என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரெயிலில் தண்ணீர் இல்லாததால் பயணிகள் 'திடீர்' போராட்டம்- செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் பரபரப்பு
- கழிவறை மற்றும் கைகழுவும் இடதில் உள்ள பைப்புகளில் தண்ணீர் வரவில்லை.
- ரெயிலில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
செங்கல்பட்டு:
மும்பையில் இருந்து திருத்தணி, அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ்ரெயில் நேற்று இரவு வந்து கொண்டு இருந்தது.
இதில் கழிவறை மற்றும் கைகழுவும் இடத்தில் உள்ள பைப்புகளில் தண்ணீர் வரவில்லை. இதனால் ரெயிலில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் கடும் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து ரெயிலில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று தெரிகிறது.
இதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரெயில் நிலையத்திற்கு முன்பே நடுவழியில் அவசரகால சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ரெயில் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். பேச்சுவார்தை நடத்திய அதிகாரிகள் ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்பப்படும் என உறுதியளித்தனர். ஆனால் ரேணிகுண்டா ரெயில் நிலையத்தை கடந்தும் தண்ணீர் பிரச்சினை தீரவில்லை. மேலும் அரக்கோணத்தில் தண்ணீர் நிரப்பப்படும் என்று மாறி மாறி அதிகாரிகள் கூறினார். ஆனால் அரக்கோணம் தாண்டியும் தண்ணீர் நிரப்பப்படவில்லை என்று தெரிகிறது.
இதற்கிடையே எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரெயில் பெட்டிகளில் இருந்து இறங்கி நடைமேடையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயிலை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் வந்த ரெயில்வே அதிகாரிகளிடமும் பயணிகள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது விழுப்புரத்தில் கண்டிப்பாக தண்ணீர் நிரப்பப்படும் என்று அதிகாரிகள் மீண்டும் உறுதியளித்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு சுமார் 1மணி நேரம் தாமதாக நாகர்கோவில் நோக்கி ரெயில் புறப்பட்டு சென்றது. பயணிகளின் இந்த போராட்டம் காரணமாக பின்னால் வந்த அடுத்தடுத்த ரெயில்களும் தாமதமாக சென்றன.






