என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூன்று திருமணம் செய்தவர் 11 வயது சிறுமியிடம் சில்மிஷம்: போக்சோ வழக்கில் 5 ஆண்டு சிறை
- குற்றம்சாட்டப்பட்ட நபர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று, வழக்கு நடத்தி வந்தார்.
- சிறுமிக்கு ஆதரவாக அரசு வக்கீல் புவனேஸ்வரி ஆஜராகி வாதாடினார்.
மாமல்லபுரம்:
திருப்போரூர் அடுத்த அருங்குன்றம் பகுதியை சேர்ந்த இருளர் வேலன் என்பவரின் 11 வயது மகள், கடந்த 2017-ஆம் ஆண்டு அப்பகுதிக்கு பேன்ஸி பொருட்கள் விற்க வந்த உத்திரமேரூர் பெருநகர் கிராமத்தை சேர்ந்த நரிக்குறவர் அரசன் (வயது 52) என்பவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
இதுகுறித்து மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அப்போது அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் அரசன் தான் குற்றம் செய்யவில்லை என்று வாதாடி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று, வழக்கு நடத்தி வந்தார்.
இந்த வழக்கில் சிறுமிக்கு ஆதரவாக அரசு வக்கீல் புவனேஸ்வரி ஆஜராகி வாதாடினார். 5 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில் அரசன் மூன்று திருமணங்கள் செய்தவர் என்பதும், சம்பவம் நடந்த தினத்தன்று சிறுமிக்கு ரஸ்னா வாங்கி கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததும், சிறுமி கூச்சலிட்டபோது அவரை காப்பாற்றிய சாட்சிகள் விசாரணையின் மூலம் உறுதியானது.
இதன் அடிப்படையில் குற்றம் உறுதி ஆனதால், போக்சோ சட்டத்தின் கீழ் அரசனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியது.






