என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வழக்கு தொடர்பாக அரசு அதிகாரிக்கு 9 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம், ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள தொழிலாளர் நல மையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பத்மநாபன். இவரிடம் கடந்த 2008-ம் ஆண்டு இந்திய தேசிய தொழிலாளர் நல சங்க பொதுச்செயலாளர் ஆனந்தி என்பவர் 91 நபர்களுக்கு நலவாரிய அட்டை பெறுவதற்காக மனு அளித்துள்ளார்.தொழிலாளர் நலவாரிய அட்டை வழங்குவதற்காக ரூ.1,000-த்தை லஞ்சமாக உதவி ஆய்வாளர் பத்மநாபன் கேட்டுள்ளார்.

    இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஆனந்தி புகார் அளிக்க அங்கு வந்து மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்மநாபன் லஞ்சம் பெற்ற போது கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இந்த வழக்கு செங்கல்பட்டு தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் பத்மநாபனுக்கு 9 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பிரியா உத்தரவிட்டார்.

    இதனைதொடர்ந்து பத்மநாதனுக்கு ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் 111 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 636 ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 111 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 636 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 925 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 459 ஆக உயர்ந்தது. 1,252 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 42 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆயிரத்து 563 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 71 ஆயிரத்து 968 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இது வரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,240 பேர் உயிரிழந்துள்ளனர். 355 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    மாமல்லபுரம் கடற்கரையில் தடையை மீறி குவிந்த சுற்றுலா பயணிகள் பலர் கடல் சீற்றத்துக்கு மத்தியில் ஆபத்தை உணராமல் கடலில் குளித்து மகிழ்ந்ததை காண முடிந்தது.
    மாமல்லபுரம்:

    கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு ஞாயிற்றுகிழமைகளில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று வார விடுமுறை தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். இதனால் கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன பகுதிகளில் சுற்றுலா வந்த பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக நேற்று காலை 8 மணிக்கு கடற்கரை கோவிலுக்கு சென்று திரும்பிய பயணிகள் பலர் கடற்கரை செல்ல முற்பட்டனர்.

    ஆனால் நடைபாதைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டு தடை ஏற்படுத்தப்பட்டு இருந்ததால் கடற்கரைக்கு செல்வதை தவிர்த்துவிட்டு ஏமாற்றத்துடன் பலர் வீடு திரும்பினர். பிறகு 11 மணிக்கு மேல் வந்த சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்தது.

    கூட்டம், கூட்டமாக வந்த சுற்றுலா பயணிகள் பலர் கடற்கரை சாலையில் வைக்கப்பட்டிருந்த சாலை தடுப்புகளை தூக்கி வீசிவிட்டு அந்த வழியாக சென்று கடற்கரையில் குவிந்தனர். நேற்று பலத்த கடல் சீற்றத்துக்கு மத்தியில் ஆபத்தை உணராமல் பலர் தங்கள் குழந்தைகள், சிறுவர்களுடன் கடும் வெயிலின் தாக்கத்தை தணிக்க கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்ததை காண முடிந்தது. கடல் நேற்று 5 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கி இருந்ததால் ராட்சத அலைகள் சீறி பாய்ந்து வந்த நிலையில் கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. அதனால் அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் சுற்றுலா பயணிகளை பலமுறை எச்சரித்தும் அதனை யாரும் காதில் வாங்கி கொள்ளாமல் அலட்சி யமாக கடலில் குளித்து கொண்டிருந்தனர்.

    கடற்கரைக்கு வந்த பயணிகளால் கடற்கரைக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட சங்குமணி கடை, தேனீர் கடைகள் உள்ளிட்ட கடைகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு வியாபாரம் களைகட்டி காணப்பட்டது. கொரோனா ஊரடங்கு, கடற்கரைக்கு தடை உள்ளிட்ட காரணங்களால் மாமல்லபுரத்தில் அதிக அளவு வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட கடற்கரை சாலை வியாபாரிகள் நேற்று வந்த பயணிகள் மூலம் தங்கள் கடைகளில் வியாபாரம் நடைபெற்ற மகிழ்ச்சியில் பலர் உற்சாகத்துடன் காணப்பட்டனர். மேலும் தங்கள் வாழ்வாதாரம் காக்க வழிகாட்டி நெறிமுறைகளுடன் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.

    மேலும் கொரோனா தடுப்பு முறைகளை மேற்கொண்டு வரும் மாமல்லபுரம் பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை நிர்வாகம் நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் கடற்கரை கோவில் நுழைவு வாயில் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தியது. இந்த முகாம் நடைபெற்ற இடத்திற்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் திரளானோர் வந்து தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்துவிட்டு கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு சென்றனர். கடற்கரை கோவில் நுழைவு வாயிலில் ஒலிபெருக்கி மூலமும் கொரோனா தடுப்பூசி பேட்டுக்கொள்ள சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருந்ததை காண முடிந்தது.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 101 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 406-ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 101 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 406-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 707 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2458 ஆக உயர்ந்தது. 1241 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 37 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆயிரத்து 474 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 71 ஆயிரத்து 891 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 1239 பேர் உயிரிழந்துள்ளனர். 344 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    மறைமலைநகர் அருகே வாகனம் மோதி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நெமிலி பகுதியை சேர்ந்தவர் எத்திராஜிலு (வயது 53), இவர் மீனம்பாக்கத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மறைமலைநகர் அருகே மோட்டார் சைக்கிளில் செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே எத்திராஜிலு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஊரப்பாக்கம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்தார். அவர் உடல் கருகிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே அய்யஞ்சேரி பிள்ளையார் கோவில் முதல் தெருவை சேர்ந்தவர் கமலதாஸ். இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீபா. அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர்களது மகள் அனு (வயது 17). இவர் பிளஸ்-2 முடித்த நிலையில் கடந்த 12-ந் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ஆவடியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் எழுதினார்.

    இந்த நிலையில் நேற்று பெற்றோர் வீட்டில் இல்லாதபோது நீட் தேர்வில் எங்கு தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் மாணவி அனு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். மேலும் இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நீட் தேர்வு எழுதிய மாணவி அனு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் அய்யஞ்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நீட் தேர்வு பயத்தில் இந்த ஆண்டு சேலம் மாணவர் தனுஷ், அரியலூர் கனிமொழி, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சவுந்தர்யா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சாலையில் நடந்து சென்ற சாப்ட்வேர் என்ஜினீயர், கார் மோதி பலியானார். அவரது கைப்பையை மர்மஆசாமி ஒருவர் திருடிச்செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
    தாம்பரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 24). பி.டெக் பட்டதாரியான இவர், தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் பொருளாதார மண்டல வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று அதிகாலை வேலை முடிந்து அச்சரப்பாக்கம் செல்வதற்காக கடப்பேரி ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரம் பஸ் நிலையம் செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது குரோம்பேட்டையில் இருந்து பெருங்களத்தூர் நோக்கி அதிவேகமாக வந்த சொகுசு கார் அர்ஜூன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அர்ஜூன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்துவந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான அர்ஜூன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய பெருங்களத்தூரை சேர்ந்த ஜெயக்குமார்(34) என்பவரை கைது செய்தனர்.

    விபத்து நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சாலையில் நடந்து செல்லும் அர்ஜூன் மீது பின்னால் அதிவேகமாக வரும் கார் மோதுவதும், இதில் தூக்கி வீசப்பட்டதில் சாலையில் கிடந்த அவரது கைப்பையை போக்குவரத்து ஊழியர் ஒருவர் எடுத்து அங்குள்ள ஆட்டோவில் வைத்து செல்வதும், சிறிதும் இரக்கமின்றி அந்த கைப்பையை மர்மஆசாமி ஒருவர் திருடிச்செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மகாராஷ்டிர மாநில சுகாதார துறை மந்திரி ராஜேஷ் அங்குஷ்ராவ் டோபிக்கு சிற்பிகள் கல்லில் வடிக்கப்பட்ட விநாயகர் சிலையை நினைவு பரிசாக வழங்கினர்.
    மாமல்லபுரம்:

    மகாராஷ்டிர மாநில சுகாதார துறை மந்திரி ராஜேஷ் அங்குஷ்ராவ் டோபி நேற்று மாமல்லபுரம் வருகை தந்தார். அவர் அங்கு யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய புராதன சின்னங்களான பல்லவ மன்னர்களால் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கிருஷ்ண மண்டபம் உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்களையும், குடைவரை கோவில்களையும் சுற்றி பார்த்து ரசித்தார். அவருக்கு மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பற்றியும், அவற்றை உருவாக்கிய பல்லவ மன்னர்களின் வரலாற்று கதைகளையும் சுற்றுலா வழிகாட்டிகளும், தொல்லியல் துறை அதிகாரிகளும் விளக்கி கூறினர்.

    அதேபோல் ஐந்துரதம் பகுதியில் உள்ள சிற்ப கலை கூடங்களில் சிற்பிகள் வடிக்கும் கற்சிலைகளை பார்வையிட்டார். அவருக்கு சிற்பிகள் கல்லில் வடிக்கப்பட்ட விநாயகர் சிலையை நினைவு பரிசாக வழங்கினர். முன்னதாக மகாராஷ்டிர சுகாதார துறை மந்திரியை அர்ச்சுனன் தபசு அருகில் சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் ராஜாராமன், மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சரவணன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
    மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யாறு கிராமம் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 47). இவர் திருவள்ளூரை அடுத்த பட்டாபிராமில் தங்கி கிரானைட் எந்திரம் பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதியன்று அவர் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    திருவள்ளூரை அடுத்த மேல்மணம்பேடு சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்தார்.

    இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் குமார் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    சசிகலாவுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கி வருமானவரித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
    செங்கல்பட்டு,

    சசிகலாவுக்கு செங்கல்பட்டு மாவட்டம், பையனூர் கிராமத்தில் 49 ஏக்கர் பரப்பில் நிலம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் இருக்கும். இந்த சொத்துகளை சசிகலா அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களில் பேரில் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த 49 ஏக்கர்  சொத்தும் 10க்கும் மேற்பட்டவர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

    இதையடுத்து வருமானவரித் துறை, பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சொத்துகளை முடக்கியுள்ளது. இன்று பையனூர் கிராமத்தில் சசிகலாவுக்குச் சொந்தமான 49 ஏக்கர் நிலத்தையும் வருமானவரித் துறை முடக்கியுள்ளதற்கான நோட்டீஸை ஒட்டும்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 1230 பேர் உயிரிழந்துள்ளனர். 385 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 129 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 591 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2438 ஆக உயர்ந்துள்ளது. 1100 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆயிரத்து 93 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 71 ஆயிரத்து 478 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 1230 பேர் உயிரிழந்துள்ளனர். 385 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஊரப்பாக்கம் அருகே பிளம்பர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள சின்ன அருங்கால் கிராமத்தில் உள்ள கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). பிளம்பர். கடந்த 2 ஆண்டுகளாக சற்று மனநிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருக்கும்போது திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி, தாயார் இருவரும் அவரது உடலில் உள்ள தீயை அணைக்க முயன்றனர். அப்போது அவரது தாயும், மனைவியும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அவர்கள் 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பிளம்பர் செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாய், மனைவி இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×