என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை தூளாக்கும் நவீன மிஷின்- சுற்றுலா பயணிகள் வரவேற்பு
- பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் முதல் சுழற்சியை துவக்கி வைத்தார்.
- தலா 1.75 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு மிஷின்கள் முதல் கட்டமாக வாங்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில், குளிர்பான பாட்டில்களை சாலையோரம் வீசி செல்வதால் புராதன சின்னங்கள் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு வந்தது. பார்ப்போர் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, பிளாஸ்டிக் குப்பைகளை கட்டுப்படுத்தும் விதமாக இணையதளம், சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இந்த நிலையில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பிளாஸ்டிக் பாட்டில்களை தூளாக்கும் மிஷின்கள் வாங்க முடிவு செய்தது. அதன்படி "மிட்சுபிஷி" கம்பெனியில் தலா 1.75 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு மிஷின்களை முதல் கட்டமாக வாங்கியுள்ளது.
பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை தூளாக்கும் இரண்டு மிஷின்களில், கடற்கரை சாலையில் ஒரு மிஷினும், ஐந்துரதம் பகுதியில் ஒரு மிஷினும் தற்போது வைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் முதல் சுழற்சியை துவக்கி வைத்தார். இந்த நடவடிக்கைக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.






