என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    ஒரே கல்லில் 18 கைகள் கொண்டு 21 அடி உயரத்தில் 40 டன் எடையுள்ள காளிதேவியின் பிரமாண்ட சிலை கேளம்பாக்கத்தில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பப்பட்டது.
    திருப்போரூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் அருகே கடந்த 35 ஆண்டுகளாக சிற்பகலை கூடம் நடத்தி வருபவர் முத்தையா ஸ்தபதி. இவருடன் 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இங்கு அம்மன், விநாயகர் என்று பல்வேறு சாமி சிலைகளை செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் திரிபுரந்தாக்கம் பகுதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா கபாலிக் தப்போ சித்தா ஆசிரமத்தில் வைப்பதற்காக 21 அடி உயரத்தில் பிரமாண்டமான காளிதேவி சிலை செய்ய முத்தையா ஸ்தபதியை அணுகினர்.

    அவர் 10-க்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்களைக் கொண்டு 21 அடி உயரத்தில் 40 டன் எடையுள்ள பெரிய கருங்கல்லை கொண்டு பிரமாண்ட காளி சிலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

    கொரோனா ஊரடங்கால் பணிகள் பாதியில் நின்றது. இதனால் காளி சிலையை வடிவமைக்கும் பணி 2 ஆண்டுகளை கடந்து சென்றது. ஒரே கல்லில் 18 கைகள் கொண்டு 21 அடி உயரத்தில் 40 டன் எடையுள்ள காளிதேவியின் சிலையை தத்ரூபமாக வடிவமைத்து முடித்தனர்.

    இதையடுத்து நேற்றுமுன்தினம் மாலை அந்த சிலையை 5 கிரேன்கள் கொண்டு லாரியில் ஏற்றி ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. வருகிற 1-ந்தேதி அந்த சிலையை ஆசிரமத்தில் வைத்து வழிபட உள்ளனர். காளி சிலையை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் இரும்புலிச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். டிராக்டர் உரிமையாளர். இவருடைய மகன் நவீன் (வயது 20). நேற்று காலை நவீன், லத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட நீலமங்கலம் கிராமத்தில் ஏரிக்கரை அருகில் உள்ள வயலில் ஏர் ஓட்டினார்.

    வேலை முடிந்ததும் டிராக்டரில் வீடு திரும்பினார். அப்போது அவருடன் நீலமங்கலம் பெரிய காலனியை சேர்ந்த மகா விஷ்ணு (20) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த டிசா (13), ஹரி (20) ஆகியோரும் டிராக்டரில் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டரில் பிரேக் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் டிராக்டரை ஓட்டி வந்த நவீன் மற்றும் மகாவிஷ்ணு இருவரும் டிராக்டருக்கு அடியில் சேற்றில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். டிசா, படுகாயம் அடைந்தார். ஹரி, அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார்.

    இதுபற்றி அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளில் நடைபெற உள்ளது என்று கலெக்டர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இளைஞர்களின் தனித்திறமையை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி மாதம் 12-ந்தேதி தேசிய இளைஞர் விழாவாக கொண்டாடி வருகிறது.

    தேசிய இளைஞர் விழாவுக்கான மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் இந்த மாதம் 29 மற்றும் 30-ந்தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான நியமிக்கப்பட்டுள்ள குழு உறுப்பினர்கள் மூலம் வெற்றி பெறுபவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

    இளைஞர் விழாவுக்கான மாவட்ட தேர்வுபோட்டிகளில் மொத்தமுள்ள 18 போட்டிகளில் தனிநபர் போட்டி பிரிவில் 11 வகையான போட்டிகளும், குழுப்போட்டியாக் 7 வகையான போட்டிகளும் பாரம்பரிய இசை, நடனம், உடை அலங்காரம், நாடகம், காட்சி கலைகள், எழுத்தாற்றல், பாரம்பரிய விளையாட்டு ஆகிய வகையான போட்டிகளை உள்ளடக்கி நடத்தப்படவுள்ளது. வருகிற 31-ந்தேதியை அடிப்படையாக கொண்டு 15 வயது முதல் 29 வயது நிரம்பிய ஆண், பெண் அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    மாவட்ட அளவிலான முதல் நிலை போட்டிகளில் வெற்றிபெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளிலும், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம். மாநில அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையும், தேசிய அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரையும் நடைபெறும்.

    போட்டிகளின் முடிவுகளை அந்தந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நடுவர்கள் தீர்மானிப்பார்கள்.

    போட்டியாளர்கள் தங்களுக்கு தேவையான உபகரணங்களை தாங்களே தயார் செய்து கொள்ள வேண்டும். தங்களுடைய போட்டிக்கான பதிவினை வீடியோ ரெக்கார்டிங் நல்ல தெளிவான ஒளி/ஒலி அமைப்போடு பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவினை உறுதிமொழி படிவத்தோடு இணைத்து செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு அலுவலரின் மின்னஞ்சல் முகவரியில் (dsokpm@gmail.com) சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    செங்கல்பட்டு அருகே 2 சிறுமிகள் மரணத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தக்கோரியும், சிறுமிகளின் உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்யக்கோரியும், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஆமைப்பாக்கம் கிராமத்தில் கடந்த மாதம் பிரியங்கா, செண்பகவல்லி என 2 சிறுமிகள் மர்மமான முறையில் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டனர். இது குறித்து சட்ராஸ் போலீஸ் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த 2 சிறுமிகள் மரணத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தக்கோரியும், சிறுமிகளின் உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்யக்கோரியும், குற்றவாளிகளை எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    வட நெம்மேலி முதலை பண்ணையில் பார்வையாளர்களுக்கு காட்சி படுத்தப்பட்டு வந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள அரிய வகையான வெளிநாட்டு ஆமை ஒன்று திருடப்பட்டது.
    சென்னை:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வட நெம்மேலி முதலை பண்ணையில் பார்வையாளர்கள் கண்டுகளிப்பதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    முதலைகள் ஒரு புறம் பராமரிக்கப்பட்டு வந்தாலும் மறுபுறம் இந்த பண்ணையில் முகப்பு வாயில் பகுதியில் கம்பி வேலி அடைக்கப்பட்ட ஒரு பகுதியில் அல்டாப்ரா என்ற அரிய வகை 4 வெளிநாட்டு ஆமைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த ஆமைகள் இந்தோனேசியா அருகில் உள்ள காலபாக்சஸ் தீவில் உள்ள நிலப்பரப்பு பகுதிகளில் வாழ்ந்து வருபவை ஆகும்.

    அங்கிருந்து கொண்டு வரப்பட்ட இந்த ஆமைகள் 1½ மீட்டர் நீளம் வரை வளரும் தன்மை கொண்டவை, இவை 225 கிலோ எடை வரை வளரும். மேலும் 152 ஆண்டுகள் வரை வாழும் தன்மை உடைய இந்த ஆமை விலங்குகளிலேயே அதிகமான ஆண்டுகள் வாழும் அரிய விலங்கினம் என்ற பெயர் பெற்றதாகும். முழுக்க முழுக்க புல், செடிகள், பழங்கள், கீரைகள், போன்ற தாவரங்களையே உணவாக உட்கொள்ளும். இப்படி விலை மதிப்புடைய இந்த அரிய வகையான 4 ஆமைகளில் ஒரு ஆமை கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் திருடப்பட்டு விட்டன.

    முதலைப்பண்ணை பராமரிப்பாளர்கள் கம்பி வேலிக்குள் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள அரிய வகை ஆமை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கம்பி வேலிக்கு கீழ் 4 சுவர்களுக்கு மத்தியில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த ஆமை வேறு இடத்திற்கு நகர்ந்து செல்ல வாய்ப்பு இல்லை எனவும், திட்டமிட்டு யாரோ இதன் மதிப்பு அறிந்து திருடி சென்றிருக்க வாய்ப்பு உள்ளதாக சந்தேகித்த முதலைப்பண்ணை நிர்வாகத்தினர், மாமல்லபுரம் போலீசில் இது குறித்து புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து,

    அந்த முதலை பண்ணையில் பணிபுரியும் ஊழியர்கள் யாராவது இந்த அரிய வகை ஆமையை திருடி சென்றனரா? அல்லது வெளிநபர்கள் யாராவது இரவு நேரத்தில் முதலைப்பண்ணைக்குள் அத்துமீறி நுழைந்து ஆமையை திருடிச் சென்றனரா? என்ற கோணத்தில் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர் அருகே விவசாயி வீட்டில் 17 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூரை அடுத்த தண்டரை கூட்டுரோடு அன்னைநகரைச் சேர்ந்தவர் சார்லஸ் (வயது 42). இவரது மனைவி ரோஸ்லின்(40). தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு. இவர்கள் 4 பேரும் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள அவர்களுடைய விவசாய நிலத்திற்கு சென்றனர். பின்னர் சிறிதுநேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 17 பவுன் தங்கநகை, ரூ.30 ஆயிரமும் திருடு போயிருந்தது.

    இதையடுத்து உடனடியாக சார்லஸ் பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரத்தில் செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காததால் புராதன சின்னங்களை கண்டுகளிக்க ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறுவதில் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    கொரோனா தொற்று காரணமாக உலக புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம் உள்ளிட்ட பாரம்பரிய புராதன சின்னங்கள் 8 மாதங்களாக மூடப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் வழிகாட்டி நெறிமுறைகளுடன் கடந்த 14-ந் தேதி புராதன சின்னங்கள் மீண்டும் திறக்கப்பட்டு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை தினந்தோறும் அதிகரித்து வருவதால் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்கள் களைகட்டி உள்ளன.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆன்லைன் சேவை மூலம் பதிவு செய்து நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

    கடற்கரை கோவில், ஐந்துரதம் பகுதிகளின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள கவுண்ட்டருக்கு அருகில் உள்ள பலகையில் உள்ள கியூ-ஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்து இணைய வழி பணபரிமாற்றம் மூலம் நபர் ஒருவருக்கு ரூ.40 கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெறமுடியும்.

    ஆனால் ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை பகுதியில் உள்ள ஆன்லைன் டிக்கெட் பெறும் இடங் களில் செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் செல்போன் மூலம் நுழைவு சீட்டு பெற முடியாமல் சுற்றுலா பயணிகள் மணிக்கணக்கில் காத்திருந்து, புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    இதுகுறித்து பெங்களூரூவை சேர்ந்த சுற்றுலா பயணி ஷீலா கூறியதாவது:-

    தொல்லியல் துறை நிர்வாகம் ஆன்லைன் டிக்கெட் முறையை முழுவதுமாக ரத்து செய்துவிட்டு, வழக்கம்போல் கவுண்ட் டர்களில் பணபரிமாற்றம் மூலம் நுழைவுசீட்டு முறையை கொண்டுவரவேண்டும்.

    ஆன்லைன் பணபரிமாற்ற வசதி இருந்தால் மட்டுமே டிக்கெட் பதிவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளதால், இந்த வசதி செல்போனில் இல்லாத பயணிகள் படும் வேதனை கவலை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் மொபட்டில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கந்தன் தெருவை சேர்ந்தவர் இதயதுல்லா (வயது 19). இவர் தனது மொபட்டில் ஊரப்பாக்கம் கூட்ரோடு அருகே செல்லும்போது அங்கு போலீசார் நிற்பதை கண்டதும் வேகமாக செல்ல முயன்றார். இதனை கவனித்த போலீசார் இதயதுல்லாவை மடக்கி பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தார். 

    இதனையடுத்து மொபட் சீட் கவர் அடியில் போலீசார் சோதனை செய்தபோது அதில் ¼ கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இதயதுல்லாவை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 

    நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதயதுல்லாவிடம் இருந்து ஒரு மொபட், ¼ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 84 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49 ஆயிரத்து 188 ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 84 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49 ஆயிரத்து 188 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 47 ஆயிரத்து 931 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 733 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 524 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 70 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 42 ஆயிரத்து 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 ஆயிரத்து 954 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 477 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 669 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்துள்ளார்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 350 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 27 ஆயிரத்து 680 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 433 பேர் உயிரிழந்துள்ளனர். 237 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்டங்களுக்கு போகவில்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.
    தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் சேவையில் மகத்தான பணியாற்றி வரும் தி.மு.க.வை பார்த்து “சுயநலக் கட்சி” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் வீடியோ கான்பரன்சில் பேசுகிறார். ஆனால் மக்களிடம் வீதி வீதியாகச் சென்று உதவி செய்கிறார். சென்னை மாநகரம் முழுவதும் பல சட்டமன்றத் தொகுதிகளுக்குப் போயிருக்கிறார்.

    கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் என்று ‘நிவர்’ புயல் பாதித்த மாவட்டங்களுக்குப் போயிருக்கிறார். கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவருமே இப்படி பம்பரமாக பணியாற்றியிருக்கிறார்கள். ஆனால் “கொரோனா கட்டுப்பாடு” என்று வைத்துக் கொண்டு அரசு பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் பத்திரமாக மாவட்டம் மாவட்டமாக முதல்-அமைச்சர் சென்றதும் ஒரு சில அ.தி.மு.க. அமைச்சர்கள் சென்றதும் எதற்காக?

    முதல்-அமைச்சர் கட்சிப் பிரசாரம் செய்தார். அரசு விழாக்களில் எதிர்க்கட்சிகளை வசைபாடினார். அமைச்சர்கள் அ.தி.மு.க.வின் தகவல் தொழில் நுட்ப அணிக்கு உறுப்பினர் சேர்த்தார்கள். அல்லது அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். முதல்-அமைச்சரோ, அமைச்சர்களோ மக்கள் பணியாற்றவோ, கொரோனாவை கட்டுப்படுத்தவோ மாவட்டங்களுக்கு போகவில்லை.

    அதனால்தான் தி.மு.க.வினரும், மற்ற கட்சியினரும் வெளியே போகக்கூடாது என்று கொரோனாவை காட்டி தடுத்தார். ஏன் வழக்குகளே பதிவு செய்தவரும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தாய்ப்புலி இறந்ததால், முதுமலையில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட 2 புலிக்குட்டிகள் ஆரோக்கியத்துடன் உள்ளன என பூங்கா அதிகாரி தெரிவித்துள்ளார்.
    வண்டலூர்:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனச்சரகத்தில் உள்ள சீமர்குழி ஓடை பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 21-ந்தேதி 7 வயது மதிக்கத்தக்க பெண் புலி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்த போது பெண் புலி இறந்து கிடந்த இடத்திற்கு அருகே பிறந்து சில நாட்களே ஆன 2 ஆண் புலிக்குட்டிகள் சுற்றி கொண்டிருந்தன.

    இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த புலிக்குட்டிகளை மீட்டனர்.

    மீட்கப்பட்ட 2 புலிக்குட்டிகளை நீலகிரி மாவட்டத்தில் வைத்து பராமரிப்பதற்கு சிறப்பு மையங்கள் இல்லாததால் வண்டலூர் பூங்காவுக்கு அனுப்புவதற்கு வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

    இதனையடுத்து முதுமலையில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் கடந்த நவம்பர் மாதம் 23-ந்தேதி இரவு வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு பூங்காவில் உள்ள அதிகாரிகளிடம் 2 ஆண் புலிக்குட்டிகள் ஒப்படைக்கப்பட்டன. பூங்கா அதிகாரிகள் அதனை வண்டலூர் பூங்கா வளாகத்தில் விலங்குகள் ஆஸ்பத்திரி அருகில் உள்ள சிறப்பு விலங்குகள் சிகிச்சை மையத்தில் வைத்து ஒரு கால்நடை மருத்துவர் தலைமையில் சிறப்பு கவனம் செலுத்தி தொடர்ந்து பராமரித்து வந்தனர்.

    இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    முதுமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட 2 புலிக்குட்டிகளும் கை வளர்ப்பில் வளர்க்கப்படுகிறது. சிறப்பு மையத்தில் உள்ள புலிக்குட்டிகளின் அசைவுகளை தொடர்ந்து கண்காணிப்பு கேமரா மூலம் ஊழியர்கள் கண்காணிக்கின்றனர். 45 நாட்களான இந்த 2 புலிக்குட்டிகளும், நல்ல ஆரோக்கியத்துடன் துள்ளி குதித்து விளையாடுகின்றன. 2 புலிக்குட்டிகளுக்கு அதிக அளவில் சத்து நிறைந்த பால் பவுடரில் ஊட்டச்சத்து மருந்துகள் கலந்து உணவாக வழங்கப்படுகிறது. சில சமயங்களில் ஆட்டுப்பாலும் வழங்கப்படுகிறது. புலிக்குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளும் பால் பவுடரில் கலந்து வழங்கப்படுகிறது. 60 நாட்களுக்கு பிறகு புலிக்குட்டிகளின் எலும்பு வளர்ச்சி அடைவதற்காக சிக்கன் சூப் வழங்கப்படும்.

    3½ மாதம் கழித்துதான் இந்த புலிக்குட்டிகளை வண்டலூர் பூங்காவில் வைத்து வளர்க்கலாமா? அல்லது முதுமலை காட்டுப்பகுதியில் விட்டுவிடலாமா? என்பது குறித்து உயர் வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள் அதுவரை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இந்த 2 புலிக்குட்டிகளும் பராமரிக்கப்படும் தற்போது வண்டலூர் பூங்காவில் வங்கப்புலிகள், வெள்ளைப்புலிகள் மற்றும் கலப்பின புலிகளுடன் சேர்ந்து மொத்தம் 34 புலிகள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடி அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் தொழிற்சாலை பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி சென்ற செஞ்சி பகுதியை சேர்ந்த கார்த்திக் வயது (32) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் உயிரிழந்த கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தனது நண்பருடன் சென்னை வேளச்சேரியில் கட்டிட வேலைக்கு சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது.

    விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரத்துக்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    ×