுதியில் கரும்பு உற்பத்தி மற்றும் அறுவடை செய்வதற்கான இயந்திரங்களை வாடகைக்கு வழங்குதல், கடலூரில் நெல் அறுவடை செய்யக்கூடிய இயந்திரம் வாடகைக்கு வழங்குதல் உள்பட, அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு தொழில்களை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதேபோல், இப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலும் ஆய்வு செய்யப்பட்டது. புதுப்பிக்க வேண்டிய கடைகளையும் பார்வையிட்டேன். தமிழ்நாட்டில் ஏற்கெனவே 5 ஆயிரம் ரேஷன் கடைகள் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்றுள்ளன. இந்தாண்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு மேற்கண்ட சான்று கிடைக்கும் என நம்புகிறோம். பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை தீர்க்கும் வகையில், அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- குற்றம்சாட்டப்பட்ட நபர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று, வழக்கு நடத்தி வந்தார்.
- சிறுமிக்கு ஆதரவாக அரசு வக்கீல் புவனேஸ்வரி ஆஜராகி வாதாடினார்.
மாமல்லபுரம்:
திருப்போரூர் அடுத்த அருங்குன்றம் பகுதியை சேர்ந்த இருளர் வேலன் என்பவரின் 11 வயது மகள், கடந்த 2017-ஆம் ஆண்டு அப்பகுதிக்கு பேன்ஸி பொருட்கள் விற்க வந்த உத்திரமேரூர் பெருநகர் கிராமத்தை சேர்ந்த நரிக்குறவர் அரசன் (வயது 52) என்பவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
இதுகுறித்து மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அப்போது அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் அரசன் தான் குற்றம் செய்யவில்லை என்று வாதாடி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று, வழக்கு நடத்தி வந்தார்.
இந்த வழக்கில் சிறுமிக்கு ஆதரவாக அரசு வக்கீல் புவனேஸ்வரி ஆஜராகி வாதாடினார். 5 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில் அரசன் மூன்று திருமணங்கள் செய்தவர் என்பதும், சம்பவம் நடந்த தினத்தன்று சிறுமிக்கு ரஸ்னா வாங்கி கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததும், சிறுமி கூச்சலிட்டபோது அவரை காப்பாற்றிய சாட்சிகள் விசாரணையின் மூலம் உறுதியானது.
இதன் அடிப்படையில் குற்றம் உறுதி ஆனதால், போக்சோ சட்டத்தின் கீழ் அரசனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியது.
- கடை உரிமையாளர் ஹைதர் அலியை அவர்கள் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
- தலைமறாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நந்திவரம்:
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கோவிந்தராஜபுரம் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருபவர் ஹைதர் அலி (வயது 54), இவரது கடையில் சில தினங்களுக்கு முன்பு பிரியாணி கேட்டு 8 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதனை தட்டி கேட்ட கடை உரிமையாளர் ஹைதர் அலியை அவர்கள் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியாணி கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் நந்திவரம் பகுதியை சேர்ந்த கவுதம் (வயது 29), அஸ்வின் (29), சுரேஷ் (29) மற்றும் சென்னை தரமணி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (30), பிரகாஷ் (26), ஆகியோரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் தலைமறாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.






