என் மலர்
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 59). சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். அவரது மனைவி லலிதா (55), மகன்கள் சாய் முகிலன் (27), சாய் சித்தார்த் (16).
தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
பாட்னா ஐகோர்ட்டு நீதிபதி அனில்குமார் உடல்நலக்குறைவால் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பு போலீசாக பணியாற்றி வந்த கவுதம் இரவு பணி முடித்து நேற்று அதிகாலை கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூர் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியுள்ள வீட்டுக்கு சென்றார்.
மனைவியிடம் மீண்டும் காலை 7 மணிக்கு பணிக்கு செல்ல இருப்பதாக கூறி விட்டு சிறிது நேரம் தூங்கிய கவுதம் மீண்டும் காலை பணிக்கு செல்ல தயாரானார். மனைவியிடம் காபி கேட்டார். அப்போது திடீரென்று வெடி சத்தம் கேட்கவே அவரது மனைவி சென்று பார்த்தார். அப்போது கவுதம் தான் பயன்படுத்தும் துப்பாக்கியால் காதுக்கு மேல் பகுதியில் சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் மகன் இது குறித்து தாழம்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதில் துப்பாக்கியால் சுடப்பட்ட தோட்டா, 5 தோட்டாக்களுடன் கூடிய துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.
கவுதமின் மனைவி தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், பணி சுமை காரணமாக கவுதம் மன உளைச்சலில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் அடிப்படையில் தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கவுதம் பணி நிறைவு பெற இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் விருப்ப ஓய்வு கேட்டு விருப்ப மனு அளித்துள்ளதாகவும், கடன் சுமை மற்றும் ரத்த உறை என்ற அரிய வகை நோய் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கவுதம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு சிறப்பு போலீஸ் படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு நகரத்தில் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் திடீரென மின் வினியோகம் துண்டிக்கபட்டது. இதே போல் திம்மாவரம், ஆத்தூர், வில்லியம்பாக்கம் பகுதியிலும் மின் தடை ஏற்பட்டது.
மின்தடை காரணமாக செங்கல்பட்டு நகரம் இருளில் மூழ்கியதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள், நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் மின் வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் மின்சப்ளை சீராகவில்லை. முறையான பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி மிகவும் அவதிக்குள்ளாகினர்.
அதிகாலை 6 மணிக்கு பின்னரே மின் சப்ளை சீரானது. இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவித்தனர்.
செங்கல்பட்டு பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து ஏற்பட்டுவருகிறது.இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.
மின்பகிர்மான வட்டத்தில் பழுதை சரி செய்கின்றோம் என அறிவித்து விட்டு அன்று காலையில் இருந்து மாலை வரை மின்வினியோகத்தை நிறுத்தி விடுகின்றனர். அப்படி இருந்தும் லேசான காற்று அடித்தாலும், மழை பெய்தாலும் உடனே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
இதுபோன்ற அறிவிக்கப்படாத மின் வெட்டால் நோயாளிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் பாதிப்புகுள்ளாகின்றனர்.
செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதை சரி செய்து முறையான மின்வினியோகம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டையை சேர்ந்தவர் முகம்மது இஸ்மாயில். இவரது 8 வயது மகன் முகமது சித்திக்.
நேற்று மாலை 3 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த முகமது சித்திக்கை காரில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் முகமது இஸ்மாயிலிடம் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறுவனை கடத்திச்சென்றதாக புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை செய்து வந்தனர்.
சிறுவன் கடத்தப்பட்டது தொடர்பாக காரின் பதிவு எண் குறித்து அனைத்து சுங்கச்சாவடிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் சுங்கச்சாவடியில் சிறுவன் முகமது சித்திகை கடத்தி சென்ற காரை மடக்கி பிடித்தனர். பின்னர் சிறுவனை மீட்டு காரில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வண்டலூர்:
வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 182 இனங்களில் உள்ள 2382 விலங்குகள் இயற்கையில் உள்ளது போன்ற சூழலில் சிறந்த பராமரிபுடன் வளர்க்கப்பட்டு வருகிறது. பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பார்வையாளர்களுக்கான பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லாமல் ஒரு வலுவான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை கையாள்கிறோம்.
கொரோனா தொற்று நோயினால் உயிரியல் பூங்கா கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 24 வரை சுமார் 8 மாதங்கள் மூடப்பட்டு இருந்தது.
இந்த உயிரியல் பூங்கா பெரும்பாலும் பொருளாதார தன்னிறைவு கொண்டதாக இருப்பினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக குறைந்தபட்ச பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு கூட சிக்கல் எதிர்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் மகிந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனம் உயிரியல் பூங்காவிற்கு விலங்கு தகவல் பலகைகளைப் புதுப்பிக்கவும், விலங்குகளின் இருப்பிடங்களில் விலங்குகள் ஓய்வெடுக்க கொட்டகைகள், சோலார் தெரு விளக்குகள், 14 பேர் அமரும் பேட்டரி வாகனங்கள் இரண்டும் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் வழங்கி உள்ளது.
இந்த வசதிகள் உயிரியல் பூங்கா விலங்குகளுக்கு கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் ‘விஷ்ணு’ என்ற சிங்கத்தையும் பிரக்ருதி என்ற யானையையும் 6 மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் மற்றும் பெருநிறுவனங்கள் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தத்தெடுத்து விலங்குகள் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 12,161 பேருக்கு கொரோனா






