என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    வண்டலூர் ஏரிக்கரை அருகே கார் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஏரிக்கரை அருகே நேற்று முன்தினம் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் 93 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்து 950 ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 93 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்து 950 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 400 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,494 பேர் உயிரிழந்துள்ளனர். 1,056 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 31 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 678- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 68 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,256 பேர் உயிரிழந்துள்ளனர். 354 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    மாமல்லபுரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கடம்பாடியில் உள்ள வேணுநாத பெருமாள் கோவில் முகப்பில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கான உண்டியல் ஒன்று உள்ளது. நேற்று அதிகாலை கோவில் நிர்வாகத்தினர் வந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் மாமல்லபுரம் போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிப்பதற்கான பார்வையாளர் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கபட்ட கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னங்களாக திகழ்கிறது.

    இந்த புராதன சின்னங்களை காண நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்வதுண்டு. இந்திய அளவில் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் 2-வது இடமாக மாமல்லபுரம் கடற்கரை கோவில் திகழ்ந்து வருகிறது. உலக அதிசயங்களில் இந்த கடற்கரை கோவிலும் ஒன்றாக திகழ்கிறது.

    மேலும் தொல்லியல் துறையின் பார்வையாளர் நுழைவு கட்டண வருவாயில் இந்திய அளவில் ஆக்ரா தாஜ்மகால் முதலிடத்திலும், மாமல்லபுரம் கடற்கரை கோவில் 2-வது இடத்திலும் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு காரணமாக மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள மாமல்லபுரம் புராதன சின்னங்கள் கடந்த ஆண்டு 9 மாதங்களும், இந்த ஆண்டு 2½ மாதங்களும் மூடப்பட்டு சுற்றுலா முடங்கியது.

    தமிழக அரசு வழிகாட்டி விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து சுற்றுலாவுக்கு கடந்த ஜூன் மாதம் 28-ந்தேதி அனுமதி வழங்கப்பட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அதனை பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து தொல்லில் துறை நிர்வாகம் ஆன்லைன் மூலம் நபர் ஒருவருக்கு ரூ.40 கட்டணம் பெற்று கொண்டு தினந்தோறும் 10 ஆயிரம் பயணிகள் கண்டுகளிக்கலாம் என இலக்கு நிர்ணயித்து செல்போன் இணையதள சேவை மூலம் பார்வையாளர் இணையசீட்டு வழங்கி வந்தது.

    குறிப்பாக தமிழக அரசின் வழிகாட்டி நெறிமுறைகளுடன் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஊரடங்குக்கு பிறகு திறக்கப்பட்ட புராதன சின்னங்களை காண தொடக்கத்தில் பயணிகள் குறைவான அளவிலேயே மாமல்லபுரம் வந்தனர்.

    தற்போது வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு தினங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிகின்றனர். குறிப்பாக காலை 7, 8, 9 மணிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட தொல்லியல் புராதன சின்னங்கள் திறக்கும் வரை அங்கேயே சில மணி நேரம் வரை காத்திருந்து புராதன சின்னங்களை கண்டுகளிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. அதே போல் மாலை 3, 4 மணிக்கு வரும் பயணிகள் 5 மணிக்கு புராதன சின்னங்கள் மூடப்படும் நிலையில் அவசர, அவசரமாக கண்டுகளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    குறுகிய நேரத்தில் அனைத்து புராதன சின்னங்களையும் கண்டுகளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் பலர் வீடு திரும்புவதையும் காண முடிகிறது. எனவே சுற்றுலா பயணிகள் வருகைக்கு ஏற்ப சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டுகளிக்க கூடுதல் நேரம் திறந்து பார்வையாளர்களின் குறைகளை போக்க தொல்லியல் துறை முன் வரவேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கன்னியாகுமரியில் இருந்து 700 கி.மீ. தூரம் தொடர் ஓட்டமாக ஓடி சென்னை வந்த சிறுவன் சர்வேசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
    தாம்பரம்:

    தாம்பரத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் சர்வேஷ். தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    கடந்த ஆண்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட பெண்மணி ஒருவரின் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பார்த்தான்.

    தானும் அதேபோல் சாதிக்க வேண்டும் என்று தந்தை விசுவிடம் கூறினான். விசு இதுகுறித்து சர்வேஷ் படிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தார். அதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்தது.

    இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் இணைந்து உருவாக்கிய பசி, பட்டினியின்மை, நல்ல ஆரோக்கியம், தரமான கல்வி, நிலையான வளர்ச்சி உள்ளிட்ட 17 வகையான உலகளாவிய இலக்குகளை 2030-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்ற குறிக்கோளோடு சிறுவன் சர்வேஷ் தொடர் ஓட்டத்தை தொடங்கினான்.

    கடந்த 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் இருந்து சென்னை வள்ளுவர் கோட்டம் வரை 700 கிலோ மீட்டர் தொடர் ஓட்ட பயணத்தை தொடங்கினான்.

    நாளொன்றுக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வரை தொடர் ஓட்டத்தில் ஈடுபட்டான்.

    இந்த நிலையில் நேற்று சிறுவன் சர்வேஷ் தாம்பரம் வந்தடைந்தான். தாம்பரத்தில் அவனுக்கு எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து, தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    கல்லூரி மாணவர்கள் சாலை ஓரம் நீண்ட வரிசையில் நின்று மாணவனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் வள்ளுவர் குருகுலம் பள்ளி அருகே மாணவனுக்கு சமூக நீதி மாணவர் இயக்க பொருளாளர் அன்சாரி வரவேற்பு அளித்தார்.

    சிறுவன் சர்வேசுக்கு பதக்கம் அணிவித்த முதலமைச்சர்

    குரோம்பேட்டை பகுதிக்கு வந்த மாணவனை பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, ஜோசப் அண்ணாதுரை மற்றும் தி.மு.க.வினர் வரவேற்றனர்.

    தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்ட சர்வேஷ் இன்று வள்ளுவர் கோட்டம் வந்து அடைந்தான்.

    700 கிலோ மீட்டர் தூரத்தை 14 நாளில் ஓடி கடந்து வந்துள்ளான். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சிறுவன் சர்வேசுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறுவன் சர்வேசுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.


    நீட் தேர்வு பயத்தால் தீக்குளித்த மாணவி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 28 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தை அடுத்த ஐயஞ்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கமல்தாஸ் (41).

    இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்சிசி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி ஷீபா. இவர் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவர்களது ஒரே மகள் அனு (வயது17). இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.

    மாணவி அனு சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்று விரும்பினார். இதையடுத்து கடந்த மாதம் 12-ந்தேதி நீட் தேர்வு எழுதினார். தேர்வுக்கு பிறகு தனது பெற்றோரிடம் தேர்வு சரியாக எழுதவில்லை என்று கூறி வந்தார்.

    தேர்வில் தேர்ச்சி பெறுவேனா என்பது தெரியவில்லை என்றும் அவர்களிடம் கூறினார்.

    இதனால் தேர்வு எழுதிய பிறகு 3 நாட்கள் அவர் மனசோர்வுடன் காணப்பட்டார். சரியாக சாப்பிடாமலும் இருந்தார்.

    கோப்புப்படம்


    கடந்த மாதம் 16-ந்தேதி அனுவின் பெற்றோர் பள்ளிக்கு சென்று விட்டனர். அனு மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது நீட் தேர்வு தோல்வி பயம் காரணமாக அனு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் தீயை அணைத்து உடனடியாக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவி அனு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் 28 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி அனு நேற்று இரவு 8 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருக்கழுக்குன்றத்தில் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த கொத்திமங்கலம் அருகே உள்ள வடக்குபட்டு பகுதியில் வசிப்பவர் ராமு. இருளர் இன சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி ஜோதி (வயது50).

    இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் குடிசையில் வசித்து வருகிறார்கள்.

    நேற்று இரவு கணவன்- மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் தூங்கினார்கள். இவர்களது வீட்டின் அருகில் சிறிய மலைபோன்ற குன்று பகுதி உள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் அந்த குன்று பகுதியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.

    இதையடுத்து ராமுவின் மூத்த மகன் எழுந்து கதவை திறந்து நாய் குரைக்கும் இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது குன்று பகுதியில் ஜோதி அரைகுறை ஆடைகளுடன் கிடந்தார். அவரது அருகே 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் இருந்தான்.

    ஜோதியின் மகனை பார்த்ததும் அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடினான். இதையடுத்து ஜோதியின் மகன் கூச்சலிட்டான். இதனால் அக்கம் பக்கம் வசித்தவர்கள் அங்கு ஓடி வந்தனர்.

    ஜோதியை பார்த்தபோது அவருக்கு சுய நினைவு இல்லை. அவர் இறந்த நிலையில் காணப்பட்டார்.

    இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு விஜய குமார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    பின்னர் ஜோதியின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஜோதி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஜோதி இறந்து கிடந்தபோது அவரது அருகில் இருந்த சிறுவன் ஜோதி வீட்டின் அருகே வசித்தவன் என்று தெரியவந்தது.

    இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவனை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 291 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,485 ஆக உயர்ந்துள்ளது. 1,139 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 311 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 72 ஆயிரத்து 673 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,252 பேர் உயிரிழந்துள்ளனர். 386 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கடப்பாக்கம் இ.சி.ஆர். சாலையில் கார் மோதிய விபத்தில் மொபட்டில் வந்த போலீஸ் ஏட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
    அச்சரப்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழி நாடு பேரூராட்சிக்குட்பட்ட கப்பிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் ரவீந்தரன் (வயது 49). இவர் மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் இ.சி.ஆர். சாலை ரோந்து போலீசாக பணிபுரிந்து வந்த ரவீந்தரன் நேற்று மாலை பணி முடிந்து கடப்பாக்கத்தில் இருந்து மொபட்டில் வீட்டிற்கு செல்லும் போது, கப்பிவாக்கம் இ.சி.ஆர்.சாலையில் குறுக்கே திரும்பியுள்ளார்.

    அப்போது கடலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், அவர் வந்த மொபட்டின் மீது மோதியதில் பலத்த காயமடைந்த ரவீந்தரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதையறிந்த சூணாம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவீந்தரன் உடலை கைப்பற்றி மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி கப்பிவாக்கம் கிராம மக்கள் இ.சி.ஆர்.சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது, இங்கு அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இ.சி.ஆர். சாலையில் விபத்துகளை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

    போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து சூணாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 619 ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 619 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 962 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,482 ஆக உயர்ந்துள்ளது. 1,175 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 29 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 216 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 72 ஆயிரத்து 590 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,252 பேர் உயிரிழந்துள்ளனர். 374 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கம்ப்யூட்டர் பயிற்சி மைய உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பாவேந்தர் சாலை பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாஷியம் (வயது 43). இவர் மறைமலைநகரில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தர பாஷியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருகிற 9-ந்தேதிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை) 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. பொது விடுமுறை நாளாக அரசு அறிவித்ததன்படி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    ×