என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • கல்பாக்கம் பல்லவன் நகரில் வசிப்பவர் பாக்யராஜ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
    • இரண்டு வீடுகளில் மர்மநபர்கள் அடுத்தடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் பல்லவன் நகரில் வசிப்பவர் பாக்யராஜ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கினார்.

    இதனை நோட்டம் விட்ட மர்ம நபர்கள், வீட்டுக்குள் புகுந்து பாக்யராஜின் மனைவி தூங்கிக் கொண்டிருந்த அறையின் கதவை வெளிப்பக்கம் மூடிவிட்டு, பீரோவில் இருந்த 10 பவுன் தங்கநகை, 300 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    இதேபோல், அருகில் உள்ள இரண்டு வீடுகளில் மர்மநபர்கள் அடுத்தடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    • திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயிலில் சித்திரை பெருவிழா இன்று துவங்கியது
    • இன்று தொடங்கும் திருவிழா வரும் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 62வது தலமாகும். இங்கு சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    தொடர்ந்து வெட்டிவேர் சப்பரம், சிம்மவாகன சேவை, சூரியபிரபை, சிறிய திருவடி சேவை, சேஷவாகன சேவை, புன்னையடி சேவை, பல்லக்கு நாச்சியார் திருக்கோலம், கருடசேவை, சூர்னாபிஷேகம், யானை வாகன சேவை, திருத்தேர், தோளுக்கு இனியான், பல்லக்கு வெண்ணைத்தாழ் கண்ணன் சேவை, குதிரை வாகன சேவை, பல்லக்கு, சந்திரபிரபை, புஷ்பயாகம், துவாத்ச ஆராதனை, தெப்பம் உத்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வரும் 13-ம் தேதிவரை தொடர்ந்து நடைபெறுகிறது.

    • மாமல்லபுரம் அருகே மணமை என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது.
    • பலத்த காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மாமல்லபுரம்:

    சென்னையில் இருந்து இன்று பிற்பகல் புதுச்சேரி நோக்கி அரசு விரைவு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதேசமயம் கல்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி பயணிகளுடன் ஷேர் ஆட்டோ வந்துகொண்டிருந்தது.

    மாமல்லபுரம் அருகே மணமை என்ற இடத்தில் வந்தபோது, அதிவேகத்தில் வந்த அரசு பேருந்து, ஷேர் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோ முற்றிலும் சிதைந்தது. அதில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 3 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    • கோனாதி ரெயில்வே கேட் பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • மது விற்ற பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மறைமலைநகர்:

    செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியை அடுத்த கோனாதி ரெயில்வே கேட் பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் ரோந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு பெண்கள் மது விற்பனை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் காட்டாங்கொளத்தூர் திருப்பாணாழ்வார் தெருவைச்சேர்ந்த பானுமதி (வயது 50), வள்ளி (57), சித்ரா (40) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 19 மதுப் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தைச்சேர்ந்த மணி (32) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 37 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
    • நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இந்துபாலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் உறுப்பினர்களை கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த வரைவு வாக்காளர் பட்டியலை வாக்காளர் பதிவு அலுவலரும் மாவட்ட கலெக்டருமான ராகுல் நாத் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இதனை மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் பெற்றுக் கொண்டார். வரைவு வாக்காளர் பட்டியல் இன்றைய நிலையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களின் பட்டியலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மாவட்ட ஊராட்சி-16, மாநகராட்சி-70, நகராட்சிகள்-108, பேரூராட்சிகள்-99 என மொத்தம் 293 உள்ளது. மேலும் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலின் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை (4-ந்தேதி) வெளியிடப்படுகிறது.

    நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இந்துபாலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
    • மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பூமியின் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று காலை வரை கனமழை பெய்தது. மழை காரணமாக, கிருஷ்ணர் மண்டபம் வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதேபோல் ஐந்து ரதம் நுழைவு வாயில், கலங்கரை விளக்கம் சாலை, கடற்கரை சாலை பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது இதனால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், இந்த கனமழையால் மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பூமியின் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது.

    • எனக்கு சொந்தமாக எந்த நிறுவனமும் கிடையாது.
    • 21 கம்பெனிகள் என்னுடையது என கூறி இருக்கிறார்கள்

    பம்மல் :

    சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சி பம்மல் தெற்கு பகுதி தி.மு.க சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மண்டல குழு தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு எம்.பி, தமிழக சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணாநிதி மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு கூறியதாவது:-

    பா.ஜ.க.வின் தமிழ்நாடு தலைவர் என்னைப் பற்றி கூறிய அவதூறு செய்தி ஒரு வாரத்திற்கு முன்பு வந்தது. அவதூறுகள் குறித்து நான் அவருக்கு நோட்டீஸ் அளித்தேன். தற்போது வரை அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. 48 மணி நேரம் அவருக்கு கொடுத்தேன். அதுவும் முடிந்து விட்டது.

    21 கம்பெனிகள் என்னுடையது என கூறி இருக்கிறார்கள். ஆனால் 3 நிறுவனங்களில் மட்டுமே பங்குதாரராக உள்ளேன். எனக்கு சொந்தமாக எந்த நிறுவனமும் கிடையாது. எந்த கம்பெனியிலும் நான் டைரக்டர் கிடையாது. தேர்தலில் நிற்கும் போதே சொத்து கணக்குகள் அனைத்தும் கொடுத்திருக்கிறேன் அதை பார்த்துக் கொள்ளலாம். எனக்கு எது சொந்தம் எது சொந்தமில்லை என்பது மக்களுக்கு தெரியும்.

    ஒரு வன்மம் நோக்கத்தோடு செய்திருக்கிறார். அதற்காக நான் வழக்கு தொடராமல் இருக்க முடியாது. வருகிற 8-ந் தேதி அவர் மீது வழக்கு தொடர போகிறேன். அதற்கு பிறகு சட்டபூர்வமாக சிவில் வழக்கு தொடருவேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சென்னை, புறநகர் மற்றும் வெளியூர்களில் வந்திருந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
    • சந்தனக்கூடு தேர் முக்கிய வீதிகளின் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் வந்து தர்கா வந்தடைந்தது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் கடற்கரையோரம் அமைந்துள்ள ஹஜ்ரத் முகமது ஷா காதிரி ஒலியுல்லா அவர்களின் 350வது வருட கந்தூரி எனப்படும் சந்தனக்கூடு திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொண்டாடப்பட்டது.

    இந்த திருவிழாவில் சென்னை, புறநகர் சென்னை மற்றும் வெளியூர்களில் வந்திருந்த இஸ்லாமியர் குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டு அதிகாலையில் நடைபெறும் சந்தனம் பூசும் சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டனர். சந்தனக்கூடு தேர் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் ஊர்வலமாக வந்து தர்கா வந்தடைந்தது.

    நிகழ்ச்சி ஏற்பாட்டை கோவளம் ஜோனகுப்பம் மஹல்லா இளைஞர் அணி, முஸ்லிம் மீனவ சமுதாய மக்கள் மற்றும் சுன்னத்வர் ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.

    • கீரப்பாக்கம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் 150 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.
    • கூட்டம் செல்லாது என்று மாவட்ட கலெக்டர் அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் 150 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.

    இதில் இலவச வீட்டு மனை பட்டா வழங்காததால் ஊராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு பகுதி வாழ் மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    4-வது வார்டில் உள்ள விநாயகபுரம், தொட்டி மாரியம்மன் கோவில் தெரு, ஊமை மாரியம்மன் கோவில் தெரு, இதேபோல், 5-வது வார்டில் உள்ள கன்னியம்மன் கோவில் தெரு, பாபாசாகிப் தெரு ஆகிய பகுதிகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வே செய்யப்பட்டு அனைத்து கோப்புகளும் தயாரிக்கப்பட்டு பட்டா வழங்குவதற்காக தயார் நிலையில் இருந்தன.

    இந்நிலையில் தயார் நிலையில் இருந்த அனைத்து கோப்புகளும் மாயம் ஆக்கிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், காணாமல் போன கோப்புகளை கண்டுபிடித்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் அல்லது ஜமாபந்தியில் கொடுக்கப்பட்டுள்ள விவரப்பட்டியலின்படி மீண்டும் சர்வே செய்து மேற்படி பகுதி வாழ் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

    இதுபோல் விளையாட்டு திடல், சிறுவர் பூங்கா, உடற்பயிற்சி கூடம், சமுதாயக்கூடம் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் வரை கிராம சபை கூட்டங்களை புறக்கணிப்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கக்கூடிய கிராம ஊராட்சிகளில் குறைந்தது 300 நபர்களாவது கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். அப்படி பங்கேற்றால்தான் அந்த கிராம சபை கூட்டம் செல்லும். ஆனால் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய கீரப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வெறும் 150 பேர் மட்டுமே பங்கேற்றனர். எனவே மேற்படி சட்டத்தின் கீழ் கீரப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் செல்லாது என்று மாவட்ட கலெக்டர் அறிவிக்க வேண்டும். மேலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

    • பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக ஏராளமான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

    தொடர் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை காரணமாக மெரினா கடற்கரை, வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க குவிந்து வருகின்றனர். நேற்று அனைத்து இடங்களிலுமே கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் காணப்பட்டது.

    பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகு வந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மெரினா கடற்கரை முழுவதும் மக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்து பொழுதை கழித்தனர். மணற்பரப்பே தெரியாத அளவுக்கு கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாமல்லபுரத்தில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இங்குள்ள புராதன சின்னங்கள், ஷீசெல் மியூசியம், கலங்கரை விளக்கம், கப்பல்துறை மியூசியம் போன்ற பகுதிகளை சுற்றி பார்ப்பதற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் குவிந்தனர்.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமானோர் கார் மற்றும் வாகனங்களில் குவிந்ததால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவளம் சாலை, கிழக்கு ராஜவீதி, கலங்கரை விளக்கம் சாலை, ஐந்துரதம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    மே தின விடுமுறை நாளான இன்றும் காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்து உள்ளனர். அவர்கள் புராதன சின்னங்கள் முன்பு நின்றபடி செல்போன்களில் செல்பி எடுத்தும், குடும்பத்துடன் பொழுதை கழித்தும் மகிழ்ந்தனர்.

    இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி முதலை பண்ணை உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கியதை தொடர்ந்து வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. பூங்காவில் உள்ள யானை, காண்டாமிருகம், மனித குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்கு கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மதிய வேளையில் ஷவர் குளியல் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணி உள்ளிட்ட குளிர்ச்சியான பழங்கள் கொடுக்கப்படுகிறது.

    இதனை பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். பறவைகள் இருப்பிடங்களில் ஆங்காங்கே தண்ணீர் குவலைகள் வைக்கப்பட்டு உள்ளது. அதன் கூண்டுகள் சாக்கு பையால் சுற்றி அதன் மீது தண்ணீர் ஊற்றப்படுகிறது. இதனால் பறவைகளின் கூண்டுகள் உட்புறம் ஈரப்பதமான நிலையில் உள்ளன. நேற்று வண்டலூர் பூங்காவுக்கு வந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இன்றும் ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.

    கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக ஏராளமான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் குடிநீர் பைப்புகளும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக வைத்து உள்ளனர். இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    • மோகன்ராமின் உடலை பார்த்து அவரது நண்பர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
    • செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், திருமலைராஜன் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் மோகன்ராம்(வயது19). பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டுபடித்து வந்தார்.

    மோகன்ராமுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அவர் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு உடன் படிக்கும் நண்பர்கள் 7 பேருடன் செங்கல்பட்டு அருகே உள்ள இருங்குன்றம் பள்ளி பகுதியில் உள்ள பாலாற்றில் குளிக்க சென்றார். அனைவரும் தண்ணீரில் இறங்கி குளித்தனர். அப்போது மோகன்ராம் ஆழமான பகுதிக்கு சென்றார். நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கினார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் இருந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் மோகன்ராம் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பலியான மோகன்ராமின் உடலை மீட்டனர். பின்னர் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மோகன்ராமின் உடலை பார்த்து அவரது நண்பர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் முதல் சுழற்சியை துவக்கி வைத்தார்.
    • தலா 1.75 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு மிஷின்கள் முதல் கட்டமாக வாங்கப்பட்டுள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில், குளிர்பான பாட்டில்களை சாலையோரம் வீசி செல்வதால் புராதன சின்னங்கள் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு வந்தது. பார்ப்போர் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, பிளாஸ்டிக் குப்பைகளை கட்டுப்படுத்தும் விதமாக இணையதளம், சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பிளாஸ்டிக் பாட்டில்களை தூளாக்கும் மிஷின்கள் வாங்க முடிவு செய்தது. அதன்படி "மிட்சுபிஷி" கம்பெனியில் தலா 1.75 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு மிஷின்களை முதல் கட்டமாக வாங்கியுள்ளது.

    பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை தூளாக்கும் இரண்டு மிஷின்களில், கடற்கரை சாலையில் ஒரு மிஷினும், ஐந்துரதம் பகுதியில் ஒரு மிஷினும் தற்போது வைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் முதல் சுழற்சியை துவக்கி வைத்தார். இந்த நடவடிக்கைக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    ×